Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனமும் மலை போல
 
பக்தி கதைகள்
மனமும் மலை போல

பிள்ளைக்கடவுளான விநாயகர் ஒருநாள் பூனையுடன் பொழுது போக்கினார். விளையாட்டு மும்மரத்தில் அதன் முகத்தில் நகத்தால் கீறி விட்ட அவர், சிறிதும் வருந்தவில்லை. சற்று நேரத்தில் தாய் பார்வதியைக் காண ஓடினார். அவளின் மடிமீதேறி அமர்ந்தார். தன்னை தாய் கொஞ்ச வேண்டும் என எண்ணுவது குழந்தையின் இயல்பு தானே... விநாயகரும் தாயின் முகத்தை அண்ணாந்து பார்த்தார். ஆனால் திடுக்கிட்டார்.

 “என்னம்மா....உன் முகத்தில் சிவப்பா கீறல் இருக்கே?” எனக் கேட்டார்.

சிரித்தாள் பார்வதி.

“என்னம்மா...சிரிக்கிறீர்கள்?”

“சற்றுமுன் நீ கீறிய கீறல் தானப்பா இது”

“தாயே! பூனையுடன் விளையாடி விட்டு இப்போது தானே உன்னிடம் வந்தேன். கீறியதாகச் சொல்லுகிறீர்களே?”

“பூனையுடன் விளையாடினாயா? அதன் முகத்தில் கீறுவது தான் விளையாட்டா?”

“சரி... அங்கு கீறியது எப்படி தங்களின் முகத்தில்...?”

“குழந்தாய்!  எல்லா உயிர்களிலும்  நானும், உனது தந்தையான சிவனும் குடிகொண்டிருக்கிறோம். யார் ஒருவரைத் துன்பப்படுத்தினாலும் அது எங்களைத் துன்பப்படுத்துவது போலத் தான்” என்றாள்.

இது முதல்கடவுள் விநாயகருக்கான உபதேசமா? இல்லை! இதன் மூலம் நமக்குத் தான் பாடம் நடத்துகிறாள் பார்வதி. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மட்டுமே பிறர் துன்பம் போக்க உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

முல்லைக்கொடிக்கும், மயிலுக்கும் கூட  இரக்கம் காட்டினர் வள்ளல் பாரியும், பேகனும்.

குணத்தில் மலை போல மனிதன் உயர வேண்டும். கடையேழு வள்ளல்களும் ஈகை என்னும் குணத்தால் மலை போல உயர்ந்து நின்றனர்.

ஒருநாள்  பாரி தேரில் சென்ற போது காட்டில் முல்லைக்கொடி படர இடமின்றி வாடுவதைக் கண்டார். அவரது மனமும் அக்கொடி போல் வாடியது. அன்பு, அருள், இரக்கம், பரிதாபம், கருணை எல்லாம் உயர்மனதின் உன்னத பண்புகள். முல்லைக் கொடி படர தன் தேரை நிறுத்தி விட்டு அரண்மனைக்கு நடந்தே வந்தார்.
“முல்லைக்குத் தேர் ஈந்த பாரியின் அருளாட்சி நடந்த மண்ணில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறோம்” என்று நாம் பெருமைப்பட வேண்டாமா?

ஒரு மனிதன் தனக்குக் கிடைத்ததை அரிய பொருளை வேறொருவனுக்குக் கொடுப்பானா? அப்படிக் கொடுத்தவன் ஒருவன் இருக்கிறான். அவனே அதியமான்.

நீண்ட வாழ்நாளை அளிக்கும் நெல்லிக்கனி தனக்குக் கிடைத்தும், அதை சாப்பிட எண்ணாமல், ’ யார் வாழ்ந்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும்’  எனச் சிந்தித்தார்.

அதற்கு தகுதியானவர் அவ்வைப்பாட்டி என முடிவெடுத்ததால் வள்ளல் எனப் நீங்காப் புகழ் பெற்றார்.

ஒருவர் செய்த தர்மத்தின் பலன் அவரது சந்ததிக்கும் சேரும் என்பதை உணர்த்தும் சம்பவம் பாரி மன்னரின் வாழ்வில் நடந்தது. பாரி இறந்த பின், அவருடைய மகள்கள் அங்கவை, சங்கவை அரண்மனையை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. காட்டில் ஒரு ஓலைக்குடிசையில் எளிமையாக வாழத் தொடங்கினர். ஒருநாள் அங்கு மழை பொழிந்த போது, அவ்வையார் அக்குடிசையில் ஒதுங்கி நின்றார். பாட்டியை கண்ட பெண்கள்  மாற்றுடையும், உணவும் கொடுத்து உபசரித்தனர்.  

“இந்த நடுக்காட்டில் வசிக்கும் நீங்கள் யார்?” எனக் கேட்டார் அவ்வையார்.

“பாட்டி! எங்களைத் தெரியவில்லையா? நாங்கள் பாரிமகளிரான அங்கவை, சங்கவை.  எங்கள் தந்தையை பகைமன்னர்கள் கொன்றதால் காட்டில் தஞ்சம் புகுந்தோம்” என்றனர்.

“என் கண்மணிகளே... நீண்ட காலம் உங்களைச் சந்திக்காததால் எனக்கு அடையாளம் தெரியவில்லை” எனக் கூறிய அவ்வையார் அவர்களுக்கு ஆறுதல் சொன்னதோடு, குறுநில மன்னருக்கு திருமணம் செய்தும் வைத்தார் அவ்வையார்.

தன்னுயிரைத் தியாகம் செய்ய முன் வந்த வள்ளல்களும் நம் மண்ணில் வாழ்ந்தனர்.

வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் இருப்பதே வள்ளலின் லட்சணம். யார் வந்து எது கேட்டாலும் இல்லை என மறுக்காமல் கொடுப்பவர் மன்னர் குமணன். அவரது அரண்மனையில் பரிசு பெறும் புலவர் கூட்டம் எப்போதும் இருக்கும்.  

பார் போற்றும் மன்னர் என்றாலும் பகை இல்லாமல் போகுமா? எப்பேர்பட்டவருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் பகை முளைத்து விடுமே. குமணனுக்கு பகைமன்னர் சிலர் இருந்தனர்.

அதில் ஒருவர் நாட்டைக் கைப்பற்றியதால், குமணன் தலைமறைவாக  காட்டில் வாழ நேர்ந்தது. இந்நிலையில் அவரது தலையைக் கொண்டு வருவோருக்கு பரிசு அறிவித்தான் பகைமன்னன்.

பரிசுக்காகப் பலர் குமணனைக் கொல்ல முயற்சித்தனர். ஒருநாள் புலவர்கள் சிலர் காட்டில் இருந்த குமணனை ரகசியமாகச் சந்தித்தனர்.

“வள்ளலே.. உம் வாழ்நாள் பெருகட்டும்” என வாழ்த்தினர். அவர்களிடம்,“புலவர்களே, என்னுடைய தலைக்கு பரிசளிக்கப் போகும் செய்தியை தாங்கள் அறியவில்லையோ”

“அறிவோம் மன்னா”

“புலவர்களே... நாட்டை இழந்த என்னிடம் கொடுப்பதற்கு பொருள் ஏதுமில்லை. இப்போதே என் தலையை வெட்டித் தருகிறேன். அதை கொடுத்து பரிசு பெற்று வாழுங்கள்” என்றான் குமணன்.
பதறிப் போன புலவர்கள் மவுனம் காத்தனர்.

இதற்கிடையில், பகைநாட்டு மன்னரின் முன் காவலன் ஒருவன்,
“மன்னா! புலவர் சிலர் தங்களைக் காண வந்துள்ளனர்.” என்றான்.

“ என்னைப் புகழ்ந்து பாடி பரிசு பெற வந்திருக்கிறார்களா?”

“இல்லை மன்னா! வள்ளல் குமணனின் தலையை வெட்டிக் கொண்டு வந்துள்ளனர்.”

ரத்தம் வழிய தலையை தட்டில் ஏந்தி நின்ற புலவர்கள், “மன்னா! தங்களிடம் பரிசு பெறுவதற்காக வள்ளல் குமணன் தன் தலையை வெட்டித் தந்திருக்கிறார்” என்றனர்.

இதைக் கேட்ட பகை மன்னனுக்கு அப்போது தான் செய்த விபரீதம் புரிந்தது.

புலவர்களுக்குப் பரிசாகத் தர ஏதுமில்லை என்பதால், தானே முன் வந்து தலையை வெட்டிய குமணன் அல்லவா உள்ளத்தால் உயர்ந்தவன் என்பது  “ஐயோ... பாவியாகி விட்டேனே குமணா! உன்னை இனி எங்கே காண்பேன்?” என கதறினான்.

“பதறாதீர்கள் மன்னா! வள்ளல் குமணன் இறக்கவில்லை. அவரது தலையைப் போல செய்த பொய் வடிவம் இது. இதன் மீது விலங்கின் ரத்தத்தை ஊற்றி கொண்டு வந்திருக்கிறோம்” என்ற உண்மையை அவர்கள் தெரிவித்தனர். .

பிறர் துன்பம் போக்கும் வள்ளல் குணம் கொண்டவர்கள் அழிவதில்லை. புகழால் நிலைத்து வாழ்வர். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar