Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கர்மக்கணக்கும் காளியின் அருளும்!
 
பக்தி கதைகள்
கர்மக்கணக்கும் காளியின் அருளும்!

பூங்காவில் நான் அமர்ந்திருந்தபோது மாலை ஐந்து மணியிருக்கும். “சாமி.. கடலை வேணுமா?” “வேணாம்மா.” “கடலை வாங்கினால் தான் உன் மனதிலுள்ள சந்தேகத்தைத் தீர்ப்பேன்.” “தாயே நீங்களா?” பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்து வணங்கினேன்.  அவள் அளித்த கடலையை கண்களில் ஒற்றிக்கொண்டு பின் சாப்பிட்டேன்.   “தாயே.. மனிதனின் கர்மக்கணக்கு பாதிக்கப்படாமல் எப்படி அருள்புரிகிறீர்கள் என சொல்லுங்களேன்.” “செய்முறை விளக்கமே தருகிறேன்.” “அதோ அங்கு சோகமாக இருப்பவனைப் பார். அவன் பெயர் சுந்தர். அவனது வேலை போய் ஒருமணி நேரம் கூட ஆகவில்லை. விரைவில்  இன்னொரு பெரிய பிரச்னையை எதிர்கொள்ளப் போகிறான்..” “ அவன் ஏன்  துன்பப்படவேண்டும் ?” “எல்லாம் அவன் கர்மக்கணக்கு தான்.”
“அப்படி என்ன பாவம் செய்தான்?” “அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். அவளும் நேசித்தாள். இரு வீட்டாரும் சம்மதித்தனர். நாள் குறிக்கும் போது காதலிக்குச் சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மருத்துவரை அணுகி சர்க்கரை நோயுள்ள பெண்ணைத் திருமணம் செய்யலாமா என கேட்டிருக்கலாம். அவரும் பிரச்னை இல்லை என்று சொல்லியிருப்பார். ஆனால் அவன் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் வரும் என பயந்து காதலியை நிராகரித்தான்.   வேறொருத்தியை மணந்தான். பாவம் காதலி இவனையே நினைத்துக்கொண்டு தனியாக வாழ்கிறாள். மகளின் நிலை கண்டு அவளது தாய் இறந்தாள். தந்தை வேதனையுடன் இருக்கிறார்.”
“......”
காதலிக்கும் போது இனித்தவள் சர்க்கரைநோய் எனத் தெரிந்ததும் கசந்தாள்.”
“இப்போது”
“இவன் செய்த தவறை உணர வேண்டும்.”
“அதனால் தான் இவனது வேலை போனதா?”
“இல்லை. வேறு காரணம் இருக்கிறது. நேற்றும் இவனது வாழ்வில் நடந்ததைக் காட்டுகிறேன் பார்.” சர்க்கரை நோயாளிகளின் உடலில் பொருத்தும் ஏஜிபி என்னும் உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தான் சுந்தர். உபகரணத்தின் விலை ஏழாயிரம். இதை சிபாரிசு செய்யும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து வந்தது அந்த நிறுவனம். பலர் ஊக்கத்தொகையை ஏற்க மறுத்தாலும், சிலர் நோயாளிகளுக்குத் தேவைப்படாதபோதும் அதைப் பொருத்தி பணம் சம்பாதித்தனர். முந்தைய நாள்  பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைக்குச் சென்ற சுந்தர், மருத்துவர் ஒருவர் ஊக்கத்தொகைக்காக தேவையில்லாமலேயே  நோயாளிகளுக்கு உபகரணம் பொருத்துகிறார் என அறிந்தான். கிராமத்துப்பெண் ஒருத்தி தாலியை விற்று தன் கணவருக்கு உபகரணம் வாங்கப் பணம் புரட்டியிருந்தாள். இத்தனைக்கும் அவளின் கணவருக்கு உபகரணம் அவசியமில்லை. நடக்கும் அநீதியில் நமக்கும் பங்கு இருக்கிறதே என அவனது மனம் வருந்தியது.

லாப நோக்கில் மருத்துவர்கள் ஏழைகளைத் துன்புறுத்துவதை நிறுவனத்தாரிடம் தெரிவித்தான். ’தொழில்ல இது சகஜமப்பா’ என்ற ரீதியில் பூசி மெழுகினார் முதலாளி.  ஆனாலும், சுந்தர் தன் ராஜினாமாக் கடிதத்தை கொடுத்து விட்டு வெளியேறினான்.  நாற்பது வயதில்  இன்னொரு வேலை எப்படி கிடைக்கும்?  
சேமிப்பு மூலம் ஒரு மாதம் ஓட்டலாம். அதன் பின்? சுந்தர், அவன் மனைவி, பத்து வயது மகன்.. எப்படி வாழப் போகிறார்கள்?
வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் இப்போது பூங்காவில் அமர்ந்திருக்கிறான்.
“தாயே... பார்த்தால் நல்லவனாகத் தெரிகிறான்”
“அதனால் வாய்ப்புத் தரப் போகிறேன். நடப்பதைப் பார்”
சுந்தரின் அலைபேசி ஒலித்தது. அழைத்தது அவன் மனைவி.
“என்னங்க மோசம் போயிட்டோம். நம்ம பையன் திடீர்னு மயக்கப்பட்டு விழுந்துட்டாங்க. ஐ.சி.யு.,வுல வச்சிருக்காங்க.  லட்ச ரூபாய் கட்டச் சொல்றாங்க. உயிருக்கே ஆபத்துன்னு சொல்றாங்க...”

மருத்துவமனைக்கு ஓடினான் சுந்தர். “சுகர் ஜாஸ்தியாகி பையன் கோமாவுக்குப் போயிட்டான். ட்ரீட்மெண்ட ஆரம்பிச்சிட்டோம். ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கட்டிருங்க.” என்றார் மருத்துவர். கதறினான் சுந்தர். “மிஸ்டர் சுந்தர். திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரேயடியாக அதிகமாகி டயாபடிக் கோமா என்ற நிலைக்குச் சென்று விட்டான் பையன்.” “ டாக்டர்... எப்படியாவது என் பையன் உயிரைக் காப்பாத்துங்க.”  என்றவன் தனது பிரச்னைகளையும், வேலை போன விஷயத்தையும்  மருத்துவரிடம் சொன்னான். சில கேள்விகளை கேட்ட அவர் இடையிடையே தொலைபேசியில் கிசுகிசுவென பேசினார். “எங்க அறக்கட்டளை சார்பாக சர்க்கரை நோயாளி குழந்தைங்க நிறைய இருக்காங்க. எல்லாம் மதுரையச் சுத்தியுள்ள கிராமங்கள்ல இருக்காங்க.. அவங்கள பாத்துக்க ஆளு தேவைப்படுது. அந்த வேலைய உங்களுக்குத் தரலாம்னு நெனக்கறேன். உங்களுக்கு டூவீலர் கொடுத்திருவோம். தினமும்  குழந்தைங்களுக்கு இன்சுலின் மருந்து கொண்டு போய்க் கொடுக்கணும். மாசம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம். என்ன சொல்றீங்க?”

மருத்துவரை வணங்கினான் சுந்தர். “நான் கும்பிடற பச்சைப்புடவைக்காரிதான் உங்க ரூபத்துல வேலை கொடுத்திருக்கா டாக்டர்.” “இப்போ நீங்க எங்க ஸ்டாஃப் ஆனதால உங்க மகனோட சிகிச்சைக்கு பணம் தரவேண்டாம். வாங்க உங்க பையனைப் பாக்கப் போகலாம். இப்ப மயக்கம் தெளிஞ்சிருக்கும். சர்க்கரை நோய் பயப்படற விஷயமேயில்ல. அவன் இயல்பான இருக்க முடியும்.  அதுக்கு நான் உத்தரவாதம்.” சுந்தர் அழுதான். வேரறுந்த மரம் போல நான் பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன். “ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துவிட்டீர்களே. அப்பாவி நோயாளிகளை ஏமாற்ற மாட்டேன் என உறுதியாக இருந்த சுந்தரின் வேலையைப் பறிப்பது போல் பறித்து பின் மனதுக்கு பிடித்த வேலையை கொடுத்தீர்கள். ஒருவேளை அவன் வேலையை விடாமல் இருந்தாலும் மகனின் சிகிச்சைக்காகப் பணத்திற்குக் கஷ்டப்பட்டிருப்பான். அவனுக்கு மருத்துவரிடமே வேலை வாங்கிக் கொடுத்துப் பணப்பிரச்னையை போக்கி விட்டீர்கள். காதலித்த பெண்ணைக் கைவிட்ட கர்மக் கணக்கைச் சரிசெய்ய சர்க்கரை நோயாளிகளுக்குச் சேவை செய்ய வைத்து விட்டீர்கள். சுந்தர் தன்னலமற்ற சேவை செய்தால் அடுத்து ஒரு உயர்ந்த பிறவியைத் தருவீர்கள்.

தாயே...ஒரு கணத்தில் பிரபஞ்சங்களை ஆக்கி, காத்து அழிக்கும் தங்களின் சக்தியைக் கூடப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கர்மக்கணக்கு கெடாமல் எங்கள் மீது பொழியும் அன்பை  புரிந்து கொள்ள முடியாதம்மா. காலகாலத்திற்கும் தங்களின் கொத்தடிமையாக வாழும் பேற்றை உங்களிடம் யாசிக்கிறேன்”
பச்சைப்புடவைக்காரி சிரித்த போது என் அழுகை இன்னும் அதிகமாகியது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar