Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அகவிளக்கைக் காக்கும் பெட்டி!
 
பக்தி கதைகள்
அகவிளக்கைக் காக்கும் பெட்டி!

பகவான் கிருஷ்ணர், எப்பொழுது நன்கு அடங்கிய மனமானது, ஆத்மாவினிடத்திலேயே நிலைத்து நிற்கிறதோ, அப்பொழுது எல்லா ஆசைகளிலிருந்தும் பற்று நீங்கியவன் யுக்தன் என்று சொல்லப்படுகிறான் என்று உபதேசித்து அருளினார். அத்தகைய யுக்தனுடைய மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை அடுத்துவரும் சுலோகத்தில் பகவான் விளக்குகிறார்.

யதா தீபோ நிவாதஸ்த்த: நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந:
(ஸ்ரீமத்பகவத்கீதை 6-19)

காற்றில்லாத இடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட தீபமானது அசைவதில்லை. மனதை தன்வசப்படுத்தி, ஆத்ம தியானத்தில் ஆழ்ந்திருக்கும் யோகிக்கு இந்த உவமையானது கூறப்படுகிறது. தீபம் ஒன்றை ஏற்றுகிறோம். ஏற்றியவுடன், காற்று அதனை நாலாப்பக்கமும் அலைக்கழிப்பதைக் காண்கிறோம். காற்றடிக்கும் திசையிலெல்லாம் சுடர் அசைகிறது. சிறிது நேரத்தில் அத்தகைய தீபம் அணைந்துவிடுவதைக் கூடக் காணலாம். தியானத்தின்போது, குறிப்பிட்ட ஓர் எண்ணத்தில் மனதை நிலைநிறுத்த முயற்சிக்கிறோம். அந்த எண்ணமானது, தீபச்சுடரைப் போன்றது. அந்த எண்ணத்தைத் தொடர்ந்து எண்ண ஒட்டாமல், பல்வேறு எண்ணங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கின்றன. சாதாரண நேரத்தைக் காட்டிலும், கண்களை மூடி, தியானத்தில் அமரும்போது, மனம் அதிகமாக அலைபாயத் தொடங்கும். நாலாவித எண்ணங்களும் அதில் வந்து போகும். உடலை சரிசெய்து அமர்ந்தவுடன், குறிப்பிட்ட எண்ணத்தைப் பற்றிக்கொள்வதை விடுத்து, மனம் கூர்மையாகச் சிந்திக்கத் தொடங்கி விடும்.

குடும்ப விஷயங்கள், அலுவலக விஷயங்கள், சமூக சிந்தனைகள் அனைத்தும் மனதில் அலைமோதும். எவரேனும் அழைப்பு மணியை அழுத்தும் போதுதான், நாம் தியானத்தில் அமர்ந்திருப்பதே நினைவுக்கு வரும்! காற்றினால் அலைக்கழிக்கப்படும் தீபம்போல, எண்ணங்கள் நாலாப்பக்கமும் இவ்வாறு சிதறி ஓடி, மனதை அலைக்கழிக்கின்றன. தீபம் அசையாதிருக்க வேண்டுமென்றால், கண்ணாடிப் பெட்டிக்குள் அதனை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால், தீபம் அழையாமல் சுடர்விட்டுக் கொண்டிருக்கும். புறத்தில் உள்ள விளக்கினை கண்ணாடிப் பெட்டி ஒன்றில் வைத்துவிடலாம். ஆனால், அகத்தில் சுடராக விளங்கும் எண்ணத்தை எவ்வாறு பாதுகாப்பது? அதற்குரிய கண்ணாடிப் பெட்டி எது? பக்தியும் வைராக்யமுமே அந்தக் கண்ணாடிப் பெட்டிகள். இறைவனிடம் செலுத்தும் பேரன்பு, உள்ளத்தில் பற்றற்ற தன்மை இவையே மனதில் நிலைநிறுத்த, வேண்டிய எண்ணத்தைக் காப்பாற்றக் கூடிய ஆற்றல் படைத்தவை. பொதுவாக, மனதில் வருங்காலத்தைப் பற்றிய பயங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. அத்தகைய பயங்களில் சில கற்பனையானவை, சில உள்ளவாறு இருப்பவை. எனவே, அந்தப் பயங்களின் அடிப்படையில் பல்வேறு வகையான எண்ணங்கள் உள்ளத்தில் தோன்றி, மனதை தியானத்தில் ஒருமுகப்படுத்த முடியாமல் தடுக்கின்றன.

அடுத்து, பற்று. நாம் உள்ளத்தில் பற்றிக் கொண்டிருக்கும் உறவுகள், உடைமைகள் ஆகியவை நம்மை விட்டு நீங்கிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் பலருக்கு இருக்கிறது. இந்தப் பற்றைக் கையாளத்தெரியாமல் பலர் திண்டாடுகிறார்கள். ஆத்ம தியானம் வெற்றி பெற வேண்டுமானால், மனதில் பயம் இருக்கக்கூடாது. பற்று இருக்கக் கூடாது.  அனைத்து பயங்களையும் இறைவனின் திருவடியில் சமர்ப்பித்து, உள்ளத்தில் பக்தியை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். பற்றற்ற தன்மையாகிய செல்வத்தைக் கைக்கொண்டு, உள்ளத்தில் பற்றின்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  ஆத்ம தியானம் கைகூடவேண்டுமென்றால், ஓர் எண்ணத்தில் நெய் ஒழுக்குப்போல், மனம் இடையறாது ஈடுபட்டிருக்க வேண்டுமென்றால், உள்ளத்தில் உள்ள பயங்களையும் பற்றையும் நீக்கியாக வேண்டும். பக்தியும் வைராக்கியமுமே ஆத்ம தியானத்தை வெற்றி பெறச் செய்யக்கூடிய ஆற்றல் படைத்த கண்ணாடிப் பெட்டி. அத்தகைய மனதினால் செய்யப்படும் தியானமே உரிய பயனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar