Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எது செல்வம்?
 
பக்தி கதைகள்
எது செல்வம்?

குட்டிக்குரங்குகள் எப்போதும் தாய்க்குரங்கின் வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளும் இயல்புடையவை. குட்டியை சுமந்தபடி தாயும் மரத்துக்கு மரம் தாவும். தான் பற்றிய கையை குட்டி விட்டு விட்டால், தாய்க்குரங்கு மறுபடியும் சேர்த்துக் கொள்ள அனுமதிக்காது. ஆனால், இதற்கு நேர்மாறான  ஒரு சம்பவத்தை, சில மாதத்திற்கு முன்பு தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. மனதை நெகிழ வைக்கும் காட்சி அது. விலங்குகளுக்கும் தாயன்பு உண்டு என்பதை சிந்திக்க வைத்தது. ஒரு குரங்கின் குட்டி இறந்து விட்டது. அதை எண்ணி தாய்க்குரங்கு தவித்த நேரத்தில் நாய் ஒன்று, குட்டி போட்டது.  தாய்க்குரங்கு அந்த நாய்க்குட்டியை தன்னுடையதாக எண்ணியதோ என்னவோ...தன்னுடன் அரவணைத்து பால் கொடுத்தது. குட்டிநாயும் குரங்கின் வயிற்றைக் கட்டிக் கொள்ள, மரத்திற்கு மரம் தாவும் அதிசயமும் நடந்தது.  இது தன் குட்டி இல்லை என்ற உண்மையை குரங்கு அறியாமல் இருந்தது தாய்மையின் அதிசயமே.  தாய்மையின் மேன்மையை விலங்கு கூட உணரும் போது மனிதர்கள் உணர்வதில் விந்தையில்லை. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அன்னை தான் முதல் உறவு. அவளிடமிருந்து உறவுகள் தொடர்கதையாகிறது. அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா என உறவுகள் எல்லாம் அம்மாவால் கிடைத்த சங்கிலித் தொடர் தானே.

’அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே’
’அன்னையை போலொரு தெய்வமுண்டோ?’
’தாயில்லாமல் நானில்லை. தாயில்லாமல் எவரும் பிறந்ததில்லை’ என எத்தனை எத்தனை அர்த்தமுள்ள பாடல்கள்.
அவ்வைப்பாட்டி நமக்குச் சொல்லிக் கொடுத்த பாலபாடம் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
இந்த உண்மையை இந்தகாலகட்டத்தில் எத்தனை மகன், மகள்கள் உணர்ந்திருக்கிறார்கள்? பெற்று வளர்ப்பது பெற்றோர் கடமை. சிறகு முளைத்துப் பறக்கும் போது  குழந்தைகள் நன்றி மறந்து விடுகின்றனர். ஆனால் பெற்ற தாயிடம் பாசம் வைத்து மரியாதை செலுத்திய இரண்டு சிறுவர்களின் கதையை படிக்கலாம் வாருங்கள். இது மேலை நாட்டுக் கதை தான். ஆனால் பாசம் என்பது உலகிற்கே சொந்தமானது. தாயாருக்கு குழந்தைகள் மீது அன்பு.  
குழந்தைகளுக்கு பெற்றோர் மீது அன்பு. இது தான் பரஸ்பரமானது. இதுவே குடும்பம் செழிக்க வழி.
அது ஒரு சிறிய கிராமம்.  விவசாயக் குடும்பம் ஒன்றில் கணவன், மனைவி, இரு குழந்தைகள். அவர்களிடம் ஒரு வண்டியும், இருமாடுகளும் இருந்தன. வயல்களில் கூலி வேலை செய்து பிழைத்தனர். ஆனால் காலம் இப்படியே இருக்குமா?
மாற்றம் வந்தால் தானே வாழ்வு? அதிலும் ஏற்றம், இறக்கத்தை உருவாக்குவது தானே இயற்கையின் விளையாட்டு.

இந்த  விளையாட்டு ஒரு நாள் விவசாயியின் குடும்பத்திலும் நடந்தது. ஒருநாள் அவனை பாம்பு தீண்டியதால் வயலிலேயே இறந்தான். குடும்பம் தடுமாறியது. சிறுவர்கள் வேலைக்குப் போனதால்  அன்றாட வாழ்வு நகர்ந்தது. வறுமை என்றாலும், ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பால் பாசப்பறவைகளாக இருந்தனர். இந்நிலையில் அந்நாட்டு மன்னர் தலைநகரத்தில் பொருட்காட்சி வைக்க இருப்பதாகவும், மக்கள் தங்களிடம் உள்ள பொக்கிஷங்களை இடம்பெறச் செய்ய வேண்டும். மேலும் விலை மதிக்க முடியாத பொருள் அளிப்பவர் கவுரவிக்கப்படுவர் என்றும் அறிவிப்பு வெளியானது. ஏழைத்தாயும் பொருட்காட்சியைக் காண விரும்பினாள். “என் அருமை செல்வங்களே.. நமக்கு செல்வம் என்றால் ஒரு ஓட்டை வண்டியும், இரு தொத்தல் மாடுகள் மட்டுமே. இருந்தாலும் மன்னர் நடத்தப்போகும் பொருட்காட்சியை காண நான் ஆசைப்படுகிறேன். நாம் மூவரும் வண்டியில் நகரத்திற்குப் போவோமா?” எனக் கேட்டாள். தாயின் பேச்சைக் கேட்ட சிறுவர்கள் திகைத்தனர். ஆனாலும் கூலி கிடைக்காத சமயத்தில் தான் பட்டினி கிடந்தாவது தங்களுக்கு உணவிடும் தாயின் அன்பை எண்ணியவர்களாக, ”அம்மா...உங்கள் ஆசையை நிறைவேற்றுவது எங்களின் கடமை. எப்படியாவது மாட்டு வண்டியில் தலைநகருக்குப் போகலாம்” என்றனர்.

பயணத்திற்காக உணவு கட்டிக் கொண்டும், மாடுகளை வண்டியில் பூட்டிக் கொண்டும் புறப்பட்டனர்.  பாதி வழியில் மாடுகள்  இறந்து போயின. “நாம் கிராமத்திற்கே திரும்பிச் செல்வோம்” என தாய் மறித்தாள். ஆனால், சிறுவர்கள் தாயின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக நின்றனர்.   “அம்மா.. பாதிதூரம் வந்து விட்டோம். நம் கிராமத்திற்கு போக நினைத்தாலும் நீண்ட தூரம் நடந்தாக வேண்டும். அதற்குபதிலாக நாம் நகரத்திற்கே போகலாம்.  பொருட்காட்சியை பார்த்து விடலாம்” என்றனர்.  “என்னால் நடக்க முடியாதே” என்ற தாய் தயங்கினாள். சிறுவர்கள் அவளை வண்டியில் உட்கார வைத்து, நுகத்தடியை தங்களின் கழுத்தில் சுமந்தபடி வண்டியை இழுத்து நகரத்தை அடைந்தனர்.  பொருட்காட்சி சாலையை அடைந்த அவர்கள் காலியாக கிடந்த கூடாரம் ஒன்றில் ஓய்வெடுத்தனர்.  பொருட்காட்சி சாலையை பார்வையிட்ட மன்னர், எல்லா அரங்குகளையும் முடித்துக் கொண்டு அரண்மனைக்கு புறப்படத் தயாரானார். இந்நிலையில்  ஏழைத்தாயும், இரு சிறுவர்களும் இருந்த கூடாரம் அவரது கண்ணில்பட்டது.

“அடாடா.. இந்த கூடாரத்தை இன்னும் பார்க்கவில்லையே என எண்ணியபடி உள்ளே நுழைந்தார். எதிர்பாராமல் வந்த மன்னரைக் கண்ட தாயும், சிறுவர்களும் பரபரப்புடன் எழுந்தனர்.  
“அம்மா... உங்களிடம் என்ன பொக்கிஷம் இருக்கிறது” எனக் கேட்டார் மன்னர்.
மன்னர் தன்னை ஏளனப்படுத்துகிறாரே எனத்  தாய் தலைகுனிந்தாள்.
கந்தல் புடவைத் தலைப்பை உதறி காட்டினாள்.
“மன்னா... எங்களிடம் தங்கம், வைரம், வைடூரியங்கள் ஏதுமில்லை. அவற்றைக் கண்ணால் கூட காணாத ஏழைகள் நாங்கள். ஆனால் என்னிடம் இரண்டு அரிய செல்வங்கள் இருக்கின்றன.”
“எங்கே அந்த அரிய செல்வங்கள்?” எனக் கேட்டார் மன்னர். கழுத்தில் நுகத்தடியைச் சுமந்து வண்டி இழுத்ததால் ஏற்பட்ட காயத்துடன் நின்ற சிறுவர்களை மார்புடன் அணைத்துக் கொண்டாள். வரும் வழியில் மாடுகள் இறந்ததால் சிறுவர்களே வண்டியிழுத்த விஷயத்தை தெரிவித்தாள்.  “மன்னா, இதோ என்னுடைய விலை மதிப்பற்ற செல்வங்கள்” என மகன்களைக் காட்டினாள். ’எது சிறந்த செல்வம்?’ என்ற உண்மையை உணர்ந்த மன்னருக்கு கண்ணீர் பெருகியது.
அவர்களுக்கு  பரிசு கொடுத்து அனுப்பினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar