Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமப்பண்பு விமர்சிக்கப்படலாமா?
 
பக்தி கதைகள்
ராமப்பண்பு விமர்சிக்கப்படலாமா?

காட்டில் இருந்த காலம் ராமனுக்கு பல அனுபவங்களைத் தந்தன. அதில் பெரும்பாலும் பிறருக்கு சேவை செய்வதாகவும், சில  வாழ்க்கைப் பாடத்தை தருவதாகவும் இருந்தன. இலக்கு இல்லாமல், 14 ஆண்டுகளைக் கடக்க வேண்டும் என அடர்ந்த காட்டில் சீதை மற்றும் லட்சுமணனுடன் போய்க் கொண்டிருந்தான் ராமன். சூரிய ஒளியை தரையில் படர விடாமல் அடர்ந்த முரட்டு மரங்களைப் போல பல இடங்களில் அரக்கர்களின் கொடுங்கோன்மை நிலவியதை கவனிக்க முடிந்தது.

அங்கிருந்த முனிவர்கள் தங்களை அரக்கர்களின் கோரப்பிடியிலிருந்து காக்குமாறு வேண்டினர். சிலர் தங்களின் ஆசிரமங்களைச் சுற்றித் திரியும் கொடிய விலங்குகளையும் ராமன் தான் விரட்ட வேண்டும் என்றும் கேட்டனர்.   

அவர்களின் வேண்டுதலை ஏற்று உதவிய ராமன் முகத்தில் மெல்ல கடுமை படர்வதை சீதை கவனித்தாள். அது அவனது மனதின் பிரதிபலிப்பு என்பதை உணர்ந்தாள்.  அபயம் என வந்தவரைக் காப்பது தன் கடமை என அவன் மனதில் உறுதி கொண்டிருப்பதை கவனித்தாள்.

தண்டகாரண்யத்தில் அடுத்தடுத்துப் பல முனிவர்களை சந்தித்த போது, அவர்களிடம் ராமன் ஆசி கோரினான். அவர்கள்  ’ராமனைத் தரிசித்ததே தங்களின் பாக்கியம்’  என்று சொல்ல, அது கேட்டு சீதை மனம் நெகிழ்ந்தாள். தன் கணவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படுவதை எண்ணி  மகிழ்ந்தாள்.
விராதனை வதம் செய்த பின், ஒரே இடத்தில் தாம் இருந்தால் கொடியவர்களால் துன்பம் நேரலாம் எனக் கருதினான் ராமன். ஆகவே இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள யோசித்தான்.

காட்டில் ஒரே இடத்தில் 14 ஆண்டுகள் தொடர்ந்து இருக்க முடியுமா? இடம் மாறி மாறிச் சென்றால் தானே புதுப்புது அனுபவங்கள் ஏற்படும். ஆகவே வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்வது தான் சரி என சீதையும் நினைத்தாள்.

ராமனும் அப்படியே செல்ல விரும்பினான். அதற்கு காரணம் அங்கங்கு உள்ள முனிவர்களிடம் ஆசி பெற வேண்டும் என்பதால் தான்! ஏற்கனவே அரசுரிமை வேண்டாம் என அரண்மனையை விட்டு வெளியேறி வந்து,  எளிய உடை, உணவு, இருப்பிடம் என எல்லாவற்றிலும் தியாகம், துறவு எண்ணத்துடன் வாழ்வதில் ராமனுக்கு சந்தோஷம் தான்.  

அடுத்ததாக சரபங்க முனிவரை தரிசித்தனர். அப்போது அவரது யாகசாலையில் முனிவருடன் தேவேந்திரன் பேசிக் கொண்டிருந்தான். இதை கவனித்த ராமனுக்கு “இந்திர லோகத்தில் இருந்து வந்து முனிவருடன் உரையாடுகிறான் என்றால், அந்த முனிவரின் மேன்மை தான் எத்தகையது!” என எண்ணம் தோன்றியது.  
ராம, லட்சுமணர், சீதை  மூவரையும் சரபங்க முனிவர் வரவேற்றார். தங்களைப் பற்றிய விபரம் சொன்னதோடு, அமைதியாக வாழ தகுந்த இடத்தை தெரிவிக்கவும் வேண்டினர். முனிவரும், ’மந்தாகினி நதிக்கரைக்கு சென்றால்  சுதீட்சணர் என்னும் மகரிஷியைக் காண்பீர்கள். அவர் உங்களுக்கு மேலும் வழிகாட்டுவார்,” என்றார்.  

அதைக் கேட்ட சீதை நிம்மதி அடைந்தாள்.  ’இந்த இடத்தில் இனி ராமனால் எந்த உயிர்க்கொலையும் நிகழாது!’  என புதிய இடம் நோக்கிச் செல்ல தயாரானாள். தங்களுக்கென உடைமை ஏதும் இல்லை. ஆனால் பாதுகாப்புக்காக உள்ள வில், அம்புகளையும் தூய்மைப்படுத்திய போது அவளது மனம் வருந்தியது.  இந்த அம்புகள் எத்தனை உயிர்களை கொன்றிருக்கும். அசுரர்கள் தவிர எத்தனை விலங்குகளையும் அழித்திருக்கும்!

சுதீட்சணரை சந்திக்கப் போகும் வழியில், சீதை ராமனிடம் தயக்கமுடன், “போதும் சுவாமி! இனியும் உயிர் வதை வேண்டாம்” என்றாள்.
ராமன் சற்று குழப்பமுடன் அவளைப் பார்த்தான்.

“ஆமாம், நீங்கள் கொடுமை செய்யும் அரக்கர்களை கொல்கிறீர்கள் சரி. ஆனால் இந்த விலங்குகளையும் ஏன் அழிக்கிறீர்கள்?”எனக் கேட்டாள்.

“அவை கொடியவை சீதா, உனக்குத் தெரியாதா, மிருக மனோபாவம் என்னவென்று? முனிவர்களைப் போன்ற சாதுக்களை அவை எப்படியெல்லாம் இம்சிக்கின்றன? அவர்களுக்கு உடல் பலமில்லை, அவர்கள் ஆயுதமும் ஏந்த மாட்டார்கள். ஆகவே விலங்குகளை விரட்டி நிம்மதியாக வாழ வழி செய்கிறேன், இதில் என்ன தவறு?” எனக் கேட்டான்.

“உண்மை தான். ஆனால் அது தற்காலிகமானதே! நீங்கள் அவர்களை விட்டு விலகியதும், வேறு மிருகங்கள் தாக்காது என்பது என்ன நிச்சயம்? அதோடு அவை தங்களுக்கு உரிமையான காட்டிற்கு வரும் முனிவர்களைத் தான் கொல்கின்றன. எங்களுடைய காடு எங்களுக்கே உரியது என்ற  முறையில் வாழும் போது மனிதர்கள் ஆக்கிரமிப்பது நியாயமா என அவை கேட்கிறதோ என்னவோ! அதனால் தான் இப்படி மூர்க்கத்துடன் நடக்கலாம் இல்லையா?”

மேலும் அவள்  “மிருகங்களை வேட்டை யாடுவது தங்களின் குணமாக இருந்ததில்லை என்பதைத் தாங்கள் உணர்கிறீர்களா? வேட்டையாடுதல் என்பது அரசர்களின் பொழுதுபோக்கு என்றாலும், நீங்கள் அதில்  ஈடுபட்டதில்லையே?”

“ஆமாம்”

“அப்படியிருக்க இப்போது விலங்குகளை வேட்டையாட வேண்டிய அவசியம்? முனிவர் களை தாக்குவதால் அவற்றை வேட்டையாடுவதாக நீங்கள் சமாதானம் சொல்லலாம். ஆனால் அவை தங்களின் உரிமையைப் பறிப்போரைத் தான் தாக்குகின்றன என்பது தான் உண்மை? இரை தேடுவதும்,  இனப்பெருக்கமும் தானே அவற்றின் வாழ்க்கை. அதில் இடையூறு செய்வோரை எப்படி அவை பொறுக்கும்?”

“உண்மையே... அவை கொல்லப்பட வேண்டியவை அல்ல தான்.”

“உங்கள் சுதந்திரத்துக்கு இடைஞ்சலாக இருந்தால், வில்லில் உள்ள நாணை வளைத்து  ஓசை எழுப்பி வெருண்டு ஓடச் செய்யுங்கள். அவற்றைக் கொல்வது முறை ஆகாது” என்றாள்.

“உன் கருத்தை ஏற்கிறேன் சீதா”

அதைக் கேட்ட சீதை நாணப்பட்டாள்.  மனதிற்குள் மகிழ்ந்தாள். “தங்களின் தந்தையார் தசரத சக்கரவர்த்தி வேட்டைக்குச் செல்பவர். யானையைக் கூட அம்பால் வீழ்த்தும் வலிமை கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கடைசியில் என்னாயிற்று? சிறுவனான சிரவண குமாரனை தவறுதலாக மிருகம் என கருதி அம்பெய்து கொன்றாரே! வேட்டையாடும் குணம் கடைசியில் எங்கே போய் முடிந்தது பார்த்தீர்களா! அதன்பின், ’நீயும் புத்திரனைப் பிரிந்து வேதனையால் உயிர் விடுவாய்’ என சிறுவனின் பெற்றோர் சபித்தனரே. அதன்படி தங்களையும் பிரிந்து கடைசியில் உயிர் விட்டாரே?” எனக் கேட்டாள்.

ராமன் வைத்த கண் வாங்காமல் சீதையைப் பார்த்த போது அதில் பாராட்டும் எண்ணமும் இருந்தது.    

“காட்டில் வாழ வேண்டிய இந்த 14 ஆண்டுகளில் விலங்குகளைக் கொல்லும் எண்ணம் வளர்ந்தால் உங்களிடம் கருணை உணர்வு அற்றுப் போகுமே? வன்முறையே வாடிக்கையாகினால் ’ராமப் பண்பு’ பற்றி யார் தான் பேசுவர்?”
சீதையின் நியாயத்தை ஏற்ற ராமன்,’விலங்குகளின் சுதந்திரத்துக்கு இடையூறு செய்ய மாட்டேன்’ எனத் தீர்மானித்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar