Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!
 
பக்தி கதைகள்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

கோசல தேசத்தில் தேவதத்தன் என்பவன் இருந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லாததால் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய விரும்பினான். தமசா நதிக்கரையில் யாகம் நடந்தது. அப்போது கோபில முனிவர் என்பவர் சாமவேத கானத்தை அமங்கலமாகப் பாடினார். அதாவது மூச்சை அடக்கிச் சொல்ல முடியாமல் அடிக்கடி சுவாசத்தை விட்டு தவறாகப் பாடினார். இதைக் கேட்ட தேவதத்தன் கோபத்தில், முனிவரே... நான் புத்திர பாக்கியத்திற்காகச் செய்யும் யாகத்தில் இப்படி தவறாக உச்சரிக்கும் நீங்கள் என்ன முட்டாளா?  என்று கேட்டான். இதைக் கேட்டு கோபில முனிவரும் ஆவேசம் கொண்டார்.உள்ளே போவதும் வெளியே வருவதுமான பிராண வாயுவை யாராலும் அடக்க முடியாது. என் உடல் சிறிது தளர்ந்து விட்டதால் ஸ்லோகத்தைச் சொல்லும் போது இசைக்குற்றம் உண்டாகி விட்டது. இதற்காக என்னை நிந்திக்கக் கூடாது. உண்மை அறியாமல் நீ என்னை முட்டாள் என்று கூறுகிறாயே.... உனக்குப் பிறக்கும் புத்திரன் மகா முட்டாளாகவும், முரடனாகவும், பேசும் திறன் அற்றவனாகவும் பிறப்பான், என்று சாபமிட்டார்.

சாபத்தைக் கேட்ட தேவதத்தன் அஞ்சினான். மகா முனிவரே! வேதம் மீது கொண்ட பற்றினால் நான் இப்படி கேட்டு விட்டேன். அதற்காக இவ்வளவு கொடிய சாபத்தை இடலாமா? பிறரை வருந்தச் செய்வது பெரியவர்களுக்கு நியாயமா? நீங்கள் என் கவலையை அதிகரிக்கச் செய்து விட்டீர்கள். முட்டாள் பிள்ளையைப் பெற்றவன் புத்திர பாக்கியம் இல்லாதவனே ஆவான். அதிலும் நானும் ஒரு அந்தணன். என் பிள்ளை வேத கர்மங்களைக் கற்றாக வேண்டும். உங்கள் சாபப்படி அவனால் வேதம் கற்க முடியாது. என் இறப்பிற்கு பின் சிராத்தம் செய்யக் கூட அவனுக்கு தெரியாமல் போய் விடுமே! மூடனை வைத்துக் கொண்டு சிராத்தம் செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. அதை விட தர்ப்பையை வைத்துக் கொண்டு சிராத்தம் செய்யலாம் என்று வேதங்கள் கூறுகின்றன. அந்த புதல்வனுக்கு உணவு கொடுப்பதை தவிர வேறெந்த தானமும் கொடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு கொடுத்தால் தானம் கொடுத்தவனும் கூட நரக உலகை அடைவார்கள் என்றும் சொல்வார்கள். ஆகையால் மகாமுனிவரே! என் மீது இரக்கம் கொண்டு சாபவிமோசனம் தாருங்கள், என்று கூறி அழுதான். கோபில முனிவர் கருணை கொண்டு,தேவதத்தா! பெரியோர்களுக்கு கோபம் வந்தாலும் அது விரைவில் மறைந்து விடும். நீ வருந்த வேண்டாம். என்னுடைய சாபத்தின் விளைவாக உன் மகன் முட்டாளாகப் பிறந்தாலும், வாழ்வின் பின்னாளில் நல்ல வித்வானாக மாறி விடுவான், என்று விமோசனம் தந்தார். பின் தேவதத்தனின் மனைவி ரோகிணி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

குழந்தைக்கு உதத்தியன் என்று பெயர் சூட்டினர். உதத்தியன் மூடப்பிள்ளையாக பிறந்ததால் வேத மந்திரங்களைக் கற்றுக் கொடுத்தாலும் அவனால் அதை சரியாக கற்றுத் தேற முடியவில்லை. 12 வயது வரை அவன் ஏதும் அறியாமலே வளர்ந்தான். அவனை ஊரார் இகழ்ந்து பேசினர். பெற்றோர் ஊரார் மீது கோபம் கொள்ளாமல் தன் மகனையே கோபித்துக் கொண்டனர்.  ஏண்டா! முட்டாளான நீ வீட்டை விட்டு வெளியே போகலாமா? வீட்டிலேயே அடைந்து கிடப்பது தானே உனக்கு நல்லது, என்று ஏசினர்.  மனம் வெறுத்த உதத்தியன் வீட்டை விட்டு வெளியேறினான். கங்கை நதிக்கரையை அடைந்த அவன், ஆஸ்ரமம் அமைத்து தங்கினான். காய்,கனி வகைகளை சாப்பிட்டு காலம் கழித்தான். எந்தச் சூழலிலும் உண்மையை மட்டுமே பேசும் விரதத்தை மேற்கொண்டான். இதனால் அவனை மக்கள் சத்தியவிரதன் என்று அழைத்தனர். ஒருநாள் உதத்தியன் தன்னைப் பற்றி தானே சிந்திக்கத் தொடங்கினான். எனக்கு எப்போது மரணம் வருமோ? நான் எவ்வளவு காலம் இந்த பூமியில் அலைந்து திரிவேனோ? என் பிறவி வீணாகக் கழிகிறதே? இது என் கர்மவினைப் பயனாகத் தான் இருக்கும். இதற்குப் பரிகாரமாக உயிர்களுக்கெல்லாம் நன்மை செய்ய வேண்டும். அதற்கு தெய்வமே கருணை புரிய வேண்டும், என்று மனதில் எப்போதும் சிந்தித்து வந்தான். ஒருநாள் காட்டுவழியே பன்றி ஒன்று பயந்தோடி வந்தது. வேடனின் அம்பு உடம்பில் பாய்ந்திருந்ததால் அதனால் நடக்க முடியவில்லை.

தளர்ச்சியுடன் சத்தியவிரதனின் காலடியில் விழுந்தது. அதைக் கண்ட சத்தியவிரதன் மனம் இரங்கினான். ஆனால் பேச முடியாத அவன், க்ரூ க்ரூ என்று ஓலமிட்டான். பராசக்தியின் அருளால் அவனது அந்த உச்சரிப்பு மந்திரமாக எங்கும் ஒலித்தது. அவன் முன் கிடந்த பன்றி எழுந்து அருகிலுள்ள புதருக்குள் சென்று மறைந்தது. அம்பு தொடுத்த வேடனும் அங்கு வந்து சேர்ந்தான். கொடூர முகத்துடன் இருந்த அவன், அங்கு சத்தியவிரதன் நிற்பதைக் கண்டான். மறந்தும் பொய் பேசாத சத்தியவிரதனே! இங்கு நான் அம்பு எய்த பன்றி வந்ததைக் கண்டாயா? என் குடும்பமே பசியால் வாடுகிறது. வேடனான எனக்கு உயிர்களை வேட்டையாடுவது தான் குலத்தொழில். இதுவே படைப்பின் விதி. அந்த பன்றி எங்கே இருக்கிறது? என்று கேட்டான் வேடன். சத்தியவிரதனுக்கு பன்றியைக் காட்டிக் கொடுக்க மனமில்லை. அதே நேரத்தில் பன்றிக்கும், வேடனுக்கும் நல்லது செய்ய விரும்பினான். சற்று யோசித்த சத்தியவிரதன் புதரின் அருகில் சென்று க்ரூ க்ரூ என்று மீண்டும் கூச்சலிட்டான். அந்த ஒலி அப்பகுதியில் மந்திர அலையை உண்டாக்கியது. அந்த மந்திரத்திற்குரிய சக்திதேவி அவன் முன் தோன்றினாள். அவனுக்கு கல்வியை அளித்து விட்டு  மறைந்தாள். அப்போதே சத்தியவிரதன் சகல சாஸ்திரங்களையும் கற்று அறிந்தவனாக மகாகவியாக மாறினான். அந்நிலையில் சத்தியவிரதன் வேடனிடம், எவன் காண்கிறானோ அவன் சொல்வதில்லை. எவன் சொல்கிறானோ அவன் காண்பதில்லை என்னும் பொருளில் பாடல் ஒன்றைப் பாடினான். பாடலைக் கேட்ட வேடன், பன்றியை வேட்டையாடும் எண்ணத்தை கைவிட்டு புறப்பட்டான். வித்வானாக மாறிய சத்தியவிரதன் தேவியை முறைப்படி பூஜித்து, பேறும் புகழும் அடைந்தான். இதை அறிந்த பெற்றோர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar