Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எது மேன்மை?
 
பக்தி கதைகள்
எது மேன்மை?

அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் ராவணனைத் துதிபாடுபவர்கள் போற்றுகிறார்கள். எங்கள் மன்னன் ராவணன் உலகிலேயே அதிகம் கல்வியறிவு படைத்தவர் என்று நான்முகனால் சான்றளிக்கப்பட்டவர்; உன்னத பக்தன் என்று பரமசிவனால் புகழப்பட்டவர்; தன்னிலும் நிகரற்ற செல்வந்தன் என்று குபேரனால் போற்றப்பட்டவர். தனக்கு நிகராண வீரனே இல்லாதவர் என்று இந்திரன் முதலான தேவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்; மூன்று உலகங்களுக்கும் ஒரே சக்ரவர்த்தி என்று மக்களால் வணங்கப்படுபவர்; கருணை உள்ளம் படைத்தவர் என்று உறவினர்களால் மதிக்கப்படுபவர்; பேரழகன் என்று இளம் பெண்களால் நேசிக்கப்படுபவர்... என்று பாடல் நீண்டது. அத்தருணத்தில் ராமதூதன் அனுமான் சபைக்குக் கட்டி இழுத்து வரப்படுகிறார். ராவணனைப் பார்த்து, இத்தனை மேன்மைக்கும் சொந்தக்காரனான உனக்கு நான் அளிக்கும் சான்றிதழ் இதோ: நீ இழிந்தவன் என்றார். அனுமான் கூறியதைக் கேட்டு, சபையே அதிர்ந்தது. அவமானத்தால் கோபத்தின் உச்சியிலிருந்த ராவணன் பேச முடியாமல் அனுமனை எரிப்பது போலப் பார்த்தான்.

சிறிதும் பயமற்று அனுமான், நீ பெண்மையை மதிக்கத் தவறியவன். மாற்றான் மனைவியை அபகரித்த தீயவன். புலன்களுக்கு அடிமை நீ. இந்த ஒரு இழி குணத்தினால் நீ அடைந்த அனைத்து மேன்மைகளும் நாசமடைந்துவிட்டன. இனி உலகம் உன்னை இழிந்தவன் என்றே அடையாளம் கண்டு கொள்ளும் என்றார். எனக்கு இந்திராதி தேவர்களெல்லாம் கொடுத்த சான்றிதழ்களைவிட, கேவலம் ஒரு குரங்காகிய நீ கொடுக்கும் சான்றிதழா வருங்காலத்தில் நிலைக்கப்போகிறது? என்று கேலி செய்தான் ராவணன். அதைக் கேட்ட அனுமான், சான்றிதழின் மதிப்பு கொடுப்பவரின் உருவத்தைப் பொருத்தது அல்ல; அவரின் சான்றாண்மையைப் பொருத்தே காலம்தோறும் மதிக்கப்படுகிறது. இது என் சொந்தச் சான்றிதழ் அல்ல. சாதுக்கள், சான்றோர்கள் அளித்தது. விவேகத்தால் எது மேன்மை, எது கீழ்மை என்று ஆராய்ந்து தர்மத்தையே ஆதாரமாகக் கொண்டு, மனதில் மாசற்று வாழும் அவர்களே உன்னை இழிந்தவன் என்கிறார்கள் என்றார் அனுமான்.

இதைக் கேட்ட ராவணன், யார் அந்தச் சான்றோர்கள்? பிச்சைக்காரர்களான இந்தச் சோம்பேறிகளின் வார்த்தைகளை யார் நம்புவார்கள்? இவர்களது சான்றிதழா உலகம் உள்ளளவும் நிலைக்கும்? என்றான். அதற்கு அனுமான், தேவர்கள் கொடுத்த சான்றிதழ்கள் யாவும் மறைந்துவிடும். உன் துதி பாடிகள் உன்னால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள். ஆனால் சான்றோர்களை உன்னால் விலைகொடுத்து வாங்க முடியாது. அவர்கள் மரண பயமற்றவர்கள் என்பதால் அச்சுறுத்தவும் முடியாது. சத்தியத்தில் நிலைத்தவர்கள் என்பதால் அவர்களை நீ ஏமாற்றவும் முடியாது. மாசற்ற வாழ்க்கை வாழும் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உன்னை இழிந்தவன் என்றே இனி இந்த உலகிற்கு அடையாளம் காட்டுவார்கள். சமுதாய மேன்மைக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கும் அவர்கள் உன் இழிவைக் காட்டி மக்களை நல்வழிப்படுத்துவர். சமுதாயத்தில் ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதையே லட்சியமாகக் கொண்ட அவர்கள். தங்களுக்குப் பின் தங்கள் சீடர் பரம்பரையின் மூலம் இந்த நற்பணியைத் தொடர்ந்து செய்வர். காலம் இதை நிரூபிக்கும் என்று பதிலுரைத்தார் நகைத்துக் கொண்டே. ஒருவனது மேன்மையை அளப்பதற்கான அளவுகோல் அவன் ஒழுக்கமே என்ற அனுமனின் மதிநுட்பம் எத்தனை சிறப்பு வாய்ந்தது! இதையே பொய்யாமொழிப் புலவர். ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி ஒழுக்கத்தினால் மட்டுமே ஒருவர் உயர்ந்த நிலையை அடைவர். ஒழுக்கம் தவறினால், யாரும் அடையாத பெரும் பழியை அடைவார்கள். நாமும் ஒழுக்கத்தின் வழி நிற்போம். வாழ்வில் மேன்மையடைவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar