Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நல்லதே நடக்கும்!
 
பக்தி கதைகள்
நல்லதே நடக்கும்!

தினம் தினம் நான் விரும்பி வணங்கும் தெய்வத்திடம் பேச ஒரு நாள் சந்தர்ப்பம் கிடைத்தது.

பக்தர்: இறைவா, நான் உன்னிடம் ஒரு விளக்கம் கேட்டால், கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?
தெய்வம்: நிச்சயமாகச் சொல்கிறேன்!

பக்தர்: இன்று ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீர்கள்? எப்போதும் சரியான நேரத்துக்கு எழுந்திருக்கும் நான், இன்று தாமதமாக எழுந்தேன்!
தெய்வம்: ஆமாம்! அவசரத்தில் என்னைக் கும்பிடாமலே ஆபீஸுக்கு புறப்பட்டாய்.

பக்தர்: கிளம்பியதே லேட்! இதில் என் ஸ்கூட்டர் வேறு பஞ்சர் ஆகியிருந்தது.
தெய்வம்: ஆமாம், எனக்குத் தெரியும்!

பக்தர்: அவசர அவசரமாக ஓடிப்போய்! பஸ்ஸை பிடித்தேன். அதிலும் சோதனையாக வழியில் ஏதோ விபத்து, ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸுக்கு ஒரு மணிநேரம் லேட்.
தெய்வம்: அதுவும் எனக்குத் தெரியும்!

பக்தர்: மதியம் சாப்பிடப்போக கொஞ்சம் லேட் ஆனதில் கேண்டீன் சாப்பாடு தீர்ந்துவிட்டது. இன்னிக்குன்னு அதீத பசிவேற, என்ன பண்றது? ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டேன்.
தெய்வம்: இது எல்லாமே எனக்குத் தெரிந்ததுதான்!

பக்தர்: பேங்கில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர், சாயந்தரம் எனக்கு போன் பண்ணினார். அந்த நேரம் பார்த்து பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் மொபைல் ஆஃப் ஆயிடிச்சு.
தெய்வம்: அந்த விஷயத்தையும் நான் அறிவேன்!

பக்தர்: திரும்ப பஸ் பிடிச்சு, கூட்டத்தில் நசுங்கி, வியர்த்து வழிஞ்சு, சோர்ந்து ஒருவழியா வீட்டுக்கு வந்து கொஞ்சநேரம் ஏ.சியில் உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணலாம் என்று, ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யல! இன்னைக்கு எனக்கு நடந்த எதுவுமே சரியில்லையே! ஒரே ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கே இவ்ளோ கஷ்டங்களா? அப்போ தினம் தினம் கும்பிட்டதுக்கு பலனே இல்லையா?

கேட்டு முடித்ததும் பலமாகச் சிரித்தார், கடவுள். மிகவும் அன்போடு என்னைப் பார்த்தார். மெல்லிய புன்னகையோடு பேச ஆரம்பித்தார். இன்றைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோதே மரணதேவன் உன்னை நோக்கி வந்து விட்டான். அவனோடு வாக்குவாதம் செய்து உன்னைக் காப்பாற்றவே உன்னைக் கொஞ்சம் அதிக நேரம் தூங்க வைத்தேன். அதிர்ந்துபோன நான் விழிகளை விரித்தேன். இதற்கே இப்படித் திகைத்தால் எப்படி? இன்னும் சொல்கிறேன் கேள்! என்று ஆண்டவன் தொடர்ந்தார். நான்தான் உன் வண்டியை பஞ்சராக்கினேன். நீ ஆபீஸ் சொல்லும் வழியில் பிரேக் பிடிக்காத வேன் ஒன்று உன்மேல் இடிக்கிறதாக விதி இருந்தது. அந்த வேன்தான் ஆக்சிடென்ட்டாகி டிராக்பிக் ஜாம் ஆகியிருந்தது. இன்று நீ ஸ்கூட்டரில் போயிருந்தால் அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல் இடித்திருக்கும்.

மதியம் உனக்குச் சாப்பாடு கிடைக்காததற்குக் காரணம், கடைசியாக மிச்சமிருந்த குழம்பில், எலிக்காக வைத்திருந்த எலிவிஷம், எப்படியோ தவறி விழுந்துவிட்டது! யாரும் அதை கவனிக்கவில்லை. அதை நீ சாப்பிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? உடல் வியர்க்க, கண்கலங்க, பிரமை பிடித்தவன் போல் நான் நிற்க... கடவுள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

சாயந்திரம் உன் மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆனதுக்குக் காரணம் பேசிய நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். அதிலிருந்து காப்பாற்றவே உன் போனை செயலிழக்கச் செய்தேன். அதீத வோல்டேஜால் ஏ.சி. மெஷினின் எர்த் பழுதாகி இருந்தது. வழக்கம்போல முகத்தைக் கழுவிக்கொண்டு ஈரக் கைகளுடன் நீ சுவிட்சை தொட்டிருந்தால் அந்தக் கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய். ஆகவே அதை செயலிழக்கச் செய்தேன். என்னை வணங்க மறந்ததால் இன்று முழுவதும் உனக்கு நான் சோதனைகளைத் தந்ததாக, என்னைத் தவறாக நினைத்துக்கொண்டாய். ஆனால், தினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால், என்னை நீ மறந்த அன்றும்கூட நான் உன்னைக் காக்க மறக்கவில்லை! சொல்லி முடித்தார் இறைவன். கடவுளே, இப்போதுதான் புரிகிறது, நீங்கள் என் மீது கொண்டுள்ள அன்பும் அக்கறையுமே நடந்தவை யாவுக்கும் காரணம் என்று. இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். கண்ணீர் மல்க கெஞ்சினேன் நான்.

மன்னிப்புக் கேட்காதே! என்னை நம்பு, எப்போதும், எந்த சூழ்நிலையிலும். அது போதும்! நீ திட்டமிடுவதைவிட உனக்காக நான் திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்! என்றார் கடவுள். இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். நடப்பவை யாவும் நன்மைக்கே என நம்புவேன். கண்ணை இமை காப்பதுபோல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னைக் காப்பதை புரிந்துகொண்டேன்! தழுதழுக்கச் சொன்னேன். என்னை நம்பியிருப்பவர்களை நான் ஒருபோதும் கைவிடுவதில்லை! சொல்லி மறைந்தார் கடவுள்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar