Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இப்போது தான் அட்சய திரிதியை!
 
பக்தி கதைகள்
இப்போது தான் அட்சய திரிதியை!

‘அப்பனே... நமசிவாயா..மகாதேவா’ என்றபடியே பூக்குடலையை எடுத்து வலது முழங்கையில் மாட்டிக்கொண்டு சாவிக்கொத்தை இடுப்பில் செருகிக் கொண்ட பரமேஸ்வர குருக்கள், நைவேத்தியத் துõக்கை வலது கையில் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தார். வீடும் அவருக்கு இருந்த வறுமை போலவே ஒளி இழந்து பஞ்சையாய்த் தெரிந்தது. அந்த வறுமையே அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தியது தினமும்...!ஐந்து நிமிட நடை கோயிலை அடைந்து விட்டார் குருக்கள். பசுபதீஸ்வரன் என்ற திவ்யமான பெயர் சிவனுக்கு. மங்களாம்பிகை அம்பாளின் திருப்பெயர். கோவில் கீழவிசலுõர் என்னும் அந்த சிறிய கிராமம் நுõறு குடும்பங்களை உள்ளடக்கியது. மக்கள் அனைவருமே அன்றாடம் காய்ச்சிகள். கோவில் பராமரிப்புக்கு பொருளுதவி செய்ய முடியாதவர்கள். சாவி கொண்டு பூட்டைத் திறந்தார் குருக்கள். ‘டர டர’ என்னும் சப்தத்தோடு திறந்து கொண்டது எண்ணெய் காணாத அந்தக் கதவு.

சன்னிதானத்திற்குள் நுழைந்த பரமேஸ்வர குருக்கள் ஐந்து முகம் கொண்ட சரவிளக்கின் ஒரு முகத்தை மட்டும் ஏற்றினார். அத்தனை முகங்களையும் ஏற்ற எண்ணெய் இல்லை. ‘பசுபதீஸ்வரா..’ என்றபடியே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய புனிதநீரை எடுத்தார். எண்ணெய்க் காப்பு சாத்தாத காரணத்தால் லிங்கம் பூஞ்சை பிடித்து வெளுத்துக் கிடந்தது.அபிஷேகத்திற்கு பாலும் கிடையாது. பன்னீரும் கிடையாது. வெறும் தண்ணீர் தான். அம்பாளுக்கும் இதுவே கதி. எப்போதும் இறைவனுக்குப் பழைய வேஷ்டியும், மங்களாம்பிகைக்குப் பழைய புடவையும் தான்.யாராவது தீபாவளிக்கு வாங்கித் தந்தால் தான் உண்டு. பாவம் பசுபதீஸ்வரன்... கடவுளாய் இருந்தாலும் கொடுப்பினை வேண்டுமோ என்னவோ? சில ஊர் கோவில்களில் ஆண்டவனுக்கு ‘ஓஹோ’ என்று தேரும் திருவிழாவுமாக நித்தியம் நான்கு கால பூஜையோடு, பட்டு வேஷ்டி, பட்டு அங்கவஸ்திரத்தோடு பூமாலையும் நைவேத்தியமுமாக இருக்கும். கீழவிசலுõர் பசுபதீஸ்வரனோ எதற்கும் வழியின்றி அமர்ந்திருந்தார். ஆனாலும் பரமேஸ்வரக் குருக்கள் தனக்கு கஞ்சி இல்லாவிட்டாலும், பசுபதீஸ்வரன் மீதிருந்த பாசத்தால் விடாப்பிடியாக அவரைவிட்டு அகலாமல் இக்கோவிலே கதி என்று கிடந்தார்.

அவருக்கு பார்வதி என்ற ஒரே பெண். இருபத்தைந்து வயதாகியும் பணமில்லாமையால் திருமணமின்றி நிற்க தினமும் குருக்களுக்கும் மனைவி மீனாட்சிக்கும் சண்டைதான். ‘இந்த கோயில்ல இத்தனை வருஷமா ஊழியம் பண்ணி என்னத்தக் கண்டேள்...வாங்கோ...! திருவண்ணாமலைக்கு போகலாம்! எங்கண்ணா கூப்டுண்டே இருக்கார்.. இங்கியே இருந்தா பொண்ணு அவ்வையாராதான் நிக்கணும்.. குந்துமணி பவுன் கூட வாங்க முடில முழு வயிறு சோத்துக்கும் வழியில்ல! இனிமே ஒங்களண்ட பேசிப் பலனில்ல..... நானும் எம் பொண்ணும் அண்ணா ஆத்துக்குப் போறோம்,” என்று சொன்னவள் மகளுடன் கிளம்பியே விட்டாள். மாதம் மூன்றாயிற்று.. என்ன ஏது என்று கேள்வியே கிடையாது மீனாட்சியிடமிருந்து. கண்கள் குளமானது குருக்களுக்கு.“பசுபதீஸ்வரா...” ஆற்றாமையால் வெளிப்பட்ட அவரின் குரல்,  பசுபதீஸ்வரனையோ உருக்கி விட்டதோ என்னவோ! இனியும் சும்மா இருக்கக்கூடாது என நினைத்து விட்டானோ! அப்படித்தான் நடந்த காரியங்கள் சொல்லின. பச்சைத் தண்ணீரை ஊற்றி அபிஷேகத்தை முடித்து பழுப்பேறிய வஸ்திரத்தையே மீண்டும் கட்டி, சந்தன வில்லையை நனைத்து நெற்றியில் இட்டு, குங்குமம் வைத்து பூவைச் சாத்தினார் குருக்கள். கொண்டுவந்த சாதத்தையும் நைவேத்தியம் செய்தாயிற்று. இனி கிளம்ப வேண்டியது தான்.. என்று நினைத்தபோது கோவில் வாசலில் வந்து நின்றது ஒரு வேன்.

அதிலிருந்து ஐந்தாறு பேர் இறங்கி உள்ளே வர அதிசயத்துப் போனார் குருக்கள். இத்தனை வருடங்களில் காரோ, வேனோ வந்ததுமில்லை. ஐந்தாறு பேர் சேர்ந்து வந்ததும் இல்லை. உள்ளே வந்தவர்களை ‘வாங்கோ..வாங்கோ..’என்று வரவேற்றார் குருக்கள். வந்தவர்களின் பார்வை கோவிலின் நிலையை படமெடுத்தது. சுவாமியையும், அம்பாளையும் பார்த்த உடனேயே நிலைமை முற்றிலும் புரிந்து போயிற்று அவர்களுக்கு. வந்தவர்களில் ஒருவர் பேச ஆரம்பித்தார் குருக்களிடம். “ஐயா..நாங்கள் அமெரிக்காவில் வேலை செய்கிறோம். அங்கு நல்ல வசதியோடு வாழும் நாங்கள் தமிழகத்திலுள்ள மிகப் பழமையான பராமரிப்பில்லாத கோவில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து புனரமைத்து, தினமும் நான்கு கால பூஜைக்கான பண வசதியையும் ஏற்பாடு செய்து தர விரும்பினோம். நாங்கள் தேடிய கோவில் இதுவே என தோன்றுகிறது. இதை சீரமைக்கும் பணியை சீக்கிரமே முடித்து விடுவோம்,” எனச் சொன்னதும், பரமேஸ்வர குருக்கள், ”பசுபதீஸ்வரா.. என்னப்பனே..” என்று கத்திக் கொண்டே கர்ப்பக் கிரகத்திற்குள் ஓடினார். மள மள வென்று திருப்பணி நடக்க, இதோ இன்று பசுபதீஸ்வரனின் திருக்கோவிலில் குட முழுக்கு...குருக்களுக்கு மாத சம்பளமாக இனி பத்தாயிரம் கிடைக்கும். வீடும் புதுப்பிக்கப்பட்டு தரப்படும். பெண்ணின் திருமணத்திற்கும் பண உதவி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மீனாட்சியும், பார்வதியும் ஊருக்கு திரும்பி விட்டனர். உண்மையில் அந்த குடும்பத்துக்கு இப்போது தான் அட்சய திரிதியை. இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை அள்ளித்தந்தவன் நிதிகளுக்கெல்லாம் தலைவனான அந்த சிவனல்லவா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar