Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஜீவனும் தெய்வமும்!
 
பக்தி கதைகள்
ஜீவனும் தெய்வமும்!

இனிய காலைப் பொழுது. அன்று பஞ்சவடியில் அன்னை சீதை எதையோ ஆச்சரியமாகப் பார்த்தாள். காலை அனுஷ்டானங்களை முடித்து வந்த ராமரிடம், நாதா, இதே இந்த அற்புத பொன்மானைப் பாருங்கள். அதை எனக்குப் பிடித்துத் தாருங்கள் என்றாள். அது மாயமான் என்று எச்சரித்த தம்பியிடம் ராமர், லக்ஷ்மணா, இன்று வரை என்னிடம் எதையும் கேட்காத சீதை, இந்த மானை விரும்புகிறாள். நான் அதைப் பிடித்து வருகிறேன். அது மாயமானாக இருந்தால் அதைக் கொன்று வருகிறேன். நீ இங்கே இருந்து இவளைப் பார்த்துக்கொள் என்று கூறி மானின் பின் ஓடினார். இறுதியில் அது மாயமான் என்று உணர்ந்து அம்பு எய்தினார் ராமர். உடனே மான் உருவம் நீங்கிய மாரீசன் என்ற அசுரன் ராமனின் குரலில், ஆ சீதா, ஆ லக்ஷ்மணா என்று அபயக் குரல் எழுப்பி இறந்துவிட்டான்.

அயக் குரல் கேட்டுப் பதறிய சீதை ராமனுக்கு உதவச் செல்லும்படி லக்ஷ்மணனிடம் கோரினாள். அண்ணனுக்கு ஆபத்து ஒன்றுமில்லை, பயப்பட வேண்டாம் என்று கூறிச் செல்ல மறுத்த லக்ஷ்மணரை நிந்தனை செய்து ராமனுடைய உதவிக்குச் செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினாள் சீதை. சீதையின் பரிதாப நிலையை உணர்ந்த லக்ஷ்மணன் ராமனுக்கு உதவச் சென்றதும் ராவணன் சீதையை அபகரித்து, இலங்கை, அசோகவனத்தில் சிறைவைத்தான். பத்து மாத சிறைவாசம். ராமாயணத்தின் இந்த நிகழ்வு உணர்த்தும் தத்துவம்: மாயையின் வனப்பில் மயங்கி ஒரு ஜீவன் உலகப் பொருட்களுக்கு ஆசைப்படும்போது நிலையான ஆனந்தத்தை விட்டுப் பிரியும் அபாயத்தைக் கூறி அந்தர்யாமியாகிய இறைவன் எச்சரிக்கிறார். அதைப் பொருட்படுத்தாமல் விஷய சுகங்களுக்குப் பின்னால் செல்லும் ஜீவனைப் பாதுகாப்பதற்காக சாதுசங்கத்தை அருளிச் செய்கிறார். சாதுக்களின் ஆன்மிகப் பாதுகாப்பை உதாசீனப்படுத்தியதன் விளைவு ஜீவன் மறுபடியும் பிறவிச் சூழலில் உழன்று, பத்து மாத கர்ப்பவாசம், பின்பு பத்து இந்திரியங்கள் என்ற பத்து தலை ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு சம்சார சாகரத்தின் மத்தியில் அசோகவனம் என்ற சோக வனத்தில் வாசம், காமம், பயம், சோகம், பச்சாதாபம் என்ற அரக்கிகளால் சூழப்பட்டு, மன உளைச்சல் மிகுந்து தன் பூரணத்துவத்தை இழந்துவிட்ட நிலை.

முடிவில் தன் தவறை உணர்ந்து பச்சாதாபத்துடன் பிறவிச் சூழலில் இருந்து தன்னை மீட்க இறைவனிடம் சரணாகதி செய்கிறான் ஜீவன். அத்தகைய இறை தாகம் கொண்டு தன் நாமத்தை எப்பொழுதும் ஜபிக்கும் ஜீவனை மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள இறைவன் விழைந்து அனுமான் என்ற குருவைத் தன் தூதுவனாகத் தேர்ந்தெடுத்து ராமநாமம் என்ற கணையாழியைக் கொடுத்து அனுப்புகிறார். ராமநாமத்தின் மகிமையால் சாகரம் போன்ற எல்லாத் தடைகளையும் கடந்து அந்த ஜீவனுக்கு இறைவனின் பெயரால் அபயம் அளிக்கிறார் குரு. ஜீவனை இறைவனின் வருகைக்காகக் காத்திருந்து ஆன்மிக சாதனைகள் செய்யும்படி உபதேசிக்கிறார் குரு. அவ்விதம் ஆன்ம தாகத்துடன் வாழும் ஜீவனைப் பற்றி இறைவனிடம் எடுத்துக்கூறி, அந்த ஜீவனை ஆட்கொள்ள வேண்டுகிறார் குரு. இறைவனும் அக்ஞானம், அகங்காரம் போன்ற அசுரர்களை ஆன்ம ஞானம் என்ற அஸ்திரத்தினால் நாசம் செய்து அந்த ஜீவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். இதனையே திருவள்ளுவர், அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது அறக்கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவன் மற்றும் சத்குருவின் திருவடிகளை இடைவிடாமல் பற்றுபவர்களைத் தவிர மற்றவர்களால் பிறவிக் கடலைக் கடக்க முடியாது என்று விளக்குகிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar