Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஜனாபாய்
 
பக்தி கதைகள்
ஜனாபாய்

அன்று கார்த்திகை மாதம் ஏகாதசி நன்னாள். பண்டரிபுரம் பாண்டுரங்கன் சன்னதியில் ஜனாபாய் என்னும் சிறுமி இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பாண்டுரங்கனை தரிசித்த பக்தர்கள் மெய் மறந்து கேட்டனர்.

பாடி முடித்ததும், பெற்றோர் ’ஊருக்கு புறப்படலாம் வா’ என மகளை அழைத்தனர்.

“உங்களுடன் வர மாட்டேன்;

இனி பாண்டுரங்கனே என் பெற்றோர்” என்றாள் அவள்.  

’சாதாரண குழந்தை அல்ல; இவள் தெய்வக் குழந்தை’ என்ற முடிவுக்கு வந்தவர்களாக, ஜனாபாயை கோயிலில் விட்டு விட்டு பெற்றோர் புறப்பட்டனர். அப்போது ’நாமதேவர்’ என்னும் மகான் தரிசனத்திற்காக வந்தார்.  ’அபங்’ என்னும் பாடல்கள் பாடி பாண்டுரங்கனை நேரில் தரிசித்தவர் அவர். ஜனாபாயின் பக்தியைக் கண்ட அவர், தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
பெற்றோருடன் செல்ல விரும்பாத அவள், நாமதேவரை பின்தொடர்ந்தாள். தனது தாயார் குனாயி அம்மாளிடம்  நடந்ததை எல்லாம் நாமதேவர் தெரிவித்தார். ஞானதிருஷ்டி மூலம் ஜனாபாயின் முற்பிறவிகளும் அவரது மனக்கண்ணில் தெரிந்தன. ராமாவதாரத்தின் போது கூனியாக பிறந்ததும், பின்னர் கிருஷ்ணாவதார காலத்தில் சந்தனம் அரைக்கும் பணிப்பெண்ணாக வாழ்ந்ததும் இவள் தான் என்பது தெரிந்தது.   

குனாயி அம்மாளுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்தாள் ஜனாபாய். காலம் உருண்டோடியது. சிறுமியாக இருந்தவள் குமரியாக வளர்ந்தாள்.

நாமதேவர் உபன்யாசம் செய்யும் நேரத்தில், ஜனாபாய் உடனிருந்து பாடி வந்தாள்.

ஒருநாள் புயல் காற்றுடன் மழை பெய்தது. அதில் நாமதேவரின் வீட்டு மண்சுவர் சரிந்தது.

உடனே பாண்டுரங்கனே பக்தனுக்கு உதவ முன்வந்தார். நொடிப் பொழுதில் மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பினார். சுவாமியின் பட்டாடையில் மண் ஒட்டியதைக் கண்ட ஜனாபாய், பழைய ஆடை ஒன்றைக் கொடுத்து உடுத்தச் செய்தாள். அவரது பட்டாடையைத் துவைத்து உலர்த்தினாள்.

“பட்டாடை உலரும் வரை சிறிது நேரம் தூங்கலாமா?” என்று குழந்தை போலக் கேட்டார் பாண்டுரங்கன்.  

ஜனாபாயும் வீட்டில் இருந்த கந்தல் துணிகளை எல்லாம்  மெத்தை போல அடுக்கினாள். அதில் சற்று நேரம் உறங்கினார். கண்விழித்த பாண்டுரங்கன், “பசிக்கிறதே..” என்று சொல்லக் கூட ஜனாபாய் அனுமதிக்கவில்லை.

அவர் உறங்கும் நேரத்திற்குள் உணவைத் தயாரித்தாள்.
நாமதேவரும், பாண்டுரங்கரும் இலையில் அமர உணவு பரிமாறினாள் ஜனாபாய்.

கவளம், கவளமாக உணவை எடுத்து நாமதேவர் ஊட்ட, பாண்டுரங்கனும் சாப்பிட்டார். அந்த பாக்கியம் தனக்கு கிட்டவில்லையே என மனதிற்குள் ஏங்கினாள் ஜனாபாய்.   
சாப்பிட்டு எழுந்தும் இருவரும் கைகழுவ வெந்நீர் கொடுத்தாள்.
மீண்டும் அடுப்படியில் நுழைந்த பாண்டுரங்கன், “அம்மா! உங்கள் கையால்  ஒரு கவளம் உணவு  ஊட்டுவீர்களா?” எனக் கேட்டார். ஆனந்தக்கண்ணீருடன் ஊட்டினாள் ஜனாபாய்.
பிறகு ’பாடலாமே’ என்றார்.

பாண்டுரங்கரின் பெருமைகளைப் பாடினாள். மெய்மறந்த பாண்டுரங்கன் ’சபாஷ்’ என பாராட்டினார்.

பிறகு ஜனாபாய் உரலில் மாவு அரைக்கப் போனாள்; அவளுக்கு ஒத்தாசையாக நின்றார் பாண்டுரங்கர்.

அன்றைய வேலைகள் எல்லாம் முடிந்ததும் பாண்டுரங்கர் அங்கிருந்து மறைந்தார். ஜனாபாய் கண்ணீருடன் நின்றாள்.  
மறுநாள் கோயிலுக்கு வந்த அர்ச்சகர்கள் சுவாமியின் திருமேனியைக் கண்டு அலறினர். ஆபரணம் ஏதுமின்றி கந்தல் ஆடையுடன் எளிமையாக நின்றார் பாண்டுரங்கர். சுவாமி உடுத்தியிருந்த கந்தல்ஆடை ஜனாபாய்க்கு சொந்தமானது என அவர்களுக்கு தெரிய வந்தது.    

நாமதேவரின் வீட்டுக்கு விரைந்த அர்ச்சகர்கள் கொடியில் பட்டாடை கிடப்பதைக் கண்டனர். சுவாமியின் ஆபரணங்களும் படுக்கையில் தலைமாட்டில் இருந்தன.

“பக்தை என்னும் போர்வையில் கோயிலுக்கு வருவது எல்லாம் பொருட்களைத் திருடத்தானா?” என்று ஜனாபாயைக் கட்டி இழுத்துச் சென்றனர்.  

“நான் திருடவில்லை; ஒருவேளை அப்படி நீங்கள் நினைத்தால் தண்டியுங்கள்”  என்றாள்.  

வழக்கை விசாரித்த மன்னர், கோயிலில் திருடிய குற்றத்திற்காக ஜனாபாயைக் கழுமரத்தில் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார்.
கழுமரம் கூட பாண்டுரங்கனாகவே அவளின் கண்ணுக்குத் தெரிந்தது.  கைகூப்பியபடி,  “விட்டல விட்டல.. ஜெய் ஜெய் விட்டல..” என பாடினாள். கழுமரம் தீப்பற்றி சாம்பலானது.   
காட்சியளித்த பாண்டுரங்கன், “ ஜனாபாய்! உன் பக்தியை உலகறியச் செய்யவே இந்த விளையாடலை நிகழ்த்தினோம்”  என்றார்.

பின்னர் வாழ்நாள் எல்லாம் நாமதேவரும், ஜனாபாயும் பக்திப்பாடல் பாடி மகிழ்ந்தனர். இவர்களின் பாடல்களை இன்றும் பாண்டுரங்கனின் சன்னதியில் பக்தர்கள் பாடுகின்றனர். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar