Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வரதா வரம்தா.....
 
பக்தி கதைகள்
வரதா வரம்தா.....

இந்திரன், பிரம்மனால் வரதராஜப் பெருமாளும் அத்திகிரியும் உருவான நிலையில், எம்பெருமானின் அருளாட்சியில் அத்திகிரி பெரும் சாம்ராஜ்யமாக மாறியது. இதனால் வைணவம் தழைத்தது போலவே, சைவம், சாக்தம்  இங்கே தழைத்தன!

சைவ சாக்த தழைப்பால் தான் அத்திகிரி, ‘காஞ்சி“ என்றும் ஆனது. காரணம் இன்றி காரியம் இல்லை என்ற பொன்மொழி உண்டு. காஞ்சி எனப்படும் காஞ்சிபுரம் உருவாகவும் காரணம் வேண்டும் அல்லவா?

அத்திகிரி என்பது மலை உள்ள இடத்தோடு முடிந்து விடுகிறது. அத்திகிரி இருக்கும் தலம் எப்படி தொண்டை மண்டலம் என்றானது? எப்படி காஞ்சிபுரம் என்றும் ஆனது என்பதைக் காண்போம்.

அத்தி வரதனின் அருளாட்சியால் இவை எல்லாம் நிகழப்பெற்றன. கைலாயத்தில் ஒரு சமயம் சிவனின் கண்களைத் கைகளால் பார்வதி மூடினாள். அப்படி மூடி மறைத்தது ஒரு முகூர்த்த காலம் ஆகும். இந்த காலத்தில் பூவுலகில் ஒரு பிரளயம் உருவாகி, பகலிலேயே இரவு உருவாகி தடுமாற்றம் ஏற்பட்டது. இயற்கைக்கும், இயல்புக்கும் மாறுபட்ட இந்த சம்பவத்தால் விலங்கினங்கள் கூக்குரல் இட்டன. மனிதர்கள் சிலர் பைத்தியங்களாகினர்.  தாவரங்களிடமும் தடுமாற்றம்!

சுருக்கமாகச் சொன்னால் மண்ணுலகே அழிவைக் கண்டு நடுங்கியது. சிவனின் சரிபாதியாக இருக்கும் பார்வதியின் மேனி கருத்து உருமாறினாள். அதை உணர்ந்து கண்கட்டை விடுவித்தவள், எதனால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்றும் கேட்டாள்.

சிவனும், “என் பார்வை மறைந்ததால் எங்கும் இருள் சூழ்ந்தது. உன் செயலால் பூவுலகிலும் தடுமாற்றங்கள்... அதனால் ஏற்பட்ட பாவத்திற்கு நீயே காரணமாகி விட்டாய்“ என்றான்.  வருந்திய பார்வதி, “இப்பாவம் தீர செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?“ எனக் கேட்டாள்.

“கவலைப்படாதே... நீ செய்யும் பரிகாரத்தால் புனித தலமான அத்திகிரி அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை காணப் போகிறது. அத்தலம் நகரமாகி  மண்ணுலகின் சிறந்ததாக விளங்கப் போகிறது“ என்றார் சிவன். அதற்காக பார்வதியை ஒரு குழந்தையாக்கி, பத்ராசிரமத்தில் குழந்தைப்பேறுக்காக தவம் செய்த கார்த்யாயன முனிவரிடம் சேர்ப்பித்தார். இந்தக் குழந்தையும் கருப்பாகவே இருந்தது.

முனிவரிடம் எட்டு ஆண்டுகள் வளர்ந்த பார்வதி, பின் ஒரு நாளில் பெரும் சக்தியோடு யோக தண்டம், ஜபமாலை, தீபஸ்தம்பம், இரண்டு குடம், விசிறி, சாமரம், ஏடுகள், வறுத்த பயறு வகைகள் இவற்றுடன் கங்கை ஆற்று மணல், தீர்த்தம், குடை ஆகியவற்றை பெற்று காசிக்குப் புறப்பட்டாள்.

அங்கு சென்ற வேளையில் எங்கும் வறட்சி. மக்கள் உணவின்றி மடிந்தனர். காசியை ஆண்ட மன்னனும் வருத்தத்தில் இருந்தான். மேற்கண்ட பொருட்களுடன் வந்த பார்வதி மழை பெய்யச் செய்து மக்களுக்கு அன்னம் கிடைக்கச் செய்து ‘அன்னபூரணி“  எனப்பட்டாள். காசிராஜனும் மகிழ்ந்தான்.

பன்னிரண்டு ஆண்டுகள் காசியில் அன்னபூரணியாக இருந்தாள் பார்வதி. சிவனின் வழிகாட்டுதலால் அங்கிருந்து அத்திகிரி நோக்கிப் புறப்பட்டாள். அத்திகிரியை அவள் அடையவும் அவளிடம் இருந்த கங்கை மணல் சிவலிங்கமாக மாறியது. ஏனைய பொருட்கள் ஒவ்வொன்றும் அதே போல மாறின! இதில் விசிறி கிளியாகவும், ஏடுகள் காமதேனுவாகவும், குடம் தீபமாகவும் மாறின. வறுத்த பயிறு முளை விட்டது. கங்கை நீர் பாலாக மாறியது!

இப்படி மாற்றங்களை ஏற்படுத்திய அத்திகிரியில் ஊசி மீது நின்று தவம் புரிய பணித்தான் சிவன். பார்வதியும் தவக்கோலம் கொண்டாள். அப்போது கிளியைக் கையில் ஏந்திக் கொண்டாள். தன் கருமை நிறம் நீங்கி அவள் மேனி பொன்னிறமாக மாறியது. பொன்னை ‘காஞ்சனம்“ என அழைப்பர். பார்வதி காஞ்சனையாகி, அங்கு ஒரு மாமரத்தின் கீழ் சிவலிங்கமாக கோயில் கொண்ட ஏகம்பனைக் கண்டு வழிபட்டாள்.

இந்த வேளை நாரதமுனி அங்கு வந்தான். “நான் உபதேசம் செய்யும் மந்திரத்தை தீவிரமாக உபாசிப்பாய். அதனால் சிவன் கைலாயத்தை விட்டு இங்கு வந்து மீண்டும் உன் கரம் பிடிப்பார்“ என்றான்.

பார்வதியும் மந்திரத்தை உபாசித்தாள்.  அதன் தீவிரம் கைலாய சிவனைத் தாக்கவே கங்கையின் துணையால் அதைக் குளிரச் செய்தான்.

இந்த வேளையில் தான் மகாவிஷ்ணுவும் காட்சியளித்து, “அருமை சகோதரியே... பார்வதி! உன் தவமும், பூஜையும் உன்னை மீண்டும் சிவனோடு சேர்க்கும் காலத்தை கொண்டு வந்து விட்டது“ என்றிட பார்வதியும் தான் பூஜித்த சிவலிங்க உருவத்தையே சிவனாக உணர்ந்து கட்டித் தழுவினாள். இதனால் அத்திருமேனியில் முலைத்தழும்பும், வளைத்தழும்பும் ஏற்பட்டது. அதே சமயம் பார்வதியின்(காஞ்சனையின்) பொன்வடிவம் மேலும் மிளிர்ந்தது. இதனால் காஞ்சீ என்று பெயர் பெற்றாள்.

தன்னை ‘காஞ்சீ“ தழுவிய பரவசத்தை உணர்ந்த சிவனும் வரதராஜனை அடைந்து, “நீரே எங்கள் இருவருக்கும் மணம் முடித்து வைப்பீராக“ எனத் தெரிவிக்க அவ்வாறே மணம் முடித்தார். இதன் மூலம் பார்வதி கண்களைக் கட்டிய செயல் ஒரு முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக பார்வதி பொன்னிறம் மிக்கவளாகி காமாட்சி என்றும் ஆனாள்.

ஒரு மாமரத்தின் அடியில் சிவன் லிங்க வடிவம் கொண்டு பார்வதிக்கு அருளியதால் ஏகாம்பரன் என்று ஆனான். காலத்தால் சக்தியின் 51 சக்தி பீடங்களில் இதுவே காமகோடி பீடமாக விளங்குகிறது.

காமாட்சி என்னும் பெயருக்குள் மூன்று தேவியரும் உள்ளனர். ‘கா“ என்றால் சரஸ்வதி, ‘மா“ என்றால் மகேஸ்வரி, ‘ஷி“ என்றால் லட்சுமி. மூவரும் ஒன்றாக இணைந்தவள் என்றும் பொருள் உண்டு.

கிருதயுகத்தில் காமாட்சியின் மீது துர்வாசர் 2000 ஸ்லோகங்களையும், திரேதாயுகத்தில் பரசுராமர் 1500 ஸ்லோகங்களையும்,  துவாபர யுகத்தில் தவுமியாசர்  1000 ஸ்லோகங்களையும், கலியுகத்தில் ஆதிசங்கரர் 500 ஸ்லோகங்களையும் பாடினர்.

காமாட்சிக்கு இங்கே மூன்று ரூபங்கள்! அவை ஸ்துாலம், சூட்சுமம், காரணம். பார்த்த அளவில் நமக்கு கோடி கோடியாக அருள் புரிவதால் ‘காம கோடி காமாட்சி“ எனப்படுகிறாள். காமாட்சி பொன்னிறம் கொண்டவளாக இருப்பதால் காஞ்சனம் என்றாகி பின்னர் ‘காஞ்சி“ என்று ஆனாள். தலமும் காஞ்சிபுரம் என்றானது.

இந்த பகுதியை துண்டீரன் என்பவன் ஆட்சி செய்ததால் துண்டீர மண்டலம் என்றாகி பின்னர் தொண்டை மண்டலம் என்றானது.

காமாட்சி சன்னதியில் கலியுகத்தில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். அதற்கு முன்பு வரை உக்கிரமாக இருந்தவள், ஆதிசங்கரரால் சாந்தம் ஆனாள்.  மன்மதனின் கரும்பு, மலர் அம்பை இவள் தன் வசம் கொண்டாள். இதற்கு காரணம் அவனால் ஏற்படும் காம விகாரத்தை தன் அருளால் வெற்றி கொள்ள முடியும் என்பதை உணர்த்தவே!

இப்படி அத்திகிரி காஞ்சியாகி, தொண்டை நாடான நிலையில் தான் பல அபூர்வ நிகழ்வுகளும் அத்திகிரி வரதன் சன்னதியில் நடந்தன.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar