Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மகா மருத்துவச்சி மீனாட்சி
 
பக்தி கதைகள்
மகா மருத்துவச்சி மீனாட்சி

பிறந்ததில் இருந்தே தாய் இல்லாமல் பழகி விட்டால் அது ஒரு மாதிரி.  தாயில்லாமல் பல காலம் தவித்து, பிறகு தாய் வந்து, தாய்மை சுகத்திற்குப் பழகிய பின் அவள் மறைந்தால்... அதை விடக் கொடிய நரகம் வேறு இல்லை.  அந்த நரகத்தில் தான், நான் உழன்றேன். லாபம், நஷ்டம், வருமானம், வரி முதலீடு என்று போய்க் கொண்டிருந்த என் வாழ்வை அன்பு, பக்தி, எழுத்து என புரட்டிப் போட்டாள் பச்சைப்புடவைக்காரி. வேண்டும் போதெல்லாம் காட்சி தந்து, கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் தந்து, பிரச்னைகளை நுட்பமாகப் பார்க்க வைத்து... பெற்ற தாயினும் சாலப் பரிந்து என்னை வழி நடத்திச் சென்றவள் திடீரென ஒரு நாள்  ’பிறகு பார்க்கலாம்’ என்று சொல்லி விட்டுப் போனாள்.

என்ன செய்வேன்! அவள் கோயிலுக்குச் செல்வது கூடக் கணிசமாகக் குறைந்தது. மீண்டும் அவள் வருவாளா, இந்தப் பாவியுடன் பேசுவாளா என்ற ஏக்கம் என்னை வதைத்தது. நான் தினமும்  நடைப்பயிற்சி செய்யும் போது மதுரையின் வடபகுதியில் உள்ள பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைக் கடந்து செல்வது வழக்கம். அன்று அந்த மருத்துவமனைக் கட்டடத்தைப் பார்த்ததும் மனதில் ஒரு எண்ணம்.  இங்கு எத்தனை பேர் வலியால் துடித்துக் கொண்டிருப்பார்கள்! தீவிர சிகிச்சைப் பிரிவில் எத்தனை பேர் உயிருக்குப் போராடுவார்கள்! வெளியே நிற்கும் அவர்களின் உறவினர்கள் எப்படி வேதனையில் துடிப்பார்கள்! நான் இங்கே வெளியே ஒரு நல்ல நாளின் சுகமான காலைப் பொழுதை அனுபவிக்கும் போது உள்ளே எத்தனை பேர் இரவா, பகலா எனத் தெரியாமல்  மரணத்தின் நிழலில் வாடுகிறார்கள்!

அம்மா! பச்சைப்புடவைக்காரி! அவர்களுக்கு உடல் நலம், மன அமைதியைக் கொடுங்களேன் எனக்காக... உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்.. . மருத்துவமனையின் பிரதான வாயிலைக் கடந்த போது, வெள்ளையுடை அணிந்த ஒரு நர்ஸ் ஓடி வந்து என் கையைப்  பிடித்தாள். “உங்களை சீஃப் டாக்டர் கூப்பிடறாரு... வாங்க.”

“நீங்க தப்பா... நீங்க நெனைக்கற ஆளு... நான் இல்ல...”
என் பெயர், தொழில், முகவரி, அலைபேசி எண் போன்ற விபரங்களைப்  படபட எனச் சொன்னாள்.
“இது போதுமா, இல்ல உங்க ஆதார் எண் சொல்லட்டுமா? இல்ல உங்க ஜாதகத்துல இருக்கற கட்டங்களை காட்டட்டுமா?”
நடுங்கி விட்டேன்.
தரதர என்று இழுக்காத குறையாக அழைத்துச் சென்றாள்.  முதலில் தென்பட்ட லிஃப்டில் ஏறினோம். அதில் எங்களைத் தவிர யாரும் இல்லை.
“என்னப்பா அதற்குள் என்னை மறந்து விட்டாயே!”
“தாயே! நீங்களா?”

அன்னையின் காலில் விழுந்து வணங்கினேன். அவளைப் பார்க்காத வரை பிரிவாற்றாமையால் அழுகை வந்தது. பார்த்ததும் அன்பின் மிகுதியால் உடைந்து போய் அழுதேன். என்னை வேடிக்கை பார்த்தாள் உமையவள். “என்னப்பா... ஆறு மாதம் உன்னோடு பேசவில்லை என்ற கோபமா?” இல்லை அம்மா. இப்போதாவது  இந்த அடிமை நாயைத் தேடி வந்தீர்களே என்ற ஆனந்தம் தாங்காமல் அழுதேன்.” “இந்த மருத்துவமனையில் இருப்பவர்கள் துன்பத்தைத் தீர்க்கவேண்டும் என பிரார்த்தனை செய்தாய் அல்லவா? அது எவ்வளவு அபத்தமானது என காட்டவே வந்தேன்.” மூன்றாவது மாடியில் லிஃப்ட் நின்றது. என்னை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். தீவிர சிகிச்சைப் பிரிவு. வெளியே இருந்த இருக்கைகளில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த போது எங்களை  யாரும் தடுக்கவில்லை. ஓரமாக இருந்த ஒரு படுக்கைக்கு அருகில் அழைத்துச் சென்றாள் பச்சைப்புடவைக்காரி.  எட்டிப் பார்த்தேன். ஐம்பது வயதுக்காரர்  ஒருவர் வலி தாளாமல் முனகிக் கொண்டிருந்தார். நாற்றம் தாளமுடியவில்லை.

அன்னை மென்மையான குரலில் விளக்கினாள். “இவனுக்குச் சிறுநீரகத்தில் புற்று நோய். அது போக சர்க்கரை நோய். இரண்டு கால்களையும் அறுவை சிகிச்சையில் எடுத்து விட்டனர். இவனது மனைவி, பிள்ளைகள் எப்போதோ விலகிச் சென்று விட்டனர். ஆனால் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது.” “தாயே இவரது வேதனையைப் பார்க்கச் சகிக்கவில்லை. பேசாமல் உயிரை எடுத்துவிடுங்கள். அப்போது தான் வேதனை தீரும்”“இவன் கர்மக்கணக்கை வைத்துப் பார்த்தால் இன்னும் பத்து ஆண்டுகள் வேதனைப்பட்ட  பிறகே சாக வேண்டும்.” “ என்ன கொடுமை, தாயே!” “இவன் என்ன செய்தான் என்று கேள்.  இவனும், இவனது தம்பியும் சேர்ந்து ஒரு கடை வைத்தனர். இவனுக்கும் இவன் தம்பிக்கும் சொந்தமான பூர்வீக வீட்டை விற்றே முதலீடு செய்தனர். வியாபாரம் நன்றாக நடந்தது. தம்பி இரவு, பகல் பார்க்காமல் உழைத்தான். வருமான வரி பிரச்னை என்று காரணம் சொல்லித் தொழில், சொத்துக்களைத் தன் பெயரில் மாற்றிக் கொண்டான் இவன். திடீரென ஒரு நாள், ’எல்லாம் என்னுடையது. நீ வெளியே போ’ என்று தம்பியைத் துரத்தினான். போக்கிடம் இல்லாமல் தம்பி தற்கொலை செய்து கொண்டான்.  இவனைத் தன் தந்தையாக, தெய்வமாக நினைத்த தம்பிக்கு இவன் செய்த  துரோகம் தான், பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது”

’சே! இவன் துன்பத்தையா குறைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன்! நன்றாகப் படட்டும்.’
“வா அந்த படுக்கையில் இருப்பவளைப் பார்ப்போம்.”
அங்கு நாற்பது வயதில் ஒரு பெண் படுத்திருந்தாள். வலி தாளாமல் அரற்றினாள். அருகில் கவலையே உருவாக கணவன் நின்றான்.  
தன் கையை வாயில் வைத்து ’சத்தம் செய்யாதே’ என சாடை காட்டியபடி வெளியே அழைத்துக் கொண்டு போனாள்  பச்சைப்புடவைக்காரி.
“இவள் கணவன் கந்துவட்டிக்காரன். இவன் செய்யாத கொடுமை இல்லை. ஒரு முறை இவனிடம் கடன் வாங்கிய ஒருவன் திருப்பித் தராததால் அவனது மனைவியை எட்டி உதைத்தான். கர்ப்பிணியாக இருந்த அவளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. இப்போது இவனது மனைவிக்குக் கருப்பையில் புற்று நோய்.
கருப்பையை எடுத்து விட்டனர். என்றாலும் நோய் பரவிவிட்டது. இவள் இன்னும் இரண்டு ஆண்டுகள் வலியால் துடித்தே சாவாள். அவள் படும் வேதனையால் அவள் கணவன் திருந்துவான்  என நம்புகிறேன்.”

“தாயே... கணவன் செய்த தவறுக்கு மனைவி ஏன் துன்பப்பட வேண்டும்?”
“கர்மக் கணக்கு கொஞ்சம் சிக்கலானது. ஒன்றும் ஒன்றும் இரண்டு என நீ போடும் வருமானவரிக் கணக்கு இல்லை. அதைப் பிறகு விளக்குகிறேன்.”
மருத்துவமனையை விட்டு வெளியே வந்தோம்.
“இனி மேல் அடுத்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யக் கூடாது எனத் தோன்றுகிறதோ?”
“ஆம் தாயே!

“தப்பு.  மகாத் தப்பு.  நீ இவர்கள் செய்தது தீமை என்று பார்க்கிறாய். நான் அதையும் நோயாக பார்க்கிறேன். என் பார்வையில் சர்க்கரை நோய் மட்டும் நோயல்ல. தம்பிக்கு துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கொடிய நோய் தான். கருப்பைப் புற்று மட்டும் நோயல்ல; கர்ப்பிணியின் வயிற்றில் உதைக்க வேண்டும் என்ற எண்ணமும் ஒரு நோய் தான்.”

“குழப்புகிறீர்களே...தாயே! நான் இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யலாமா கூடாதா?  தெளிவாகச் சொல்லுங்கள்.”

“பிரார்த்தனை செய். இவர்கள் வலி குறைய வேண்டும் என வேண்டாதே! இவர்கள் மனதில் அன்பு நிறையட்டும் என வேண்டிக் கொள். உன் பிரார்த்தனை பலித்தால்...அது நிச்சயம் பலிக்கும். தம்பிக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இனி வராது. செய்த பாவத்திற்கு அனுபவிக்கும் துன்பத்தையும் நான் கணிசமாகக் குறைப்பேன். அடுத்த பிறவியில் நல்லவனாக வாழ்வான்.”

“பிரார்த்தனை வரிகளையும் நீங்களே சொன்னால்....”
“சரியான சோம்பேறியப்பா...சரி சொல்கிறேன் கேள்.
“அல்லல் படுவோர் மனங்கள் எல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்
அதனால் அவர்கள் அனுபவிக்கும் வலியும், நோயும் குறையட்டும் அடுத்தவருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் எல்லாம் மறையட்டும்
மனிதர் மேல் இவர்கள் கொள்ளும் அன்பு நாளும் வளரட்டும்
“அவர்கள் மனதில் நீங்கள் இருந்தால் போதும் தாயே! வேறு எதுவும் வேண்டாமே!  ஏன் அன்பு, அது, இது எனச் சுற்றி வளைக்கிறீர்கள்?”
“நான் என்றால் என்ன, அன்பு என்றால் என்ன?” “தாயே நீங்கள் எங்கள் உடல் நோயைத் தீர்க்கும் சாதாரண மருத்துவச்சி இல்லை.
பிறவி நோய் தீர்க்கும் மகா மருத்துவச்சி.” அன்னையின் காலில் விழுந்தேன். நிமிர்ந்து பார்த்தால் அவள் அங்கு இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar