Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆத்ம தத்துவம்!
 
பக்தி கதைகள்
ஆத்ம தத்துவம்!

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், வேதாந்த தியானத்தின் பலனைப் பின்வருமாறு கூறியருளினார். மனதை இடைவிடாது, தியானத்தில் ஈடுபடுத்தி, தவறான எண்ணங்களிலிருந்து விடுபட்டவராய், வேதாந்த தியானத்தில் ஈடுபடும் யோகியானவர், பரம் பொருளைப் பற்றிய மெய்யறிவால் எல்லையற்ற ஆனந்தத்தை மிக எளிதாக அடைகிறார். (உணர்கிறார்).

ஸர்வபூதஸ்த்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி:
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந:

(ஸ்ரீமத் பகவத்கீதை 6-29)

தியானத்தினால் உள்ளத்தைப் பண்படுத்தி, பரம் பொருளோடு தன்னை இணைத்துக் கொண்டவர், அனைத்து உயிர்களிடத்திலும் ஆத்மாவையும், ஆத்மாவில் அனைத்து உயிர்களையும் காண்கிறார். எங்கும் அவர் ஸமமான மெய்ப்பொருளையே காண்கிறார். எங்கும் அவர் ஸமமான மெய்ப்பொருளையே காண்கிறார். நம்முடைய மனம் எதில் ஆழ்ந்து ஈடுபடுகிறதோ, அதன் வாயிலாகவே நாம் உலகைக் காண்போம். இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒருவர், இயற்கையின் மொழிகளில் இசையைக் கேட்பார். அத்தகையவர்கள் குழந்தையின் அழுகையில் கூட, ஸ்வரம் பிரித்துக் கூறுவர்.

அறிவியல் சார்ந்த பார்வையோடு, உலகை அணுகுபவர்கள், அவற்றை அறிவியல் மயமாகக் காண்கிறார்கள். விழுந்த ஓர் ஆப்பிள் பழத்தைக் கொண்டு, புவியீர்ப்பு விசை கண்டறியப்பட்டது. வேதாந்த ஞானத்தின் துணை கொண்டு, தன்னைப் பற்றி தெளிந்த மெய்யறிவில் நிலைத்திருப்பவர் தொடர்ந்து நிதித்யாஸனத்தில் ஈடுபடுகிறார். வேதாந்தத்துக் கென்று நேரத்தைச் செலவிடுகிறார். இவ்வாறு தொடர்ந்து ஆத்ம தியானத்தில் ஈடுபடுகின்ற மெய்யறிவாளர், எங்கும் ஒரே பரம்பொருளின் இருப்பை உணர்ந்து கொள்கிறார். ஈக்ஷதே என்ற சொல்லுக்கு, காண்கிறார் என்பது சொற்பொருள். அறிகிறார் என்பது குறிப்புப்பொருள். ஆத்மா, ப்ரஹ்மன் அல்லது பரம்பொருள் கண் முதலான பொறிகளுக்கு எட்டாதது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாலை ஒன்றில் அனைத்து மணிகளையும் ஒரு கண்ணுக்குத் தெரியாத நூல் இணைக்கிறது. நூல் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அனைத்து மணிகளுக்குள்ளும் நூல் ஊடுருவிச் சென்றிப்பதை நாம் அறிவால் புரிந்துகொள்கிறோம். அதுபோல, பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற ஒரே பரம்பொருளை அறிவால் அறிந்துகொள்கிறார் ஞானி.

ஸர்வத்ர ஸமதர்ஸந: எங்கும் ஸமத்தைக் காணுதல் என்பதற்கு, ஸர்வத்ர ஆத்ம தர்ஸந; எங்கும் ஒன்றாக உள்ள பரம்பொருளை அறிதல் என்று பொருள். இவ்வாறு கூறிவிட்டதால், ஞானியின் கண்களுக்கு வேற்றுமையே தெரியாது என்று பொருளல்ல. அனைத்துவித புற வேற்றுமைகளையும் ஞானி அறிவார். அறிவுபூர்வமான, உணர்ச்சிபூர்வமான வேற்றுமைகளையும் அவர் அறிவார். ஆனால், இத்தனை வேற்றுமைகளையும் தாண்டி, அனைத்திலும், அனைவரிலும் ஒன்றாக இருக்கும் ஆத்மாவை அவர் அறிகிறார். பொன்னால் செய்த பல்வேறு அணிகலன்களைக் காண்கிறோம். பார்ப்பதற்கு வளையல் வேறு, மோதிரம் வேறுதான். நகையின் கோணத்தில் அவை அனைத்தும் வேறானவை. பொன்னின் கோணத்தில் அனைத்தும் ஒன்றுதான். இவ்வாறு ஞானி, அனைத்துயிர்களுக்குள்ளும் உள்ள ஒரே ஆத்மாவை அறிவால் அறிகிறார். குடம், குவளை, அறை முதலான ஒவ்வொரு பொருளுக்குள்ளும் வெளி அல்லது ஆகாசம் இருக்கிறது. அதுபோல, ஞானி அனைவருக்குள்ளும் அந்தர்யாமியாக விளங்கும் ஆத்மாவை அறிகிறார்.

அடுத்து, இருக்கின்ற ஒரே வெளி அல்லது ஆகாசத்தில்தான் அனைத்து அறைகளும், குடங்களும் குவளைகளும் பிற பொருட்களும் இருக்கின்றன என்பதை அறிகிறோம். அதுபோல, ஒரே பொருளான பரம்பொருளில் அனைத்துயிர்களும், அனைத்துப் பொருட்களும் இருப்பதை ஞானி அறிகிறார். பரம்பொருள் அல்லது தூய உணர்வின் மீது உயிருக்கு உயிரான இறைவனும், உயிர்களும், உலகங்களும், உடல்களும், உள்ளங்களும் மாயையால் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், ஆத்மா என்பது உடலில் இருப்பதல்ல. ஆத்மாவில்தான் அனைத்து உடல்களும் இருக்கின்றன. அநாத்மாவாகிய உடல்கள் அழியக்கூடியவை, ஆத்மா அழியாத தத்துவம். உலகில் பல்வேறுவிதமான அனுபவங்களைப் பெறுவதற்கும், அழகை ரஸிப்பதற்கும் நாம் அநாத்மாவைச் சார்ந்திருக்கலாம். ஆனால், நியைõன பாதுகாப்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவற்றுக்கு ஆத்மாவைச் சார்ந்திருப்பதே, அறிவுடைமை, மெய்யறிவாளர் அதைத்தான் செய்கிறார். அறியாமை மிக்கவர்கள், நிலையற்ற உலக வாழ்க்கையில் நிலையான பாதுகாப்பையும் அமைதியையும் தேடுகின்றனர். நிலையற்ற பொருட்களிலும், உறவுகளிலும் நிலைத்த பாதுகாப்பைத் தேடுதல் அறியாமை. மெய்யறிவாளர், உலகில் வாழ்ந்திருப்பதற்கிடையில், வேதாந்த தியானத்தின் பயனாக, அனைத்து உயிர்களிலும் தன்னைக் காண்கிறார். தன்னில் அனைத்து உயிர்களையும் காண்கிறார். இந்த மெய்யறிவின் பயனாக நிலைத்த பாதுகாப்பு, அமைதி, ஆனந்தத்தில் நிலைத்திருக்கிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar