 |
| மகாபாரத யுத்தத்திற்கான ஏற்பாடு தொடங்கியது. அண்டை நாட்டு அரசர்களின் உதவியை நாடி பாண்டவர்களும், கவுரவர்களும் ஓடிக் கொண்டிருந்தனர்.துவாரகை மன்னர் கிருஷ்ணரின் உதவியை நாடி துரியோதனன் புறப்பட்டான். அரண்மனையில் கிருஷ்ணர் உறங்கிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அவர் விழிக்கும் வரை காத்திருக்க எண்ணிய அவன், கிருஷ்ணரின் அருகில் கிடந்த ஆசனத்தில் அமர்ந்தான். அப்போது அர்ஜுனனும் அங்கு வந்தான். அவன் கிருஷ்ணரின் கால் அருகில் போய் நின்றான்.சிறிது நேரத்தில் கண் விழித்த கிருஷ்ணர்அர்ஜுனனைக் கண்டார். என்ன அர்ஜுனா! எதற்காக வந்தாய்? என்று கேட்டார். துரியோதனன் இடைமறித்து, கிருஷ்ணா! நானும் உன்னைக் காணவே இங்கு காத்திருக்கிறேன். என்னோடு தான் முதலில் பேச வேண்டும், என்றான்.
இருவரும் தன் உதவியை நாடி வந்திருப்பதை உணர்ந்த கிருஷ்ணர், துரியோதனா! நீ அர்ஜுனனுக்கு முன்பே வந்தாலும் கூட. கண்திறந்ததும் அர்ஜுனனைத் தான் முதலில் பார்த்தேன். அதனால் தான் அவனிடம் பேசினேன், என்றார்.போரில் உதவி கேட்கவே உன்னை நாடி வந்தேன் என்றான் துரியோதனன்.அப்போது கிருஷ்ணர்,இருவருமே என் உதவி கேட்டு வந்திருக்கிறீர்கள். எனவே யாருக்கும் பாதகமின்றி என் படைகளை ஒருவர் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் மட்டும் ஆயுதம் ஏதுமின்றி இன்னொருவர் தரப்பில் இருக்க சம்மதிக்கிறேன். இதில் உனக்கு எது வேண்டும்? என்றார் கிருஷ்ணர். உடனே அர்ஜுனன், கிருஷ்ணா! எனக்கு நீ மட்டுமே போதும் என்று பதிலளித்தான். இது கேட்ட துரியோதனன் உற்சாகமானான். தன் பக்கம் கிருஷ்ணனின் பெரும் படை இருக்கப் போவதை எண்ணி மகிழ்ந்து விடை பெற்றான். அதன் பின் கிருஷ்ணர் அர்ஜுனனிடம், இப்போது சொல். என்னை மட்டும் ஏன் உதவிக்கு வரக் கேட்டாய்?என்றார். கிருஷ்ணா! நீண்டநாளாக எனக்கு ஒரு ஆசை. யுத்த களத்தில் நீ என் தேர்ச்சாரதியாக இருக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், வாழ்க்கை என்னும் தேருக்கும் நீயே சாரதியாக இருந்து என்னை எப்போதும் வழி நடத்த வேண்டும், என்றான். பாண்டவர்களே போரில் வெற்றியும் பெற்றனர். கடவுள் செல்வம் உள்ளிட்ட எல்லாவற்றையும் யாருக்கு வேண்டுமானாலும் தரலாம். ஆனால், அவர் யார் பக்கம் இருக்கிறாரோ அவருக்கே வாழ்வில் வெற்றி கிடைக்கும் என்ற உண்மை, இந்த வரலாற்றின் மூலம் நமக்கு நிரூபணம் ஆகிறது.
|
|
|
|
|