Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இதற்காகவா ஆசைப்பட்டாய்?
 
பக்தி கதைகள்
இதற்காகவா ஆசைப்பட்டாய்?

“இன்னிக்கு சாயங்காலம் ஆறரை மணிக்கு வீட்டுக்கு வர முடியுமா? உன்கிட்ட ஒண்ணு காட்டணும்.”

அழைத்தவன் என் நீண்டகால  நண்பன் பாலு. 25 ஆண்டுகள் அரசு வங்கியில் பணி செய்து விட்டுச் சென்ற வாரம் தான் விருப்ப ஓய்வு பெற்றான். பிரிவு உபச்சார விழாவிற்குச் சென்றேன்.

“எழுத்தாளனாக வேண்டும் என்பது என் ஆசை. வேலை, குடும்பம் பொறுப்பு என்று இதுவரை எழுத நேரம் கிடைக்கவில்லை.  இனி நாளெல்லாம் எழுதப் போகிறேன்.”
என அவன் முழங்கியது நினைவில் இருக்கிறது.

“இந்த ஒரு வாரத்துல நான் எழுதின சிறுகதைகள். பாத்து எப்படியிருக்குன்னு சொல்லு”

ஒவ்வொரு கதையாகப் படித்தேன். எழுத்தில் வலிமை இல்லை. கதையின் கரு சரியாக உருவாக்கப்படவில்லை. பாத்திர அமைப்பு  நீர்த்துப் போயிருந்தது. எழுத்து நடையில் சுவாரசியம் இல்லை.

பாலுவைப் பார்க்க பயமாக இருந்தது. தன்னிடம் அபூர்வமான எழுத்துத் திறமை இருப்பதாக இன்னமும் நம்புகிறானா? இதுவா அபூர்வம்? பத்திரிகைகளில்  இதைச் சீண்ட மாட்டார்களே! இதை நம்பியா  நல்ல சம்பளம் வாங்கிய வேலையை விட்டான்? பாலுவிற்குப் பெரிய பொறுப்பு ஏதுமில்லை என்பது உண்மை தான். ஆனால் நாளெல்லாம் இப்படி மூன்றாந்தர எழுத்திலா செலவிடப் போகிறான்?

இரவு ஒன்பதரை மணி. கனத்த மனதுடன் கோமதிபுரம் அருகே வந்து கொண்டிருந்தேன். சாலையின் இடது புறத்தில் ஒரு பெண் இருசக்கர வாகனத்துடன் போராடிக் கொண்டிருந்தார். காரை அருகில் நிறுத்தினேன்.

“ஏதாவது உதவி வேணுமா?”

“கே.கே. நகர்ல தான் என் வீடு. இறக்கி விடறீங்களா?”

“நிச்சயமா.  ஏறுங்க.”

பின்கதவைத் திறக்க முயற்சித்தேன். இந்த இரவு வேளையில் ஒரு அன்னியப் பெண்ணை முன் இருக்கையில் வைத்துக்கொண்டு காரில் செல்வது நன்றாக இருக்குமா?

“அன்னியப் பெண் என்றால் கூடாது. அம்மாவை அழைத்துக் கொண்டு போகலாமே? யார் என்ன சொல்லமுடியும்?”

தீர்க்கமாக வந்து விழுந்த வார்த்தைகள் என்னைத் தன் அடிமையாகக் கொண்ட அகிலாண்டேஸ்வரியைக் காட்டிக் கொடுத்து விட்டன.

“பாலுவை நினைத்தால் பயமாக இருக்கிறது.”

“அவனுக்கு நல்ல எழுத்துத் திறமையைக் கொடுத்திருந்தேன். ஆனால் அதை பாழாக்கிவிட்டான். கொட்டிய பாலை நினைத்து அழுவதால் என்ன பயன்?”

“எனக்கு புரியவில்லை தாயே!”

“அங்கே நடப்பதைப் பார். பாலுவின் தவறு புரியும். இது 30 ஆண்டுக்கு முன்பு நடந்தது”

அக்காலத்தில் புகழ் மிக்க தத்துவ ஞானி ஜே.கே. என்னும் ஜே கிருஷ்ணமூர்த்தி ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

கூட்டத்தில் நூறு பேர் இருந்தனர். பேசி முடித்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் கேள்வி கேட்டனர்.  வயதான ஒருவர் கேள்வி கேட்க எழுந்தார். சில நொடிகளில் உடைந்து போய் அழுதார். பின்னர்  திக்கித் திணறிப் பேசினார்.

“எனக்கு ஓவியம் வரைவதில் கொள்ளை ஆசை. பத்தாம் வகுப்பு படித்த போது படங்கள் நன்றாக வரைவேன். ’உனக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது’ என பாராட்டினார் என் ஓவிய ஆசிரியர். வரைவதை எந்தக் காலத்திலும் நிறுத்தாதே என அறிவுரை சொன்னார்.

“ஆனால் என் தந்தையின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது. படம் வரையாதே என அவர் சொல்லவில்லை. நன்றாகப் படி. பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேர். அப்புறம் வரையலாம்”
தந்தையின் வாதம் நியாயமானதாகத் தோன்றியதால் வரைவதை விட்டு  நன்றாகப் படித்தேன். பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. தந்தைக்கு மகிழ்ச்சி.

“இப்போ நான் வரைய ஆரம்பிக்கட்டுமாப்பா?” என தந்தையைக் கேட்டேன்.

“இன்னும் நான்கு ஆண்டில் பொறியாளனாகி விடுவாய். அப்புறம் வாழ்க்கை முழுவதும் படம் வரையலாமே. இப்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்து”  என்றார்.

அப்படியே செய்தேன்.  என் ஓய்வு நேரத்தில் கூட படம் வரைய தந்தை அனுமதிக்கவில்லை. படிப்பில் கவனம் போய் விடுமோ என பயந்தார்.
பொறியியல் பட்டம் கிடைத்ததும் பொதுப் பணித் துறையில் வேலை கிடைத்தது. வேலைப்பளு அதிகம் இல்லை. நல்ல சம்பளம்.

தந்தைக்கு மகிழ்ச்சி.

“இப்போது நான் வரையலாம் அல்லவா?”

“மகனே! படம் வரைவதைப் பிறகு பார்க்கலாம். நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைக்கப்போகிறேன். அதற்குள் பதவி உயர்வுக்கு அரசுத் தேர்வுகள்  இருந்தால் அதற்கு தயாராகு. குடும்ப வாழ்க்கைக்கு இந்தச் சம்பளம் போதாது.”

சம்மதித்தேன். திருமணம் செய்தேன். பதவி உயர்வு கிடைத்தது. ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரு குழந்தைகள்.

’இனிமேல் படம் வரையப்போகிறேன்’ என தந்தையிடம் உறுதியாகச் சொன்னேன்.
“அப்புறம் பிள்ளைகளை யார் வளர்ப்பார்கள்? அவர்களைப் படிக்க வைக்க வேண்டாமா? பெண்ணுக்குத் திருமணம் பிள்ளைக்கு வேலை...இவ்வளவு விஷயங்கள் இருக்கும் போது படம் வரைவதா முக்கியம்?”என தடுத்தார் தந்தை.
குடும்பப் பொறுப்பை எல்லாம் முடித்து ஓய்வும் பெற்றேன்.  தந்தையும் இறந்து விட்டார். இனி நாளெல்லாம் படம் வரையலாம் என முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் சிறிய கோடு கூடப் போட முடியவில்லை ஐயா. என்  திறமைகளை எங்கே தொலைத்தேன் என்றே தெரியவில்லை.”

ஜே.கே. தீர்க்கமாகச் சொன்னார்.

“எனக்குத் தெரியும். உன்னிடம் அபூர்வமான திறமை இருந்தும் பாதுகாப்பைத் தேடி அலைந்த சாதாரண வாழ்வில் அதைத் தொலைத்து விட்டாய். இனிமேல் அது உனக்குக் கிடைக்காது.”

“நான் சிறந்த ஓவியராகி இருக்க வேண்டும். அந்தக் கனவைச் சின்னாபின்னமாக்கிய  தந்தை மட்டும் உயிருடன் இருந்தால் அவரைக் கொன்றிருப்பேன்.”

ஜே கே.யின் புன்னகையில் விரக்தியே மிஞ்சியது.

“தப்பு உன் மீதிருக்க ஏன் தந்தை மீது பழி சுமத்துகிறாய்?”

“நீங்கள்  சொல்வது புரியவில்லையே?”

“சிறுவனாக இருந்த போது உனக்குப் பசி எடுக்கும் நேரத்தில் உன் தந்தை
“மகனே இப்போது சாப்பிட வேண்டாம்.  நன்றாகப் படித்துக்  கல்லூரியில் சேர்ந்த பின் சாப்பிட்டால் போதும்”  என சொன்னால் என்ன செய்திருப்பாய்? தந்தை பேச்சைக் கேட்டுச் சாப்பிடாமலே இருந்து செத்திருப்பாயோ?”

“இல்லை அவர் பேச்சை மீறி சாப்பிடுவேன்.”

“நல்ல வேலை கிடைக்கும் வரை தூங்க கூடாது என தந்தை சொன்னால் உன்னால் ஏற்க முடியுமா?”

“எப்படி முடியும்? தந்தையை எதிர்த்திருப்பேன்.”

“சாப்பிடவும், தூங்கவும் உன் மனதில் இருந்த உத்வேகம் ஓவியம் வரைவதில் இல்லையே. அப்படி இருந்தால் உன் பள்ளிப்பருவத்திலேயே “அப்பா! நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். வரைவது தான் என் வாழ்க்கை. வேறு ஒன்றை என்னால் யோசிக்கக் கூட முடியாது” என்றிருப்பாய். தொடர்ந்து வரைந்து குவித்திருப்பாய். இன்று நாடு போற்றும் ஓவியனாக இருந்திருப்பாய். நீ அப்படிச் செய்யவில்லையே? பாதுகாப்பான வாழ்க்கை, மாதச் சம்பளம், குடும்பம் என உன் வாழ்வை குறுக்கிக் கொண்டாய். உன்னிடமிருந்த அபூர்வமான  திறமை இன்று காலாவதியாகி விட்டது.”

கேள்வி கேட்டவர் மட்டும் இல்லை நானுமே அழுதேன்.

“பாலுவின் பிரச்னை என்னவென்று புரிந்ததா?”

“புரிந்தது.. தாயே.”

“கோயிலுக்கு வந்து என்னை வணங்குவது வழிபாடு தான். ஆனால் நான் கொடுத்த திறமையை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்வது இன்னும் சிறந்த வழிபாடு.  இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் வாழ்வில் வெறுமை தான் மிஞ்சும்.”
அன்னையை விழுந்து வணங்கினேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar