Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பிறரின் துயரை தீர்த்து வை
 
பக்தி கதைகள்
பிறரின் துயரை தீர்த்து வை

குடிசையில் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் சாப்பாடு இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. சத்துணவு திட்டம் தொடங்கிய காலத்தில் குழந்தைகளிடம், “பள்ளிக்கூடத்திற்கு எதுக்கு போறீங்க?” எனக் கேட்டால் ’மதியம் சோறு போடுறாங்க” என்பார்கள்.

அறிவுப்பசியை உண்டாக்குவதற்கு முதலில் வயிற்றுப்பசியை போக்க வேண்டும். இன்று நம் பசியைப் போக்க அண்டை மாநிலங்களில் கையேந்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். ’வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்று நாட்டுப்பற்றுடன் கனவு கண்டான் பாரதி.

நம்மிடையே எத்தனையோ விவேகானந்தர்கள் இருக்கிறார்கள்? படித்த இளைஞர்கள், பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள் இதற்கு தீர்வு காண முயற்சிக்கலாமே? நர்மதை, துங்கபத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை என  நதிகளை இணைத்தால் நாடு வளமாகுமே. நல்லதை சிந்திப்போம்; மற்றவர்களையும் சிந்திக்க வைப்போம்.
நாடு வளம் பெற்றால் மக்கள் ஏன் துன்பப்படப் போகிறார்கள்?  
பொதுநலனில் ஈடுபடுவதற்கு பட்டம், பதவி, பணம் எல்லாம் இருக்க வேண்டும் என்பதில்லை. பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் மட்டுமே தேவை.

உதாரணமாக இந்த நிகழ்வை பாருங்கள்.  

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் முத்து சுவாமி தீட்சிதர். இவருடைய பாடல்களை ’தீட்சிதர் கீர்த்தனைகள்’ என்பார்கள். ஒருநாள் திருத்தணி முருகனை தரிசித்த தீட்சிதருக்கு, மலைப்பாதையில் முருகப்பெருமானே முதியவர் வடிவில் காட்சியளித்து கற்கண்டு கொடுத்தார். அதன்பின் மடை திறந்த வெள்ளமாக பாடும் சக்தி பெற்றார்.  இறையருள் பெற்ற இவரது பாடல்கள் மந்திரசக்தி பெற்றிருந்தன.

ஒருமுறை தீட்சிதரின் சீடரான தம்பித்துரை வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இந்நிலையில் அந்தணர் ஒருவர், ’தம்பித்துரை உனது ஜாதகத்தில் குரு, சனி கிரகங்கள் பலமாக இல்லை;  நவக்கிரக ேஹாமம் நடத்தினால் பிரச்னை தீரும்” என்றார்.  குருநாதரின்  உதவியை நாடினார்.

குரு, சனியின் பலம் குறைவாக இருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதைச் சொல்லி வருந்தினார்.
சமாதானப்படுத்திய தீட்சிதர், “குரு, சனியை வழிபடும் விதத்தில் இப்போதே பாடல் எழுதி தருகிறேன்” என சொன்னதோடு அதைப் பாடவும் கற்றுக் கொடுத்தார்.

வயிற்றுவலி ஒருவாரத்திற்குள் தீர்ந்தது. குருநாதரை சந்திக்க வந்தார் தம்பித்துரை.

“வயிற்றுவலி என்னாச்சு?” எனக் கேட்டார் தீட்சிதர்

“குணமாகி விட்டேன். இன்னொரு உதவியும் செய்ய வேண்டும். ஒன்பது நவக்கிரகங்களுக்கும் பாடல் இயற்றுங்கள்!
அப்பாடல்களால் நாடே நலம் பெறும்” என்றார்.

நல்லவர்களின் வாக்கு பொய்ப்பதில்லை.

’நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!’ என சீடனின் ஆலோசனையை ஏற்றார் தீட்சிதர்.

நவக்கிரகங்கள் மீது பாடல் இயற்றி,  சீடர்களுக்கு கற்று கொடுத்தார். இன்றளவும் கிரக தோஷம் போக்கும் அருமருந்தாக அவை உள்ளன.

ஒருசமயம் எட்டைய புரத்திற்கு சென்றிருந்தார் தீட்சிதர். மழை பெய்யாததால் மரங்கள் பட்டுப் போயிருந்தன. குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவியது. மக்கள் துன்பமின்றி வாழ வேண்டும் என அமிர்தேஸ்வரியை தியானித்தார். அமிர்தவர்ஷினி ராகத்தில் ’ஆனந்தாமி கர்ஷிணி....’ என்ற பாடலைப் பாட மழை பொழிந்தது. குளம்,

ஏரிகள் நிரம்பின. மழை தொடரவே,  அச்சத்தில் மக்கள் மழையை நிறுத்துமாறு வேண்டினர். தீட்சிதர் மீண்டும் பாடியதும் மழை நின்றது.  

மற்றவர் துன்பப்படும் போது ’எனக்கு என்னாச்சு’ என இருப்பது தர்மம் ஆகாது. உதவியைச் செய்ய முயற்சிப்பதே மனிதத்தன்மை. நல்லதைச் செய்ய நினைப்பதே தர்மம் என்பதால் தான் ’அறம் செய விரும்பு’ என்றாள் அவ்வைப்பாட்டி.
இதையும் விட தான் துன்பப்பட்டாலும் மற்றவர்கள் நலமாக வாழ வேண்டும் என நினைப்பது தெய்வத்தன்மை. அதை உணர்த்தும் ஒரு சம்பவம் பாருங்கள்.

பஜனை மடம் வைத்திருந்தார் செல்வந்தர் ஒருவர். தர்ம சிந்தனையுள்ள அவர்,

தனக்கு வாரிசு இல்லாததால் சொத்தை அனாதை இல்லத்திற்கு எழுதினார்.

அவரது பஜனை மடத்தில் நடராஜர் சிலை ஒன்றிருந்தது. அதன் உச்சி முதல் பாதம் வரை வைர நகைகள் அணிவித்து அழகு
பார்த்தார். தினமும் பஜனை முடிந்ததும், மடத்தில் அன்னதானம் நடக்கும். அதில் பங்கேற்ற ஒருவனுக்கு நகைகளை கொள்ளையடிக்கும் எண்ணம் வந்தது. இரவோடு இரவாக சிலையைத் திருடினான். திருடு போன விஷயம் தெரிந்து அனைவரும் கூடினர். அந்த பக்தர் மட்டும் சிரித்து மகிழ்ந்தார்.    

“ஐயா! ஏன் சிரிக்கிறீர்கள்?” எனக் கேட்டபோது, “எல்லா ஆசைகளையும் துறந்த விட்ட எனக்கு, கடவுள் மீதுள்ள ஆசை இன்னும் போகவில்லையே! சொத்தை எல்லாம் அனாதை இல்லத்திற்கு எழுதினேனே! ஆனால், இந்த நடராஜரை மட்டும் என்னுடையவராக கருதி விட்டேன். ஆனால், அவரோ ஏழை ஒருவரின் வீட்டில் இருக்க முடிவு செய்து விட்டார் போலும்.
நீங்கள் எல்லாம் பதட்டமுடன் ஏன் நிற்கிறீர்கள்? அவரவர் கடமையை போய் கவனிக்க தொடங்குங்கள்” என்றார்.

இவரைப் போல, துன்பத்திலும் மற்றவர் மீது இரக்கம் தோன்றுமா நம்மிடம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar