Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தப்பு செய்துவிட்டாய் மகளே!
 
பக்தி கதைகள்
தப்பு செய்துவிட்டாய் மகளே!

“தம்பி உன்னைத்தாண்டா மலைபோல நம்பியிருக்கேன். ஏதாவது பண்ணுடா. என் பொண்ணுக்குப் புத்தி கெட்டுப்போச்சுடா.”விடிந்ததும் விடியாததுமாக அலைபேசியில் புலம்பியவர்  எனக்கு அண்ணன் முறை வேண்டும். அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். ஒரே பெண் ஹாசினி. முதுகலைப் பட்டதாரி. படம் வரைவாள். பட்டுப்புடவை வடிவமைப்பாள். மனித உறவுப் பிரச்னைகளில் தீர்ப்பு சொல்வாள். சகலகலாவல்லி. “ஹாசினி ஒரு தெருநாயைக் கூட்டியாந்து வச்சிருக்காடா. தினமும் அதக் குளிப்பாட்டறதும், சோறு வைக்கறதும், தவறாம  டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போறதும்... தாங்கமுடியலடா.  அதுனால ஏதாச்சும் வியாதி வந்து தொலைச்சா? அத அடிச்சித் துரத்து. லட்சரூபாய் கொடுத்து நல்ல டாபர் மேன் நாய் வாங்கித் தரேன்னு சொன்னேன். “உங்க வேலையப் பாத்துக்கிட்டுப் போங்கப்பா”ன்னு சொல்றாடா. அவ நீ சொன்னா மட்டும் தான் கேப்பா....” அடுத்த முறை சென்னை செல்லும் போது  முடிந்ததைச் செய்கிறேன் என்று மழுப்பி வைத்தேன்.

ஹாசினியின் வீடு இருந்தது விருகம்பாக்கத்தில். எனக்குப் பரிச்சயமில்லாத இடம். ஆட்டோக்காரர் இறக்கி விட்டுப் போய் விட்டார். வீட்டைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. அதிகாலை என்பதால் ஹாசினியை போனில் தொந்தரவு செய்ய மனமில்லை. “நான் வழிகாட்டுகிறேன்.”
எங்கிருந்தோ முளைத்த ஒரு நாற்பது வயது பெண் மிரட்டலாக, “நான் எங்க போகணும்னே உங்களுக்குத் தெரியாதே! அப்பறம் எப்படி..”
 “உன்னை எந்தச் சமயத்தில் எந்த இடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று எனக்கு மட்டுமே தெரியும். வா.”
ஆகா! பச்சைப்புடவைக்காரி...
“மகளுக்குப் பாடம் சொல்லித் தரப் போறாயாக்கும்...”
“ஆம், தாயே!”
“அது தான் நடக்காது. அவள் உனக்குத் தாயாக பாடம் சொல்லப் போகிறாள். முக்கியமான பாடம். நீ கோட்டை விட்டு விடக்கூடாது என்பதற்காக நானும் உடன் வருகிறேன்.” “ஆனால் அங்கு  நீங்கள்...” “உன் கண்ணுக்கு மட்டும் தெரிவேன். அவள் இல்லாத போது பேசுவேன்.” பிரபஞ்சத்தை இயக்கும் வேலையை விடுத்து, இந்த கொத்தடிமையை கடைத்தேற வழிகாட்டிய இவளது கருணை இருக்கிறதே! தாங்க முடியாமல் அழுதேன்.

“வாங்க சித்தப்பா. ஏன் உங்க கண் கலங்கியிருக்கு?”
என்னை அழவிட்டது பச்சைப்புடவைக்காரி என சொல்ல முடியுமா?
“தூசி பட்டுடுச்சும்மா. நீ நல்லா இருக்கியாம்மா?”
“நல்லா இருக்கேன் சித்தப்பா. எங்க வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்ந்திருக்கா. பேரு ராகி...”
வெள்ளை நிறத்தில் நாய் ஓடி வந்தது.
பார்த்ததும் அது தெருநாய் என்பது தெரிந்தது. ஏன் இதைக் கட்டிக்கொண்டு அழுகிறாய்?
அண்ணன் சொன்னதைச் சொன்னேன். அப்போது ஹாசினி ஆரம்பித்தாள்.
“வீடு, கார் மாதிரி நம்ம அந்தஸ்தை காட்டணும்னா நல்ல ஜாதிநாயா வளக்கணும். பொதுவா எனக்கு நாய் வளக்கறது பிடிக்காது...சித்தப்பா.”
அப்பறம் ஏன் இந்தக் கண்றாவி?

“ஒருநாள் ராகியையும் சேத்து அவ அம்மா ஆறுகுட்டி போட்டுச்சி.  இதே தெருவுல தான் அது நடந்தது. நானும் அவரும் வாக்கிங் போறப்போ பார்த்தோம். ரெண்டு நாள் கழிச்சிப் பாத்தா ராகியோட அம்மாவக் காணோம். ராகியோடக் கூட பொறந்ததும் செத்துப் போச்சு. ஒரே இடத்துல அஞ்சு குட்டிநாய்ங்க செத்துக் கெடக்கறதப் பாத்திருக்கீங்களா? மனசே வெறுத்துப் போச்சு. ரெண்டு நாள் சாப்பிடல, தூங்கல. ராகிக்கு என்ன நேருமோ என பயந்து தூக்கிட்டு வந்தேன். இப்போ என் செல்லம் நல்லா இருக்கு?”
ராகி அவளைப் பாசத்துடன் பிறாண்டியது. நான் விக்கித்துப் போனேன்.
“அஞ்சு நிமிஷத்தில உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பில்டர் காபி  கொண்டுவரேன் சித்தப்பா.”
ஹாசினியுடன் ராகியும் சென்றது. பச்சைப்புடவைக்காரி விளக்கம் கொடுத்தாள்.
“அன்பென்றால் இப்படி இருக்கவேண்டும். நாயால் இவளுக்கு என்ன பயன்? அப்பாவிடம் திட்டு தான் வாங்கிக் கொடுக்கும்.  அவ்வளவு தான். ஆனாலும்  அனாதையாக நின்ற ஒரு ஜீவனை அரவணைத்து வளர்க்கிறாள். யார் தடுத்தாலும்  கைவிடமாட்டேன் என்கிறாளே... இதுவே உண்மை அன்பு.”
என் கண்கள் கலங்கின.
“அதோ வரும் ஹாசினி  சொல்வதைக் கேள்.”
சில நிமிடங்கள் வேறு விஷயம் பேசினோம்.  

“சித்தப்பா... நான் ராகிகிட்டக்  கத்துக்கிட்ட பாடம் நிறைய. ஜாதிநாயைப் பயிற்சி மூலமா இஷ்டம் போல் என்ன வேணுமானாலும் செய்ய வைக்கலாம். ராகிகிட்ட அது நடக்காது.
ஏன்னா ராகி தெருநாய்.

தொடர்ந்து மத்த நாய்ங்களோட சண்டையிட்டால் தான் உயிரக் காப்பாத்த முடியுங்கற விஷயம் இதோட ஜீன்ல இருக்கு.  ராகிக்கு ஒருவரைப் பிடிக்கலன்னா அவரு எந்த நாட்டுக்கு ராஜாவா இருந்தாலும் வால ஆட்டாது.

போன வாரம் என் கணவரோட பாஸ் வந்திருந்தாரு. பெரிய கம்பெனிக்கு எம் டி., கோடிக்கணக்குல பணம். ஆனால் அவரை ராகி கண்டுக்கவேயில்லை. அவரும் பாரின் பிஸ்கட் போட்டாரு.  ராகி தொடவே இல்லை. அவரை  ஒரு முறை முறைச்சிட்டுத் தள்ளிப் போயிருச்சி.

ஆனா வீட்டு வேலைக்காரி குருவம்மாவோட பொண்ணைப் பாத்ததும் வாலைக் குழைச்சு போயிருச்சி ராகி.

ஹாசினி தொடர்ந்தாள்.

“சித்தப்பா...ராகிக்கு இன்னொரு வித்தியாசமான குணமிருக்கு. ராகிக்குப் பிடிச்ச ஆளுங்க ஏதோ கோபத்துல எட்டி உதைச்சாக்கூட வாலைக் குழைச்சிக்கிட்டு நிப்பா.  அன்னிக்கு என் புருஷனுக்கு ஆபீஸ்ல ஏதோ கடுப்பு போலிருக்கு. வீட்டுக்கு வந்தவுடன ராகி அவர்கிட்டப் போய் நின்னுச்சு.  அவர் மடியில உக்காரப் பாத்துது. அவரு ஏதோ கோபத்துல ராகிய எட்டி உதச்சாரு. அதுக்குப் பாவம் வலி.  இவருக்கும் மனசு என்னமோ மாதிரி ஆயிருச்சி. ராத்திரி ராகிக்கு நானே சாப்பாடு வைக்கறேன்னு எடுத்துக்கிட்டுப் போனாரு. பாவம் ராகி அன்னிக்கு சரியாச் சாப்பிடல. நல்ல பசி.
தட்டு நிறைய சோறு இருந்துச்சி. அதைக் கண்டுக்கல. இவரப் பாத்ததும் பாய்ஞ்சி வந்து இவர் கால நக்கிட்டு நின்னுச்சி. உதைச்ச காலாச்சேன்னு அது நெனைக்கல சித்தப்பா.”

ஹாசினியின் கண்களில் கண்ணீர். அப்போது அலைபேசியில் அழைப்பு வரவே “ஒரு நிமிஷம்” என சொல்லி நகர்ந்தாள்.
பச்சைப்புடவைக்காரி மீண்டும், “ஹாசினியிடம் அன்பைக் கற்றுக் கொண்டாய். அதைவிட முக்கியமான  ஆன்மிகப் பாடத்தை ராகியிடம் கற்கவேண்டும். கடவுளே.. நமக்குத் துன்பம் கொடுத்தால்? நம் பக்தி இன்னும் அதிகமாக வேண்டுமே ஒழிய குறைவது கூடாது. ஹாசினியின் கணவர் ராகியை எட்டி உதைத்தார். வலிக்கும் என்றாலும் அவர் மீதுள்ள பாசத்தை சிறிதும் குறைக்கவில்லை. பசியுடன் இருந்தும் சோற்றை விட்டு உதைத்த காலை நக்கியது. கடவுளின் மீது  நம்பிக்கை இருந்தால் துன்பம் நேரும் போதும் பக்தி குறையாது.  

’தசையினைச் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல்அகம் கேட்டேன்’ என்று பாடினானே என் மகன் பாரதி.. அதுவே பக்தி...துன்பம் வந்தால் சிலர்  தெய்வ நம்பிக்கையை கைவிடுகிறார்கள். அவர்களுக்கு ராகியின் செயல் பாடமாக இருக்கட்டும்.” பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
“நான் கிளம்பறேன்.  உனக்குப் பெரிய பாடத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள் ஹாசினி. உன் நன்றியுணர்வைக் காட்டிவிட்டுப் போ.” ஹாசினியும், ராகியும் வந்தனர். ராகியின் மேன்மையை எண்ணி உடல் சிலிர்த்தது. உடனே என்னிடம் ஓடி வந்தது ராகி. அதன் தலையை  தடவினேன். ஹாசினி கைதட்டி, “ஹை! ராகிக்குச் சித்தப்பாவப் பிடிச்சிப் போச்சி. உடனே அப்பாகிட்ட போன் பண்ணிச் சொல்லப்போறேன்.” கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன்.
“எனக்கு ஒரே ஒரு வருத்தம், ஹாசினி.”
ஓடி வந்து என் கையைப் பிடித்தாள் அவள்.
“ஏதாவது தப்பு செஞ்சிட்டேனா?”
“ஆமாம்மா. நான் பிறந்து முப்பது வருஷம் கழிச்சிப் பொறந்துட்ட. ஒரு விதத்துல மகளா வேற போயிட்ட. இல்லாட்டா..”
“இல்லாட்டா...”
“உன் கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணியிருப்பேம்மா. அதுக்கு வழியில்லாம பண்ணிட்டியேம்மா!!”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar