Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பின் வடிவம் ஸ்ரீராமகிருஷ்ணர்
 
பக்தி கதைகள்
அன்பின் வடிவம் ஸ்ரீராமகிருஷ்ணர்

உலகில் அவ்வப்போது இறை அவதாரங்களும் மகான்களும் தோன்றி மக்களின் நேர்மையான பாதைக்கு விளக்கேற்றி, அவர்களுக்கு வழிகாட்டி, இருட்டையும் துன்பங்களையும் அதர்மத்தையும் அகற்றுகின்றனர். தூய, தன்னலமற்ற, புனித அன்பையும் தெய்வீக ஆனந்தத்தையும் உலகியல் நெருப்பால் துன்புறும் ஜீவன்களுக்குப் பாய்ச்சுகின்றனர். மனித ஆன்மா அடிப்படையில் புனிதமானது. எல்லையற்ற அமைதியும், ஆனந்தமும் கொண்டது. அப்படிப்பட்ட ஒன்று உலகியல் துன்பங்களால் வருந்துவது விநோதமே. காரணம், மாயை அல்லது ஆன்மாவின் நிஜ இயல்பாகிய சத் ( இருப்பு); சித் (பிரக்ஞை - உணர்வு); ஆனந்தம் பற்றிய அறியாமை.

சத்வகுணம் மேலிடும் போது ஆனந்தம் எனும் ஒளி அதிகம் வெளிப்படும். அந்த ஆனந்தம் மனிதர்களிடம் அன்பு, ஈர்ப்பு, அழகு, அமைதி, திருப்தி, சந்தோஷம், இன்பம் மூலமாகவும் வெளிப்படும். ரிஷிகளும் சாதுக்களும் தம்முள் நிறைந்துள்ள தெய்வீக ஆனந்தத்தை அனுபவிப்பதால், அன்பினால் மக்களை அவர்கள்பால் ஈர்ப்பர். மக்களுக்குத் தங்கள் தெய்வீகத்தை விழிப்புணர்த்துவதே அவர்களது நோக்கம். சத்வகுணம் அவர்களிடம் நிறைந்திருக்கும். குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் சத்வ குணமே வடிவெடுத்த ஓர் அவதாரம். அதனால் அவரிடம் அன்பும் ஈர்ப்பும் சக்தியும் அதிகம் வெளிப்பட்டது.

ஸ்ரீராமகிருஷ்ணர் எனும் அன்புக்கடல்:

குருதேவரின் ஒவ்வொரு சீடரும் தன்னிடமே அவர் மற்றவர்களை விட அதிக அன்பு செலுத்துவதாகக் கருதுவர். அவரது சீடரான சுவாமி பிரேமானந்தர் தயையின் வடிவம். அவரே தன் அன்பு குருதேவர் காட்டும் அன்பில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பார். தன் தாயின் முன்பே, குருதேவர் நம் சீடர்களின் மீது கொண்டிருந்த அன்பு அவர்களின் தாயின் அன்பைக் காட்டிலும் உயர்ந்தது என்பார். சுவாமி விவேகானந்தரும் தமது பாடலில், குருதேவரின் இந்த தன்மையை நன்கு உயர்த்திக் காட்டவே பாவ சாகரா ப்ரேம பாதார் போன்ற வார்த்தைகளை உபயோகித்து, மிக உயர்ந்த அன்புக் கடல் என அவரை வர்ணிக்கிறார். தர்சித ப்ரேம விஜ்ரும்பித ரங்கம், பலவிதமாக அன்பை வெளிப்படுத்தும் புனித அன்பே உருவானவர் என்கிறார்.

உண்மையான அன்பு மட்டுமே சக்தி வாய்ந்தது. அந்தத் தூய அன்பு பிறரிடம் மரியாதை, அக்கறை, பொறுப்பு, நேசிப்பவர்களின் அறிவு ஆகியவற்றைத் தழுவி இருக்கும். அக்கறையும் பொறுப்பும் தாய் குழந்தையிடம் காட்டும் அன்பின் மூலம் நன்கு வெளிப்படும். இதைக் காட்டிலும் ஒரு குரு தன் சீடனிடம் காட்டும் அக்கறை அதிகம் இருக்கும். குருதேவரின் வாழ்வில் அவர் தன் சீடர்களிடம் காட்டும் அன்பும் அக்கறையும் பல நிகழ்வுகள் மூலம் நன்கு வெளிப்படுகின்றன. குருதேவர் தம் இளம் சீடர்களிடம் இரவில் குறைவாகச் சாப்பிட்டு நன்கு தியானம் செய்ய வேண்டும் என்பார். தன் குருவின் கட்டளையை அப்படியே பின்பற்றும் லாட்டு (சுவாமி அத்புதானந்தர்) தன் உணவை மிகவும் குறைத்து விட்டதால் அவரது ஆரோக்கியம் குன்றியது. இதைக் கவனித்த குருதேவர் லாட்டுவைத் தன் கண்முன்னே சாப்பிடும்படி கூறினார். அன்புத் தாய் போல் தன் தட்டிலிருந்து வெண்ணெய் போன்றவற்றை லாட்டுவின் தட்டில் வைப்பார். சில வேளைகளில் லாட்டு மகராஜ்  உணவையும், ஓய்வையும் மறந்து ஆன்மிகப் பயிற்சிகளில் ஆழ்ந்துவிடுவார். குருதேவர் அவரை அழைத்துப் பேசி உணவு உட்கொள்ளச் செய்வார்.

அக்கறையுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது பொறுப்புணர்ச்சி. சீடனின் உடல் நலத்தில் மட்டுமின்றி ஆன்மிக முன்னேற்றத்திலும் குருதேவர் பொறுப்புடன் நடந்து கொள்வார். தம் சீடர்களுக்கு ஆன்மிக உபதேசங்கள் அளிப்பதுடன் நின்றுவிடாமல் அவர்களது வளர்ச்சியை ஊன்றிக் கவனித்து, அவர்கள் ஆன்மிக முன்னேற்றம் அடைய வேண்டும் என அன்னை காளியிடமும் பிரார்த்திப்பார். பக்தர்கள் தக்ஷிணேஸ்வரம் வருவது கடினமாக இருந்ததால், அடிக்கடி கல்கத்தா சென்று தன் பக்தர்களைப் பார்த்துவிட்டு வருவார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர்களது பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தினார். பாவ முக்தரான குருதேவருக்குத் தன்னிடம் வரும் ஒவ்வொருவரின் மனநிலை, பாவனை பற்றி நன்கு தெரியும். ஒருவரைப் பற்றி மிகவும் நுணுக்கமாக அறிந்த பின் அவரை ஆன்மிக வழியில் வழிநடத்திச் செல்வது குருதேவருக்கு மிக சுலபம். அந்த நபரின் குறிப்பிட்ட மனநிலையை ஒரு போதும் மாற்ற நினைக்க மாட்டார். தன் கருத்துக்களைப் பிடிவாதமாக அவர் மீது திணிக்கவும் மாட்டார், ஒவ்வொருவரையும் அவரவர்களின் மனநிலையிலிருந்து உயர்த்தி இயற்கையாக மனம் வளைந்து கொடுக்கும் படிச் செய்வார். ஒவ்வொருவரின் தனித் தன்மைக்கும் மரியாதை கொடுத்தார் அவர்.

குருதேவரின் உறவினரும் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் நெருங்கிய தோழியும் பக்தையுமாகிய லக்ஷ்மிதேவி கீர்த்தனைச் சமயத்தில் பாடியும் ஆடியும் தன்னை மறந்த நிலைக்குப் போவது வழக்கம். அன்னையோ இந்தச் செயல்களுக்கு நேர் எதிர். மிகவும் கூச்ச சுபாவமுடைய அவர் கூடத்திற்கெல்லாம் போவதில்லை. குருதேவர் இந்த வித்தியாசங்களை நன்கு அறிந்தவராதலால் அவரவர்களுக்கேற்ப உபதேசிப்பார். தூய அன்னை தன் சுபாவத்திற்கு ஏற்ப தக்ஷிணேஸ்வரத்தில் தங்கும்படி ஏற்பாடு செய்தார். ஆண் இயல்பு கொண்ட கவுரிதேவியை பெண்களின் ஆன்மிகப் பயிற்ச்சிக்காகவும், பெண்களின் கல்விக்காகவும் ஓர் அமைப்பை ஏற்படுத்தும்படி வழிகாட்டினார். குருதேவர் தனி நபர்களுக்கு மரியாதை கொடுத்தது அவர்களின் உள்ளுணர்வை அவர் அறிந்ததால் மட்டுமல்ல. அவர்களின் புனிதத் தன்மையை, கடவுளின் இருப்பை இயற்கையிலேயே அவர்களிடம் கண்டதால் தான்.

ஒரு முறை கோடை காலத்தில் லாட்டு மகராஜ் சிவ தியானத்தில் இருக்கையில் அவர் உடல் வியர்வையால் நனைந்து உருகியது. குருதேவர் அதைக் கண்டு வெளியுலக சிந்தனை அற்றிருந்த அவருக்கு விசிற ஆரம்பித்தார். லாட்டு புறவுணர்வு பெற்றதும் குருதேவர் உண்மையில் சிவபெருமானுக்கே தான் விசிறியதாகக் கூறினார். குருதேவர் ஒவ்வொருவரிடமும் உள்ளே உறையும் ஆன்மாவை, உள்ளார்ந்த உண்மைப் பொருளை விரும்பியதால்தான் ஒவ்வொருவரும் அவர் தன்னையே மிகவும் அதிகமாக நேசிப்பதாக உணர்ந்தனர். குருதேவரிடம் கடவுளைத் தவிர வேறு தனித்தன்மை எதுவும் இல்லை. அவரிடம் வெளிப்பட்ட புனிதத் தன்மையே எல்லோரையும் அவர்பால் ஈர்த்தது. சிறிதும் தான் என்ற அகங்காரம் இன்றி, குழந்தை போன்ற எளிமையுடன் கபடமற்ற அவரது குணமே எல்லோரையும் அவர்பால் கவர்ந்து இழுத்தது.

குருதேவர்- அன்புக்குரியவர்: குருதேவர் எல்லோரையும் ஆழமாக நேசித்தது மட்டுமின்றி அவரும் எல்லோராலும் நேசிக்கப்பட்டார். பக்தர்கள் ஒருவேளை ஸ்ரீராமகிருஷ்ணர் தங்களை ஈர்க்கிறாரோ (வசீகரிக்கிறாரோ) என்று நினைத்தனர். ஆனால் வசீகரிப்பதின் சாரமே தங்கள் அன்பு செலுத்தும் பண்பில்தான் உள்ளது என்பதை அறியவில்லை. பக்தர்கள் குருதேவரை பல காரணங்களுக்காக விரும்பினர். மற்றவர்களை எளிதில் நம்புதல், அவர் யாரை நேசித்தாரோ, மதித்தாரோ அவர்களின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை உடல் ஆரோக்கியம் குன்றிய நிலையில் அவருடைய கவலை, பொறுமையின்மை போன்ற குணங்கள் அவரை ஐந்து வயது குழந்தை போல் நினைக்க வைத்தன. இதனால் அவரை மிகவும் அக்கறையுடன் ராக்காலும் (சுவாமி பிரம்மானந்தர்), தாரக்கும் (சுவாமி சிவானந்தர்) தங்களுடைய தாய் போன்று பார்த்துக் கொண்டனர். லாட்டுவோ அவரை அதிக மரியாதையுடன் தந்தை போலும், தன் எஜமானர் போலும் கருதி சேவை செய்தார்.

பரமாத்மாவுடன் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருந்தால் மிகவும் உயர்ந்த ஆனந்த நிலையில் இருந்த குருதேவர் அந்த ஆனந்தக் கடலாகவே உருவெடுத்து விளங்கினார். உடல் நன்றாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சாதாரண உணர்வு நிலையிலும், பரவச நிலையிலும் எப்பொழுதும் அவர் ஆனந்தத்திலேயே திளைத்திருந்தார். குருதேவருடன் இருந்த 12 வருட காலத்தில் அவரை ஒரு நாள் கூட வருத்தத்துடன் பார்த்ததில்லை என்கிறார் தூய அன்னை. அவர் தொண்டையில் புற்றுநோயால் துன்பப்படும் நேரத்திலும் அவரது பக்தர்கள் அவர் வலியால் துன்பப்படுவதைக் கண்டதில்லை என்றனர். குருதேவர் இப்படிப் புனித ஆனந்தத்தை உலகில் பல விதங்களில் பரவவிட்டார். அவருடைய இருப்பே சூழ்நிலையில் உயர் ஆனந்தத்தைப் பரவச் செய்யும் அவர் இருக்கும் இடத்தில் வேடிக்கை விளையாட்டு, பாட்டு, நடனம், ஆன்மிக விஷயங்களைப் பற்றிய உரையாடல்கள் போன்றவை இரவும் பகலும் நடக்கும். இளைஞர்கள் முதியவர்கள். உலகியல் மக்கள், துன்பத்தில் துவளும் மக்கள் யாராயினும், அவர் அருகில், சங்கத்தில் வந்ததும் கவலைகளை மறந்து ஆனந்தத்தில் திளைப்பர்.

மக்களின் துயரைத் துடைக்க குருதேவர் மிகவும் பாடுபட்டார். அவர்கள் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்காக வருந்துவார். தன் மகனை இழந்த ஒரு தந்தைக்கு அவருடைய துக்கத்தில் முதலில் பங்கு கொண்டு அந்த இழப்பை எதிர்த்துப் போராடும் வகையில் வீரத்துடன் கூடிய பாட்டைப் பாடி, பின் இந்த உலகின் நிலையாமையை அழகாக எடுத்துக் கூறி, இறைவனிடம் சரணடைவது ஒன்றுதான் வழி என்பதை உணர்த்தினார். குருதேவர் யார் அழுவதையும் காண முடியாமல் தவிப்பார். ஒருமுறை யோகின்மா, அன்னை தனது பிறந்த கிராமத்திற்குச் செல்லும்போது பிரிவைத் தாங்க முடியாது அழுதார். குருதேவர் அவரைத் தனது அறைக்கு வரவழைத்து தான் செய்த சாதனைகளைப் பற்றிக் கூறி அவரது மனதை மாற்றினார். மற்றொருமுறை ஐந்து வயதுச் சிறுமி ரோஜா செடியில் முட்கள் இருப்பதற்காக அழுதபோது அச்சிறுமிக்கு நயமான வார்த்தைகள் கூறி ஆறுதல் அளித்தார்.

குருதேவர் யார் மனதும் புண்படும்படி தவறுதலாகக் கூட நடந்து கொண்டதில்லை. அன்னையைக் கூட நீ என்று சொல்ல மாட்டார். ஒருமுறை கோயிலில் வேலை செய்த பகவதி தாசியிடம் குருதேவர் பேசிக்கொண்டிருந்தார். அவளும் அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தாள். உடனே அவருக்குப் பொறுக்க முடியாத வலி ஏற்படவும் பகவதி தாசி, குற்ற உணர்வுடன் வெட்கித் தலை குனிந்து நின்றாள். இதைக் கண்டு குருதேவர் வருந்தி அந்தப் பெண்ணின் மனநிலை மாற சில அழகான பாடல்களைப் பாடி அவளைச் சமாதானப்படுத்தி சந்தோஷப்படுத்தினார். குருதேவர் தன் வாழ்வின் மூலம் நிரந்தர ஆனந்தத்தைப் பெறும் வழியைத் தன்னிடம் வந்த பக்தர்களுக்குக் காண்பித்தார். குருதேவர் எல்லா உயிர்களிடத்தும் தாயாய் நின்று அன்பு செய்தார். உலக அன்னை அவளுடைய உயிர்களைத் தாய்ப்பாசத்துடன் அணைக்கும் பொருட்டு அவரை உலகிற்கு அனுப்பி, தான் படைத்த உயிர்கள் படும் துன்பத்தைப் போக்கச் செய்தாள் என்பார் அன்னை சாரதை.

சாதாரண மக்கள் கடவுளிடமும் அவருடைய அவதாரங்களிடமும் தாங்கள் கொண்டுள்ள நிரந்தர உறவை மறப்பதால் துன்பப்படுகின்றனர். அதனால் அவதாரங்கள் தங்களுடைய புனிதத் தன்மையை மக்கள் அறிந்து, அதன் மூலம் நிரந்தர அமைதியும் ஆனந்தமும் பெறப் பாடுபடுகின்றனர். குருதேவர் தம் அவதாரத்தில் புனித ஆனந்தத்தை முற்றிலும் பரவவிட்டு அதே சமயம் சாதாரண மனிதராகவும் காட்சி அளித்ததே அவரது தனித்தன்மை. இதற்கு முன் எந்த அவதாரம் மனிதர்களுடன் இத்தனை நெருக்கமாகவும், அன்புடனும் பழகியதில்லை. மக்களுடன் சாதாரண மனிதன் போல் பழகி, எளிதில் அவர்களுக்குத் தரிசனம் தருபவராகவும் விளங்கினார். அவருடைய எளிமையான தோற்றத்தாலும், ஆழமான கருணையாலும் எல்லோரையும் தன்னிடம் ஈர்த்து அழிவற்ற ஆனந்தத்தில் திளைக்குமாறு செய்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar