Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அடியார்க்கு அடியார்
 
பக்தி கதைகள்
அடியார்க்கு அடியார்

“மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கிய பொருள் கைப்பட வேண்டும்.” என்று பாடினார் பாரதியார். மனதில் உறுதி வேண்டும் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. காசியாத்திரை செல்பவர்கள் கங்கைக்கரையில் கர்மாவைச் செய்வார்கள். அப்போது பிடித்தமான காய், பழம் ஒன்றை விட்டு வர வேண்டும் என்பது ஐதீகம். துறவுநெறிக்கு நம்மைப் பக்குவப்படுத்தும் முயற்சி இது. “பிடித்தமான” என்ற சொல்லை விட்டு, பிடிக்காத காய், பழங்களில் ஒன்றை கைவிடுவோர் பலருண்டு. ஆனால் அந்தக் காயோ, பழமோ தனக்கு பிடித்தமானது என்றும், அதை மனஉறுதியுடன் விட்டது போலவும் பேசி மகிழ்வர். பாரதியாரின் “வாய்ச் சொல்லில் வீரரடி” என்ற வார்த்தையும் இவர்களுக்கே பொருந்தும்.

பெருமை பேசுவதில் வல்லவரான இவர்கள், நாயன்மார்களின் வரலாறை ஒருமுறையாவது படிக்க வேண்டும். உயர்ந்த நிலையில் வாழ்ந்தாலும் மனிதன் கர்வம் கொள்வது கூடாது என்ற தத்துவம் அதில் இருக்கும். கயிலாயத்தில் சிவனுக்கு தொண்டு செய்தவர் சுந்தரர். பூமியில் பிறந்த இவர் சிவனின் நண்பராக வாழ்ந்ததால் ’தம்பிரான் தோழர்’ எனப்பட்டார். ஒருநாள் திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்கள் பலர் இருந்த போது, சுவாமியை தரிசிக்க சுந்தரர் வந்தார். அடியார்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தால் வணங்குவது வழக்கம். ஆனால்  மண்டபத்தில் இருந்த அடியார்களை வணங்காமல் சென்றார் சுந்தரர். இதைக் கண்ட விறன்மீண்ட நாயனாருக்கு கோபம் வந்தது ’தம்பிரான் தோழர்’ (சிவனின் நண்பர்) என்ற கர்வத்தால் சுந்தரர் யாரையும் மதிக்காமல் செல்வதாக கருதினார். சிவன் மீதும் கோபத்தை வெளிப்படுத்தி “நீயும் புறம்பு; சுந்தரனும் புறம்பு” என்று சொல்லி அடியார்களுடன் வெளியேறினார். புறம்பு என்பதற்கு ’ஒதுக்கி விடுவது’ என்பது பொருள்.

சுந்தரரின் தவறைச் சுட்டிக் காட்டினார் சிவன். இதன் பின்னர் பணிவுடன் “தில்லைவாழ் அந்தணர்க்கு அடியேன்; திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்” என்னும் பாடலைப் பாடினார் சுந்தரர். ’அடியேன்’ என்பது பணிவைக் காட்டும் அருமையான சொல். இதே போல ஒரு சம்பவம் சிவனடியாரான திருநாவுக்கரசர் வாழ்விலும் நடந்தது. வயதில் மூத்தவர் நாவுக்கரசர். எண்பது வயது அவருக்கு. பால்மணம் மாறாத பாலகர் ஞானசம்பந்தர். சம்பந்தர் பிறந்த ஊரையும் சேர்த்து “சிரபுரத்துச் சிறுவர்” என சொல்வர். இருவரும் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிரபுரத்துச் சிறுவர் “அப்பரே” என அழைத்தார். அப்பரின் கண்களுக்கு சம்பந்தர் சிறுவராகத் தெரியவில்லை. மூன்று வயதிலேயே ஞானப்பால் குடித்து தெய்வத் தமிழால் பாடிய ஞானக் குழந்தையாக தென் பட்டார். “என்னடா குழந்தை சவுக்கியமா?” என்று தானே கேட்போம்.  அவர் என்ன சொன்னார் தெரியுமா? ’அடியேன்’ என்றார். மனதில் உறுதி இருந்தால் மட்டுமே வாக்கில் பணிவு வரும். சிலர் கோயிலுக்கு இரண்டு டியூப் லைட்டை வாங்கி கொடுப்பர். அதில் தன் பெயரையும் எழுத சொல்லி விட்டு, “வர்ற வழியெல்லாம் ஒரே இருட்டா கிடந்தது. நான் தான் பக்தர்களுக்கு உதவியா இருக்குமேன்னு வாங்கி கொடுத்தேன்” என்று சொல்லிப் பெருமைபட்டுக் கொள்வதுண்டு.
நான் என்று மார்தட்டக் கூடியவன் கடவுள் ஒருவரே என்கிறார் அருணகிரிநாதர். அவரது திருப்புகழ் இதோ... கொஞ்சம் சத்தமாகப் பாடுங்கள். எல்லோரும் கேட்கட்டும்.

“நீலங்கொள் மேகத்தின் – மயில்மீதே
நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே
மால் கொண்ட பேதைக்குன் மணம் நாறும்
மார்தங்கு தாரை தந்தருள்வாயே
வேல் கொண்டு வேலைப் பண்டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே”

பதவி, பணம், புகழ் என்று எதில் உயர்ந்தாலும் பணிவுடன் இருப்பவனே உயர்ந்த மனிதன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar