Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பஞ்சகோச விவேகம்!
 
பக்தி கதைகள்
பஞ்சகோச விவேகம்!

பகவான் கிருஷ்ணர், எண்ணங்களிலிருந்து எழும் அனைத்து ஆசைகளையும் ஒன்றுவிடாமல் விட்டுவிட்டு, அனைத்துத் திசைகளிலும் இந்த்ரிய கூட்டங்களை மனதாலேயே கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற கருத்தை உபதேசித்தருளினார்.

ஸநை: ஸநை: ருபரமேத் புத்யா த்ருதி த்ருதிக்ருஹீதயா
ஆத்மஸம்ஸ்தம் மந: க்ருத்வா கிஞ்சிதபி சிந்தயேத் (ஸ்ரீமத் பகவத்கீதை -6-25)

மெதுமெதுவாக மனதை புத்தியினாலும் உறுதியான எண்ணத்தினாலும் உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு மனதைப் பரம்பொருளில் நிலை நிறுத்திய பிறகு, வேறு எதையும் பற்றி எண்ணக் கூடாது.  மனதை மிக மெதுவாக உள்ளிழுக்க வேண்டும் என்று பகவான் உபதேசிக்கிறார். எடுத்த எடுப்பில் மனதை ஆத்மாவில் நிலைநிறுத்திவிட முடியாது. மனம் எப்பொழுதும் புறவுலக எண்ணங்களிலேயே ஆழ்ந்திருக்கிறது. ஸ்தூலமான பொருட்களையே சிந்தித்துக் கொண்டிருக்கும் மனதால், அதி ஸூக்ஷ்மமான ஆத்மாவை கிரஹிக்க முடியாது. தரை தளத்திலிருந்து நான்காவது தளத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், படிப்படியாகத்தான் செல்ல முடியும். படிப்படியாக மனதை பருப்பொருட்களிலிருந்து, நுண்ணிய விஷயங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு, அருந்ததி தர்சநந்யாயம் அல்லது ஸாகா சந்த்ர ந்யாயம் என்று பெயர்.

எப்பொழுதும் புறத்தையே சார்ந்திருக்கும் மனதை எவ்வாறு அகமுகப்படுத்துவது? இந்த உலகில் அனைத்துமே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வீடு, மனை, மக்கள், பணம், பதவி அனைத்தும் தற்காலிகமாக நம்முடைய மனப்பக்குவத்தின் பொருட்டு அளிக்கப்பட்டிருக்கின்றன. இவை எதுவுமே உண்மையில் நம்முடையவை அல்ல. யான், எனது என்ற செருக்குதான் மனிதனின் அனைத்து விதமான துன்பங்களுக்கும் காரணமாகிறது. அனைத்தும் இறைவனுடையவை, என்னைச் சேர்ந்தவை அல்ல என்ற உண்மை விளங்கிவிட்டால், மனதில் பற்று அகலத் தொடங்கிவிடும். பற்று நீங்கிய மனமானது, ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டால், ஆத்ம தத்துவம் நன்கு விளங்கத் தொடங்கும். உடல் நானல்ல, பிராணன் நானல்ல, மனம் நானல்ல, புத்தி நான் அல்ல என இவ்வாறு படிப்படியாக பஞ்ச கோச விவேகம் செய்ய வேண்டும். உடல் ஸ்தூலமானது, மனம் ஸூக்ஷ்மமானது. ஆனால், ஸூக்ஷ்மமான உணர்வோடு ஒப்பிடுகையில் மனம் ஸ்தூலமானது. புறவுலகம் நம்மால் அனுபவிக்கப்படுகிறது. நம்முடைய உடல் நம்மால் அனுபவிக்கப்படுகிறது. நம்முடைய மனம் நம்மால் அனுபவிக்கப்படுகிறது. அதாவது, புறவுலகைப் போன்றே, நம்முடைய உடலையும் மனதையும் புறப்பொருட்களாகவே பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

உடலும் உடல் சார்ந்த எண்ணங்களும் மனதில் நிறைந்திருக்கும். அவற்றிலிருந்து மனதை மீட்டு, தியானத்தில் அமர்ந்தால், பல்வேறு உணர்ச்சிப் போராட்டங்கள் மனதில் நிகழும். சில உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. பல உணர்ச்சிகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அது மட்டுமல்ல, பலவித இன்ப அனுபவங்களால் மனம் அமைதி பெறுகிறது. வேறு பல துன்ப அனுபவங்களால் மனம் அமைதியிழந்து தவிக்கிறது. தியானத்தில் மன அமைதியால் ஏற்படும் இன்பம், ரஸாஸ்வாதம் எனப்படும். அதுவும் தியானத்துக்குத் தடை என்றே கௌடபாதாசார்யர் குறிப்பிடுகிறார். உலகம், உடல், மனம், புத்தி, அனைத்தையும் தனக்கு வேறாகக் காண்பதே தியானத்தின் நோக்கம். இவ்வாறு ஆராயும் போது நான் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன், அவற்றுக்கு ஸாக்ஷி என்பது படிப்படியாக விளங்கும். இவ்வாறு விசாரத்தில் ஈடுபட, உள்ள உறுதிமிக முக்கியம். அநாத்மாவிலிருந்து மனதை மீட்டெடுத்து, ஆத்மாவில் நிலைநிறுத்த தெளிந்த அறிவோடு, நெஞ்சில் உறுதி வேண்டும். இல்லையென்றால், இந்தப் பயணத்தில் ஏதோ ஓரிடத்தில் நாம் நின்றுவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. உடல் மயமாகவோ, எண்ணங்கள் மயமாகவோ நாம் ஆகிவிடக்கூடாது. மனதை ஆத்மாவில் நிலைநிறுத்துதல் என்றால், ஆத்ம தத்துவத்திலேயே மனம் ஆழ்ந்திருக்கும்படி செய்தல் என்று பொருள். நான் உடலுக்கு வேறான உணர்வு என்று தியானித்தல் ஒருவகை. உடலை வியாபித்திருக்கும் உணர்வு நான் என்பது மற்றொரு வகை தியானம். வடிவங்களற்ற, அனைத்தையும் கடந்த ஆத்மா நான் என்று தியானிப்பதும் ஒரு வகை.

உண்மையில் ஆத்மா அல்லது உணர்வு எங்கும் நிறைந்திருக்கிறது. மனம் ஏற்கெனவே ஆத்மாவில்தான் இருக்கிறது. ஆத்மாவைப் பற்றிய எண்ணங்களில் மனதை நிலைநிறுத்த வேண்டும். மனதில் அகண்டாகார விருத்தி இருக்க வேண்டும். இவ்வாறு ஆத்ம சிந்தனையில் உள்ளத்தை நிலைநிறுத்திய பிறகு, வேறு எதைக் குறித்தும் சிந்திக்கக் கூடாது. அநாத்ம எண்ணங்களை நீக்கி, ஆத்மாவைப் பற்றிய எண்ணங்களை உள்ளத்தில் இடைவிடாது இருக்குமாறு செய்யவேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar