Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன்
 
பக்தி கதைகள்
வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன்

கும்பகோணம் –  மன்னார்குடி  சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள தலம் வலங்கைமான். குடமுருட்டி ஆற்றின் தென் கரையிலுள்ள இத்தலத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. ’வலங்கைமான் அம்மன்’  ’சீதளாதேவி மாரியம்மன்’, ’பாடைகட்டி மாரியம்மன்’,’மகாமாரியம்மன்’ என்றெல்லாம் இவள் போற்றப்படுகிறாள். ’பாடைகட்டி’ செல்லும் நேர்த்திக் கடனை இங்கு செய்வது சிறப்பு. அதென்ன’பாடைகட்டி’? அமங்கலமாக இருக்கிறதே?

இதில் உயிரோடு இருக்கும் ஒருவரை பச்சை மூங்கில், தென்னங்கீற்றால் ஆன பாடையில் படுக்க வைத்து, கைகள், கால்களை பாடையுடன் இணைத்துக் கட்டுவர். துணியால் வாயைக் கட்டி, நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தை பொட்டு போல வைத்திடுவர். வாய்க்கரிசி இட்டு, தாரை தப்பட்டம் முழங்க அக்னி சட்டியை ஏந்தியபடி ஒருவர் முன் செல்ல, நான்கு பேர் பாடையைத் தோளில் சுமந்து செல்வர். உறவினர்கள் பின்தொடர்வர்.  நினைவில் கொள்ளுங்கள். பாடையில் படுத்திருப்பவர் உயிரோடு தான் இருக்கிறார்.

ஆனால் சவ ஊர்வலமாக புறப்படும் இவர்கள் மாரியம்மன் கோயிலை மூன்று முறை வலம் வந்து, அதன் பின் வாசலில் இறக்கி வைப்பர். பாடையில் இருப்பவர் மீது மஞ்சள் நீரை பூசாரி தெளிப்பார். படுத்திருந்தவர் எழுந்து விபூதி, குங்குமம் பெற்ற பின்னரே அம்மனை வழிபடச் செல்வர். இந்த வழிபாட்டுக்கு முன்னதாக கடந்த காலத்தில் நடந்தது என்ன... மருத்துவரால் கைவிடப்பட்டவர்கள், நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் வலங்கைமான் மாரியம்மனிடம்,’தாயே! என்னைக் குணப்படுத்தி உயிர் பிச்சை கொடு. குணமடைந்ததும் பாடைக்காவடி எடுத்து வழிபடுகிறேன்’ என்று கண்ணீர் மல்க வழிபடுவர்.  நோய் நீங்கியதும் வாக்களித்தபடி அம்மனுக்கு நன்றி தெரிவிப்பர். பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறன்று (மார்ச் 24) பாடைகட்டி திருவிழா நடக்கும். நோய் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறிய பக்தர்கள் அப்போது நேர்த்திக்கடன்  செலுத்துவர்.  அம்மன் மகிமை பற்றி ஊரார் சொல்வதைக் கேட்டால் மெய் சிலிர்க்கிறது. இவளின் இன்னொரு பெயர்’சீதளாதேவி மாரியம்மன்’. சீதளம்’ என்பதற்கு குளிர்ச்சி, சந்தனம், ஈரம், தாமரை என பல பொருள் உண்டு.

அம்மை, கொப்பளம், உஷ்ணக் கட்டிகளால் பாதிப்பு வராமல் காப்பவள் என்பதால்’சீதளாதேவி’ எனப்படுகிறாள். 200 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில் காதக்கவுண்டர் – கோவிந்தம்மாள் தம்பதி வாழ்ந்தனர். தின்பண்டம் விற்பது கோவிந்தம்மாளின் வேலை. ஒருமுறை அருகிலுள்ள புங்கஞ்சேரி  கிராமத்துக்கு சென்ற போது, மளமளவென தின்பண்டம் விற்றது. மனநிறைவுடன் அங்குள்ள அடைக்கலம் காத்த ஐயனாரை வழிபட்டு வலங்கைமான் புறப்பட தயாரானாள் கோவிந்தம்மாள்.  வரும் வழியில் அழுகுரல் கேட்கவே தேடிப் பார்த்தாள். ஒரு பெண் குழந்தை நின்றிருந்தது. களையான முகம்... துறுதுறுவென்ற கண்கள்...கைகளை நீட்டி கோவிந்தம்மாளை அழைப்பது போல் இருந்தது. குழந்தைப்பேறு இல்லாத கோவிந்தம்மாளும் அக்குழந்தைக்கு முத்தமிட்டு மகிழ்ந்தாள். கடவுள் அளித்த பாக்கியம் என  குழந்தையுடன் புறப்பட்டாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊரார் திரண்டனர். அதில் ஒருவர்,” குழந்தையை அழைத்துச் செல்லக் கூடாது” என தடுக்கவே, குழந்தையை ஒப்படைத்து விட்டு சோகத்துடன் திரும்பினாள்.

அக்குழந்தை அனைவரையும் காக்கும் அம்மனின் அம்சம் என்பதை யார் அறிவார்? இந்த செய்தியை உணர்த்த வேண்டும் என்பதற்காக அம்மன் திருவிளையாடலைத் துவக்கினாள்.  ஊரெங்கும் அம்மை நோய் பரவியது. கால்நடைகள்  இறந்தன. பஞ்சத்தால் நீர்நிலைகள் வற்றின.’ஊருக்கு ஏன் இப்படி ஒரு சோகம்? ஏதோ தெய்வக் குற்றம் நிகழ்ந்திருக்கிறது’ என மக்கள் அம்மனைச் சரணடைந்தனர். நாட்டாமைக்காரரின் கனவில், “இந்த ஊரில் வளர்ந்து வரும் பெண் குழந்தையை கோவிந்தம்மாளிடம் ஒப்படையுங்கள். அதன் பின் மக்கள் நோயிலிருந்து விடுபடுவர். நீர்நிலை பெருகும்.  கால்நடைகள் சுகம் பெறும்” என அருள்வாக்கு வழங்கினாள் அம்மன். கனவு குறித்து ஊராரிடம் தெரிவிக்கவே, குழந்தை கோவிந்தம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் கிராமத்தில் இயல்பு நிலை திரும்பியது. இதன்பின் புங்கஞ்சேரி மக்கள் ’சீதளாதேவி’ என பெயரிட்டு அம்மனை வழிபட்டனர். வலங்கைமான் கோவிந்தம்மாளின் பராமரிப்பில் வளர்ந்தது குழந்தை. ஏழு வயதான போது, தனது வாழ்வை முடித்துக் கொண்டது. கோவிந்தம்மாள் மனம் துடித்தாள். வீட்டுத் தோட்டத்தில் குழந்தையை அடக்கம் செய்து கீற்றுக் கொட்டகை வேய்ந்தாள். தினமும் விளக்கேற்றி தின்பண்டம் படைத்து வழிபட்டாள்.

தானே குழந்தை வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தியதை அவளின் கனவில் தெரிவித்ததோடு, அற்புதங்களை நிகழ்த்தி ஊராருக்கும் உணர்த்தினாள் அம்பிகை. இதன் பின் அந்த இடத்தில் கோயில் எழுப்ப, அதுவே  பாடைகட்டி மாரியம்மன் கோயிலாக இன்றும் திகழ்கிறது. அமர்ந்த கோலத்தில் சீதளாதேவி மாரியம்மன் இருக்கிறாள். வலது மேல் கையில் உடுக்கை, இடது மேல் கையில் சூலம், வலது கீழ் கையில் கத்தி, இடது கீழ் கையில் கபாலம் வைத்தபடி, இடது காலை மடித்தும், வலது காலை தொங்க விட்டும் வீரசிம்மாசனத்தில் இருக்கும் அம்மனின் அழகு காண்போரைக் கொள்ளை கொள்ளும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு நிவாரணம் பெறுகின்றனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar