Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கிருஷ்ணனின் மயில் தோகை
 
பக்தி கதைகள்
கிருஷ்ணனின் மயில் தோகை

கிருஷ்ணனின் அடையாளங்களில் முக்கியமானவை மூன்று. ஒன்று தலையிலுள்ள மயில் தோகை. இரண்டாவது கழுத்தில் இருக்கும் ஜவ்வந்தி மாலை, மூன்றாவது புல்லாங்குழல். இந்த மூன்றின் பின்னால் ஒரு சூட்சுமம் உண்டு. மயிற்பீலி ஒளியின் அம்சம். கண்களைக் கவரும்  பலவண்ண அழகு கொண்டது. மாலையோ மணம் பரப்பும் வாசம் மிக்க விஷயம். புல்லாங்குழல் கேட்பவர் மனதை மயக்கிடும் இசை அதிசயம்! இந்த மூன்றுமே புலன்களால் நுகர முடிந்தவை. கிருஷ்ணனின் நான்காவது அம்சம் விண்ணைக் குறித்திடும் கார்மேக நிறத் தோற்றம். அதாவது மேகம் போல கருணை மழை பொழிபவன் என்பது ஐந்தாவது அம்சம். இப்படி  பஞ்சபூதங்களின் அம்சங்களைக் கொண்டவன் என்பதை  நாம் உணர முடியும். விண்ணும், மண்ணும் அது சார்ந்த எல்லாமும் பஞ்ச பூதங்களே! அந்த பூதங்கள் எல்லா உயிர்களின் உள்ளேயும் இருக்கிறது. கிருஷ்ணனிடம் தான், அது வெளிப்புறத்திலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.      

இதில் முரளி எனப்படும் புல்லாங்குழல் அதிசயமானது. இதைக் கொண்டே  பசுக்கூட்டத்தை அவன் தன் வசம் வைத்திருந்தான். புல்லை மேய்ந்தபடி பசுக்கள் வெகு துாரம் சென்று விடும். இவைகளை ஒரே கூட்டமாக ஒரு திசையில் மேயச் செய்ய  முடியாது. இதனால் கோபர்கள் பத்து, பதினைந்து பேர்  சென்று பசுக்களை மிரட்டி வளைத்து ஒரே இடத்தில் சேர்க்க பாடாய்ப்படுவர். ஒருமுறை, ஒரு பசுக்கூட்டம் எந்தப் பக்கம் சென்றது என்று யாராலும் கூற முடியவில்லை. அந்தக்கூட்டத்தில் ஒரு கர்ப்பிணிப் பசுவும் இருந்தது. அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால் மிருகங்களிடம் சிக்கி விட்டதோ என்று எண்ணி கோபர்கள் கண்ணீர் விட்டனர். அதைக் கண்ட கிருஷ்ணன், ஒரு வழி செய்தான். காட்டு மூங்கில் ஒன்றின் பக்குவமான பாகத்தை வெட்டி எடுத்து, அதன் மீது எட்டு துளைகள் இட்டு, இதில் ஒரு துளையை முத்திரைக்காக விட்டு, மற்றதில் சரிகமபதநி என்னும் ஸ்வரத் துளைகளை அமைத்தான். துளை வழியாக சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவம், நிடாதம் என்னும் ஏழிசைப் பண்களை காற்றின் துணை கொண்டு இசைத்தான்.

கிருஷ்ணன்  இசைக்கும் முன், மரங்களில் பறவைகள் கீச்சு கீச்சென  கத்தியபடி இருந்தன. இசை கேட்டதும் அதில் லயித்து, அவை தங்கள் கத்துதலை நிறுத்தின. சில கன்றுகள் தங்களின் தாயைப் பிரிந்து மா..மா... என்று அரற்றிக் கொண்டிருந்தன. அவைகளும் கத்துவதை நிறுத்தின. மரங்களில் இளந்தளிருடன் கொடிகள் தவித்தபடி  இருந்தன. அவை குழலிசையில் மயங்கி  நின்றன. மரங்களில் நெளிந்து கொண்டிருந்த மரவட்டைப் புழுக்கள் கூட கட்டுப்பட்டு அசையாமல் நின்றன. புல், பூண்டு முதல் புழுப்பூச்சிகள் கூட இயற்கை நியதிகளைக் கடந்து இசைக்கு மயங்கும் போது கோபர், கோபியர்கள் மாத்திரம் விதி விலக்காகி விட முடியுமா என்ன? அவர்களும் தாங்கள் இருந்த இடத்திலேயே சிலையாக நின்று விட்டனர். இது பூலோகம்... அதில் தாங்கள் இருப்பது ஆயர்பாடி பிருந்தாவனம். அந்த பிருந்தாவனத்தில், தாங்கள் கிருஷ்ணனின் குழலிசை கேட்டபடி இருக்கிறோம் என்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை. இருந்தபடியே  இல்லாது போதல் என்பது ஒரு வித முக்தி நிலை. இதற்கு  மனோநாசம் என்னும் ஒரு வகை யோகநிலை வாய்க்க வேண்டும். பெரும் யோகிக்கு கூட இது சாத்தியமானது அல்ல.  மனம் என்பது ஒரு பெருங்கடல்.

அதில்  மீன்களைப் போல ஆயிரமாயிரம் எண்ணங்கள்! நீந்தும் மீன் போல அவைகளும் நீந்தியபடி உள்ளன.  மொத்தக் கடலும் உறைந்து போகும் போது மட்டுமே சலனம் அனைத்தும் அடங்கும். அப்படி  உறைந்த நிலையில் தான் அங்கு எல்லாரும் இருந்தனர். குழலிசையோடு கிருஷ்ணன் சற்று ஆடவும் செய்தான். அவனோடு கோபர், கோபியரும் ஆடினர். அவனது இசையின் நாத ஒளி அந்த காட்டின் எல்லை வரை சென்றது. தங்களின் இனத்தைப் பிரிந்து எங்கெங்கோ சென்ற பசுக்கள் அனைத்தும்  இசை கேட்டு திரும்பின. கர்ப்பிணி பசுவும் அவற்றுடன் வந்தது. கிருஷ்ணனின் கச்சேரி ஒரு முடிவுக்கு வந்த போது பார்த்தால், அவனைச் சுற்றி அவ்வளவு பசுக்களும் அடைந்து கிடந்தன. அதைக் கண்ட கிருஷ்ணன் புன்னகைத்தான். அவனது தோழர்கள் அவனது குழலை வியப்போடு பார்க்க, அவன் அதை அவர்களுக்கு அளித்தான். அதை என்ன செய்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. பின் அவன்  ஊதியது போல தாங்களும் செய்தனர். ஊளையிடுவது போல சப்தம் எழுந்தது. அதைக் கேட்ட கிருஷ்ணன் கலகலவெனச் சிரித்தான். பின், “அப்படியல்ல.... இப்படி....” என்று தன் சிவந்த இதழ் வைத்து ஊதத் தொடங்கினான். மீண்டும் குழலிசை பிறந்தது. பின் தன் தோழர்களுக்கும் வாசிக்க கற்றுக் கொடுத்தான். அப்படியே, “இன்று இவ்வளவு போதும்... மற்றதை நாளைக்கு பார்க்கலாம்” என்றான். அவர்களும் தலையசைத்னர்.

அதன் பின், ஒவ்வொரு நாளும் பிருந்தாவனத்தில் குழலிசைக் கச்சேரி தான்! அப்போது கோபியர்கள் ஆடுவர். ஆட்டம் என்றால் என்ன என்றே தெரியாத கால்களும் ஆடத் தொடங்கும். கிருஷ்ணன் ஒவ்வொரு கோபியரோடும் தனித்தனியே ஆடினான். பிறகு மாயக்கிருஷ்ணனாக பல வடிவில்  பிரிந்து சென்று ஒவ்வொருவருடனும் ஆட ஆரம்பித்தான். அப்போதிருந்த பரவச நிலையில் யாரும் அதைப் பெரிதுபடுத்தவில்லை.  பின்னர் இது என்ன மாயை என்று எண்ணுவதற்குள் கிருஷ்ணன் அதை  கலைத்தான். அவர்களின் ஆட்டத்தில், கோலாட்டமும் ஒருநாள் உருவானது. இரு மூங்கில் துண்டுகளைக் கொண்டு அதை  மோதச் செய்தபடி வளைந்து நெளிந்து ஆடினான். அது கண்டு பிருந்தாவனமே  சொக்கியது. மனிதப்பிறவி இவ்வளவு இன்பமானதா என கோபர், கோபியர் எண்ணி மகிழ்ந்தனர். அதே நேரத்தில், மாலைப் பொழுது  முடிந்து இரவு வந்ததே என வருந்தினர். “கிருஷ்ணா! பகல் மட்டுமே ஆன உலகமாக இருக்கக் கூடாதா?” என்று கேட்டாள் ஒரு கோபி. கிருஷ்ணன் சிரித்தான். அவனுக்குத் தெரியும் புலன் இன்பம் இப்படித் தான் தவிக்கச் செய்யும் என்று... “கிருஷ்ணா! நீ அருகில் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. இதை என்ன என்று சொல்வது?” என்றாள் இன்னொரு கோபி. இதுவே  முக்தி நிலை என்பது அவளுக்கு தெரியவில்லை. “பஞ்ச பூதங்களின் உள்ளும் புறமும்  நானே! அவைகளின் ஆட்டமும் பாட்டமும் நானே! அவைகளை அறிவிப்பதும் நானே! அந்த அறிவின் மயக்கமும் நானே!  அந்த அறிவின் மயக்கமும் நானே! ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை சகலமும் நானே...!” என்பதை  இந்த நிகழ்ச்சிகள் மூலம் கிருஷ்ணன்  உணர்த்தினான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar