Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உள்ளம் உருகுதைய்யா!
 
பக்தி கதைகள்
உள்ளம் உருகுதைய்யா!

அன்று மாதக் கிருத்திகை. சுவாமிமலை முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்.  ‘சுவாமிநாத சுவாமிக்கு.. அரோகரா... பக்திப் பரவசத்தில் பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளந்தது. கோவிலுக்கு மிக அருகில் இருந்த அந்த உணவு விடுதியிலிருந்து வெளியே வந்தாள் அம்புஜம் மாமி. வடை தட்டி எடுக்கும் வேலை அங்கு அவளுக்கு. வயது எண்பது. வளைந்து போன உடல். ஓரிரண்டு பல்லே மிச்சமிருக்க ம்ம்ம்ம்..என்ற முனகலோடு கோவிலை நோக்கி நடந்தாள். ஒரு காலத்தில் அவள் ஒரு நாள் கூட சாமிநாதனைத் தரிசிக்காமல் இருந்ததில்லை. அந்தக் காலத்தில் இந்தளவுக்கு கூட்டம் வராது என்பதால் எப்படியாவது சுவாமியைத் தரிசித்து விடுவாள். காலம் செல்லச் செல்ல கூட்டமும் கூடியது. இவளுக்கு வயதும் அதிகரிக்க கூட்டத்தைக் கடப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. கூட்டத்திற்குள் நுழையத் தயங்கி, ‘சாமிநாதா..எப்பிடிடா உள்ள வந்து ஒன்னப் பாப்பேன்..?’ என்று மனதிற்குள் நினைத்தவாறு தயங்கி நின்றாள். கிட்டத்தட்ட நாற்பது வருஷ பந்தமல்லவா மாமிக்கு சுவாமிநாத சுவாமியோடு...! மன தைரியத்தோடு கூட்டத்திற்குள் புகுந்தாள். கிருத்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் என்று முருகனுக்குரிய நாட்களிலெல்லாம் பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் நாற்பது வருஷமாய் விரதம் இருப்பவளாயிற்றே அம்புஜம் மாமி...மாமியின் பதினெட்டு வயதிலேயே கணவர் இறந்து போக, ஒரு வயதுக் குழந்தையுடன் நிற்கதியாய் நின்றார்.

கணவர் வேலை செய்த சமையல் கலைஞர்கள் கோஷ்டியோடு சேர்ந்து ஊர் ஊராய் அலைந்து பிள்ளை பட்டுராஜனை வளர்க்க என்ன பாடு பட்டிருப்பாள்?  அப்படி சமையல் கோஷ்டியோடு ஒருமுறை வெளியூர் சென்ற போதுதான் எட்டு வயது பட்டுராஜன் காணாமல் போனான். எங்கு தேடியும் கிடைக்காமல் போக, இடிந்து போய் அழுதழுது கடைசியில் சுவாமி மலைக்கு வந்து சுவாமிநாதனே கதியென தங்கி விட்டாள். வருஷம் நாற்பதும் ஓடிவிட்டது. மெது மெதுவாய் கோவில் உள்ளே நுழைந்து விட்ட மாமிக்கு அன்று என்னவோ அறுபது படிகளிலும் ஏறுவது தினமும் ஏறுவதைக் காட்டிலும் மிகுந்த சிரமமாய் இருந்தது. ஒரு வழியாய் ஏறி, அப்படியே கொடிமரத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த தடுப்பின் கீழ் உட்கார்ந்து விட்டாள். உள்ளே திரை போட்டிருப்பதாக பக்தர்கள் பேசியது காதில் விழுந்தது. திடீரென 42 வருஷங்களுக்கு முன்பு தொலைந்து போன பிள்ளை பட்டுராஜனின் நினைப்பு வந்தது. அவளது கைவிரல் வலது காது மடலுக்குச் சென்று, அங்கே சின்னதாய் உருண்டையாய் இருந்த மச்சத்தைத் தொட்டுப் பார்த்தது. அவனுக்கும் இது போல காது மடலில் ஒரு மச்சம் இருக்கும் நினைப்பு வந்தது.

கண்களில் கண்ணீர் கரைகட்டியது. தலையை அசைத்து அந்த நினைவைப் புறம் தள்ளியவர்....பக்தர்கள் அமைதியாய் இருக்கும் வேளையில் தினமும் பாடும் பாடலைப் பாடலாமே என்ற எண்ணத்தில் ‘உள்ளம் உருகுதைய்யா..முருகா உன்னெழில் காண்கையிலே..அள்ளி அணைத்திடவே..எனக்கோர்..’ பல்லில்லாத வாயிலிருந்து வார்த்தைகள் பிசிறடிக்க..ராகம் கோணிக்கொண்டு போக எச்சில் தெறிக்க வார்த்தைகள் வெளிப்பட்டன.அன்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து வைரக் கிரீடம், வைரவேல் சாத்தி கைங்கரியம் செய்யும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் ஒருவர், சட்டென்று தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து பாட்டு வந்த திசை நோக்கி ஓடினார். திரைக்கு வெளியே சன்னிதானத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள், “சார்..சார்..என்ன ஆச்சு..இங்க ஏதாவது அசவுகரியமா இருக்கா?” எனக் கேட்டபடி அவரைத் தொடர்ந்தார்.பதில் சொல்லாமல் ஓடியவர், பாடிக்கொண்டிருந்த அம்புஜம் மாமி முன்னால் போய் நின்றார். அடுத்த நொடி.. அம்மா....அவர் கத்திய கத்தலில் சன்னிதானமே கொஞ்சம் அதிர்ந்தது. மறக்கக் கூடிய பாட்டா அது.

தொலைந்து போன அந்த நாளுக்கு முதல் நாள் வரை எட்டு வயது வரை கேட்டுக் கேட்டுப் பழகிய பாட்டல்லவா அது. குரல் நடுங்கினாலென்ன? ராகம் தப்பினாலென்ன? தாயின் குரலும் அவளின் தாலாட்டும் அவள் பாடும் பாடலும்..மனிதன் சாகும் வரை மறந்து போகக் கூடியதா என்ன? “இவ.. இவ என் அம்மா...சத்தியமா சொல்றேன்...இவ தான் என் தாய்..அம்மா..அம்மா..இங்க பாரும்மா..ஒன்னோட புள்ள பட்டுராஜன் வந்துருக்கேன்மா.. நாந்தாம்மா..பட்டுராஜன்... மா..இங்க பாரும்மா... இங்க பாரும்மா...” என பரவசத்துடன் சொல்லிக்கொண்டே மாமியைப் பிடித்து உலுக்கினார். அவர் எட்டு வயதில் காணாமல் போய், வெளிநாட்டுப் பணக்காரர் ஒருவரால் வளக்கப்பட்டு தொழிலதிபர் ஆனது ஒரு தனிக்கதை.“நீங்க யாரு..எனக்கு தெரியலயே..? எம் புள்ள பட்டு காணாம போயி நாப்பது வருஷத்துக்கு மேல ஆச்சே. நீங்க ஒங்கள பட்டுராஜன்னு சொல்றேளே...! என்றவளின் கை, அவரது முகத்தை தடவி காது மடலுக்கு சென்றது. “ஆமாம் மா.. இங்க பாரும்மா.. எனக்கு சின்ன வயசா இருக்கையிலே விரலால எங்காத தொட்டுத் தொட்டு பார்ப்பியே... பாரு... அந்த மச்சத்தை...!தன்னையும் அறியாமல் கோவிலில் இருக்கும் எல்லாரும் திரும்பிப் பார்க்கிற மாதிரி, பட்டூ..பட்டு ராஜா...பட்டுக் கண்ணே....” என்று சத்தமாக கத்திவிட்டாள். பிள்ளை தாயின் மடியில் முகம் புதைத்து அழ, சரேல் என திரை விலக்கப்பட்டது வைரக் கிரீடம், வைர வேல் சகிதமாய் திவ்ய அலங்காரத்தில் காட்சிதந்தான் சுவாமிநாதன்.காட்டப்பட்ட தீபாராதனை ஒளியில் அவன் தாயையும் மகனையும் ஒன்று சேர்த்து விட்ட பெருமையோடு இதழ்க்கடையில் புன்முறுவல் தோன்றியதை எல்லாராலும் பார்க்க முடிந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar