Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குறையொன்றுமில்லை கோபாலா!
 
பக்தி கதைகள்
குறையொன்றுமில்லை கோபாலா!

‘வணங்குகிறேன் கிருஷ்ணா..’ என்று கைகளைக் கூப்பி வணங்கியபடி உள்ளே நுழைந்தார் காலவ மகரிஷி. “வாருங்கள் முனி சிரேஷ்டரே!” அவரை வரவேற்று அமரச் செய்தார் கிருஷ்ணர்.“ரிஷி அவர்களே! என்னைத் தாங்கள் காண வந்திருக்கும் காரணம்...”இழுத்தார் கிருஷ்ணர்.“கண்ணா... மாதவா... ஜெகத்ரட்சகா...தாங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்.. தெரியாமல் ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டேன்”. “இக்கட்டா... அதென்ன சொல்லுங்கள்..முனி புங்கவரே...”“சொல்கிறேன்... இன்று காலை நான் நதியில் இறங்கி காலை சந்தியாவந்தனம் செய்ய இரு கைகளாலும் ஜலத்தை ஏந்தி அர்க்கியம் விட முனைந்தேன். அப்போது வான் வழியே விமானமொன்று என்னைக்கடந்து பறந்து சென்றது. அதிலிருந்த கந்தர்வன் ஒருவன் தாம்பூல எச்சிலை என் கைகளிலிருந்த ஜலத்தில் உமிழ்ந்துவிட்டான். நிமிட நேரத்தில் தோன்றிய கோபத்தால் சற்றும் சிந்திக்காது அந்தக் கந்தர்வனை இன்று மாலைக்குள் கழுத்தறுபட்டுச் சாவாய் என்று சாபம் கொடுத்து விட்டேன். பாவம் அவன்.

ஒரு வேளை அவன் அறியாமல் இச் செயலைச் செய்திருக்கலாம். அப்படியாயின் நான் சாபம் கொடுத்தது தவறாகாதா? அதே நேரம், நான் கொடுத்த சாபம் பலிக்காமல் போனால்... நான் செய்த தவத்தின் பெருமை என்னாவது? நீங்களே சொல்லுங்கள் பகவானே..”“மிகச் சரியாகச் சொன்னீர்கள்...கட்டாயம் நான் உங்களுக்கு உதவுகிறேன். என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்...” கேட்டார் கிருஷ்ண பகவான். “கிருஷ்ணா...நானோ ஒரு தபஸ்வி... எனக்கு கழுத்தை அறுத்து ஒருவரைக் கொல்வதென்பது முடியாத காரியம். ஆகவே....” “ஆகவே...என்ன சொல்லுங்கள் மகரிஷி...”“மாதவா... அக்காரியத்தை என்பொருட்டு தாங்கள்தான் செய்யவேண்டும்”. துõக்கிவாரிப் போட்டது கண்ணனுக்கு... “என்ன நானா... இப்போது எனக்கல்லவா இக்கட்டான நிலை ஏற்பட்டு விட்டது! உங்களுக்கு உதவுவதாக வாக்கும் கொடுத்து விட்டேனே. ம்..நடப்பது நடந்தே தீரும்...சரி.. நான் உங்களுக்காக ஒப்புக்கொள்கிறேன்..ஆனால் ஒரு சந்தேகம்...” “என்ன சந்தேகம்... சொல்லுங்கள் பிரபோ..” “என்னிடம் வந்து உதவி கேட்க நீங்களாய் வந்தீர்களா... அல்லது வேறு யாராவது சொல்லி அனுப்பினார்களா?” “இல்லை கண்ணா... அது வந்து..” “ம்... சொல்லுங்கள்... என்ன தயக்கம்...!” “ஆம் கண்ணா... நாரதர்தான் உங்களிடம் வரும்படி சொன்னார்.

அவரிடம் தான் நான் முதலில் இது பற்றி என்ன செய்வதென்று கேட்டேன். அவர்தான் யோசனை கூறினார்.“ஓகோ... அப்படியா? நினைத்தேன்..இது நாரதனின் வேலையாகத்தான் இருக்குமென்று..” சிரித்தார் கண்ணன். இவர்கள் இருவரின் உரையாடலையும் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நாரதர், அடுத்த நொடி கந்தர்வ லோகம் சென்று காலவ முனிவர் சபித்த கந்தர்வனின் முன் போய் நின்றார். “வாருங்கள் நாரதரே... காரணமில்லாமல் வரமாட்டீரே...இங்கே வந்ததன் காரணம் என்னவோ?” “அடே கந்தர்வா..இன்று மாலை ஸ்ரீ கிருஷ்ணரால் நீ கழுத்தறுபட்டு சாகப் போகிறாய்... உன்னை எச்சரிக்கவே நான் இங்கு வந்தேன்,” என்றார் நாரதர். “ஐயோ... இதென்ன விபரீதம்? நான் கழுத்தறுபட்டு சாகப் போகிறேனா? நான் செய்த தவறென்ன! கிருஷ்ணர் அவ்வாறு ஏன் செய்ய வேண்டும்?” அவன் பயந்து அலறினான். பிறகு நடந்ததை விளக்கமாகச் சொன்னார் நாரதர். தன்னைக் காப்பாற்றும்படி நாரதரின் காலில் விழுந்தான் அந்த கந்தர்வன். மனமிரங்கிய நாரதர் அவன் காதில் உபாயம் ஒன்றைக் கூறினார். இருவருமாய் யமுனை நதிக்கரைக்கு வந்தனர். கந்தர்வனை ஓரிடத்தில் மறைந்து கொள்ளச் செய்தார் நாரதர். அப்போது கண்ணனின் தங்கையும், அர்ஜுனனின் மனைவியுமாகிய சுபத்ரா தேவிபூஜை ஒன்றைச் செய்வதற்காக அங்கே வந்தாள். நாரதரும் சுபத்ராவும் ஒருவரையொருவர் நலம் சாரித்துக்கொண்டனர்.

சுபத்ராவிடம் பேச்சுக்கொடுத்தபடியே கந்தர்வனுக்கு சைகை காண்பித்தார் நாரதர். ஓடி வந்த கந்தர்வன் சுபத்ராவின் கால்களில் விழுந்து தன் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்ச, கருணை உள்ளம் கொண்ட சுபத்ரா என்ன ஏதென்று விசாரிக்காது, சிறிதும் யோசிக்காது, “சரி... உன்னைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்,” என வாக்குக் கொடுத்து விட்டாள். உடனே கந்தர்வன்,“ கண்ணனுடன் போட்டியிடும் அளவுக்கு தகுதியானவர் உங்கள் கணவர் அர்ஜுனன் தான். அவர் கண்ணனுடன் போரிட்டு என்னைக் காப்பாற்ற வேண்டும்,” என்றான். அப்போது அங்கு வந்த அர்ஜுனன் நடந்ததை அறிந்து, “ஐயோ... இதென்ன கொடுமை...? நான் கன்ணனோடு போரிடுவதா? சுபத்ரா வேண்டாம் இந்த விபரீதம். இது என்னால் ஆகாது. யோசியாது நீ கொடுத்த வாக்குறுதியால் நான் கண்ணனோடு போரிடுவது எப்படி சாத்தியம்?” என்றான். ஆனால் வாக்கு கொடுத்து விட்ட காதல் மனைவி சுபத்ராவின் வற்புறுத்தலால், அவளது கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை. எல்லாம் இந்த நாரதரால் வந்த வினை என்று மனதிற்குள் அவரைத் திட்டினான். அன்று மாலை கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கடும்போர் துவங்கியது. போருக்குமுன் அர்ஜுனன் கந்தர்வனை அம்புக்கோட்டைக்குள் பாதுகாப்பாய் வைத்தான்.

அதேநேரம் தன் அன்புக்குரிய கண்ணனோடு போர்புரிய வேண்டியுள்ளதே என மனம் வருந்திய அவன், ஒவ்வொரு அம்பையும் கன்ணன் மீது செலுத்தும்போது கண்ணனின் திரு நாமங்களை ஒவ்வொன்றாய்ச் சொல்லியபடி அம்பெய்ய அவை கண்ணனை ஒன்றும் செய்யாது மலர் மாலைகளாய் கண்ணனின் கழுத்தில் விழுந்தன. கண்ணனும் சிரித்தபடியே அம்மாலைகளை ஏற்றுக்கொண்டார். கூடியிருந்த கூட்டம் இதனை வியப்போடு பார்த்தது. நெடு நேரம் போர் நீடித்தது. கடைசியாய், கண்ணன் அம்புக்கோட்டைக்குள் பாதுகாப்பாய் இருந்த கந்தர்வனின் மீது அம்பெய்ய அது அவன் கழுத்தை அறுக்க கந்தர்வன் மாண்டு போனான். தோற்றுப்போன அர்ஜுனன், தன் மனைவி சொன்னபடி கந்தர்வனைக் காப்பாற்ற முடியாமல் போயிற்றே என்று வருந்தி தீமூட்டி அதில் இறங்கி உயிர்விட முனைந்தான். சுபத்ரா தன் அண்ணன் கண்ணனின் கால்களில் விழுந்து தன் மாங்கல்யத்தைக் காக்கும்படி கதறினாள். கண்ணன் தீயில் இறங்க முற்பட்ட அர்ஜுனனைத் தடுத்து கழுத்தறுபட்டுக்கிடந்த கந்தர்வனை உயிர் பெற்று எழும்படி செய்தார். ஆக காலவ முனிவரின் சாபமும் பலித்தது. சுபத்ராவின் வாக்கும் பலித்தது. இதெல்லாம் ஸ்ரீகிருஷ்ணராலேயே நடத்தி முடிக்கப்பட்டதென தேவர்கள் அவரைத் துதித்தனர். இதற்கெல்லாம் காரணமான நாரதர் மெல்ல அவ்விடம் விட்டு நழுவ முற்பட, “நாரதரே... எங்கே கிளம்பிவிட்டீர்...? அடுத்து யார் உம்மிடம் மாட்டப் போகிறாரோ...?” என கண்ணன் சிரித்தபடியே கேட்க அங்கே குழுமியிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க அவ்விடமே சிரிப்பொலியால் நிறைந்தது... இந்த தீபாவளி நன்னாளில் அந்தக் கோபாலனை நினைப்பவர்களுக்கு குறையேது...!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar