Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இறைவனும் அரசியல்வாதியும்
 
பக்தி கதைகள்
இறைவனும் அரசியல்வாதியும்

“தன்னைக் காக்கா பிடிக்கறவன அரசியல்வாதி காப்பாத்துவான். தன்மேல பக்தி பண்றவங்கள பச்சைப்புடவைக்காரி காப்பாத்திருவா. அதானே?  அவள கும்பிடறதும் லஞ்சம் கொடுக்கறதும் ஒண்ணுதானே!”  பல சிக்கல்களில் சிக்கிய அந்தச் செல்வந்தரிடம், ’பச்சைப்புடவைக்காரியிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்’ என்று சொன்னது தப்புத்தான். அதற்காக இப்படியா?  உடல் நலம் சரியில்லாததால்  மருத்துவ மனையில்  காத்திருந்தேன்.  “கொஞ்சம்  வரீங்களா? பி. பி., பாக்கணும்.”  சொன்னது நர்ஸ். கீழ்ப்படிந்தேன். இன்னொரு அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டாள்.நிமிர்ந்தேன் பச்சைப்புடவைக்காரி தான்.   அன்னையிடம் செல்வந்தர் சொன்னதைச் சொன்னேன்.
 “ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, மனதில் அன்பு குறையும்போது தான் துன்பம் வருகிறது என்று.” “அன்பு இருந்தால் கர்மக்கணக்கிலிருந்து தப்பிக்க முடியுமா?”
“நிச்சயமாக முடியாது. ஆனால் அன்பு இருந்தால் கர்மக்கணக்கைப் பைசல் பண்ணுவது எளிது.” “குழப்பமாக இருக்கிறது தாயே. புரியும்படி சொல்லுங்களேன்.”

சென்னை புறநகரில் ஒரு பண்ணை வீடு. அது ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது. அவரது கருப்புப்பணம் மொத்தமும் அங்கிருப்பதை வருமானவரித்துறையினர்  மோப்பம் பிடித்து விட்டனர். பதட்டமுடன் நின்றிருந்த தொழிலதிபர் திடீரென அடியாட்களை ஏவி அதிகாரிகளைக் கட்டிப் போடச் சொன்னார்.  வழக்கு சிக்கலானது. வருமானவரி வழக்கு கிரிமினல் வழக்கானது. வேறு வழியின்றி  அதிகாரிகளிடம் கெஞ்சினார் தொழிலதிபர்.  உங்களுக்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் தருகிறேன்.
வழக்கை இத்தோடு முடியுங்கள் என மன்றாடியும் மசியவில்லை. அதற்குள் போலீஸ் வந்து அதிகாரிகளை மீட்டது. தொழிலதிபர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. ஒரு வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது.  சர்க்கரை வியாதி,  ரத்த அழுத்தம் என அவதிப்பட்ட அவரால்  இதை ஏற்க முடியவில்லை. சிறை சென்ற ஒரே வாரத்தில் மாரடைப்பால் இறந்தார்.  “அவர் செய்தது தவறு தான் தாயே! ஆனால் அதே சூழலில் சிக்கிய ஒருவர் உங்களை வழிபட்டால்... இல்லை  மனதில் அன்பு அதிகமாகும்படியான செயலில் ஈடுபட்டால்?”

அந்தக் காலத்தில் புகழ் மிக்க ஒரு நடிகையின் வீடு.  அம்மன் வேடத்தில் நடித்த அவர் ஒப்பனை கூட கலையாமல் வீடு திரும்பினார். வீடே இரண்டுபட்டுக் கிடந்தது. வருமானவரி அதிகாரிகள்  ரெய்டு செய்து கொண்டிருந்தனர். நகை, ரொக்கம், பத்திரங்கள், ஆவணம் எல்லாம் வீட்டின் நடுவில் குவியலாக இருந்தன.  
“காலையிலேருந்து நடக்குது மேடம். யாருக்கும் போன் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.” - நடிகையின் உதவியாளர் பதறினார். “பாப்பா ஸ்கூல்லருந்து வந்தாளா?”

“ஆச்சு, மேடம்.”
அறையில் இருந்த மாங்காட்டு மாரியம்மன் படத்தைப் பார்த்தார் நடிகை. அம்மன் வேடத்தில் அவர் பேசிய வசனம் மனதில் ஓடியது.
“சாமிக் குத்தத்த கூட மன்னிச்சிருவேன். ஆனால் சமுதாய துரோகத்தை மன்னிக்க மாட்டேன். சக மனிதர்களுக்குச் செய்யற வஞ்சனையை மன்னிக்க மாட்டேன்.”
வரிஏய்ப்பு என்பதும் சமுதாய துரோகம் தானே! எப்படி நான் செய்யத் துணிந்தேன்! தாயே மாரியாத்தா மன்னித்துவிடு! என வேண்டினார்.
நடிகையின் பத்து வயது மகள் ’அம்மா’ என ஓடி வந்தாள்.
“இந்த அங்கிள் எல்லாம் என்னம்மா செய்யறாங்க?”
“அதோ அவங்க கிட்டக் கேளு.”
தலைமை அதிகாரியிடம் குழந்தை கேட்டது. அவர் விரைப்பாக,
“உங்கம்மா வரி கட்டல. அதனால வீட்டுல இருக்கற முக்கியப் பொருளை எல்லாம் எடுத்துக்கப் போறோம்.”
“அப்படியா அங்கிள்?  ஒரு நிமிஷம் இருங்க.”  உள்ளே ஓடிய குழந்தை கரடி பொம்மையுடன் வந்தது.  “அங்கிள் இதுவும் முக்கியமானது தான். இது இல்லாம தூங்க மாட்டேன். இதையும் எடுத்துக்கிட்டுப் போங்க.” நடிகையிடமிருந்து விம்மல் வெளிப்பட்டது. அதிகாரி மனம் நெகிழ்ந்தார். பொம்மையைக் குழந்தையிடம் கொடுத்தார்.

அதன்பின் அங்கு அதிக நேரம் இருக்கவில்லை. மளமளவென வேலையை முடித்து விட்டு, பொருட்களைப் பட்டிய லிட்டனர் வரித்துறையினர்.  நடிகையிடம் கையெழுத்து வாங்கிக் கிளம்பினர்.   நடிகை தன் பட்டயக்கணக்கரை வரவழைத்தார். “யாரோ மொட்டைக்கடுதாசி போட்டுட்டாங்க மேடம். அதான் அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. கவலைப்படாதீங்க. அப்பீல், பெட்டிஷன், அது இதுன்னு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போய் எவ்வளவு முடியுமோ மீட்டுக் கொடுக்கறேன்.” “வேண்டாம் சார். வரி கட்டாதது  தப்புத்தானே? நீங்க எவ்வளவு சொல்லியும் நான்  கேக்கல. செஞ்ச தப்ப ஒத்துக்குவோம். வரி, அபராதம் என்ன உண்டோ கட்டுவோம். அவங்க இந்த கண்டுபிடிக்காததையும் சேர்த்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருவோம். அதுக்கான ஏற்பாடச் செய்யுங்க.” பட்டயக்கணக்கர் கைகூப்பி, “உங்கள நெனச்சா பெருமையா இருக்கு மேடம். நானும்  எவ்வளவு வரி கட்டணும்னு  கண்டுபிடிச்சி அதைக் கட்ட ஏற்பாடு செய்வோம். இதுக்கு நீங்க பீஸ்  தர வேண்டாம். நானே கமிஷனர்கிட்டப் பேசி வழக்கை நல்லபடியா முடிச்சித் தர்றேன்” அடுத்த பத்து நாளில் ஒரு கணிசமான தொகையை வரியாகக் கட்டினார் நடிகை. “மேடம். சீ.ப் கமிஷனர் நேர்ல உங்களைப் பாக்கணும்னு சொல்றாரு...”
 “நிச்சயமா வரேன்.”

“மேடம். நிறைய வரி கட்டிருக்கீங்க. எங்களுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்திருக்கீங்க. இந்த வழக்கை சீக்கிரம் முடிச்சித் தர்றது என் பொறுப்பு. உங்களுக்கு ஏதாவது வேணுமா?” என்றார் தலைமை ஆணையர்.
“சார்... நான் இதுவரைக்கும் செஞ்ச வரிஏய்ப்புங்கற பாவத்துக்கு என்ன தண்டனை உண்டோ கொடுங்க. இனிமேலாவது நிம்மதியா வாழ விரும்பறேன்.”
“மேடம். இந்த ரெய்டுல பிடிபட்டதா ஒரு பகுதிய காமிச்சிரலாம். மிச்சத்தை வாலண்டரி டிஸ்க்ளோசர் ஸ்கீம்ல - தானா முன்வந்து வரிகட்டற  திட்டத்துல - காமிச்சிருவோம். பராதம் குறையும்.” “நல்லதைச் செய்யுங்க சார். நான் செஞ்ச பாவத்துக்கு நம்ம நாட்டின் சார்பா என்னை மன்னிச்சிருங்க சார்.” “உங்க வீட்ட ரெய்டு பண்ண வந்த ஆபீசர் உங்களை ஒரு நிமிஷம் பாக்கணும்னு சொல்றாரு.”  “தாராளமா.” ரெய்டு செய்த ஆணையர் வந்தார்.  “மேடம் இது உங்க மகளுக்கு நான் தனிப்பட்ட முறையில கொடுக்கற கிப்ட் இது. மறுக்காம வாங்கிக்கணும்.”  ஒரு ஊழியர் ஒரு பெரிய கரடி பொம்மையை எடுத்துக் கொண்டு வந்தார். நடிகையின் கண்களில் கண்ணீர் வழிந்தது.  தலைமை ஆணையர் பேசினார்.

“இன்னும் ஒரு கோரிக்கை. வரி ஏய்ப்பு பத்தி விளம்பரப்படம் எடுக்கப்போறோம். அதுல நீங்க நடிக்கணும்.”
“நிச்சயமா சார்.”
எல்லாம் சுபமாக முடிந்தது. நடிகைக்குச் சொந்தமான சில வீடுகளை விற்றே வரி பாக்கியைக் கட்டினார். என்றாலும் அவர் மனதில் நிம்மதி குடிகொண்டது. அதன் காரணமாக நடிப்பில் முழுத்திறமை காட்டினார். படவாய்ப்புகள்  தேடி வந்தன. வரியாகக் கொடுத்ததைப் போல பலமடங்கு சம்பாதித்தார்.
 “இந்த இரண்டு நிகழ்வையும் ஒப்பிட்டுப் பார். தொழிலதிபரும், நடிகையும் செய்தது வரிஏய்ப்பு தான். ஏறக்குறைய ஒரே கர்மக்கணக்கு தான். ஆனால், அதன் விளைவை தொழிலதிபர் ஏற்க மறுத்ததால் சிக்கலில் மாட்டி இறந்தார்.
நடிகையோ பாவத்தால் விளைந்த இன்னல்களை மனமுவந்து ஏற்றார். புன்னகையுடன்  வளமாக வாழ்ந்தார்.”

“புரிகிறது தாயே. மனதில் அன்பு குறையும் போது துன்பம் வருகிறது. அதை மனமுவந்து ஏற்றால் மனதில் அன்பு கூடுகிறது.  வழிபாடு நம் துன்பங்களை ஏற்றுக் கொள்ள உதவுகின்றன.  உங்களைக் காக்கா பிடித்தால் துன்பம் குறையும் என்பது அப்பட்டமான பொய் தாயே.  தவறை உணர்ந்து திருந்தினால் நீங்களே தண்டனையைப் பெருமளவு குறைப்பீர்கள் தாயே.”
“சபாஷ்...ஏதாவது வேண்டுமா?”
“மூன்று வரம் வேண்டும் தாயே.”
“சரி... கேள்.”
“மனதில் அன்பு குறையாமல் இருக்க வேண்டும். அப்படியே அன்பு குறைந்து துன்பம் வந்தாலும் அதை ஏற்கும் பக்குவம் வேண்டும்.”
“மூன்றாவது?”
“நான் உங்களின் அடிமை. நீங்கள் என் எஜமானி. இந்நிலை மாறவே கூடாது தாயே!”என் வாழ்வின் பெரிய வரமாக என்னுள் இறங்கிய அந்த வாகீஸ்வரி வாய் விட்டுச் சிரித்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar