Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஞானியின் இயல்பு
 
பக்தி கதைகள்
ஞானியின் இயல்பு

பகவான் கிருஷ்ணர், வேதாந்த தியானத்தின் இலக்கணங்களைக் கூறி வருகிறார். ஆத்ம ஞானம் அல்லது தன்னைப் பற்றிய அறிவு என்பது குருமுகமாக சாஸ்த்ரங்களைக் கேட்கும்போது ஏற்படுகிறது. சாஸ்த்ர உபதேசம் என்பது சொற்களால் ஆன ஒரு கண்ணாடி. அதனை குருநாதர் நம் முன்னர் காட்டுகிறார். நம்முடைய கண்கள் சரியாக இருக்குமானால், நம்மால் அதை நன்கு பார்க்க முடியும். அதுபோல, நம் உள்ளம் தகுதி பெற்றதாக இருந்தால், உண்மை உள்ளவாறு விளங்கும்.

ச்ரவணம் எனப்படும் கேட்டலினால் மெய்யறிவைப் பெற்ற பிறகு, மனனம் எனப்படும் ஸாதனையால், உள்ளத்தில் உள்ள ஐயங்களை நீக்கிக் கொள்வது இன்றியமையாதது. ஐயங்கள் புத்தியைச் சார்ந்தவை. அவற்றுக்கு புத்திபூர்வமாக, நியாய பூர்வமாக பதில் கூறினால்தான் புத்தி அமைதியடையும். இவ்வாறு ச்ரவணம், மனனங்களின் வாயிலாக ஒருவர் மெய்யறிவை பெற்றுவிட்டாலும், மெய்யறிவின் பலனை நம்மால் முழுமையாக உணர முடிவதில்லை. பெற்ற மெய்யறிவில் எவ்வித குறைபாடும் இல்லை. நம்முடைய மனதில்தான் குறைபாடு. அதனால்தான் மெய்யறிவின் பலனாகிய மேலான அமைதியை, இன்பத்தை நம்மால் உணர முடியாமல் போகிறது. அதற்குக் காரணம், பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்துள்ள வாஸனைகளால், நம்முடைய மனம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்தித்துப் பழகியிருக்கிறது. அந்த சிந்திக்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டாலொழிய ஞானம் பலனைத் தராது.

உதாரணத்துக்கு, குழாயில் தண்ணீர் வராது என்று தெரிந்தும், பல சமயங்களில் முந்தைய பழக்கத்தால் குழாயைத் திறந்து மூடுவோம். அதுபோல, இத்தனை காலம் தன்னை உடலாகவும், மனதாகவும், புத்தியாகவும் சிந்தித்துப் பழகிவிட்ட காரணத்தினால், அவற்றோடு தன்னை இணைத்துக்கொண்ட காரணத்தினால், உண்மையை உள்வாங்கிக் கொள்ள மறுக்கிறது. தன்னை உடல், மனம், புத்தியிலிருந்து பிரித்து, பரம் பொருளாக உணர்ந்துகொள்ளும் பயிற்சியாகிய சிந்தனை மாற்றமே நிதித்யாஸநம். தியானத்தின்போது, புதிய ஞானம் ஒன்றையும் நாம் பெறுவதில்லை. ச்ரவணத்தின்போது பெற்ற ஞானத்தை, அகமுகப்படுத்தும் பயிற்சியே நிதித்யாஸநம். பகவான் அலைபாயும் இயல்போடு, நிலையற்றதாக மனம் எந்தெந்த பொருட்களை நோக்கி வெளியே செல்கிறதோ, அவற்றிலிருந்து மனதை மீட்டெடுத்து, தன்வசப்படுத்தி, பரம்பொருள் தத்துவத்திலேயே வைக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறினார்.

அடுத்து, தியானத்தின் பலனைக் கூறுகிறார்.

ப்ரஸாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்
உபைதி ஸாந்தரஜஸம் ப்ரஹ்மபூதகல்மஷம் (ஸ்ரீமத் பகவத்கீதை 6-27)

அனைத்துவிதமான மனமாசுகளும் நீங்கப் பெற்றவராய், மனப்போராட்டங்களிலிருந்து விடுபட்டவராய், அமைதியில் நிலைநிற்பவராய், பரம்பொருள் தத்துவத்தை உள்ளவாறு அறிந்து, பரம்பொருளாகவே தன்னை உணர்ந்த ஞானயோகியானவர், மேலான இன்பத்தை அடைகிறார். தியானத்தின் பலன் மேலான, உயர்ந்த இன்பம், உயர்ந்த இன்பம் என்றால் மேலான அமைதி என்று பொருள். அந்த அமைதி புறச்சூழ்நிலைகளைச் சார்ந்ததல்ல. உலகில் நாம் அனுபவிக்கும் எவ்வித அமைதியும், இன்பமும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. பணத்தினால் ஏற்படுகின்ற அமைதி உண்மையான அமைதியல்ல. பணம் எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை விட்டு நீங்கி விடும். எனவே, பணம் நிலையான பாதுகாப்பையோ, அமைதியையோ தர முடியாது. அதனைப் போன்றே உலகில் உள்ள உறவுகள், பொருட்கள், சூழ்நிலைகள் அனைத்தும் தரக்கூடிய அமைதியும் இன்பமும் வந்து போகக் கூடியவை. வரையறைகளுடன் கூடியவை. நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.

ஞானி ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால், அவருடைய அமைதி புறச்சூழ்நிலையைச் சார்ந்ததல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அமைதியும் ஆனந்தமும் தம்முடைய இயல்பு என்பதை உணர்ந்திருப்பதால், தன்னில்தான் நிலைத்திருப்பதால், ஞானி அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறார்.

நெருப்பு ஏன் சூடாக இருக்கிறது என்று நாம் கேட்பதில்லை. உஷ்ணமாக இருக்கும் தன்மை என்பது நெருப்பின் இயல்பு. அதுபோல, அமைதி என்பது ஞானியின் இயல்பாக இருக்கிறது. எவ்வித நிபந்தனைகளும் இன்றி, எப்பொழுதும் நெருப்பு சூடாக இருப்பதைப்போல, ஞானி புறச் சூழ்நிலைகள் எப்படிப்பட்டவையாக இருப்பினும் அமைதியாக இருக்கிறார். வாழ்க்கையின், எதிர்காலத்தின் நிச்சய மற்ற தன்மையை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அது அவரை ஒருபொழுதும் பாதிப்பதில்லை.

தன்னுடைய உற்றார், உறவினர் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மாண்டு மடிவதைப் பார்த்துக் கொண்டு, பகவான் கிருஷ்ணர் ஒரு மரத்தின் மீது அமைதியாக, ஒரு புன்முறுவலோடு அமர்ந்திருந்தார் என்று பாகவதம் கூறுகிறது. ஞானி ப்ரசாந்தமான மனதை உடையவர். அவருடைய மனதில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை. அமைதியற்ற எண்ணங்கள்தான் மனதின் பாரத்தை உணரச் செய்கின்றன. ஞானியின் மனதில் நலம் பயக்கும் நல்லெண்ணங்களே நிறைந்திருக்கின்றன.

ஞானியின் மனம் ராஜஸ எண்ணங்களான, ஆசை, கோபம், பொருட்பற்று, மயக்கம், கர்வம், பொறாமை முதலிய எண்ணங்களிலிருந்து விடுபட்டிருக்கிறது. கல்மஷம் என்று சொல்லப்படும் மயக்கம், குழப்பத்தைக் குறிப்பனவாகிய தாமஸ வ்ருத்திகளும் அவருடைய உள்ளத்தில் இல்லை.

ஞானியின் உள்ளத்தில் ஸாத்விக வ்ருத்திகளே மேலோங்கியிருக்கின்றன. பஞ்சதசீ என்ற நூலில் வித்யாரண்யர், தாமஸ வ்ருத்தி - மூட வ்ருத்தி, ராஜஸ வ்ருத்தி - கோர வ்ருத்தி, ஸாத்விக வ்ருத்தி - சாந்த வ்ருத்தி என்று கூறியிருக்கிறார். ஞானியின் மனம் அமைதியிலும் ஆனந்தத்திலும் நிலைபெற்றிருக்கிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar