Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தீமை நன்மை முழுவதும் நீ!
 
பக்தி கதைகள்
தீமை நன்மை முழுவதும் நீ!

பயபக்தி என்றொரு சொல் ஆன்மிக உலகத்தில் உலா வருகிறது. அதனால், பக்தியோடு பயத்தைத் தொடர்புபடுத்தி, கடவுளுக்குப் பயப்படுதல் என்கிற கருத்துருவின் மீது சமயத்தைக் கட்டமைக்க முற்படுகிறார்கள். பலர், ஆனால் அச்சமின்மைதான் ஆன்மிகத்தின் அடிநாதம் மற்றும் ஆதி அந்தம், மனிதனது முட்டாள்தனமான பயங்களை முறியடிக்கவே, அபய ஹஸ்தம் என்கிற முத்திரை கடவுளின் கைகளாகிறது. நிர்ப்பயா என்று கடவுள் அர்ச்சிக்கப்படுகிறார். பயப்படுகிறவன் உண்மை ஆன்மிகவாதி இல்லை. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும் பாரதி. சாக்ரடீஸ் போன்ற ஆன்மிக மனிதர்கள் அஞ்சியதில்லை. ஜெயமுண்டு பயமில்லை மனமே என்று பாரதிகள் அதனால்தான் கொக்கரிக்கிறார்கள். கோழை ஒருபோதும் கடவுளை உணர முடியாது. கோழைத்தனமுள்ளவனுக்குக் கடவுள் வசப்பட முடியாது.

நீலகண்டன் என்றொரு பன்னிரண்டு வயது சிறுவன். கடவுளிடம் சரணடைதல் என்பதை நிஜமாகவே நடைமுறைப்படுத்த நினைந்தான். அதாவது, சம்பிரதாயத்துக்குக் கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லிக் கொண்டு கடவுளை நம்பாமல் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள சகல வகைகளிலும் சண்டை பிடிக்கிற சராசரி சமயியாயாகச் சமரசம் செய்து கொள்ளாது, தீவிரமாகச் சரணடைந்து விட்டான். தனது கைகளையும் கால்களையும் கயிறுகள் கொண்டு கட்டுவித்து சரயு நதியில் அடித்துச் செல்லும்படி விட்டுவிட்டான். எந்த வகையிலும் தன் முயற்சி கூடாது என்பதை உறுதி செய்யவே கை, கால்களைக் கட்டச் செய்தான். நடப்பது நடக்கட்டும்... கடவுள் காப்பாற்ற விரும்பினால் காப்பாற்றட்டும், இறைவா, உன்னிடம் சரணடைகிறேன். உம் விருப்பம் போல் எல்லாம் நடக்கட்டும் என்று சரயு நதியில் விட்டவனை அடித்துச் சென்றது. ஏசுபிரானைச் சிலுவையில் அறைந்தபோது அவரும், இறைவா.... உமது சித்தப்படியே எல்லாம் நடக்கட்டும் என்று விட்டுவிடவில்லையா? அப்படியே நீலகண்டனும் சரணடைந்தான்.

சரயு கங்கையில் கொண்டு சேர்த்தது, கங்கையோ, ஹரித்துவார் அருகே ஓர் ஆசிரமத்தின் கரையோரம் அவனை ஓதுக்கியது. ஆசிரமத்தில் இருந்த மஹந்த் ஒருவர் சிறுவனைக் கண்டு பதறிப்போய் அவனது கட்டுக்களைத் தளர்த்தி உதவி செய்தார். உணவளித்தார். உள்ளே வந்து ஓய்வெடுக்கும்படி உரிமையுடன் அழைத்தார். நீல கண்டனோ அசராது, இறைவன் என்னைக் கொண்டு வந்து சேர்த்த இந்த இடத்திலேயே இருந்து கொள்கிறேன் என்று உறுதிபட உரைத்து விட்டான்.

மஹந்த்துக்கு மனம் கேட்கவில்லை. சூழந்தாய்... இரவு தனியாக நீ வெளியே இருப்பது நல்லதல்ல. இங்கு ஒரு சிங்கம் நடமாடுகிறது என்று சொல்கிறார்கள். நானும் இரவில் அதன் உறுமலைக் கேட்டதுண்டு. அதனால், இரவு மட்டுமாவது உள்ளே வந்து தங்கிவிடு. மரணத்தை வரவேற்க விருந்து வைக்க ஏன் விரும்புகிறாய் என்று வருந்தி அழைத்தார். மரணத்திலிருந்து தப்பிக்க உள்ளே வா என்று அழைத்த மஹந்த்தைப் பார்த்துப் புன்னகைத்த சிறுவன், ஐயா, சிங்கம் வேண்டுமானால் உள்ளே வராமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனால், உள்ளே வந்துவிட்டால் எந்த வகையிலும் மரணம் வராது என்று தாங்கள் உத்தர வாதம் அளிக்க முடியுமா என்ன? எந்த விதத்திலாவது மரணம் வரத்தானே போகிறது. பிறகு ஏன் நான் அஞ்ச வேண்டும்? வருவது வரட்டும். வெளியிலேயே தங்கிக் கொள்கிறேன் என்றான்.

பொழுது விடிந்ததும் சிறுவன் உயிரோடிருக்கிறானா என்ற கவலையுடன் வெளியே வந்து பார்த்த மஹந்த் திகைத்துப் போனார். சிறுவன் வெளியே சலனமின்றித் தவத்திலிருந்தான். அவன் எதிரே சிங்கம் சமர்த்தாகப் படுத்தபடி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அந்த நீலகண்டன்தான் பிற்காலத்தில் சுவாமி நாராயண் என்று உயர்ந்து போனார். அவரை விட மூத்தவராக, அவரைக் காப்பாற்ற விரும்பிய மஹந்த் சுவாமி, நாராயண் சீடராக ஆகிப் போனார் அவநம்பிக்கையுடன் கடவுளிடம் போலியாகச் சரணடைந்து விட்டு, தானும் சங்கடப்பட்டு கடவுளையும் சங்கடப்படுத்துகிறவர்கள் இன்று அநேகர். எல்லாவற்றையும் தாங்களே முடிவு செய்து கொண்டு அதனை நிறைவேற்ற நாயாய், பேயாய் பாடுபட்டு துடிப்பவர்கள் நாம். ஆனால், சித்தம் அழகிய நிலையடைந்த மணிவாசகரைப் போன்ற மகான்கள் முற்றிலும் வேறு மாதிரி வாழ்கிறார்கள்.

நீ என்ன செய்தாலும் எனக்கு அது சம்மதமே என்று பரமாத்மாவிடம் ஒப்புவிக்க எவ்வளவு பக்குவம் வேண்டும்? நோய் வந்தால்கூட, பிழைப்பதா, சாவதா என்பதை இறைவா நீயே முடிவு செய் என்று விட்டுவிடுவது ஆச்சர்யமான நிலை அல்லவா, மணிவாசகர் சொல்கிறார், காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே எனக்கேது அதிகாரம் என்று தன்னை ஒப்படைக்கிறார். அதிசயமான உணர்வு இது. அடுத்த பாடலில்.

கண்ணார் நுதலோய் கழலிணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும் நான்
அவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே

என்றும் பாடுகிறார்.

நான் யாரப்பா... என்னைப் பற்றி முடிவெடுக்க? எல்லாம்  உன் சித்தம் என்று தன்னைப் பற்றிய முடிவுகளையும் கடவுளே எடுக்கட்டும் என்கிறார்.

இத்தகைய கடவுள் நம்பிக்கையிலும் இரண்டு வகை உண்டு. முதல் வகை கடவுள் நமக்கு நல்லதே செய்வார். அதாவது, லாபகரமாக, நன்மை தருவதாக உதவி செய்வார் என்று நம்புவார்கள். ஆனால், அவர்கள் தாங்கள் நினைத்தபடி நடக்காதபோது மதம் மாறுவது... கடவுளை மாற்றிக்கொள்வது.. கடவுளைத் திட்டுவது போன்ற சிறுபிள்ளைத் தனத்தில் சிக்கிக் கொள்வார்கள்.

ஒரு பக்தர் கடலில் கப்பலில் மனைவியுடன் பயணித்தபோது கடும் காற்று வீசி கப்பல் ஆடியது. எல்லோரும் பயந்தபோதும், அவர் பயப்படவில்லை. மனைவி ஆச்சர்யப்பட்டு, இந்தக் காற்றின் பேயாட்டம் கண்டும் நீங்கள் அஞ்சவில்லையா? மரண பயம் எல்லோருக்கும் வந்து கடவுளை வேண்டுகிறார்கள். நீங்கள் கடவுளை வேண்டவில்லையா? கோபமாகக் கடிந்தார். பக்தர் தம் இடுப்பிலிருந்த கத்தியை உருவி மனைவியின் கழுத்தருகே வைத்து, உன்னைக் கொன்று விடுவேன் என்று கண்களை உருட்டி மிரட்டினார். மனைவியோ, அலட்சியமாகக் கணவரது கையைத் தள்ளிவிட்டாள். பக்தர், கத்தியைக் கண்டும் நீ பயப்படவில்லையா? என்று மனைவியைக் கேட்டபோது கத்தி ஆபத்தானதுதான். ஆனால் அதைப் பிடித்திருப்பது என் அன்புக் கணவரின் கைகள் அல்லவா. அது, ஒரு போதும் எனக்குத் தீங்கிழைக்காது என்றாள். பக்தரும் சிரித்தபடி, அப்படியேதான்... காற்றும், சூறாவளியும் ஆபத்தானவைதான். ஆனால், அதனை இயக்கும் கடவுளின் கைகள் என் மீது அன்புள்ளவை. அவை ஒரு போதும் எனக்குக் கெடுதல் செய்யாது என்றார். இத்தகைய பக்தியைப் பலரும் சிலாகிக்கிறார்கள். ஆனால், யதார்த்தமே வேறு, சுனாமியிலும் விபத்துகளிலும் பல பேர் இறக்கவில்லையா? அவர்கள் மீது கடவுளுக்கு அன்பில்லை என்று பொருளா?

நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்பது பக்தியின் ஆரம்ப நிலை. எது நடந்ததோ அதுவே நல்லது என்கிற தெளிவு. தீர்மானம் சரியான ஞான நிலை. இந்த இரண்டாவது மனோ நிலைதான். மாணிக்கவாசகரின் அணுகுமுறை, பரமாத்மாவின் மீது உண்மையான காதல் உள்ளவர்கள் அவர் பொருட்டு தன்னையே இழக்க முன் வரமாட்டார்களா என்ன? அவரை அடைதல் அல்லது தன்னை இழத்தல் என்கிற இரு சொற்றொடருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை ஆன்மிக அனுபவம் மட்டும்தான் புரிய வைக்கும்.

சூஃபியிஸத்தில் பறவைகளின் மாநாடு என்கிற ஆன்மிக காவியம் பெரிதும் பாராட்டப்படுகிறது. அரபியில் எழுதப்பட்ட அற்புத ஆன்மிக இலக்கியம் என்று அதனை அடையாளம் காட்டுகிறார்கள். அதில் ஹீத்ஹீத் என்கிற பறவை மற்ற பறவைகளிடம் சொன்னதாக ஒரு கதை வருகிறது. எகிப்து நாட்டில் வாழ்ந்த ராணி அதி அழகி. அவள் அழகில் மயங்கிய ஒருவன் ராணியிடம் துணிவுடன் சென்று தன் காதலை வெளிப்படுத்தினான்.

அவளோ எந்தப் பதற்றமும் இன்றி, நீ என்னை நிஜமாகவே காதலிக்கிறாயா? என்று கேட்டாள். நிஜமாகவே காதலிப்பது உண்மையா? என்று மறுபடி கேட்டாள். ஆமாம் ஆமாம் என்று உறுதி பட உரைத்தான் இளைஞன். அப்படியானால் உனக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன். யோசித்துச் சொல். ஒன்று உன் தலை வெட்டப்படும் அல்லது இரண்டாவது வாய்ப்பு நீ நாடு கடத்தப்படுவாய். எது  வேண்டும் என்று யோசித்துச் சொல் என்றாள் அரசி.

அஞ்சி நடுங்கிய இளைஞன் பணிவுடன் தயது செய்து என்னை நாடு கடத்தி விடுங்கள். என்று கெஞ்சினான். ராணியோ, காவலனை அழைத்து அவன் தலையை உடனே வெட்டிக் கொன்று விடும் படி உத்தரவிட்டாள். உடனே அவன் தலை வெட்டப்பட்டது. அங்கிருந்த அமைச்சர்கள் இதைக் கண்டு மிகவும் வருந்தினர். பணிவுடன் மகாராணி... தங்களை நேசித்த ஒருவருக்குத் தாங்கள் காட்டும் மரியாதை இவ்வளவு கொடூரமானதா? அன்புக்கு இதுதான் பரிசா? இது நியாயமாகப்படவில்லையே என்று தங்கள் கருத்தை முன்வைத்தனர். ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று பணிவுடன் விளக்கமும் கேட்டனர்.

ராணியோ பதற்றமின்றி, உண்மையற்ற பொய்க் காதலை என்னால் சகிக்க முடியவில்லை. அவனது காதல் போலி, உண்மையாக அவன் என்னை நேசிக்கவில்லை. காரணம், ஓர் உண்மை அன்பு தன் உயிரைப் பொருட்படுத்தாது. ஒருவேளை அவன், என் தலையைக் கொய்து விடுங்கள் என்று கேட்டிருந்தால் நான் நெகிழ்ந்திருப்பேன். நிச்சயம் நான் அவனை மணந்திருப்பேன். என் உயிரைக்கூட அவனுக்காகத் தியாகம் செய்வேன். ஆனால், அவனுக்கு உயிர்மீது ஆசை இருக்கிறது. சோதனை வந்தவுடன் காதலைக் கைவிட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அற்பன் அவன். கோழை.... போலிக் காதல் உள்ளவன். காதலியை விடவும் உயிரை அதிகமாகக் காதலிக்கும் காதல் எப்படி உண்மைக் காதலாக இருக்க முடியும்? என்று கண்களில் கனல் பறக்க கர்ஜித்தாள். அமைச்சர்கள் தலை கவிழ்ந்தனர்.

இழப்பைப் பொருட்படுத்தாத பக்தி இறை மீது இருந்தால் அது உண்மை பக்தி தனக்கு லாபகரமாக ஏதேனும் செய்து தருகிறவர் கடவுள் என்கிற எண்ணமே கொச்சையானது. ஆனால் இன்று அதைத்தான் மதம் என்று பலரும் பிரமாதப்படுத்துகிறார்கள். நமக்கு எது நடந்தால் தீமை என்று அஞ்சுவோமோ, அது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று புரிய வேண்டாமோ?

கூறும் நாவே முதலாகக்
கூறும் கரணம் எல்லாம் நீ!
தேறும் வகை நீ! திகைப்பு நீ!
தீமை, நன்மை முழுதும் நீ!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar