Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சாமி குத்தம்!
 
பக்தி கதைகள்
சாமி குத்தம்!

சாமி குத்தம் ஆகிடப் போவுதுப்பா... என்று வருத்தத்துடன் சொன்ன மகளைப் பார்த்து, உள்ளுக்குள் சிரித்து கொண்டார், மாடசாமி. ஜீன்ஸ் பேன்ட்டும், டீ ஷர்ட்டுமாக தன் குழந்தைக்கு நேர்த்திக்கடன் முடிக்க, அமெரிக்காவில் இருந்து கிராமத்திற்கு வந்திருந்த தன் மகளின் மனதிலும், இந்த மண்ணின் பண்பாட்டு பதிவுகள் ஒட்டிக் கொண்டிருப்பதை நினைத்தபோது, அவருக்கு ஆறுதலாக இருந்தது. மாடசாமி, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராய் ஓய்வுபெற்றிருந்தாலும், தன் ஒரே மகளான தேன்மொழியை பொறியியல் பட்டம் படிக்க வைத்து, அவள் விரும்பியபடி மேல் படிப்பிற்கு அயல்நாட்டிற்கு அனுப்பினார். அவள் அங்கேயே வேலை தேடிக் கொண்டதிலும் மகிழ்ச்சி தான். கை நிறைய சம்பளத்துடன், கூடவே வேலை பார்த்த சரவணனை காதலித்து, கல்யாணம் செய்துகொள்ள மட்டும் இந்திய மண்ணை மிதிக்க வந்தாள். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து கல்யாணம் முடித்த கையோடு, கணவனை இழுத்துக்கொண்டு விமானத்தில் பறக்க துடித்தபோது தான், மகளிடம் புகுந்துவிட்ட அந்நிய மோகம் கொஞ்சம் கவலையூட்ட துவங்கியது. ஏன் வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தோம் என்று நினைக்கும் வகையில் தேன்மொழியின் நடத்தைகள் ஒவ்வொன்றும் மாடசாமியை பாதித்தன.

மகள் கருவுற்றதான சந்தோஷ செய்தி காதில் விழுந்தபோது, இதன் காரணமாக, மகள் இந்தியாவிற்கு திரும்புவாள் என்று நினைத்து, அகமகிழ்ந்தார். ஆனால், தேன்மொழியோ, அப்பா... இவர் பக்கம் அப்பா, அம்மா யாருமில்ல... நீங்க ரெண்டு பேரும்தான் டெலிவரி டைம்ல இங்கே வந்து இருந்தாகணும்... பாஸ்போர்ட், விசாவுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். ரெடியா இருங்க... என்று சொன்ன போது, அவர் மகிழ்ச்சியில் மண் விழுந்தது. என்னம்மா சொல்றே... குழந்தைய அங்கேயேவா பெத்துக்கப் போறே... என்று வருத்ததுடன் கேட்டபோது, அப்பா... தாய் மண்ணிலேதான் குழந்தைய பெத்தாகணும்ன்னு சென்டிமென்டெல்லாம் பேசாதீங்க... இங்கே, டெலிவரி ஆனாதான் பொறக்கப்போற குழந்தைக்கு எல்லா சலுகையும் கிடைக்கும். அதனால, நான் அங்கே வர்ற சான்சே இல்ல... என்றாள். மாடசாமியின் மனம் உடைந்தது; பேரனோ, பேத்தியோ தாய் மண்ணில் பிறந்தால் தான் மேன்மை என்பதை அறியாமல், இப்படி அயல்நாட்டு மோகம் அவளை ஆட்டிப் படைக்கிறதே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. வேண்டா வெறுப்பாக, மாடசாமியும், அவர் மனைவியும் கலிபோர்னியா சென்று, இருப்பு கொள்ளாமல் தவித்து, மூன்று மாத பேரனை பிரியவும், அங்கே இருக்க மனமில்லாமல் தப்பித்து வந்தாற் போல் திரும்பும்படி ஆனது. அடுத்து, சென்னையில் அவள் ஒரு பிளாட் வாங்கப் போவதாக சொன்னபோது கூட, சென்னைக்கு வந்து, செட்டில் ஆகப் போகிறாள் என்று தான் நினைத்தார், மாடசாமி. நீயும், அம்மாவும் அந்த கிராமத்தை கட்டிட்டு அழாதீங்க... ஒரு எமர்ஜன்சின்னா திருவாரூர் வரைக்கும் ஓடணும்; தாம்பரத்தில நாங்க வாங்கியிருக்கிற பிளாட்டை யாருக்கும் வாடகைக்கு விடப்போறதில்ல; நீங்க ரெண்டு பேரும் தான் வந்து பாத்துக்கணும்... என்று கட்டளையிட்டாள்.
மருமகன் சரவணனோ, மாமா... உங்க பொண்ணுக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்ல; எனக்கு எப்படா இங்கே வருவோம்ன்னு இருக்கு... இதைப்பத்தி பேச்சை எடுத்தாலே எங்களுக்குள்ளே சண்டை வந்துடுது... நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க... என்று, தன் இயலாமையை அழாக்குறையாக சொல்லிச் சென்றான்.

இருவரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், மகளின் மனதை மாற்ற முயற்சித்ததுண்டு. ஆனால், தேன்மொழியின் மனமும், முயற்சியும் அமெரிக்க குடியுரிமை கார்டு வாங்குவதிலேயே குறியாய் இருந்தது. இப்படிப்பட்ட மகள், இந்தியா வரப்போவதாக சொன்னபோது, அவள் நிரந்தரமாக வந்துவிடுவாளோ என்ற நப்பாசை தான் துளிர் விட்டது. போன வாரம், உங்க பேரனுக்கு ரொம்ப, கிரிட்டிக்கலா போச்சுப்பா... நடு ராத்திரி, ஹை டெம்பரேச்சர் உடம்பு துாக்கித் துாக்கி போட்டுச்சு; உடனே ஆம்புலன்சை வரவழைச்சு, அட்மிட் பண்ண வேண்டியதா போச்சு. ரொம்ப மோசமான ஸ்டேஜுன்னு, எமர்ஜென்சி ட்ரீட்மென்டுக்கு கொண்டு போயிட்டாங்க. எங்க ரெண்டு பேருக்கும் என்ன செய்யறதுன்னே தெரியல. ஒரே அழுகையா வந்தது, அப்பதான் நம்ப குல தெய்வத்தை வேண்டிக்கிட்டேன், குழந்தை நல்லபடியா பொழைச்சு வந்தா, முடி காணிக்கை கொடுக்க வர்றேன்... ஐயனாரப்பா காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டேன். ஐயனார் காப்பாத்திட்டது போல, டாக்டர் வெளியே வந்து, குழந்தை, அவுட் ஆப் டேஞ்சர்ன்னு சொன்ன போது தான் எங்க ரெண்டு பேருக்கும் உசுரே வந்தது... நீங்க ரெண்டு பேரும் கவலைப்படுவீங்கன்னு தான் இதை சொல்லல... இப்போ, டிஸ்சார்ஜ் ஆகி நாலு நாளாச்சு; குழந்தை நார்மலாயிட்டான். இதோ பார் சைக்கிள் ஓட்டிட்டு இருக்கான்... என்று, ஸ்கைப்பில் மகனை இவர்களுக்கு காட்டி, அவர்கள், 15 நாள் விடுப்பில் இந்தியா வரப்போகும் விபரத்தையும் சொல்லியிருந்தாள், தேன்மொழி. சென்னைக்கு வந்திறங்கிய இரண்டாவது நாள், எல்லாருமாக காரில் புறப்பட்டனர்; திருவாரூரில் லாட்ஜ் எடுத்து தங்கினர். அடுத்த நாள் காலை, 25 கி.மீ., துாரத்தில் இருந்த கிராமத்திற்கு சென்று, நேராக கோவில் குளக்கரையில் இறங்கினர். குளக்கரையை ஒட்டியிருந்த ஓலை வேய்ந்த குடிசை பூட்டியிருந்தது. காரிலிருந்து இறங்கிய சரவணன், யாரையோ தேடுவதை பார்த்த கிராமத்து பெரியவர் ஒருவர், முடியிறக்க வந்தீங்களாக்கும்... சுடலைக்கு வயது, 80க்கு மேல ஆகிப்போச்சு... தொழில் செய்ய வர்றதில்ல. வந்தாலும் கை நடுக்கத்தோட தெனமும் வெறுமனே உட்கார்ந்துட்டு போறது தான் மிச்சம். யாரும் கோவிலுக்கு வராததாலே வருமானமே இல்ல... அவரு மவன் டவுன்லே கடை வைச்சு; அப்பாவ, தன் கூட கூட்டிட்டு போயிட்டான். உங்கள மாதிரி எப்பனாச்சும் வர்றவங்க, குளத்தங்கரையில கோவிலுக்கு நேரே முடி இறக்க முடியறதில்ல... டவுன் ஷாப்புக்கு போய் மொட்டை அடிச்சுட்டு வந்து குளத்தில தண்ணி தெளிச்சுக்கற மாதிரி ஆயிப்போச்சு, என்றார்.

தேன்மொழியின் முகம் சுருங்கியதை பார்த்த மாடசாமி, தேன்மொழி... மலைச்சுட்டு நிக்காம, நீயும், மாப்பிள்ளையும் கார்ல குழந்தைய அழைச்சுட்டு போய், டவுன், பார்பர் ஷாப்பிலே மொட்டை அடிச்சு, லாட்ஜுக்கு போய் குளிப்பாட்டி கொண்டு வந்துடுங்க, என்றதும், அப்பா... எப்பவும் இந்த குளக்கரையில தானே முடி இறக்குவோம்... அந்த சம்பிரதாயத்தை விட்டுட்டு டவுனுக்கு போய் செஞ்சுட்டு வந்தா, அது சாமி குத்தமாயிடாதா, என்று கவலைப்பட்டாள், தேன்மொழி. ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார் மாடசாமி. மொட்டை அடிக்கும்போது, அழ ஆரம்பித்த குழந்தை, திரும்பி கிராமத்துக்கு வந்து சேரும் வரை ஓயவில்லை. பயமும், பசியும், சூழ்நிலை மாற்றமும் ஒருசேர பாதித்ததில், குழந்தைக்கு ஜுரம் வந்து விட்டது. மடியில் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு, ஜுர வேகம் அதிகமாகி விட்டதை தேன்மொழியால் அறிய முடிந்தது. சரவணா... குழந்தையை தொட்டுப்பாரு... உடம்பு கொதிக்குது, என்றாள் படபடப்புடன்! அடடா ஆமாம்... சட்டுன்னு கோவில்ல பூஜைய முடிச்சுட்டு போயிடலாம், என்று காரை விரைவாக செலுத்த சொன்னான். கார் திரும்பவும் கிராமத்திற்குள் வந்து கோவிலை அடைந்ததும், அவசர அவசரமாக காரிலிருந்து இறங்கினாள், தேன்மொழி. கோவில் பூட்டி இருப்பதை பார்த்ததும், அவளுக்கு பகீரென்றது. கோவில் பக்கத்தில் காத்திருந்த மாடசாமியும் மீனாட்சியும் அருகே வந்தனர். அவர்களிடம் அழாக்குறையாக, நான் பயந்த மாதிரியே தெய்வ குத்தம் ஆயிருச்சு போல இருக்குப்பா... உங்க பேரனுக்கு நல்ல காய்ச்சல்... என்றவள், கோவில் ஏம்பா மூடியிருக்கு? என்று கேட்டாள்.

அதை ஏம்மா கேட்கறே... ஐயனாரு ரொம்ப சோதனை பண்றாரும்மா... கோவில் பூசாரிக்கு, ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்லே சேர்த்து ரெண்டு நாள் முன்னாடிதான், டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்காராம். அவரு வீட்டுக்கு போய், நம்ப நிலைமைய சொல்லி, பூஜைய செஞ்சு கொடுத்துட்டு போங்கன்னு கேட்டுட்டு வந்திருக்கோம். அவருக்கு, 85 வயசு ஆவுது; இனிமே, கோவில் பூஜைக்கெல்லாம் அனுப்பறதா இல்லன்னு அவரோட மகன் ஒத்துக்கல; அப்புறம் ரொம்பவும் கேட்டதினால, உங்க காரை அனுப்பி அப்பாவ கூட்டிட்டு போய், கொண்டு வந்து விடுங்கன்னு சம்மதிச்சிருக்கான். மாப்பிள்ளை... வாங்க போய் பூசாரிய கூட்டிட்டு வந்துடலாம், என்று சரவணனுடன் காரில் சென்றார். ஐயனார் கைவிடவில்லை; அந்த தள்ளாத வயதிலும் தன் மோசமான உடல் நிலையோடு பூசாரி வந்து, ஐயனாருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து குழந்தை தலையில் சந்தனம் பூசி, நெற்றியில் விபூதி இட்டதும், நிம்மதி பெருமூச்சு விட்டாள், தேன்மொழி. குழந்தை சகஜ நிலை அடைந்து, அங்கிருந்த குதிரை பொம்மைகளிடம் ஓடி விளையாட ஆரம்பித்து விட்டான். பூசாரி ஐயா... ரொம்ப நன்றி, என்று, மாடசாமி, அவருக்கு காணிக்கையாக, இரண்டு, 100 ரூபாய் நோட்டுகளை எடுக்க, தேன்மொழி முந்தி, தன் பர்சை திறந்து, நாலு, 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து தட்சணை தட்டில் வைத்தாள்.

இத்தனை பணம் எனக்கு எதுக்கும்மா... அப்பா கொடுத்த, 200 ரூபாயே பெரிசு... இதை, உண்டியலில போடு; கோவிலை பராமரிக்க கஷ்டப்படறாங்க... ஆண்டுக்கு ஒருமுறை வர்ற திருவிழாவுக்கு கூட வர ஆள் இல்ல... எல்லாரும் கிராமத்தை விட்டு டவுன், அயல்நாடுன்னு போயாச்சு. உன்னை மாதிரி சம்பிரதாயத்த மதிச்சு, சாமிக்கு செய்ய எப்போவாவது வர்றவங்களுக்கு அந்த பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்கள இங்கே பாதுகாத்துட்டு இருக்கிற ஆசாமிங்களும் குறைஞ்சு போயிட்டே இருக்காங்க... உன்னை மாதிரி, அடுத்த வாரிசுகளெல்லாம், பஞ்சம் பிழைக்க போற மாதிரி, அயல்நாட்டில அகதியாய் போய் கொள்ளையா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க... என் பையன் கூட சிங்கப்பூர்லே ஒரு முருகன் கோவில்லே நல்ல வருமானம்ன்னு போயிட்டான். போதாக்குறைக்கு என்னையும் கூப்பிடறான்... நான், ஐயனாரை விட்டுட்டு வரமாட்டேன்னு இங்கேயே கெடக்கறேன்; எனக்கும் வயசாயிட்டே இருக்கு. இப்போ, நீயே உன் குழந்தைக்கு முடி கொடுக்கிற விஷயத்தில, நம்ப சம்பிரதாயப்படி செய்ய முடியலே பாரு... இவனே பெரியவனாகி வரும்போது, இது மாதிரியான, நாம காலங்காலமா பாதுகாத்துகிட்டு வரும் கலாசார அடையாளங்கள் ஒவ்வொண்ணா காணாம போயிடுமோன்னு பயமா இருக்கு. வேறு யாராவது இதைக் காப்பாத்தட்டும்ன்னு நீங்க எல்லாம் ஒதுங்கி, எங்கெங்கோ இருப்பது தர்மமில்ல.
அதுக்குன்னு சில தியாகம் செஞ்சு எல்லாருமா முயற்சி பண்ணனும்... ஏதோ வயசானவன் ஆதங்கப்பட்டு புலம்பறேன்; நல்லபடியா போயிட்டு வா. அடுத்த தடவை நீங்க வரும்போது, இந்த பூசாரி உசுரோட இருப்பேனோ இல்லயோ... என்று கூறியபோது, அவர் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் விழுவதை பார்த்த தேன்மொழி, மனம் நெகிழ்ந்து போனாள். குல தெய்வமே பூசாரி உருவில் வந்து, தன் மகளின் மனதை சற்றே அசைத்திருக்குமென்ற நம்பிக்கையோடு, பூசாரியை அவரது வீட்டிற்கு காரில் கொண்டு போய் விட்டு திரும்பினார், மாடசாமி. ஐயனார் கோவில் குதிரை மேல், தன் மகனை உட்கார வைத்து விளையாட்டு காண்பித்து கொண்டிருந்தான், சரவணன். வாடா செல்லம்... கார் வந்தாச்சு கிளம்பலாம், என்று குழந்தையை துாக்க சென்றாள், தேன்மொழி. அம்மா... இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு; நான் வரமாட்டேன் போ...அடம்பிடித்தது, குழந்தை. செல்லம்... மம்மியும், டாடியும் இங்கேயே வந்துடுவோமாம்... அப்புறம், அடிக்கடி செல்லத்தை அழைச்சுட்டு இங்கே வருவோமாம், என்று தேன்மொழி, குழந்தையை சமாதானம் செய்வதை கேட்டதில், மாடசாமியுடன், அந்த ஐயனார் சாமியுமே மகிழ்ந்திருக்கக் கூடும். இனி, சாமி குத்தம் ஏதுமிராது!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar