Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பெரு மழையில் ஒரு தீரன்!
 
பக்தி கதைகள்
பெரு மழையில் ஒரு தீரன்!

சாணத்தால் மெழுகிய மண் திண்ணையில் கண்மணி பாடம் படித்துக் கொண்டிருந்தாள். திண்ணை உரல் அருகில் இருந்து கொண்டு அவள் படிப்பதையே கவனித்துக் கொண்டிருந்தான் வேலு. காமராசர் காரில் போகும் போது பரட்டைத் தலையுடன் ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். காரை விட்டு இறங்கி அவன் பரட்டைத் தலைக்குள் கையை விட்டுக் கோதி ஏண்டா பள்ளிக்கூடம் போகவில்லை? என்று அவர் கேட்டார். அதற்கு அவன் பள்ளிக்கூடம் போனால் யாரு சார் சோறு போடுவாங்க? என்றான். அதற்கு காமராசர் சோறு போட்டால் பள்ளிக்கூடம் போவாயா? என்றார். ஆமா, போவேன் என்றான் சிறுவன். இந்த உரையாடல்தான் காமராசரைப் பள்ளிகளில் மதிய உணவு அளிக்கும் திட்டத்தை உருவாக்க வழிவகுத்தது.

பக்கத்து வீட்டுச் சிறுமி கண்மணி படிக்கும்போது அவளை நிறுத்திய வேலு. காமராசர் நம்ம மலையூருக்கும் வருவாரா கண்மணி! என்று கேட்டான். அட போடா, அவர் இறந்து ரொம்ப நாளாச்சு என்ற அவள்- வேணுமானா அவர் படத்தை ஒரு தடவை பார்த்துக்கோ என்று காட்டினாள். வருத்தம் தோய்ந்த முகத்துடன் அப்பனுக்கு சோறு போடணும் என்று கிளம்பினான் வேலு. கேரள எல்லையை ஒட்டியுள்ள மலையில் அமைந்துள்ளது மலையூர். மின்சாரம், தொலைபேசி எதுவும் அங்கே இல்லை. அங்குள்ள எஸ்டேட்களும், தோட்டங்களும் கீழே நகரத்தில் உள்ள முதலாளிகளுக்குச் சொந்தம். மலையில் அவர்களுக்குச் சொந்தமான இலவம், நெல்லி, எலுமிச்சை மரங்களடர்ந்த நிலங்களுக்குக் காவற்காரர்கள்தான் அந்தக் குடிசைவாசிகள். எருமை, பசு, ஆடுகளையும் அவர்கள் வளர்த்து வந்தனர். மாடு சினை பிடித்துக் கன்று போட்டதும் முதலாளியின் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வருவார்கள். அங்குள்ள பிள்ளைகள் கீழே நகரத்திற்கு ஐந்து கல்தூரம் நடந்து போய்ப் படித்து வந்தார்கள். அவர்கள் ஓர் ஓடையைத் தாண்டித்தான் பள்ளி செல்ல வேண்டும். மழைக் காலத்தில் ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடும். சிறிய வயதிலேயே அம்மாவை இழந்தவன் வேலு. அவன் தந்தையிடம் எல்லாச் சிறுவர்களையும் போல் தன்னையும் பள்ளியில் சேர்த்துவிடச் சொன்னான்.

சரிடா என்று சொன்ன தந்தை முதலாளிக்கு இலவங்காய் பறித்துக் கொண்டிருக்கையில் கொப்பு உடைந்து கீழே விழுந்து முடமானார். அவரால் முதலாளியின் தோட்டத்துக்குக் காவல் இருக்கத்தான் முடிந்தது. தன் மகனை முதலாளி முத்துக் கருப்புவிடம் போய்ப் பள்ளியில் சேர்த்துவிடச் சொல்லிக் கேட்டு வரச் சொன்னார். போடா போ. நீயெல்லாம் எருமை மேய்க்கத் தான் லாயக்கு என்று அவனை விரட்டி அனுப்பினார் முதலாளி. நொறுங்கிப் போன வேலுவுக்கு எருமைகளே உற்ற நண்பர்களாயினர். அவற்றை மேய்ப்பதும் அவ்வப்போது முதலாளி வீட்டுக்குக் காய்கறிகள் கொண்டு போய்க் கொடுப்பதும், அப்பனுக்குச் சமைத்துப் போடுவதும்தான் அவன் வேலை. அந்த மலையின் மடியில் இருந்த குளத்தில் எருமைகளைக் குளிப்பாட்டுவான். அவற்றின் முதுகில் ஏறி உல்லாசமாக ஏரி நீரில் வலம் வருவான். அவனுக்குப் பிடித்தமான விரிகொம்பன் என்ற எருமை நன்றாகவே நீந்தும். கண்மணி பக்கத்து வீட்டுச் சிறுமி. அவள் வேலுவிடம் பிரியமாக இருப்பாள். நகரத்திலிருந்து கொண்டு வந்த தின்பண்டங்களை அவனுக்குத் தருவாள். அவள் படிக்கும்போது ஆவலுடன் அவன் கேட்டுக் கொண்டிருப்பான்.

அன்று பேய் மழை. வானமே பொத்துக் கொண்டது போல் பெய்து கொண்டிருந்தது. மலையூர் ஓடையில் வெள்ளம் ஓடியது. பள்ளியிலிருந்து மலையேறி வந்த பதினாறு குழந்தைகளும் நாலைந்து வயதான பெரியவர்களும் ஓடையின் இந்தப் பக்கக் கரையில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் அங்கிருந்த பெரிய மரத்தடியில் தஞ்சம் புகுந்திருந்தினர். மழை நின்றும் நேரந்தான் ஆகிக் கொண்டிருந்ததே தவிர வெள்ளம் வடிந்தபாடில்லை. கேரளாப் பக்கம் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தால் வெள்ளம் வந்து கொண்டே இருந்தது. மலையூர் மக்களைப் பேட்டி காண வந்திருந்த நிருபர் ஒருவர் போக முடியாமல் ஊர் எல்லையில் மாட்டிக் கொண்டார். அவர் செல்போனும் மழையில் ஈரமாகி விட்டது. ஒரு மரத்தில் கயிற்றைக் கட்டிய மலையாண்டி என்ற இளைஞர் மறு முனையைக் குழந்தைகளும் பெரியவர்களும் இருக்கும் கரைப்பக்கம் எடுத்துச் சென்று எதிர்ப்புற மரத்தில் கட்டிக் குழந்தைகளைக் கரை சேர்க்கலாம் எனத் துணிச்சலுடன் இறங்கினார். அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. அவர் தப்பிப்பதே பெரும்பாடாகி விட்டது. மரத்து வேர் ஒன்றைப் பிடித்துத் தெய்வாதீனமாகத் தப்பினார். குழந்தைகளுக்கு அகோரப்பசி. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வேலுவுக்கு கண்மணியையும், மற்றவர்களையும் எப்படியும் கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்  எழுந்தது. யாரையும் எதிர்பார்க்காமல் விரிகொம்பன் மீது ஏறி ஓடையில் இறங்கினான். பெரியவர்கள் தடுத்தும் அவன் கேட்கவில்லை. விரிகொம்பன் ஓடை நீரின் போக்கிலேயே போய்க் கரை ஏறவும் குழந்தைகள் கூச்சலிட்டனர்.

விரிகொம்பன் மீது ஏற்றி மூன்று, நான்கு குழந்தைகளாகக் கொண்டு வந்து சேர்த்தான் வேலு. ஒரு சவாரியில் நிருபரை இக்கரை கொண்டு வந்து விட்டான். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளின் தலையைத் துவட்டிவிட்டுக் குடிசைகளுக்கு அழைத்துச் சென்றனர். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த வேலுவின் வாயில் மிட்டாயைத் திணித்தாள் கண்மணி. மறுநாள் நாளிதழ்களில் நிருபர் தந்த செய்தி கொட்டை எழுத்தில் வெளிவந்தது. அதில் வேலுவின் தீரச் செயல் பாராட்டி எழுதப்பட்டிருந்தது. அந்த வாரம், நகரின் எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் வேலுவுக்கு கலெக்டரம்மா சுந்தர ஷோபிகா ராணி விருது அளித்துக் கவுரவித்ததோடு அவனது விருப்பம் என்னவென்று கேட்டார். அம்மா, நான் படிக்கணும் என்றான். அப்புறம்? என்றார் கலெக்டரம்மா. ஓடையில் ஒரு பாலம் கட்டித் தரணும் அப்புறம் ஊருக்குக் கரண்ட் வரணும் அப்புறம் என் அப்பனை ஆஸ்பத்திரியில் சேர்த்துக் காலைச் சரி செய்யணும். கள்ளமில்லா அச்சிறுவனின் வேண்டுகோள்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாகச் சொன்னார் கண்ணியம் மிக்க கலெக்டர் சுந்தர ஷோபிகா ராணி. வேலுவின் கண்முன் ஒருகணம் காமராசர் தோன்றி மறைந்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar