Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காவியங்களுக்கெல்லாம் ஆதார ஸ்ருதி!
 
பக்தி கதைகள்
காவியங்களுக்கெல்லாம் ஆதார ஸ்ருதி!

வால்மீகி முனிவருக்கு முன்பு, எவராலும் சுலோகங்களோ, காவியங்களோ இயற்றப்பட்டதாகத் தெரியவில்லை. முதன் முதலாக சுலோகம் என்ற அமைப்பே வால்மீகி முனிவரால்தான் ஏற்பட்டது என்பது ராமாயணத்தின் மூலமாகத் தெரிய வருகிறது. நாரத பகவான் மூலம் ராமபிரானின் வரலாற்றை அறிந்த முனிவர் தமது சிஷ்யருடன் தமஸா நதிக்கு ஸ்நானம் செய்யப் போகும்போது அதே சிந்தனையுடன் செல்கிறார். அப்போது ஜோடிகளாக இருந்த கிரௌஞ்சப் பட்சிகளில் ஆண் பட்சி ஒரு வேடனின் அம்பால் அடிக்கப்பட்டு, துடித்துக் கொண்டிருந்தது. இணையின் பிரிவாற்றாமையால் அரற்றிக் கொண்டிருந்த பெண் பட்சியின் வருத்தத்தைக் கண்ட முனிவரின் மனதில் பச்சாதாபம் மேலிட்டு, அந்த வேடனைச் சபிக்கிறார். அந்தச் சாபம்தான் முதன் முதலாக வந்து சுலோகம். இந்தச் சுலோகத்திற்குப் பெரியோர்கள் இருவிதமான பொருளை அளிக்கிறார்கள். ஒன்று, வேடனுக்கு அளிக்கப்பட்ட சாபம்; மற்றொன்று ஸ்ரீமந்நாராயணனைக் குறித்த துதி.

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாஸ்வதீ: ஸமா:
யத் க்ரௌஞ்ச மிதுனாத் ஏகமவதீ: காமமோஹிதம்

சாபம்: நிஷாத - ஓ வேடனே!; க்ரௌஞ்ச மிதுனாத் - ஜோடியான அன்றில் பறவைகளில்; காமமோஹிதம் - காமத்தால் மயங்கி இருந்த; ஏகம் - ஒன்றை; அவதி - கொன்றாய்; யத்த்வம் - அதனால் நீ ; சாஸ்வதீ; ஸமா- இனி ஒருக்காலும், ப்ரதிஷ்டாம் - நிலைத்த (அமைதியை) மா அகம - அடைய மாட்டாய்.

ஸ்ரீமந் நாராயணனைக் குறித்த துதி: மாநிஷாத - ஸ்ரீநிவாசா; க்ரௌஞ்சமிதுனாத் - ராட்சச மிதுனத்தில்; காமமோஹிதம் - காமத்தால் புத்தி இழந்த: ஏகம் - ஒருவனை (க்); அவதி; கொன்றீர்; யத்த்வம் - அதனால் நீங்கள்; சாஸ்வதீஸமா: - பல காலம் நீடித்த; ப்ரதிஷ்டாம் - கீர்த்தியை; அகம - அடைவீராக. இவ்வாறு சாபமளித்த முனிவரின் மனதில் இதென்ன? சோகத்திலிருந்த என்னிடமிருந்து சுலோகம் எவ்வாறு வந்தது என்ற எண்ணம் தோன்றியது. அப்போது தமது சீடரிடம் சோகத்தால் பீடிக்கப்பட்ட என்னிடத்திலிருந்து உண்டானதும் சமமான பாதங்களோடு அமைந்ததுமான இந்த வாக்கு வீணையில் தாளத்துடன் பாடத் தகுந்ததாக உள்ளது இது சுலோகம் என்ற பெயருடையதாகவே இருக்கட்டும் (சோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோமே ஸ்லோகோ பவது நான்யதா) (பாலகாண்டம் 2/18) என்று சொல்கிறார். இதனால் வால்மீகி முனிவருக்கு முன்பு ச்லோகங்களோ காவியங்களோ இருந்ததில்லை என்பது தெளிவாகிறது. மேலும் எது சமமான அட்சரங்கள் உடைய நான்கு பாதங்களால் மஹாத்மாவான முனிவரால் பாடப்பட்டதோ அந்தச் சோகமானதும் அடிக்கடி சொல்லப்பட்டதுமான அது மறுபடி சுலோகமாக இருத்தலை அடைந்தது.(பா.கா.2/41)

பிறகு முனிவரது ஆசிரமத்திற்கு வருகை புரிந்த பிரம்மதேவர், உம்மால் சொல்லப்பட்டது சுலோகம்தான். எனது சங்கல்பத்தினால் உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. எனவே இந்த முறையைக் கைக்கொண்டு இதே போன்ற சந்தத்தில் உங்களுக்கு நாரதரால் சொல்லப்பட்ட ராமபிரானின் சரித்திரத்தை முழுக் காவியமாக விரிவாக இயற்றுங்கள். புண்ணியமான ராமகதையை மனதிற்கினிய சுலோகங்களால் செய்வீர் என்று புன்னகையுடன் கூறியபடி மறைந்தார். இவ்வாறு பிரம்மதேவரால் அருளப் பெற்று, வால்மீகி முனிவர் இயற்றிய மஹா காவியமான ராமாயணம் தான் அனைத்து பிற்கால காவியங்களுக்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்ததுடன் மஹாகாவியத்தின் இலக்கணத்தையும் வகுத்தது. காவியங்களில் ஸ்ரீமத் ராமாயணத்தை ஓர் அளவுக்கோலாகக் கொண்டுதான் மஹாகாவியம் - கண்ட காவியம் ( சிறுகாவியம்) என்று பகுத்தனர். மஹாகாவியத்தின் லட்சணங்கள் அலங்கார சாஸ்திரங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மஹாகாவியத்தின் உட்பிரிவுகள் ஸர்கங்கள் எனப்படும்.

சுலோகங்களின் லட்சணங்கள்:

1. இரண்டு சுலோகங்களாக உள்ளவை - யுக்மம்
2. மூன்று சுலோகங்களாக உள்ளவை - விசேஷகம்
3. நான்கு சுலோகங்களாக உள்ளவை - கலாபகம்
4. ஐந்து முதல் பல சுலோகங்களாக உள்ளவை -குலகம்

சுலோகங்களின் லட்சணங்களை இவ்வாறு பகுத்த பின், காவியங்களையும் மஹாகாவியம் - கண்ட காவியம் (சிறு காவியம்) என்று பகுத்தனர். இவற்றிற்கெல்லாம் மூல காவியமாக அமைந்ததுதான் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம். மஹாகாவியத்தின் தலைவன் தேவனாகவோ, நற்குடியில் பிறந்த தீரனாகவோ - க்ஷத்ரியனாகவோ இருக்கலாம். மஹாகாவியத்தில் சிருங்காரம், வீரம், சாந்தம் போன்ற நவரசங்களும் இருக்க வேண்டும். நகரம், சமுத்திரம், மலைகள், பருவங்கள், இயற்கை வர்ணனைகள், நீதிபோதனைகள், கிளைக்கதைகள், உபமான உபமேயங்கள், பழமொழிகள் இவை அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு சர்க்கத்தின் இறுதியிலும் சந்தங்கள் மாறியிருக்க வேண்டும்.  வால்மீகி முனிவர் கூறுவதுபோல, காமார்த்த குணஸம்யுக்தம் தர்மார்த்தகுணவிஸ்தரம் - தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் போன்ற நான்கு வகை புருஷார்த்தங்களையும் அடைவதற்கான முறைகளைத் தெளிவாகக் கூற வேண்டும். பொதுவாகக் காவியத்தின் பயனைக் கூறுமிடத்து பொருள், புகழ், உலகாயத அறிவு, தீயவற்றை நீக்கி நல்லவற்றைப் பின்பற்றுதல், காவியத்தின் சுவையை அனுபவித்தல் போன்ற பலவகைப் பலன்களை அடைவதற்கு மஹாகாவியம் உதவுகிறது.

இப்படி அனைத்தையும் உடைய காவியத்தின் சுவையை அனுபவிக்கும்போது கவியின் மனதுடன் ஒத்த மனமுடைய ரசிகனது மனம் பிரம்மானந்தத்திற்கு ஒப்பான மகிழ்ச்சியை அடைகிறது. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை நாம் ஆழ்ந்து படிக்கும்போது இவை அனைத்தையும் நம்மால் உணர்ந்து அனுபவிக்க முடியும். அதனால்தான் ஆதிகவியான ஸ்ரீவால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட மஹாகாவியம் (சீதாயாஸ்ச்சரிதம் மகத்) பிற்காலக் காவியங்கள் அனைத்திற்கும் ஓர் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்றது. அதனாலேயே மகாகவி காளிதாசர் தமது ரகுவம்ச காவியத்தின் ஆரம்பத்திலேயே வால்மீகி முனிவருக்குத் தமது வணக்கத்தை இவ்வாறு தெரிவிக்கிறார். கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய காவிதாசாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ராம ராம எனும் இனிய சொல்லை இனிமையாகக் கூவிக் கொண்டு கவிதையாகிற கிளையில் ஏறி அமர்ந்திருக்கும் வால்மீகி எனும் குயிலை வணங்குகிறேன். மகாகவி காளிதாசரின் தலைசிறந்த காவியங்களான ரகுவம்சம், குமாரசம்பவம் இவற்றின் கருவும், மூலக் கருத்தும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தினின்றும் எடுக்கப்பட்டவையே. இவ்வாறு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்தான் பிற்காலக் காவியங்களுக்கெல்லாம் தாய் போன்று விளங்குகின்றது எனலாம்.

ய: கர்ணாஞ்ஜலி - ஸம்புடை-ரஹரஹ: ஸம்யக் பிபத்யாதராத்
வால்மீகேர் வதனாரவிந்த -கலிதம் ராமாயணாக்யம் மது.
ஜன்ம வ்யாதி - ஜரா - விபத்தி - மரணைரத்யந்த - ஸோபத்ரவம்
ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமான் விஷ்ணோ: பதம் சாச்வதம்

வால்மீகியின் முகமாகிற தாமரையிலிருந்து பெருகும் ராமாயணம் எனும் தேனை எவன் குவிந்த செவிகளாகிற அஞ்சலியால் நாள்தோறும் விருப்பத்துடன் நன்றாகப் பருகுகிறானோ அந்தப் புருஷன் பிறவி, நோய், மூப்பு, விபத்து, சாவு முதலிய கொடுந்துன்பம் நிறைந்த சம்சாரத்தைவிட்டு விஷ்ணுவின் பாதங்களை அடைகிறான்.

வால்மீகி - கிரி ஸம்பூதா ராம் ஸாகர - காமினீ
புநாது புவனால் புண்யா ராமாயண மஹாநதீ

வால்மீகி எனும் மலையிலிருந்து உற்பத்தியானதும், ராமன் எனும் சமுத்திரத்தை நோக்கிப் பாய்வதும் ஆகிய ராமாயணம் எனும் புண்ணியமான மகாநதி உலகைப் புனிதமாக்கட்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar