Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காசி முக்திபவன்
 
பக்தி கதைகள்
காசி முக்திபவன்

“என்னப்பா இன்று மனதில் எந்தக் கேள்வியும் இல்லை போலிருக்கிறதே?” “உங்கள் அருள் மழையில் நனைந்தபின் மனதில் இருக்கும் கேள்விகள் எல்லாம் அழிந்துவிடுகின்றன தாயே!”“நாம் எதைப் பற்றிப் பேசுவது?” “நான் எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதைப் பேசுங்கள் தாயே. நீங்கள் எதுவும் பேசாவிட்டாலும் பரவாயில்லை..” அன்று வன்னிமரத்தடி விநாயகர் கோயிலை வலம் வரும்போதே அன்னை தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள். அந்தக் கோயில் பிரகாரத்தில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தோம்.. “இது நீ படிக்கவேண்டிய பாடம்” அன்னையின் அருள்மொழிகளாலும் அவளுடைய சக்தியால் என் கண்முன் தெரிந்த காட்சிகளாலும் நான் உணர்ந்தது இதைத் தான். அறுபது வயதில் இருக்கும் ஒருவர் கடும்வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.  ‘தொண்டைக்குழியில் புற்று நோயின் இறுதி நிலையில் இருக்கும் அவர்  ஒரு மாதம் கூடத் தாங்கமாட்டார். வலி குறைய மருந்து தருகிறோம்”என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். அவருடைய மனைவி, மகன், மகள் கூடவே இருந்து நன்றாக கவனித்தார்கள். என்றாலும் வலி குறையவில்லை. உயிரும் பிரியவில்லை. “எவ்வளவு தர்மகாரியங்கள் செய்தேன்! எத்தனை ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைத்தேன். ஒரு முறைகூட மனைவிக்குத் துரோகம் செய்யவில்லை. நல்லதையே செய்து வந்த எனக்கு இந்த நரக வேதனையை ஏன் கொடுத்தாள் அந்த மீனாட்சி?” அவர்கள் குடும்பத்திற்கு வழிகாட்டும் சுவாமிஜி ஒருவரிடம் தங்கள் பிரச்னையைச் சொன்னார்கள். ‘காசிக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு காசி முக்திபவன் என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கே பதினாறு நாட்கள் தங்க அனுமதிப்பார்கள். அவர் மனதில் இருக்கும் கடைசி ஆசை என்னவென்று தெரிந்துவிடும். அதை நிறைவேற்றிவிட்டால் உயிர் பிரிந்துவிடும்.”

அப்படியே செய்தார்கள். காசி முக்திபவன் என்ற அந்தப் பழைய கட்டடத்தில் மரணத்தின் நெடி எங்கும் வியாபித்திருந்தது. அவ்வப்போது பெரிய அழுகைச் சத்தம் கேட்கும். சாகும் தருவாயில் அங்கே சென்றவர்கள் பத்து நாட்களுக்குள் மாண்டு போனார்கள்..  நம் கதையின் நாயகர் முதல் நாள் வழக்கம் போல் தான் செய்த புண்ணிய காரியங்களைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் எப்படியும் மரணம் நிச்சயம் என்று தெரிந்தவுடன் புலம்பல் நின்றது. மூன்றாவது நாள் பெரிதாக அழத் தொடங் கினார். மனைவியும் மகனும் பதறினார்கள். “என் சொந்தத் தம்பிக்குப் பெரிய துரோகம் பண்ணிட்டேன். அப்பாவின் சொத்த நல்ல விலைக்கு வித்துத்தரேன்னு தம்பிகிட்ட  கையெழுத்து வாங்கி சொத்த என் பேர்ல மாத்திக்கிட்டேன். தம்பி ஆடிப்போயிட்டான். அதுல அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சி. அவன் பொண்டாட்டி துக்கம் தாங்காமத் தூக்குல தொங்கிட்டா. நான் செஞ்ச பாவத்துக்கு எத்தனை யுகங்கள் நரகத்துல இருக்கணுமோ தெரியலையே!” ஒரு தீர்மானத்துடன் அவர் மகன் புறப்பட்டுச் சென்றான். இரண்டு நாட்களில் அவரால்  வஞ்சிக்கப்பட்ட தம்பியை எங்கேயோ  தேடிப்பிடித்து அழைத்து வந்தான். தம்பியைப் பார்த்ததும் நடுங்கிவிட்டார் அவர். தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிதாக அழத் தொடங்கினார்.  சொத்து பறிபோனதாலும் மனைவி இறந்ததாலும் முதலில் அவர் தம்பி துன்பப்பட்டாலும் பின் எப்படியோ மனதைத் தேற்றிக் கொண்டு வாழத் தொடங்கியிருந்தார். மறுமணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு மகனும் மகளும் இருந்தார்கள். ஓரளவு வசதியாகவே இருந்தார் தம்பி.  “நான் மகாபாவிடா தம்பி. எனக்கு விமோசனமே கிடையாது. நான் செஞ்ச துரோகத்துக்குக் கருணையே வடிவான அந்தக் கடவுள்கூட என்னை ஏறெடுத்தும் பாக்கமாட்டாண்டா. நான் செஞ்ச பாவத்துக்கு உரிய தண்டனைய அனுபவிச்சிட்டுப் போயிடறேன்டா. என்னால நிக்க முடிஞ்சா உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும்டா தம்பி”என்று புலம்பிக் கொண்டேயிருந்தார்.

தம்பியும் உணர்ச்சிக்குவியலாக இருந்தார்.. ஒரு மணி நேரம் அப்படியே போனது. ஏதோ நினைவு வந்தவராய்த் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார் தம்பி.
“உன் கையில எவ்வளவு பணம் இருக்குண்ணா?” “உன்னை ஏமாத்தி வாங்கின சொத்தை அடமானம் வச்சி பிசினசுக்குக் கடன் வாங்கினேன். கடனைக் கட்ட முடியல. சொத்து மூழ்கிருச்சி. என்கிட்ட என் மகன் கொடுத்த காசு ஒரு ஐநூறு ரூபாதான் இருக்கு. இப்போதைக்கு இதுதான் தம்பி என் முழுச் சொத்து” “அந்தக் காலத்துல நம்மகிட்ட இருந்த ஒரே சொத்து நம்ம வீடுதான். அதை நீ எடுத்துக்கிட்ட. இப்ப உன்கிட்ட இருக்கற ஒரே சொத்து இந்த ஐநூறு ரூபா தான். இதை என்கிட்ட கொடுத்துட்டா உன் சொத்து முழுசையும் எனக்குக் கொடுத்துட்டேன்னுதான் அர்த்தம். நீ கொடுக்கற பணத்த நான் மனப்பூர்வமா வாங்கிக்கறேன். இதோட நீ பட்ட கடன் தீர்ந்தது. செஞ்ச தப்புக்கும் முழுசாப் பரிகாரம் பண்ணிட்ட. இந்த  ரூபாயை வாங்கிட்டு நான் பழச எல்லாம் மறந்துடறேண்ணா.” தலையணைக்கு அடியில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்தார் அண்ணன்.  மகனின் உதவியுடன் படுக்கையிலிருந்து எழுந்து நின்று  கைகள் நடுங்கத்  தம்பியிடம் பணத்தைக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட தம்பி தன் அண்ணனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார்.
அதே நிலையில் அண்ணனின் உயிர் பிரிந்தது.

“அப்புறம் என்ன நடந்தது தாயே?” “அண்ணன் செய்தது பச்சைத் துரோகம் என்றாலும் இறுதியில் தன் தவறை அவர் உணர்ந்து மன்னிப்புக் கேட்டதால் அவர் அனுபவிக்கவேண்டிய தண்டனையில் பெரும்பகுதியைத் தள்ளுபடி செய்துவிட்டேன். அடுத்த பிறவியில் அவர் நல்ல மனிதனாக வாழ்ந்தார்” “அவருடைய தம்பியின் அடுத்த பிறவி?”அன்னை மென்மையாகச் சிரித்தாள். “கூடப்பிறந்தவனே முதுகில் குத்தினான். அதனால் அவனுக்கு ஆயிரம் துன்பங்கள். மனைவி தற்கொலை செய்துகொண்டாள். இதய நோய் வந்தது. பணக்கஷ்டம். மனக்கஷ்டம். இதையெல்லாம் தாண்டிப் பெரியமனது பண்ணி அண்ணனை மன்னித்தானே அவனுடைய அன்பு எவ்வளவு தூய்மையானதாக இருக்கவேண்டும்? அவனுக்கு அடுத்த பிறவியே இல்லை. என்னுடன்ஒன்றிவிட்டான்.” நான் அன்பின் வடிவம். அடுத்தவருக்குத் துன்பம் கொடுக்காமல் இருப்பது முதல் கட்ட வழிபாடு. தனக்குத் துன்பம் செய்பவனையும் மன்னித்து அன்பு காட்டுவது உச்சகட்ட வழிபாடு. அதுதான் தெய்வநிலை. அதுதான் என் நிலை. பொங்கி வந்த விம்மல்களை அடக்கியபடி அன்னையின் காலடியில் விழுந்தேன்.  நிமிர்ந்து பார்த்தபோது அன்னை அங்கு இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar