Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கிணத்துக்குள்ளே...
 
பக்தி கதைகள்
கிணத்துக்குள்ளே...

ஊத்தங்கரை என்னும் ஊரில் தங்கமணி என்ற விறகு வெட்டி இருந்தான். நாள்தோறும் அவன் காட்டிற்குச் செல்வான். தன்னால் இயன்ற அளவு விறகை வெட்டி எடுத்து வருவான். நல்லவனாகவும், பொறுமைசாலியுமாக இருந்த அவனுக்கு, அடங்காப்பிடாரியான மனைவி வாய்த்து இருந்தாள். அவன் எவ்வளவு விறகைத் தூக்கி வந்தாலும், இவ்வளவுதானா கிடைத்தது? இதை வைத்துக் கொண்டு எப்படி வாழ்க்கை நடத்துவது? என்று அவனைத் திட்டுவாள். அவள் என்ன திட்டினாலும், அவன் எதிர்த்துப் பேச மாட்டான். பொறுமையாக இருந்து விடுவான். இதனால் அவள் ஏச்சும், பேச்சும் நாளுக்கு நாள் அதிகமாகியது. பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்த அவன், இவளுடன் வாழ்வதை விட சாவது மேல் என்று நினைத்தான். ஒருநாள்- மாலை நேரம் நீண்ட கயிறு ஒன்றை எடுத்தவாறு காட்டை நோக்கிச் சென்றான் தங்கமணி. இதைக் கவனித்த அவன் மனைவி, ஏன் கயிற்றை எடுத்துச் செல்கிறான்? என்று ஐயம் கொண்டாள். அவன் அறியாமல் பின்தொடர்ந்தாள். பாழடைந்த கிணறு ஒன்றை நெருங்கினான். அங்கிருந்த பெரிய மரத்தில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டினான்; இன்னொரு முனையைக் கிணற்றுக்குள் விட்டான். கயிற்றைப் பிடித்துக் கிணற்றுக்குள் இறங்குவோம். அங்கேயே கிடந்து இறந்து விடுவோம் என்று நினைத்தான் அவன்.

அப்போது அவன் மனைவி அவன் முன்னால் வந்தாள். இங்கே என்ன செய்கிறாய்? எதற்காக இந்த மரத்தில் கயிற்றைக் கட்டினாய்? கிணற்றுக்குள் ஏன் கயிற்றை விட்டாய்? என்று அதட்டும் குரலில் கேட்டாள். உண்மையைச் சொன்னால், அவள் நம்ப மாட்டாள். ஏதேனும் பொய் சொல்லி அவளை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தான் தங்கமணி. இந்தக் கிணற்றுக்குள் புதையல் இருக்கிறது. யாரும் அறியாமல் அதை எடுத்துச் செல்லவே இங்கு வந்தேன். கிணற்றுக்குள் இறங்கத்தான் கயிற்றை மரத்தில் கட்டினேன், என்றான் தங்கமணி. நீ கிணற்றுக்குள் இறங்க வேண்டாம். நானே இறங்கிப் புதையலை எடுத்து வருகிறேன், என்று அவள் கயிற்றைப் பிடித்தவாறு கிணற்றுக்குள் இறங்கினாள். அவளிடம் இருந்து தப்பிக்க நல்ல வாய்ப்பு என்று நினைத்த தங்கமணி, மரத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றின் முடிச்சை அவிழ்த்தான். அந்தக் கயிற்றைக் கிணற்றுக்குள் எறிந்தான். இனி உன் தொல்லை இல்லை. கிணற்றுக்குள் கிடந்து துன்பப்படு, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். வீட்டிற்கு வந்து படுத்தவனுக்குத் தூக்கம் வரவில்லை. மனைவி கொடியவளாக இருக்கலாம். இருப்பினும் அவளிடம் இப்படி நடந்து கொண்டது தவறு என்று நினைத்தான். பொழுது விடிந்தது - இரவு முழுவதும் கிணற்றுக்குள் கிடந்து துன்பப்பட்ட அவள் திருந்தி இருப்பாள். இந்தத் தண்டனை அவளுக்கு போதும். காட்டிற்குச் சென்று அவளை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தான்.

இன்னொரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டிற்கு வந்தான். அந்தக் கயிற்றின் ஒரு முனையை மரத்தில் கட்டினான். இன்னொரு முனையைக் கிணற்றுக்குள் ஏறிந்தான்.
இந்தப் பாடம் உனக்குப் போதும். கயிற்றைப் பிடித்து மேலே ஏறி வா. இனி ஒழுங்காக இருப்பாய் என்று நினைக்கிறேன், என்று குரல் கொடுத்தான் தங்கமணி.
கயிற்றைப் பிடித்து யாரோ ஏறி வருவதைப் பார்த்தான் அவன். பேய் ஒன்று அந்தக் கயிற்றைப் பிடித்து ஏறி வந்து கொண்டிருந்தது. ஐயோ! என்ன செய்வேன்? பேய் அருகில் வந்து விட்டதே... தப்ப வழி இல்லையே என்று நடுங்கினான் தங்கமணி. மேலே வந்த பேய் அவனைப் பார்த்து, கிணற்றுக்குள் இருப்பவள் உன் மனைவியா? என்று கேட்டது. ஆமாம், என்று நடுக்கத்துடன் சொன்னான் அவன். பெண்ணா அவள்? அவளைப் போன்ற அரக்கியை நான் பார்த்ததே இல்லை. இந்தக் கிணற்றில் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். நேற்றிரவு அவள் வந்தாள். அவளின் கூச்சலையும், ஆர்ப்பாட்டத்தையும் என்னால் தாங்க முடியவில்லை. நல்லவேளை. நீ கயிற்றை விட்டாய். இன்னும் ஒருநாள் அவளோடு இருக்க நேர்ந்தால், நான் செத்தே போயிருப்பேன். எப்படித்தான் நீ அவளோடு இவ்வளவு காலம் வாழ்க்கை நடத்தினாயோ? பேயாகிய என்னாலேயே அவளோடு ஒருநாள் இருக்க முடியவில்லையே... நீ செய்த இந்த உதவிக்கு நான் பதில் உதவி செய்ய விரும்புகிறேன், என்றது. அதன் பேச்சைக் கேட்டு, அவன் அச்சம் சிறிது நீங்கியது.

நான் இந்த நாட்டு அரசரின் மகளைப் பிடித்துக் கொள்கிறேன். நீ வந்தால்தான் அவளை விட்டு நீங்குவேன், என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து மறைந்தது. சொன்னது போலவே அது அந்நாட்டு அரசரின் மகளைப் பிடித்துக் கொண்டது. இளவரசியைப் பேய் பிடித்துக் கொண்டது. அவள் செய்கின்ற ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை என்ற செய்தி நாடெங்கும் பரவியது. இளவரசியைப் பிடித்த பேயை விரட்ட மந்திரவாதிகள் பலர் முயற்சி செய்தனர். ஆனால் யாராலும் முடியவில்லை. இளவரசியைப் பிடித்த பேயை யார் விரட்டினாலும் ஆயிரம் பொற்காசுகள் பரிசு! என்று அறிவித்தார் அரசர். தங்கமணிக்கு இந்தச் செய்தி தெரிந்தது. அரசனிடம் சென்ற தங்கமணி, இளவரசியை நான் குணப்படுத்துகிறேன், என்றான். அவன் பேச்சில் அரசன் நம்பிக்கை கொள்ளவில்லை. முயற்சி செய்து பார், என்று சலிப்புடன் சொன்னான். அவனை இளவரசியிடம் அழைத்து சென்றனர் வீரர்கள். இளவரசியைப் பிடித்து இருந்த பேய் அவனைப் பார்த்தது. நான் சொன்னது போலவே இவளை விட்டுச் செல்கிறேன். அரசனின் பரிசுப் பொருளைப் பெற்று வளமாக வாழ்க்கை நடத்து. இனி, நீ என் வழியில் குறுக்கிடக்கூடாது. குறுக்கிட்டால், நான் பொல்லாதவனாகி விடுவேன், என்று எச்சரித்தது. பேயே! நீ செய்த உதவிக்கு நன்றி. நான் ஏன் உன் வழிக்கு வரப் போகிறேன்? இனி மேல் வரவே மாட்டேன், என்றான் தங்கமணி. இளவரசியை விட்டு அந்தப் பேய் நீங்கியது. அவளும் பழையபடி நலம் அடைந்தாள். மகிழ்ந்த அரசன் அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்தான். அங்கிருந்து சென்ற பேய் கலிங்கப் பேரரசரின் மகளைப் பிடித்துக் கொண்டது. பயங்கரமாக ஆர்ப்பாட்டம் செய்தது.

பல மந்திரவாதிகள் இளவரசியைக் குணப்படுத்த முயற்சி செய்தனர். யாராலும் முடியவில்லை. பேயை விரட்டிய தங்கமணியை பற்றிக் கேள்விப்பட்ட கலிங்க பேரரசர், அவனைத் தன் நாட்டிற்கு வரவழைத்தார். நீதான் இளவரசியைப் பிடித்த பேயை விரட்ட வேண்டும். நீ என்ன கேட்டாலும் தருகிறேன், என்றார் அரசர். பேய் பிடித்திருந்த இளவரசியிடம் அவனை அழைத்துச் சென்றனர். அவனைப் பார்த்ததும், அந்தப் பேய் கோபம் கொண்டது. ஏமாற்றுக்காரனே! என் வழிக்கே வர மாட்டேன் என்று நல்லவன் போல நடித்தாயே. பேராசை பிடித்தவனே! நான் தந்த ஆயிரம் பொற்காசுகள் உனக்குப் போதாதா? என்னால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். நீ சாவதற்காகவே இங்கு வந்திருக்கிறாய், என்று கத்தியது. பேயே! என்னை நம்பு. நீ நினைப்பது போல நான் கெட்டவன் இல்லை. கட்டாயத்தின் பேரில்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். எனக்காக இளவரசியை விட்டு ஓடிவிடு. மீண்டும் உன் வழிக்கே வர மாட்டேன், என்று கெஞ்சினான். உன் பேச்சை கேட்க, நான் ஏமாளி அல்ல. உன் உயிர் போவதைப் பார்த்து விட்டுத்தான் இங்கிருந்து போவேன். என்னை விரட்ட உன்னால் ஆகுமா? என்று திமிராகப் பேசியது. அவன் எவ்வளவு கெஞ்சியும் எந்தப் பயனும் இல்லை.
அரசரிடம் வந்த தங்கமணி, என்னால் இளவரசியை பிடித்த பேயை விரட்ட முடியவில்லை, என்றான். இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு உனக்குத் தருகிறேன். இளவரசியைப் பிடித்த பேயை நீ விரட்ட வேண்டும். இல்லையேல், உனக்குத் தூக்குத் தண்டனைதான், என்றார் அரசர்.

பேயோ இளவரசியை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. பேரரசரோ கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். உயிர் பிழைக்க வழி இல்லையே... என்ன செய்வது? இளவரசியைப் பிடித்த பேயை எப்படி விரட்டுவது என்று சிந்தித்தபடி இருந்தான் அவன். நல்லவழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. மறுநாள் இளவரசியிடம் வந்தான் அவன். அவனைப் பார்த்த பேய், மீண்டும் ஏன் இங்கே வந்தாய்? நீ சாகாமல் இவளை விட்டுப் போக மாட்டேன் என்றேனே.... எதற்காக வந்து தொல்லை தருகிறாய்? இனியும் உன்னைப் பார்த்தால் இளவரசியை மேலும் ஆட்டி வைப்பேன், என்று கோபத்துடன் மிரட்டியது. ஐயோ! பேயே! என்ன செய்வேன்? நம் இருவருக்கும் ஆபத்து வந்து விட்டது. நான் இந்த நாட்டை விட்டு ஓடப் போகிறேன். அதற்கு முன் உன்னிடம் செய்தி சொல்ல வந்தேன். என்ன செய்வேன்? என்று கதறினான்.
எனக்கு ஆபத்தா? எதுவாக இருந்தாலும் சொல்லித் தொலை, என்றது அந்தப் பேய். பேயே! அந்தக் கிணற்றில் இருந்து என் மனைவி வெளியே வந்து விட்டாள். என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறாள். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்து விடுவாள், என்று அழுது புலம்பினான். உன் மனைவியா? அந்த அடங்காப் பிடாரியா? இங்கே வருகிறாளா? ஐயோ, என்று அலறியது அந்தப் பேய். இளவரசியை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது. அதன் பிறகு அந்தப் பேயை யாரும் அங்கே பார்க்கவில்லை. இளவரசியை விட்டுப் பேய் ஓடி விட்டது என்பதை அறிந்தார் பேரரசர். தங்கமணியை பாராட்டிய அரசர், அவனுக்கு ஏராளமான பொருள்களைப் பரிசாகத் தந்தார். தங்கமணி மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar