Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பதவி மோகம்!
 
பக்தி கதைகள்
பதவி மோகம்!

அடர்ந்த காட்டில், சிங்கம் ராஜாவாக இருந்தது. அதற்கு மந்திரியாக, புலி இருந்தது. ராஜாவுக்கு பொருத்தமான மந்திரியாகவே நடந்து கொண்டது புலி. காலம் செல்ல செல்ல, மந்திரி பதவி மீது, புலிக்கு சலிப்பு தட்டிவிட்டது. எப்படியாவது, காட்டுக்கு ராஜாவாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தன் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியது. ராஜாவான சிங்கத்திற்கு எதிராக, என்னென்ன வகையில் குற்றங்களை கூறலாம் என்று, இரவு பகலாக யோசித்தது புலி. நேரம் தான் வீணானதே தவிர, பொருத்தமான யோசனை எதுவும் உதிக்கவில்லை. ஒரு நாள் - நரியிடம் தன் ஆசையை கூறி, ஆலோசனை கேட்டது. புலியின் ஆசையை உணர்ந்த நரி, யோசிக்க துவங்கியது. லாபம் இல்லாமல் காரியத்தை முடித்து கொடுக்கும் அளவுக்கு, நரியென்ன முட்டாளா... அது தந்திரத்தில் வல்லவன் ஆயிற்றே!

சிங்க ராஜாவுக்கு எதிராக குற்றம் சுமத்தி, உன்னை ராஜாவாக்கினால், எனக்கென்ன லாபம்... என்று கேட்டது நரி. உன் கேள்வி சரி தான். பதவியிலிருந்து சிங்கத்தை அகற்றிவிட்டால், நீ தானே மந்திரி. மந்திரி என்பவன் தந்திரியாக இருக்க வேண்டுமல்லவா... அதற்கு உன்னை விட்டால், இந்த காட்டில் வேறு யார் இருக்கிறார்? என்று, கேள்வி மூலமே பதிலை சொல்லியது. கொஞ்ச நாட்களாகவே, சிங்கராஜாவின் குறட்டை சத்தம், காட்டையே அதிர வைக்கிறது. இந்த கோரமான குறட்டை சத்தத்தால், மற்ற மிருகங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. காட்டுக்கே காவலாக இருக்க வேண்டிய ராஜாவே இப்படி தூங்கினால், பக்கத்து காட்டு மிருகங்கள் படையெடுத்து வந்தால் நம் கதி... அதனால், தூக்கமும், குறட்டையுமே தன் வேலை என்றிருக்கும் சிங்கம், இனி நம் ராஜாவாக இருக்க கூடாது. எனவே, நீண்ட காலமாக, மந்திரியாக இருந்து வரும் புலியை ராஜாவாக்க வேண்டும் என்று, நீதிமன்றத்துல சொல்லணும்; எப்படி என் யோசனை... என்றது நரி. உன் யோசனை, நல்ல யோசனை தான். ஆனால், குறட்டை சத்தத்தை ஒரு குறையா சொன்னா, மற்ற மிருகங்கள் எப்படி ஒத்துக்குவாங்க? சந்தேகம் தேவையில்லை!

சிங்கராஜா மீது புகார் செய்ற வேலையை நான் கவனிச்சுக்கிறேன். நான் சொல்றபடி நீ நடந்து கொண்டால் போதும்... என்றது நரி. சரி சரி... அப்படியே நடந்து கொள்கிறேன், என்று தெம்புடன் கூறியது புலி. நரியும், புலியும் இவ்வாறு பேசியதை, நாவல் மரத்திலிருந்த கரடி, கேட்டுவிட்டது. ஓ! காட்டுக்குள் ராஜாவுக்கு எதிராக, இரண்டு சதிகாரர்கள் உருவாகி விட்டனர். இவர்களை விட்டு விட கூடாது. இவர்களுக்கு எதிராக என்ன செய்யலாம்! என்று யோசனையில் ஆழ்ந்தது கரடி.

சிங்கத்திற்கு எதிராக வழக்கு, நீதிமன்றத்தில் துவங்கப்பட்டது. அந்த வழக்கு, சிங்கத்திற்கு எதிரானது என்றதால், சிங்க இனம் தவிர, மற்ற மிருக இனங்களில் வயது முதியவர்களை கொண்ட நீதிமன்றத்தில், சிங்கராஜா மீது குற்றச்சாட்டுக்களை கூறியது நரி. நரி கூறிய குற்றச்சாட்டை, நீதிபதிகள் கவனத்துடன் கேட்டன.அப்போது, சிங்க ராஜாவுக்கு ஆதரவாக கரடி ஆஜராகி, தன் வாதத்தை கூற துவங்கியது.  நீதிபதிகளே! தூக்கமும், குறட்டையும் சாதாரண விஷயங்கள். குறட்டை இல்லாத தூக்கத்தை காண்பது அரிது. இந்த குறட்டை சத்தத்தை, குற்றமாக சொல்வதில், ஏதோ உள் நோக்கம் இருப்பதாக கருதுகிறேன். ராஜாவின் குறட்டை சத்தத்தால், காட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை. குறட்டையை ஒரு குற்றமாக நீதிமன்றம் கருதுவதாக இருந்தால், இந்த காட்டில் இருக்கும் எல்லா மிருகங்களின் குறட்டையையும், ஆய்வு செய்ய வேண்டுமென்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன்,” என்று கூறியது கரடி. வாதங்களை கேட்ட நீதிபதிகள், இன்று இரவு நாங்கள் குறட்டையை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பின், தீர்ப்பு கூறுவோம்... என்று தெரிவித்து, நீதிமன்றத்தை விட்டு வெளியேறின. சிங்க ராஜாவுக்கு எதிரான வழக்குக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, என்பது போல ஒன்றுமறியாத அப்பாவியாக நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தது புலி. மற்ற மிருகங்களும் அதன் இருப்பிடத்தை நோக்கி சென்றன.

நரியை ரகசியமாக சந்தித்து, கவலையோடு சில கேள்விகளை கேட்டது புலி. என்ன நரியாரே! குறட்டை விடாதவர், நான் ஒருவன் தான் என்று கூறிவிட்டாயே... இருட்ட ஆரம்பித்தால் போதும், விடியும் வரை தூங்கி பழக்கப்பட்டவன் நான் என்பது உனக்கு தெரியாதா... நீதிபதிகள் இரவு ஆய்வுக்கு வரும் போது, நான் குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தா, நம்ம திட்டம் என்னவாகும்... என்று கேட்டது புலி. ராஜாவா ஆகணும்னா சும்மாவா... கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும். குறட்டை ஆய்வுக்கு நீதிபதிகள் வரும்போது நல்லா தூங்கற மாதிரி நடிக்கணும்; ஆனா தூங்க கூடாது,” என்றது நரி. தூங்காமலிருக்க என்ன வழி? நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். என் மனைவி ரொம்பவும் ருசிமிக்க சூப் தயாரிப்பதில் வல்லவள். 10 கப் சூப் கொடுத்தனுப்புகிறேன். இரவு, 10 மணிக்கு அப்புறம், அரைமணிக்கு ஒரு முறை, ஒரு கப் சூப் சாப்பிட்டா, தூக்கம் கிட்டவே வராது,” என்றது நரி. புலியும், நரியும் உரையாடி கொண்டிருந்ததை, கரடியின் நெருங்கிய நண்பன், காகம் கேட்டு விட்டது. உடனே, இவ்விஷயத்தை, கரடியிடன் சொல்வதற்காக வேகமாக பறந்து சென்றது. அன்று இரவு, நரி கொடுத்த சூப்பை, ருசி பார்த்து விட்டு, ஆஹா... அற்புதம்! அவசரப்படக்கூடாது; 10 மணிக்கு மேல தான் அரை மணிக்கு ஒரு முறை குடிக்கணும். அதுவரை, கொஞ்சம் தூங்கிட்டு, பின், சூப்பை குடிக்கலாம் என்று எண்ணி, கால்களை நீட்டி படுத்தது புலி.

அந்த நேரம், கரடியின் ஆலோசனைபடி, சூப்பில், தூக்க மாத்திரைகளை கலந்துவிட்டது காகம். இரவு முழுவதும் காடுகளில் ஆங்காங்கே சென்று, மிருகங்களின் குறட்டையை ஆய்வு செய்து முடித்த நீதிபதிகள், தங்களின் ஆய்வு முடிவை, பொழுது விடிந்ததும் அறிவித்தன. காட்டில் குறட்டை விடாதவங்க யாரும் இல்லை என்பதை நாங்கள் நடத்திய ஆய்வில் தெரிந்து கொண்டோம். இன்றைய ராஜாவாக இருந்து வரும் சிங்கம், தொடர்ந்து ராஜாவாக நீடிப்பதில் தவறில்லை. குறட்டை விடுவதில், ராஜாவுக்கு இணையாக இருக்கும் புலியை, குறட்டை விடாதவர்னு பொய் சொல்லி, சிபாரிசு செய்த நரிக்கு, ஆறு மாதம் இந்த காட்டை இரவு காவல் காக்கணும்னு, நாங்க உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தன. அப்போது, புலியும், நரியும் போட்ட சதித்திட்டம் குறித்து தான் அறிந்ததையும், புலி குடிக்க வைத்திருந்த சூப்பில், தூக்க மாத்திரை கலக்க செய்ததையும் நீதிபதிகளிடம் கரடி எடுத்து கூறியதோடு, அவர்களிடம் மன்னிப்பும் கேட்டு கொண்டது. சதித்திட்டத்தை புரிந்து கொண்ட நீதிபதிகள், புலி மந்திரியாக நீடிக்க தகுதி இழந்துவிட்டது என்பதையும் சுட்டி காட்டின. புலிக்கு பதிலாக, மந்திரி பதவிக்கு, கரடியை நீதிபதிகள் சிபாரிசு செய்தன. பதவி ஆசைக்காக, நான் எதையும் செய்யவில்லை என்று கூறி, தன்னை தேடி வந்த பதவியை ஏற்க மறுத்தது. அதற்காக, குரங்கை சிபாரிசு செய்தது கரடி. கரடியின் பெருந்தன்மையை பாராட்டி, மிருகங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன், குரங்கு மந்திரியாவதற்கு தங்களது ஆதரவை தெரிவித்தன. குரங்குக்கு, பதவியேற்பு விழாவை நடத்தி வைத்த நீதிபதிகள், சிங்கராஜாவை பார்த்து, தூக்கம் தேவை தான்; அதே சமயம் குறட்டையை கொஞ்சம் குறைத்து கொள்வது உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நல்லது... என்று கூறின. நீதிபதிகளின் கருத்தை ஏற்று கொண்டது சிங்கராஜா.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar