Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருப்புறம்பயம் பிரளயம் காத்த விநாயகர்
 
பக்தி கதைகள்
திருப்புறம்பயம் பிரளயம் காத்த விநாயகர்

கோயில்களுக்கு புகழ் பெற்ற  கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் கோயில்களைத் தரிசிக்க வாழ்நாள் மட்டும் போதாது.
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது திருப்புறம்பயம். ஒரு காலத்தில் மன்னியாறு, கொள்ளிடம் நதிகள் பாய்ந்து ஊரை வளம் சேர்த்தது. ஆனால் இப்போது பெயரளவில் மட்டுமே உள்ளன.

ஊருக்கு நடுவில் கரும்படுசொல்லியம்மை சமேத சாட்சிநாதர் கோயில் உள்ளது. பல யுகங்களைக் கடந்த கோயில் இது!
புராணம், வரலாற்றில் அதிகமாக பேசப்படும் புண்ணிய பூமி திருப்புறம்பயம்.

சைவ அடியார்கள்  நால்வராலும் பாடல் பெற்ற தலம்.
இங்குள்ள முருகனை திருப்புகழில் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

மகத நாட்டு மன்னர் அரியத்துவஜன், விந்தியன் சாப விமோசனம் பெற்றது இத்தலத்தில் தான்.

துரோணர், விஸ்வாமித்திரர், சனகர், சனாதனர், சனத்குமாரர், சனந்தனர் ஆகிய முனிவர்கள் பூஜித்த கோயில் இது.
கோயிலுக்கு வெளியே தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. குழந்தை முருகனை இடுப்பில் தாங்கிய ’குகாம்பிகை’ சன்னதி சிறப்பு மிக்கது.

திருவிளையாடற் புராணத்தில் வரும் 64ம் விளையாடல் இங்கு நிகழ்ந்ததால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுடன் தொடர்பு கொண்டது.  

திருஞானசம்பந்தரின் முன்னிலையில் திருப்புறம்பயத்தில் நடந்த திருமணம் ஒன்றிற்கு கோயிலிலுள்ள கிணறு, வன்னிமரம், சிவலிங்கம் சாட்சியாக இருந்தன. பின்னர் இது குறித்து வழக்கு ஏற்பட்ட போது  சம்பந்தரின் அருளால் மூன்றும் மதுரைக்கு வந்து சாட்சியளித்தன.  

அதனால் இங்குள்ள சிவனுக்கு ’சாட்சி நாதர்’ என்பது பெயர். இன்றும் சாட்சி சொன்ன சிவலிங்கம், கிணறு, வன்னிமரத்தை மதுரையில் தரிசிக்கலாம்.  

இதை அனைத்தையும் விட இங்கு தரிசிப்போரின் மனதை கொள்ளை கொண்டவர் ஒருவர் இருக்கிறார்? அவர்  பிரளயம் காத்த விநாயகர்! சங்கு, நத்தை ஓடு, கிளிஞ்சல், கடல்நுரையால் ஆன இவர் வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.  விநாயகர் சதுர்த்தியன்று இரவில் இவருக்கு நடக்கும் தேன் அபிஷேகம் எங்கும் இல்லாத அதிசயம்.

தலபுராணம் சொல்லும் வரலாற்றை சற்று பார்ப்போம்.
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும். முதல் யுகமான கிருத யுகத்தின் முடிவில் பிரளயம் ஏற்பட்டதால் நீர்நிலைகள் பெருகின. சூறாவளி எங்கும் வீசியது.  ’உலகமே உருத்தெரியாமல் போகுமோ’ என்ற நிலை வந்தது.  

”அழிவில் இருந்து காத்தருள வேண்டும் மகாதேவா” என்று அனைவரும் சிவனை வேண்டினர். உயிர்களைக் காக்கும் பொறுப்பைத் தன் மூத்தமகன் விநாயகரிடம் ஒப்படைத்தார் சிவன்.  

தந்தையின் கட்டளையை ஏற்று புன்னைமரங்கள் சூழ்ந்த இத்தலத்திற்கு வந்தார் விநாயகர். ஓம்கார மந்திரத்தை ஜபித்த விநாயகர்,  கிணறு ஒன்றை உண்டாக்கி ஏழு கடல்களையும் அதற்குள் அடக்கினார்.  பேரழிவில் இருந்து காத்த விநாயகரின் திருவடியை அனைவரும் சரணடைந்தனர்.

கடல்கள் புகுந்த கிணறு ’சப்த சாகர கூவம்’ என்ற பெயரில் உள்ளது. ’சப்த’ என்றால் ஏழு; ’சாகரம்’ என்றால் கடல்; கூவம் என்றால் கிணறு. கோயிலின் குளத்துக்கு அருகில் கிணறு உள்ளது. பிரளயத்தின் போது எழுந்த வெள்ளம் சூழாமல் ஊருக்கு புறம்பாக (வெளியில்) நின்றதால் ’திருப்புறம்பயம்’ என்ற ஊருக்கு பெயர் வந்தது.   

வருணன் இங்கு வந்து விநாயகரை வழிபட்டான்.  கடலில் விளையும் பொருட்களான சங்கு, நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரையால் ஆன விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தான் வருணன். யுகங்கள் பல கடந்த பின்னும் இச்சிலை இருப்பது சிறப்பு.  

ஆண்டுக்கு ஒரு முறை விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு தேன் அபிஷேகம் நடக்கும். வெளியூர் பக்தர்கள் திரளாக இதில் பங்கேற்பர்.  இரவு முழுவதும் கும்பகோணத்தில் இருந்து பேருந்துகள் இயங்கும்.

திருப்புறம்பயத்தில் முதலில் குடிகொண்டவர் பிரளயம் காத்த விநாயகரே! இதன் பின்னரே சாட்சிநாதரான சிவனும்,   கரும்படுசொல்லியம்மை என்னும் பார்வதிக்கும் சன்னதி உருவானது.

பிரளயம் காத்த விநாயகர் என்ற புராணப்பெயரை விட,  ’தேனபிஷேகப் பிள்ளையார்’ என்பதே பிரசித்தமாகி விட்டது. விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே!

அபிஷேகத் தேனை சுவாமி மீது ஊற்றுவதில்லை. ஒரு துணியில் தேனை நனைத்து எடுத்து, அதை விநாயகர் மீது ஒற்றி எடுப்பர்.  மொத்த தேனையும் இப்படியே அபிஷேகம் செய்வர்.

இனிப்பு இருக்குமிடம் தேடி எறும்புகள் வருவது இயல்பு. ஆனால் இங்கு கருவறை முழுக்கத் தேன் துளிகள் சிதறிக் கிடந்தாலும் எறும்பு வருவதில்லை.

இரவு 7:00 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் அதிகாலை 5:00 மணிக்கு முடியும்.  

பிரச்னைகளில் இருந்து விடுபட பிரளயம் காத்த விநாயகரை சரணடைவோம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar