Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்னதானம் செய்ய ஆசை
 
பக்தி கதைகள்
அன்னதானம் செய்ய ஆசை

“இந்த வாரம் சனிக்கிழமை  எங்க ஊருக்கு வரமுடியுமா?” கேட்டவன் என் பால்ய சிநேகிதன். “என்ன விசேஷம்?” உலகிலேயே சிறந்த தானம் எதுன்னு உனக்குக் காண்பிக்கிறேன்.” ஆர்வக்கோளாறால் தலையசைத்தேன்.  தஞ்சாவூர் அருகிலுள்ள சிறிய நகரம். நகரின் பிரதான வீதியை அடைத்துப் பந்தல் போட்டிருந்தனர். சாப்பாட்டுப்பந்தி ஓடிக்கொண்டிருந்தது. நானூறு பேர் ஒரே நேரத்தில் சாப்பிட்டனர். தலைவாழை இலையிட்டு, நான்கு வகை கூட்டு, கறி வடை, பாயசம் என தடபுடலான சாப்பாடு.  “இப்போ இருக்கறது நாலாவது பந்தி. இன்னும் ரெண்டு பந்தி ஓடும்.” ஆறு பந்தியா? 2400 ஆளுக்கு வயிறார உணவளித்த புண்ணியவான் யார்? “இதோ இவர் தான். பேர் சுப்பிரமணியன். மாசா மாசம் அமாவாசைக்கு அன்னதானம் நடத்தறாரு. வரவங்களுக்குப்  போதும், போதும்னு சொல்ற அளவுக்குச் சாப்பாடு போட்டு அனுப்பிவைக்கறாரு.” அவரை வணங்கினேன். எங்களையும் வற்புறுத்திச் சாப்பிடச் சொன்னார்.  அமிர்தமாக இருந்தது சாப்பாடு.   “நூறு தலைமுறைக்கு இவர் நல்லா இருக்கணும் தாயே” என்று வேண்டிக்கொண்டு ஊர் திரும்பினேன்.

அன்று என் மனம் ஒரு நிலையில் இல்லை. தானம் செய்தால் இப்படிச் செய்ய வேண்டும். மாதாமாதம் அன்னதானம் நடத்துவதென்றால் சும்மாவா? இந்தப் பிறவியில் என்னால் அப்படி ஒரு தானத்தை நினைச்சுக் கூடப் பார்க்கமுடியாது. அன்னதானம் செய்ய மனசு மட்டும் போதாதே! பொருளாதாரம், ஆள் பலம் வேண்டும்.  அதற்கெல்லாம் எங்கே போவேன்? இது நடந்து நான்கு நாள் இருக்கும். மனைவி ஊரில் இல்லாததால் ஒரு மெஸ்ஸில் மதிய உணவு சாப்பிடப் போனேன்.  நேரம் கடந்து போனது என்னமோ தப்பு தான். “சாப்பாடு முடிந்துவிட்டது. இனி நாளைக்குத்தான்.” என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லிவிட்டார் கல்லாவில் அமர்ந்திருந்தவர். பசி கிள்ளியது. மணி இரண்டரை. இந்த இரண்டுங்கெட்டான் நேரத்தில் எதுவும் கிடைக்காது என தவித்த போது, “சாப்பிடுறீங்களா சாமி?” குரல் கேட்டுத் திரும்பினேன். நாற்பது வயதுப் பெண் நின்றிருந்தாள்.  “என்னம்மா?”

“அந்த முக்குல நான் ஒரு மெஸ் நடத்திக்கிட்டு இருக்கேன். வாங்க, சாமி.”
அவளைத் தொடர்ந்தேன். சாம்பார், ரசம், ஒரு காய், மோர் என எளிய உணவாக இருந்தாலும் ருசியாக இருந்தது. நுாறு ரூபாயை கொடுத்தேன்.
“நான் போடற சாப்பாட்டுக்கு உன்னால காசு கொடுக்கமுடியாது சாமி.”
சட்டென நிமிர்ந்தேன். பச்சைப்புடவைக்காரி.
“நீங்களா என்னை அழைத்து உணவு பரிமாறினீர்கள்?”
“தாய் தன் மகனின் பசியைப் பொறுக்கமாட்டாள்.”
“தாயே!”
“தஞ்சாவூர்க்காரர் போல அன்னதானம் செய்யவில்லையே என கவலைப்படுகிறாயோ?”
தலை குனிந்தேன்.
“அவர் செய்வது நல்லசெயல் தான். ஆனால் அதை விடச் சிறந்த தானம் இருக்கிறது! தெரியுமா உனக்கு?”
நான் விழித்தேன். அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
கோல்கட்டாவுக்கு அருகிலுள்ள ஒரு ஊரில் சில நூறு ஆண்டுகளுக்கு முன், மகான் சைதன்யர் நண்பருடன் ஒரு ஓடத்தில் போய்க் கொண்டிருந்தார். மாலை நேரம். ரம்மியமான சூழல். இருவரும் நன்றாக எழுதுவார்கள். ஆளுக்கொரு புத்தகத்தை அப்போது தான் எழுதி முடித்திருந்தனர். அந்த காலத்தில் கையால் தான் எழுத வேண்டும். ஒரே பதிப்பாளரிடம் தான் இருவரும் புத்தகங்களை கொடுக்க முடிவு செய்திருந்தனர்.

அதற்கு முன் ஒருவர் எழுதியதை மற்றொருவர் படித்து ஆலோசிப்பது என தீர்மானித்தனர்.  ஓடத்தில் பயணித்தபடி புத்தகம் பற்றிப் பேசலாம் என்ற சைதன்யரின் யோசனையை நண்பர் ஏற்றுக் கொண்டார். ஆனால் நண்பரின் முகம் வாடியிருந்தது. என்ன பிரச்னை என்று சைதன்யர் விசாரித்தும் பயனில்லை. ’உன் வருத்தத்திற்கான காரணம் தெரியாவிட்டால்  ஆற்றில் குதிப்பேன்.’ என சைதன்யர் மிரட்டியபின்  நண்பர் தயக்கமுடன் பேச ஆரம்பித்தார். “சைதன்யா! நாம் இருவரும் இறைவனுடைய அன்பு பற்றியே எழுதியிருக்கிறோம். உன் புத்தகம் மிக அற்புதமாக உள்ளது.  படிக்கும் போது நான் பலமுறை அழுதேன். ஆனால்..
“என்ன ஆனால்?” “உன் புத்தகத்தைப் படித்தவர்கள் என்னுடையதை சீண்டக் கூட மாட்டார்கள். பதிப்பாளர் நிச்சயமாக உன் புத்தகத்தையே தேர்வு செய்வார். இருந்தாலும் புத்தகம் எழுதுவதற்காக எத்தனை நாள் தூக்கத்தைத்  தியாகம் செய்தேன்? எத்தனை மாதம் சோறு, தண்ணீர் இல்லாமல் உழைத்தேன்?  எல்லாம் வீணாகி விட்டதே!” சைதன்யர் தனக்காக வருந்துவார் என எதிர்பார்த்தார் நண்பர். அவரோ நகைச்சுவைத் துணுக்கு கேட்டது போல் சிரித்தார். நண்பருக்கு வலித்தது. “முட்டாளே! ஏன் கவலைப்படுகிறாய்?  பதிப்பாளர் என் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பார் என்பது தானே உன் கவலை? இதோ பிரச்னை தீர்ந்தது.” என்று சொல்லி தனது புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை ஆற்றில் வீசினார் சைதன்யர். “இனி பதிப்பாளர் உன் புத்தகத்தை ஏற்பார். அது மட்டுமே வரும். நீ பட்டபாடு வீணாகாது. வாழ்த்துக்கள்.” நண்பர் அழுதபடி சைதன்யரின் காலில் விழுந்தார்.  “பாடுபட்டு உருவாக்கிய நூலை இப்படி எறிந்து விட்டாயே!? ” “நல்லது தான் செய்தேன். நண்பரின் கவலையைப் போக்கினேன். இன்னும் சில மாதம் முயன்றால் ஒரு புத்தகம் எழுதி விடுவேன். ஆனால் உன்னைப் போல நண்பன் கிடைப்பானா?  நட்புக்கு முன்னால் நான் எழுதிய கிறுக்கல்கள் ஒரு பொருட்டல்ல.” நண்பர் மேலும் அழுதார்.

பச்சைப்புடவைக்காரி கதையை தொடர்ந்தாள். “சைதன்யர் விட்டுக் கொடுத்தார். அவர் செய்தது சிறந்த தானம். உன்னிடத்தில் இருப்பதைக் கொடுப்பது சாதாரண தானம்.  உன்னையே கொடுப்பது தான் உத்தம தானம். சைதன்யர் தன்னையே கொடுத்தார். அவர் மனதில் அன்பு குடியிருந்ததால் தான் மகானாக விளங்கினார். சைதன்ய மகாபிரபு என மக்கள் கொண்டாடினர்.  “இப்போது சொல். தேவை ஏற்பட்டால் நீ உத்தம தானம் செய்வாயா?” “மாட்டேன், தாயே!”
“என்ன திமிர்! நான் என் கடமையை விட்டு உனக்கு வயிறார சோறிட்டு உபதேசம் செய்தேனே.... என்னைச் சொல்ல வேண்டும்.” “ஏன் என கேட்க மாட்டீர்களா?”
“ஏன்?”
“ எப்படித் தாயே கொடுக்க முடியும்? நான் தான் ஏற்கனவே என்னை ஒருத்திக்குக் கொடுத்து விட்டேனே? அப்படியும் சொல்ல முடியாது, தாயே! என்னை ஒரு பேரழகி மொத்தமாக எடுத்துவிட்டாள்! தன் கொத்தடிமையாக்கிக் கொண்டாளே!
அப்புறம் கொடுக்க என்ன இருக்கிறது? நான் உங்கள் உடமை தாயே. என்னை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.  நானும் அப்படி அன்னதானம் செய்யவேண்டும் என்று ஏங்கியது தவறு. மன்னியுங்கள்.“
அன்னை கலகல என சிரித்தாள்; என் கண்களில் பொலபொலவென கண்ணீர் கொட்டியது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar