Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாராயண குருவின் பெருமை
 
பக்தி கதைகள்
நாராயண குருவின் பெருமை

எந்த மதத்தில், தன்னுள் நேரும் குறைகளையும், தன்னால் சமுதாயத்தில் நேரும்  குறைகளையும் திருத்தி கொள்ளும் வசதி  இருக்கிறதோ அந்த மதம் காலம் தாண்டி நிற்கிறது. அப்படிப்பட்ட சமய சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர்  நாராயண குரு. திருவனந்தபுரம் அருகிலுள்ள செம்பழந்தி கிராமத்தில் விவசாயி, மாடன் ஆசான் குட்டி அம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர் நாணு என்ற நாராயணன்.  வடமொழியில் புலமை பெற்ற  மாடன் ஆசான், ஊராருக்கு  இதிகாசம் போதிப்பவராக இருந்தார். தந்தை ஊரில் இல்லாத நேரத்தில் இப்பணியை நாணுவும் செய்வார். இதனால் வடமொழி, தமிழ் மொழிகளில் நூல்கள் எழுதுமளவு தேர்ச்சி பெற்றார். ஆயுர்வேத மருத்துவராகவும் விளங்கினார். 15 வயதில் தாயை இழந்த அவர்,  துறவு மனப்பான்மை கொண்டிருந்தார். ஆனால் அவரை வற்புறுத்தி, காளியம்மா என்ற பெண்ணை மணம் செய்து வைத்தனர். அவரது துறவு எண்ணத்தை அனுசரிக்க முடியாத காளியம்மா, தந்தை வீடு சென்று விட்டார். நாணு நோக்கமின்றி அலைந்து கொண்டிருந்தார்.                            

அய்யாவு என்னும் தமிழர் மூலம் யோகா, தியானம், சிலம்பம் கற்ற நாணு, 23ம் வயதில் துறவறம் பூண்டார். கன்னியாகுமரி மாவட்டம்  பொத்தையடி யில், தியானத்தில் இருந்தார். அவரை மக்கள் நாராயண குரு என்றனர்.அப்போது கேரளத்தில் தீண்டாமை தலைவிரித்தாடியது.  தீண்டத்தகாதவர்கள் எனப்பட்டவர்கள் கோவிலில் அனுமதிக்கப்படவில்லை. நாராயண குரு இதை எதிர்த்தார். கன்னியாகுமரி  மாவட்டம் நெய்யாற்றில், ஒரு கல்லை எடுத்து அதைச் சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்தார். இதைக்கண்டு கொதித்த நம்பூதிரிகளிடம், இது நம்பூதிரிகளின் சிவன் இல்லையே! என்றார்.அங்கே ஒரு குரு குலத்தை நிறுவி, ஜாதிபேதம், மத வெறுப்பு இன்றி, அனைவரும் சமமாக வாழும் இடம் இது என்று பதித்தார். திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள சிவகிரியில் அம்பாளுக்கு கோவில் கட்டினார். கேரளாவில் உள்ள வர்க்கலையில் வடமொழிப் பள்ளி நிறுவி, எல்லா ஜாதி குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்தார். தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப்பிரவேசம் செய்ய தமிழகம், கேரளம், கர்நாடகம், இலங்கையில் கோவில்கள் எழுப்பினார்.     

தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுதெய்வங்களுக்கு சாராயம், மாமிசம் படைத்தது, கல்வியின்றி இருந்தது ஆகியவற்றை கண்ட அவர், அவர்களுக்குத் தக்க அறிவுரை கூறினார். அவர்களைப் பெரும் தெய்வ வழிபாட்டுக்கு மாற்றினார். கடவுளின் கண்களுக்கு அனைத்து மனிதர்களும் சமம் என்னும் வாசகம் பொறித்த அத்வைத ஆசிரமத்தை நிறுவினார். அவரை பற்றி கேள்விப்பட்ட மைசூரு மருத்துவர் பத்மநாபனின் உதவியுடன் ‘ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா‘ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. சமுதாயத்தின் பல நிலைகள் சார்ந்த மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் நாராயண குரு. அத்வைதியாகவும், வடமொழி சாஸ்திரங்கள் கற்றவராகவும், தாழ்த்தப்பட்டவர்களின் சமூக முன்னேற்றத்தில் கவனம்கொண்ட சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். சில இடங்களில் விளக்குச் சுடரை மட்டும் கருவறையில் வைத்தார். சில இடங்களில் நிலைக்கண்ணாடி மட்டும் நிறுவினார். தன் சீடர் நடராஜனை மேலை நாடுகளுக்கு அனுப்பி ஆங்கிலம், பிரெஞ்சு கற்றுவரச் செய்து நம்மூர்க் குழந்தைகளுக்குக் கற்பித்தார். நாராயண குரு பற்றி நடராஜன் நூல்கள் எழுதினார். இன்றைக்கு, கேரளம் கல்வியில்முதலிடம் வகிப்பதற்கு நாராயண குரு அன்று மேற்கொண்ட முயற்சி முக்கிய காரணம்.   எல்லோரையும் சேர்த்தணைக்கும் ஆன்ம தரிசனம் பெற்றவராக இருந்தார். அனைத்தும் ஒன்றே என்று சொன்னார். இவரைச் சந்தித்த மகாத்மா காந்தி, ஓர் அவதார மனிதர் என்று குறிப்பிட்டார்.

மகாகவி பாரதி இவருடைய கொள்கையை பாராட்டி எழுதியிருக்கிறார். பாரதத்தில் தோன்றிய மகரிஷிகளில் நாராயணகுரு, ஞானம் வாய்ந்த ஒரு பரமஹம்சர் என்று வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் குறிப்பிடுள்ளார். மலையாளக் கவிஞர்  சங்கரகுரூப், இவரை இரண்டாம் புத்தர் என்று குறிப்பிட்டுள்ளார். மகாகவி குமாரன் ஆசான் இவருடைய முதல் சீடர்.ஆஸ்ரமத்தில் திருடிய ஒருவனுக்கு திருடுவது பாவம் என அறிவுரை வழங்கி, பொருள் காப்பாளராக நியமித்தார். இதைக்கண்டு திகைத்தவர்களிடம், திருடுவதை காட்டிலும், அவனை திருட தூண்டிய வறுமைக்கு காரணமானவர்களே பாவிகள். அவர்கள் செய்வதே பாவச் செயல், என்று விளக்கினார். உள்ளே ஆன்மிகவாதியாகவும், வெளியே சீர்திருத்தவாதியாகவும் விளங்கியதே நாராயண குருவின் பெருமை. காலத்தைத் தாண்டிச் சிந்திக்கும் வல்லமை பெற்றிருந்த அவரை உலகம் என்றும் மறக்காது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar