Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பே சக்தி
 
பக்தி கதைகள்
அன்பே சக்தி

“என்னைக் காப்பாத்துங்க. யாரோ ரவுடிப் பசங்க துரத்திக்கிட்டு வராங்க” கத்தியவளைப் பார்த்தேன். கருப்பாக இருந்தாலும் திருத்தமாக இருந்தாள்.  “ஏம்மா என்னைப் பாத்தா ரவுடிங்களோட சண்டை போடற மாதிரியா இருக்கு? இதோ இந்த வீட்டுல போய் ஒளிஞ்சிக்க. நான் போலீசக் கூப்டறேன்.” “முட்டாள்! இன்னுமா என்னைத் தெரியவில்லை?” பயந்து விட்டேன். பச்சைப்புடவைக்காரி. “அகிலாண்டேஸ்வரியை அபலை வேஷத்தில் பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது தாயே.” “உனக்கு என்னை எப்படிப் பார்க்கப் பிடிக்கும் என்று சொல்.” “தோற்றம், வேஷம் எல்லாம் இருக்கட்டும் தாயே. நீங்கள் உங்களை உள்ளன்போடு வணங்கும் ஒருவரின் துன்பத்தைப் போக்கும் காட்சியைக் காட்டவேண்டும்”  “காட்டினாப் போச்சு” என்றதும் கண்முன்னே காட்சி விரிந்தது. உங்க அம்மாவுக்கு கேன்சர். இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள பெரிய ஆப்பரேஷன் பண்ணனும். இல்லேன்னா..” “எவ்வளவு செலவாகும் டாக்டர்? நான் சாதாரண ஓட்டல் சர்வர்னு உங்களுக்குத் தெரியும்.

“வாசு எனக்கு பீஸ் எதுவும் தரவேண்டாம். ஆஸ்பத்திரி, மருந்து, ஊசி அது இதுன்னு எப்படியும் கையில எண்பதாயிரம் ரூபாய் இல்லாம எதுவும் செய்யமுடியாது. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள பணத்த ரெடி பண்ணிருப்பா. அதுக்கு மேலே தாங்காது.” வாசு தன் திருமணத்திற்காகக் குருவி சேர்ப்பது போல் நாற்பதாயிரம் ரூபாய் சேர்த்திருந்தான். இன்னும் இருபதாயிரம் ரூபாயை எப்படியும் கடன் வாங்கித் தேற்றி விடலாம் என நினைத்தான். பாக்கி இருபதாயிரம் ரூபாய்க்கு? வாசுவின் சம்பளம் எட்டாயிரம் ரூபாய். டிப்ஸாக மாதம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். டாக்டர் சொன்ன கெடு முடிய இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தன. அன்று காலைதான் வாசுவிற்கு முதன் முதலாகப் பயம் தோன்றியது. தினமும் ஓட்டலின் கல்லாப்பெட்டி அருகில் இருக்கும் மீனாட்சியின் படத்தின் முன் நின்று அம்மா சொல்லிக் கொடுத்த அபிராமி அந்தாதி பாடல் ஒன்றை மனதிற்குள் சொல்லிவிட்டுத்தான் வேலையைத் தொடங்குவான் வாசு. அன்று பாடல் சொல்ல முயன்ற போது அழுகைதான் வந்தது.  “என் அம்மாவை உன்னிடம் அழைத்துக் கொள்ள நினைத்து விட்டாயோ? உன் இஷ்டப்படியே நடக்கட்டும்.” என்று சொல்லி விட்டுக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேலையைத் தொடங்கினான் வாசு.

காலை ஒன்பது மணி இருக்கும். எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவளும், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் ஓட்டலுக்குச் சாப்பிட வந்தார்கள். தாயும் மகனுமாக இருக்கவேண்டும் என்று வாசு ஊகித்தான். “என்ன சாப்பிடறீங்க?”மனதில் இருந்த துயரத்தை மறைத்துக் கொண்டு உற்சாகமாகக் கேட்டான் வாசு. “ ரெண்டு இட்லி எவ்வளவுப்பா?” “பதினாறு ரூபாய் சார்.” தன் பைக்குள் எவ்வளவு காசு இருக்கிறது என்று பார்த்துக் கொண்டார் அவர்.  “ஆளுக்கு ஒரு இட்லி கொண்டாப்பா. போதும். சட்னி சாம்பார் நிறையக் கொண்டாப்பா.” வாசுவிற்கு டிப்ஸ் மூலமாகத் தினமும் முந்நூறு ரூபாய் வரை கிடைக்கும்.  எப்படியாவது அதன்மூலமாக ஆப்பரேஷனுக்கான மிச்சப் ணத்தைத் தேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தான் வாசு. இவர்களிடம் காலணா டிப்ஸ் கிடைக்காது  என்றாலும் வாசு மனம் இளகினான். வயிற்றுக்கு சாப்பிடக்கூட முடியாத வறுமை கொடுமையல்லவா... அந்த  ஆண் கொஞ்சம் விறைப்பாக இருந்தார். முதியவளிடம் பேச்சு கொடுத்தான் வாசு. “ஆளுக்கொரு இட்லி போதுமா? ஏன் பாட்டி பசியில்லையா?” “ஏன் பசியில்லாம? உன் ஓட்டல்ல இருக்கற அத்தனையும் சாப்பிடற அளவுக்குப் பசி இருக்கு. ஆனா ரெண்டு இட்லி வாங்கற அளவுக்குத்தான் காசு இருக்கு.”
“உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க பாட்டி. நான் கொண்டாறேன். காசு எதுவும் தர வேண்டாம்.” “சும்மா கொடுத்தா எங்களுக்கு வேண்டாம்ப்பா.”

கிழவியின் மகன் கவுரவம் பார்த்தார். ஒரு நொடி யோசித்தான் வாசு. அவன் முகம் பிரகாசமானது. “வெள்ளிக்கிழமை எங்க ஹோட்டலுக்கு வர்ற நூறவது ஆளுக்கு எல்லாம் இலவசம். இன்னிக்கு வெள்ளி. நீங்கதான் நூறாவது ஆளு. எங்க முதலாளியே உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வருவாரு பாருங்க...” கல்லாப் பெட்டியில் இருந்த முதலாளியிடம் ஓடினான் வாசு. வந்திருப்பவர்கள் சாப்பிடும் உணவிற்குத் தான் பணம் தருவதாகச் சொன்னான். தான் சொல்வது போல் அவர்களிடம் சொல்லி வாழ்த்த  வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். முதலாளி அப்படியே செய்தார். வந்தவர்கள் பொங்கல், தோசை, பூரி, சப்பாத்தி, ஊத்தப்பம், உப்புமா என்று முழுக்கட்டு கட்டினார்கள். வாசு அவர்களுக்கு உற்சாகமாகப் பரிமாறினான். போகும்போது கடை முதலாளிக்கு கைகூப்பி நன்றி சொல்லிவிட்டுப் போனார்கள். “முதலாளி அவங்க சாப்பிட்ட மொத்தத் தொகை நானுாத்தி நாப்பது.  என் சம்பளத்துல பிடிச்சிருங்க.” “அத அப்பறம் பாத்துக்கலாம். உன்னை அந்தாளு வெளிய வந்து பாக்கச் சொன்னாரு.”

வாசு வெளியே ஓடினான். ஓட்டலுக்குச் சற்றுத் தள்ளி நின்றிருந்த கப்பல் போன்ற சொகுசுக்காருக்கு அருகில் அவர் நின்று கொண்டிருந்தார். “என் பேரு ராமலிங்கம். நானும் உங்கள மாதிரி ஒரு சர்வராத்தான் வாழ்க்கையத் தொடங்கினேன். அந்தப் பச்சைப்புடவைக்காரி அருளால இன்னிக்கு எனக்கு நாலு ஓட்டல் இருக்கு. மாசா மாசம் ஏதாவதொரு சின்ன ஓட்டலுக்குப் போய் அங்க மனித நேயத்தோட நடந்துக்கற சர்வரத் தேர்ந்தெடுத்துப் பரிசு கொடுக்கறது என் வழக்கம். நாங்க சாப்பிட்டதுக்கு நீங்கதான் காசு கொடுக்கப்போறீங்கன்னு உங்க முதலாளி என்கிட்ட சொல்லிட்டாரு. உங்கம்மாவுக்கு ஆப்பரேஷன்னு சொன்னாரு. இந்தாங்க தம்பி இதுல ஒரு லட்ச ரூபா இருக்கு. இத வச்சிக்கிட்டு உடனே உங்கம்மா ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க.  எல்லாம் முடிஞ்சவுடன என்னை வந்து பாருங்க. எங்க ஓட்டல்ல சூப்பர்வைசர் வேலை போட்டுத் தரேன். உங்க முதலாளிகிட்டயும் பேசிட்டேன். மாசம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம். டூ வீலர் எல்லாம் உண்டு.” அரை மணிநேரம் கழித்து வாசு திரும்பி வந்து கல்லாப்பெட்டிக்கு மேல் இருந்த பச்சைப்புடவைக்காரியின் குறும்புப் புன்னகை ததும்பும் முகத்தைப் பார்த்தான். ’போதுமா?’ என்று அவள் கேட்பது போல் தோன்றியது.

“உங்களைப் போல் உங்கள் அடியவர்களை யாராலும் நேசிக்க முடியாதம்மா” “வாசுவைக் காப்பாற்றியது அவன் மனதில் இருந்த அன்பு தான். மனதில் அன்பு குறையும் போது தான் வாழ்க்கையில் துன்பங்கள் வருகின்றன.  மீண்டும் அந்த அன்பு வந்து விட்டால் துன்பம் ஓடிவிடும். தன் கஷ்டமான நிலையிலும் அவர்களுக்கு உணவளிக்க முன் வந்த அவன் அன்பு தான் அவனைக் காப்பாற்றியது.” “என்னம்மா? அவனைக் காப்பாற்றியது நீங்கள். பின் அன்பு அது இது என்று என்னிடமே கதை விடுகிறீர்களே?” “நான் என்றால் என்ன? அன்பு என்றால் என்ன?” வேரறுந்த மரம் போல் அவள் கால்களில் விழுந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar