Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அசுவத்தாமா!
 
பக்தி கதைகள்
அசுவத்தாமா!

குருஷேத்திர யுத்த களம்; பாரதப் போர். ஆயிரமாயிரம் சேனைகள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. ரதங்களும், யானைகளும், குதிரைகளும், எழுப்பிய புழுதிப் படலம் வானத்தைத் திரையிட்டிருந்தது; ரத்தம் ஆறாக ஓடியது; பாண்டவர் படையின் சடலங்கள் குவிந்து கிடந்தன. பத்தாவது நாள் பீஷ்மர் வீழ்ந்து விட்டார். துரோணர், பாண்டவர்களின் மீது அன்பு கொண்டவர்; அர்ஜுனனை உயிராக நேசித்த ஆசிரியர். போர் துவங்கியதும் முதல் நாள் இரு அம்புகளை அவர் பாதங்களை நோக்கி எய்து தன் வணக்கத்தைத் தெரிவித்த சீடனை வாழ்த்தியது அவர் உள்ளம். ஆனால், இன்று துரோணர் பாண்டவர்களுக்கு காலனாகத் தோற்றமளித்தார். பதினான்காவது நாள். தருமர், பாண்டவப் படைகளுக்கு தலைமை வகித்தார். அன்று பகலிலும், இரவிலும் யுத்தம் தொடர்ந்து நடந்தது. துரோணர் படைகளைக் கொன்று குவித்துக் கொண்டிருந்ததை கண்ட யாவரும், கவலையில் ஆழ்ந்தனர். பாண்டவர்கள் பாசறையில் கூடினர். கண்ணா, இனி என்ன செய்வது? என வினவினார் தருமர். அவர் குரலில் என்றுமில்லாத பதட்டமிருந்தது. ஆம் கண்ணா! துரோணர் இருக்கும் நிலையைப் பார்த்தால், நாளை சூரியஸ்த மனத்திற்குள் நம் படை அழிந்து விடும் போலல்லவா
தோன்றுகிறது, என்றான் அர்ஜுனன்.

தருமரே, நீர் என்ன சொல்கிறீர்? தன் வழக்கமான புன்முறுவலுடன் வினவினான் கிருஷ்ணன். எனக்கொன்றும் தோன்றவில்லை. ஒரே குழப்பமாயிருக்கிறது. நீதான் உபாயம் கூற வேண்டும் கண்ணா, என தணிந்த குரலில் கூறிவிட்டுக் களைப்புடன் ஆசனத்தில் சாய்ந்து கொண்டார் தருமர். ஒரே ஒரு வழி தான் இருக்கிறது!
அது என்ன? ஏதாவதொரு உபாயத்தால், துரோணர் ஆயுதத்தைக் கீழே வைக்கும்படி செய்துவிட வேண்டும்! பூ! இவ்வளவு தானே? ஆம்! துரோணர் உயிருடன் இருக்கும்வரை, அவர் தன் கரத்தில் ஆயுதமேந்தி நிற்கும் வரை, வெற்றி கிடைப்பது அரிது! ஆனால்... ஆனால் என்ன? ஆனால், அவரை எவ்விதம் அஸ்திரங்களைத் துறக்கும்படி செய்வது? பீமன் கவலையுடன் வினவினான். தன் மகன் அசுவத்தாமாவின் மீது அளவற்ற அன்பு கொண்டவர் துரோணர். இது தெரியுமல்லவா? ஆம்!
தன் மகன் அசுவத்தாமா இறந்து விட்டான் என்ற செய்தியறிந்து விட்டால், துரோணர் தம் ஆயுதங்களை துறந்து விடுவார்! அப்படியென்றால்...? அசுவத்தாமா இறந்து விட்டான் என்ற சொற்கள், துரோணரின் காதில் விழ வேண்டும்! கண்ணா, என்ன சொல்கிறாய் நீ? தருமரின் குரல் நடுங்கியது. அசுவத்தாமா உயிருடன் இருக்கும்போதே உன் மகன் இறந்துவிட்டான் என்றா கூறச் சொல்கிறாய்! இது தர்மமல்ல, என்றான் பீமன். இது முறையல்ல, என கூறினான் அர்ஜுனன். ஆனால், வெற்றி காண விரும்பினால் வேறு வழியில்லை, கண்ணன் சற்றும் பதற்றமடையாது கூறினான். கூடாரத்தில் அமைதி நிலவியது. கண்ணனின் குரல் மீண்டும் ஒலித்தது.
தருமரே, 15வது நாள் கடும்போர் துவங்கப்போகிறது. தருமப்படி செய்த யுத்த முறைகள், இப்பதினைந்து நாட்கள் நடந்த கொடும் போரில் மறைந்து விட்டன. வெற்றி அல்லது வீழ்ச்சி இவ்விரண்டில் ஒன்றைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

துயரம் தோய்ந்த குரலில் வினவினார் தருமர். ஆனால், தர்மம்? யுத்த களத்தில் தர்மம், அதர்மம் என்று கூறுகிறீர் தருமரே! நான் உம்மை வற்புறுத்தவில்லை. வேறு வழியில்லை என்று தான் கூறுகிறேன்! மாளவ மன்னனிடம், அசுவத்தாமன் என்ற யானையிருக்கிறது, பீமனின் குரலில் உற்சாகம் தொனித்தது. ஆனால், இச்செய்தியை தருமர் தான் தன் வாயால் கூற வேண்டும், என்றான் கண்ணன். கொடுமை! கொடுமை! என மூணு முணுத்தார் தருமர்; அவர் முகம் வெளிறியது. தருமம் தவறாத தருமர், நீதி நெறி வழுவாத தருமர், பொய்யுரைக்காத தருமரின் வாயிலிருந்து இச்செய்தியைக் கேட்டால்தான், துரோணரின் மனம் இதை ஏற்கும். இல்லாவிடில்... கண்ணன் மேலே பேசவில்லை. நெடு நேர மவுனத்திற்கு பின் தருமர் கூறினார். கண்ணா... நல்லது. இப்பாவத்தை நான் ஏற்கச் சித்தமாக இருக்கிறேன்! மறுதினம் போர் நிலை உச்சத்தை அடைந்தது. மேகத்தைப் போல் கர்ஜித்துக் கொண்டு, துரோணர் பொழிந்த அம்பு மழையின் முன், பாண்டவர்களின் படை எதிர்க்கும் சக்தியை இழந்து நின்றது. அர்ஜுனனும், பீமனும் காட்டிய வீரம் வியக்கத் தக்கதாக இருந்தும், துரோணரின் அஸ்திரங்கள், அவ்வீரர்களின் மனதை, திகிலில் ஆழ்த்தின. தக்க தருணம் பார்த்து நின்ற பீமன், துரோணர் பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுக்கும் சமயம் கண்டு, தன் கதையினால் அசுவத்தாமா என்ற யானையை அடித்து வீழ்த்தினான். யானை பிளிறியது. அதனிடைய பீமனின் குரல் பயங்கரமாக ஒலித்தது. அசுவத்தாமா இறந்தான்! துரோணரின் காதில் இக்கர்ஜனை வீழ்ந்தது. அவர் கை தாழ்ந்தது. யார் கூறியது. அசுவத்தாமாவா இறந்தான்? என்று துரோணர் உரத்த குரலில் வினவினார். ஆம்! இது பீமனின் முழக்கம் துரோணரே, எனப் படைவீரர்களில் ஒருவன் கூவினான்.
துரோணரின் உடல் தளர்ந்தது. பீமன் கூறுவதை நான் நம்பவில்லை. என் அஸ்வத்தாமாவா கொல்லப்பட்டான்? அவர் உள்ளம் குமுறியது. துரோணரின் விழிகள் யாரையோ தேடியலைந்தன.

தருமரே மனம் தளராதீர்கள், என்று கண்ணன் ஊக்குவித்தான். தருமரைக் கண்ட துரோணர், வெறிபிடித்தவர் போல கூவினார். தருமா... நீ சொல் என் மகன் அசுவத்தாமாவா இறந்தான்... இது சத்தியமா... இது உண்மையா? வானம் குமுறியது; அண்டம் அதிர்ந்தது; தருமரின் உடலும், உள்ளமும் நடுங்கின; கண்கள் நீரைச் சொறிந்தன; பேச நாவெழ வில்லை. புயல் போன்ற வேகத்துடன் பாஞ்சால வீரர்களை வெட்டிக் குவித்த துரோணர் மீண்டும் கூவினார். தருமா, ஏன் தயக்கம்... சொல், என் மகன் அசுவத்தாமனா இறந்தான்... துரோணரின் குரல் தழுதழுத்தது; வியர்வை வெள்ளமாகப் பெருகியது. புத்திரபாசத்தால் நெஞ்சம் துடித்தது; கண்கள் இருண்டன. குருதேவா! சொல் தருமா சொல்... பீமன் கூறுவது உண்மைதானா? தருமர் தன்னைச் சுற்றிலும் நோக்கினார். பாண்டவப் படை யானையின் கால்களில் மிதியுண்ட செந்தாமரைத் தடாகம் போல் சிதறிக் கிடந்தது. தருமர் சிந்தித்தார். யுத்தத்தை துவக்கியதின் அர்த்தமென்ன? வெற்றிக்காகத் தானே போரிடுகிறோம்! செங்குருதியைச் சேறாக்கி நிணமும், சதையும் கொண்ட உடலைக் கூறாக்குவது எதற்காக...? ஆனால், தருமரின் மனம்... அவருடைய அந்தராத்மா அவரைச் சுட்டது. பொய் கூறிப்பெறும் வெற்றியும் ஒரு வெற்றிதானா? துரோணரின் குரல் பின்னும் உயர்ந்தது. சொல் தருமா சொல்! தருமர் நிமிர்ந்து நின்றார். அர்ஜுனனும், பீமனும், கண்ணனும் ஆவலுடன், கவலையுடன் அவர் முகத்தை நோக்கினார். குருதேவா... இது உண்மைதான்! என்ன சொல்கிறாய் தருமா? ஆம். குருதேவா... அசுவத்தாமா எனும் யானை இறந்தது உண்மைதான்! என்று தருமர் கூறினார். தருமரின் குரல் யானை என்று கூறும் போது, சற்று தாழ்ந்து விட்டதால் துரோணரின் காதில், யானை என்ற சொல் விழவில்லை. யாவும் ஒரு கணத்தில் நிகழ்ந்து விட்டன! புத்திர பாசத்தால் துடித்து நின்ற துரோணரின் காதில், அசுவத்தாமா கொல்லப்பட்டான் என்ற சொற்கள் தாம் நாராசமாக ஒலித்தன. யானை என்ற சொல் அவர் செவிக்கு எட்டவேயில்லை. அதற்குள் புத்திர சோகத்தால் தம் நிலை மறந்துவிட்டார் துரோணர். அவர் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டார். தருமரின் தேர் பூமியில் பதிந்தது. பாண்டவசேனை மகிழ்ச்சியுடன் ஆரவாரித்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar