Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இல்லந்தோறும் வழிபாடு!
 
பக்தி கதைகள்
இல்லந்தோறும் வழிபாடு!

விஷ்ணுசகஸ்ரநாமத்தை ராகத்தோடு சொல்லிக் கொண்டே ஹாலில் காய் நறுக்கிக் கொண்டிருந்தாள் ஆண்டாள். வாசலில் நிழலாடியது. காலைக்கழுவிக் கொண்டு சோர்வாக உள்நுழைந்தார் நாராயண பட்டர். “என்னண்ணா! என்னாச்சு?” பதற்றத்தோடு கேட்டுக்கொண்டே எழுந்தவள் தன் கணவரை நோக்கிக் கேட்டாள். “பன்னிரண்டு மணிக்குத்தானே நடை சாத்துவா? ஒரு மணி நேரத்துக்கு மேலாகுமே வர்றதுக்கு! உடம்பு ஏதேனும் முடியலையா?” கையில் தண்ணீர் செம்பை கொடுத்தாள். ஹாலில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தபடி நீரை அருந்தினார். “என்னை கொஞ்சநேரம் தனியா விடேன்” என்றபடி கண்ணை மூடிக் கொண்டு ஊஞ்சலில் மேலும் கீழும் லேசாக ஆடினார். சற்று நேரம் கழிந்தது. “ஸ்வாமி! ஸ்வாமி!” வாசலில் குரல் கேட்டது.

கண் திறந்து பார்த்தார், சின்னான் நின்றிருந்தான். “வாடா சின்னான்! வாடா உள்ளே!” “இல்லே ஸ்வாமி, நான் இங்கேயே நிக்கிறேன். கரிவரதராஜ பெருமாள் கோயில்லே இருந்து வெளியே அனுப்பிச்சுட்டாங்களாமே?” பேச்சு சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த ஆண்டாள், “கோயில்லே இருந்து அனுப்பிச்சுட்டாங்களா? அதான் அமைதியா இருந்தேளா? என்னாச்சு? இவா யாரு?” “சின்னான், என்னோட ஸ்கூல் நண்பன்.” “என்னாலதானே சாமி.” “சாமின்னு சொல்லாதேன்னு சொல்றேனில்ல!”

“சரி பட்டர் சாமி” “உங்களாலேயா?” ஆண்டாள் கேட்டாள். “ஆமாம்மா! என்னாலதான். நான் வேணா எங்க ஆளுங்களோட வந்து உங்க நிர்வாகத்துகிட்ட மன்னிப்பு கேட்டுடவா!” “என்னடா பேசறே நீ? எதுக்கு மன்னிப்பு? நீ பெருமாள் பக்தன். நானும் பெருமாள் பக்தன். இங்கே எங்கேடா சாதி வந்தது?” “எனக்கு ஒண்ணுமே புரியலை யேண்ணா?  வரமாத்தான் சொல்லுங்களேன்” “சின்னான் இருக்கானே, பிறப்பாலே ஹரிஜனனா பஞ்சமனா இருக்கலாம். இந்த குளத்துமேடு கிராமம் சதி சண்டைக்குப் பேர் போன ஊர். இவாளை யாரும் கோயிலுக்குள்ளே விடறதில்லே. இவனும் நானும் அப்பப்போ வழியிலே சந்திச்சி பேசிக்குவோம். “புரையோடிப்போன இந்தச் சமுதாயத்தை வைணவ தர்மத்தாலே சீர் செஞ்ச ராமானுஜரை வழிபடறோம், ஆயிரம் ஆண்டுக்கு முன்பே வைணவ தர்மத்தை நிலைநிறுத்தியவர். “வைணவனுக்கு, பெருமாள் பக்தனுக்குள்ளே ஜாதி எங்க இருந்து வந்ததுன்னு கேட்டவர், ஆனா இன்னும் இது ஒழியாம வந்துகிட்டு இருக்குதேன்னு நினைக்கிறப்போ மனசுக்கு கஷ்டமா இருக்கு.” “நீங்க எதுக்கும் கவலைப்பட மாட்டீங்களே! எல்லாம் பெருமாள் திருவுள்ளம்தானேன்னு சொல்வேள்? நாம அப்படித்தானே வாழ்ந்துண்டு இருக்கோம்! என் கவலைப்படறேள்?” “கவலைப்படலே ஆண்டாள், பெருமாளோட அலங்காரத்தைப் பாதியோட விட்டுட்டு வந்துட்டேன்னுதான் கவலையா இருக்கு, பெருமாளுக்குச் சேவை சாத்தலையேன்னு மனசு துடிக்குது.”

“ஸ்வாமி” சின்னான் கூப்பிட்டான். “அட இவன் ஒருத்தன் சாமி சாமின்னு. சுவாமி அந்தப் பெருமாள் மட்டும்தாண்டா! நானெல்லாம் ஆசாமி! நாராயணன்னே கூப்பிடு”.“சரி, சரி, அம்மா! நான் சொல்றேன். இவரோட படிக்கும்போதே பெருமாளோட கருணை, வைணவ தர்மம் பக்தியெல்லாம் இவர் சொல்லச் சொல்ல கேட்டுட்டு இருப்பேன். நான் வேலைக்குப் போயிட்டேன். இருபது வருஷம் கழிச்சுதான் இங்க பார்த்தேன். பெரிய பண்டிதரா, கரிவரதராஜ பெருமாளுக்குச் சேவை சாற்றுபவரா தரிசனம் பண்ணினேன். அப்போ என்னோட நண்பனா தெரியலே! என் குருவா தோணுச்சி” குரல் கம்மியது, சிறிது நேரம் மவுனமானான். “நாமெல்லாம் குரு இல்லே சின்னான். வெறும் உருவம்தான், வைணவத்தை வைணவமா மாத்தின ராமானுஜர்தான் குரு. இப்பவே ஜாதி வெறி எல்லா பக்கத்திலேயும் இருக்கே. அப்ப எப்படி இருந்திருக்கும்! நினைச்சுப்பார்” தொடர்ந்தார். “பெரிய நம்பி என்பவர் ராமானுஜருக்கு குரு. சில காலத்தில் மாறனேர் நம்பி என்ற திருக்குலத்து பக்தர் ஒருவர் பெருமானின் பரமபதம் அடைந்தார். அப்போது பெரிய நம்பிகளே மாறனேர் நம்பிக்கு இறுதிச் சடங்கைச் செய்தார். “திருவரங்கமே திரண்டது, பெரிய நம்பிகளை விலக்கி வைத்தார்கள். ‘அந்தணருக்கு உரியதை ஒரு பஞ்சமனுக்குச் செய்வதுதான் ஆசாரமோ? நீர் எப்படி குருவாக இருக்க முடியும்? உமது ஆசாரியார் ஆளவந்தாருக்கே அவமானம் அல்லவா?’ -ஏச ஆரம்பித்து சமூகம், பிரச்னையை ராமானுஜரிடம் கொண்டு வந்தார்கள்.

“அனைத்தையும் தெரிந்து கொண்ட ராமானுஜர் சொன்னார்; ‘பிறப்பில் யாரும் வைணவன் இல்லே! வாழும் விதத்தில் அல்லவா வைணவம் உள்ளது? தன் ஆசாரியார் ஆளவந்தாரின் பிளவை நோயைத் தான் வாங்கிக் கொண்ட மாறனேர் நம்பியை தீண்டத்தாகதவர் என ஒதுக்கலாமா? பரம பக்தனுக்குள் எங்கே வந்தது ஜாதி! போங்கோ! பெரிய நம்பியிடம் மன்னிப்பு கேளுங்கோ’ அவரது கம்பீரமான வார்த்தைகளால் கூட்டம் அமைதியாகக் கிளம்பியது. “பெரிய நம்பியை விடவா நான் பெரிசா செஞ்சுட்டேன்? ராமானுஜர் கொண்டு வந்த எந்தச் சீர்திருத்தமும் சமுதாயத்திலே இல்லையே? தர்மம் அவரோட போயிடுத்தே!” கண்கலங்கினார் நாராயண பட்டர். “இந்த பட்டர் சாமியை வெச்சு எங்க பகுதியிலே ஒரு விளக்கு வழிபாடு நடத்தணும்னு விரும்பி இவரை கூட்டிட்டு போனேன். நேத்து சாயங்காலம் இல்லந்தோறும் சிறப்பா நடந்திச்சு. அதனாலதான் இவறை கோயில்லே இருந்து அனுப்பிச்சுட்டாங்க! அதனாலதான் நாங்க மன்னிப்பு  கேட்கட்டுமான்னு...” “அட யார்டா இவன் மன்னிப்பு மன்னிப்புன்னு. ஆண்டாள், இவன் ஆத்திலே பெருமாள் விக்கிரகம் வைத்து தினசரி அலங்கார அபிஷேகம் செஞ்சிண்டிருக்கான். திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் பண்றான். மூணு வேளையும் பெருமாளுக்குச் சேவை சாத்தறான். இவன் அழைச்சிண்டு போற ஒவ்வோர் ஆத்திலேயும் பசுஞ்சாணியாலே மொழுகி கோலம்போட்டு செம்மண் இட்டு பெருமாள் படத்தை அலங்காரம் செய்து, அப்பப்பா! என்ன பக்தி! மறுபடியும் அந்தக்கால அக்ரஹாரமே வந்துட்டதோன்னு தோணித்து. இவன் பக்தியை எப்படி உதாசீனப்படுத்த முடியும்? பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ற இவா எல்லாம் பக்தர்கள்தானே! வைணவாதானே!” நாராயணபட்டர் படபடவெனப் பேசினார்.

“பட்டர் சாமிகள் பஞ்சமன் தெருவுக்கு வந்து ஒவ்வொரு இல்லத்திலேயும் பெருமாள் படத்தை வைத்து விளக்கேத்தி திருவாய்மொழி சொல்லி ஆசிர்வாதம் பண்றப்போ, எங்க தெருவே பக்தியிலே மூழ்கிடுச்சு, ராமானுஜரே வந்த மாதிரி இருந்துச்சு.” “சரி சின்னான். இல்லந்தோறும் தீப வழிபாடு பெருமாள் வழிபாடா இருந்தது நேக்கு நிம்மதியா இருக்கு, புறப்படு.” எழுந்து பூஜை அறையில் அமர்ந்து ராமானுஜரை தியானித்தார். ‘பகவானே! ஒவ்வொரு இல்லத்திலேயும் விளக்கேத்தி பெருமாள் நாமத்தையும் பல்லாண்டையும்தானே சொன்னேன். ஏன் என்னோட கைங்கர்யம் வேண்டாம்னு அனுப்பிச்சே?’ கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “ஏண்ணா, போன் சத்தம் போட்டுண்டு இருக்கு! வாங்கோ!” பகவானை வணங்கிவிட்டுப் போனை எடுத்துப் பேசினார். முகம் மலர்ந்தது. “ஆண்டாள்! பெருமாள் எதை செஞ்சாலும் அது பக்தாளுக்கு உகந்ததாகவும் உயர்ந்ததாகவும்தான் இருக்கும்னு சொல்வேனில்லே!” “என்னண்ணா! என்னாச்சு?” “ஜீயர் ஸ்வாமிகள் மூலமாக அழைப்பு வந்திருக்குடி, ரங்கத்துலே தரமான திருமேனியா குடிகொண்டிருக்கிற ராமானுஜர் சன்னிதியிலே சேவை சாத்த அழைச்சிருக்கார். என்னே கருணை!” “இல்லந்தோறும் தீப வழிபாடு செஞ்சதாலே ராமானுஜர் வழிபாடு செஞ்ச காஞ்சி வரதராஜ பெருமாள், ஆளவந்தார் விக்கிரகங்களுக்கும் கைங்கர்யம் பண்ற பாக்கியம் கிடைச்சிருக்கு” கண்களை மூடி பெருமாளை தியானம் செய்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar