Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வரதா வரம்தா...
 
பக்தி கதைகள்
வரதா வரம்தா...

சன்னதியில் ஒலித்த அசரீரி குரல் நீலனுக்கு புது தெம்பை அளித்தது. அருகில் இருந்து அவனை ஏளனம் செய்த அமைச்சருக்கு அது கேட்கவில்லை. அது தெரியாமல், “அமைச்சரே! கேட்டீரா? எம்பெருமான் நம்மை காஞ்சிக்கு வரச் சொல்லி விட்டான். மற்றவை தானாக நடக்கும் என்றும் கூறி விட்டான். புறப்படுங்கள்” என்றான். அதைக் கேட்ட அமைச்சர் அதிர்ந்தார்.

“நீலா... என்ன உளறுகிறாய்? இங்கேயே உன்னோடு இருக்கும் என் காதில் ஏதும் விழவில்லையே?” என்றார்.

“அப்படியானால் நான் பொய் சொல்கிறேனா?”

“அது யாருக்குத் தெரியும்? ஒன்று மட்டும் தெரிகிறது. பக்தியால் பைத்தியமாகி விட்டாய். அதனால் தான் பெருமாளே பேசுவதாக எல்லாம் கூறுகிறாய். எந்த காலத்தில் பெருமாள் பேசியிருக்கிறார்? எங்காவது கற்சிலை பேசுமா?” அமைச்சரின் கேள்வியால் நீலனின் கவனம் எம்பெருமான் பக்கம் திரும்பியது.

“எம்பெருமானே! இது என்ன அதிசயம். உன் குரலை கேட்கவில்லை என்கிறாரே அமைச்சர். இதனால் என்னை பக்திப் பைத்தியம் என்று அல்லவா கூறுகிறார். அது உன் காதில் விழவில்லையா? பதில் சொல்” என நீலன் புலம்பினான். மீண்டும் அசரீரி குரல் கேட்டது.

“நீலா... நான் எங்கும் இருப்பதை நம்பி பக்தி செய்கிறாய். அவனோ கல் பேசாது என்ற பவுதீக விதியை நம்புபவன். எனவேதான் என் குரல் அவனுக்கு கேட்கவில்லை. நீ நம்புவதால் கேட்கிறது. அவ்வளவு தான் சூட்சுமம்.
கவலைப்படாதே! காஞ்சி வந்தால் கடன் தீரும் என உறுதியாகச் சொல். மற்றவை தானாக நடக்கும்” என்ற அந்தக் குரல் நீலனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

“அமைச்சரே! இப்போதும் எம்பெருமான்  பதில் அளித்தான். காஞ்சிக்கு வந்தால் கடன் தீரும் என கூறினான். உமக்கு கேட்காததற்கு பவுதீக நம்பிக்கையின்மையே காரணம். இப்போதும் சொல்கிறேன். என்னோடு காஞ்சிபுரம் வாருங்கள். உங்கள் கடன் தீர்க்கப்படும்!” என்ற நீலனை வெறித்துப் பார்த்தார் அமைச்சர்.

“ என்ன பார்க்கிறீர்?”

“பார்க்காமல்... எவ்வளவு பெரிய வீரன் நீ...இப்படியா முட்டாள் தனமாக நடப்பாய்?                               

“எது முட்டாள் தனம்?”

“உன் பேச்சு.. போக்கு.. என எல்லாம் முட்டாள்தனம் தான்!”

“வார்த்தைகளை அளந்தும் கவனமாக பேசுங்கள்”

“அப்படித்தான் பேசுவேன். நீ இப்போது குறுநில மன்னன் இல்லை. சோழநாட்டுக் கைதி. வரி கட்டாத உனக்கும் பேச்சு ஒரு கேடா என்ன?”

“அமைச்சரே! பொறுமையைச் சோதிக்காதீர். நான் காஞ்சிபுரம் செல்கிறேன். வாருங்கள். கடனை அடைக்கிறேன்”

“உன்னை நம்பி வர முடியாது. உதவுவதாக இருந்தால் பெருமாள் அதை இங்கேயே நிறைவேற்றலாமே? எதற்காக காஞ்சிபுரம் வரச் சொல்ல வேண்டும்?”
அமைச்சரின் கேள்வியிலும் நியாயம் இருந்தது. நீலன் திரும்ப பெருமாளின் பக்கம் திரும்பினான்.

“எம்பெருமானே! இதக்கு என்ன பதில் சொல்ல...?” என உருகினான்.

“பசுவின் உடல்  எங்கும் பால் ஓடினாலும் மடி வழியாகத் தான் வெளிப்படும். அதுபோல நான் வரம் தரும் வரதராஜனாக உள்ள இடத்தில் தான் என்னாலும் வரம் தர முடியும். அத்துடன் நீ அங்கே என்னைக் காண இதுவரை வரவில்லை.
உண்மையில் நான் உனக்காக அழைக்கவில்லை. எனக்காக அழைக்கிறேன்!
உன்னைப்  போல ஒரு பக்தன் பாதம் பட அத்தலம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்?”

“எம்பெருமானே... என்ன பேச்சு இது? நான் அத்தனை மேலானவனா? பெருமானே! நான் ஒரு பாவி. என் வாழ்நாளை கணக்கிட்டால் அதில் உன்னை மறந்திருந்த நாட்களே அதிகம். குமுதவல்லியின் கருணையால் உன்னை அறிய நேர்ந்தது. அதுவும் சில காலமாகத்தான்! அப்படிப்பட்ட என்னையா இப்படி உயர்த்திப் பார்க்கிறாய்?”

“நீலா... எத்தனை நாள் என்பதை விட, எத்தனை ஆழமான நம்பிக்கையுடன் பக்தி செய்கிறாய் என்பதே பெரிது. இப்போது கூட அந்த அமைச்சனின் பேச்சுக்கு உன் வீரத்தால் பதில் அளிக்காமல் பக்தியால் எதிர்கொள்ள நினைக்கிறாயே.. இப்படி ஒருவனே தூய வைணவன்!”

“எம்பெருமானே இது போதும் எனக்கு! இப்போதே உன்னைக் காண புறப்படுகிறேன். இந்த அமைச்சன் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி! உன் கருணையை விட எதுவும் பெரிதில்லை” என்ற படி பலம் கொண்ட மட்டும் இழுத்து கட்டிய இரும்புச் சங்கிலிகள் துண்டாகும்படிச் செய்தான். அதைக் கண்டு அமைச்சன் அதிர்ந்தான். அப்படி ஒரு ஆவேசம்!

“அமைச்சரே! என்னோடு காஞ்சிபுரம் வந்தால் நெல்லும், பொன்னும் கிடைக்கும். இல்லாவிட்டால் என்னைக் குறை சொல்லக்  கூடாது” என்று சொல்லி குதிரை மீதேறி புறப்பட்டான். அமைச்சனும் பின்தொடர்ந்தான்.

காஞ்சியின் எல்லைக்கு வந்தது குதிரை.  அதை விட்டு இறங்கிய நீலன் விழுந்து வணங்கினான்.  அத்திகிரி கோயிலை அடைந்தான்.  அனந்த சரஸ் குளத்தில் நீராடினான். திருநாமம் இட்டு பரம பாகவதனாக சன்னதி நோக்கி நடந்தான்.
சன்னதியில் கும்பத்துடன் நின்ற பட்டர்பிரான், நீலனை வரவேற்றார். மேள தாளம் முழங்க தூப புகையால்  கமகம என நறுமணம் கமழ்ந்தது.

“என்ன இது... எனக்கா வரவேற்பு?”

“ஆம்.. எம்பெருமான் உத்தரவு”

“இந்த நாயேனுக்கா?”

“தாயான அவனுக்கு நாம் எல்லாம் சேய் அல்லவா? பேதங்கள் நமக்கே... அவனுக்கு ஏது?”

“இத்தனை இனியனை இத்தனை நாள் கண்டதில்லையே. வரதா... வரதா..” விம்மி அழுதான் நீலன்.

“வரம் தா’ என  கேட்கும் முன்பே நமக்கான வரம் தருவதால் ’ம்’ என்ற ஆமோதிப்புக்கு தேவை இல்லை. வரதா என்றாலே ’வரம் தா’ என்றே பொருள்.
பட்டரின் பொருள் விளக்கம் கேட்டபின்,  கற்பூர ஆரத்தி காட்டி, “தீயில் பூவாக பூத்தவன் திருக்காட்சியை காணுங்கள்” என்றார். உடன் இருந்த அமைச்சனுக்கோ எல்லாம் புதிய அனுபவங்கள்!

“நடப்பதெல்லாம் அவன் செயல்தானா? இல்லை நீலனின் உணர்ச்சிப் பெருக்கா?”
அவருக்குள் கேள்வி. அப்போது அத்திகிரி அருளாளன் குரல் ஒலித்தது.

“நீலா... உன் வருகையால் அத்திகிரி பெருமை பெற்றது. உன் குறை தீர வரத்தையும் தந்தேன். இங்கு ஓடும் வேகவதி ஆற்றின் கரைக்கு செல். அங்கு நெல்லும், பொன்னும் கிடைக்கும். கடந்த காலம் மட்டுமின்றி வரும் காலத்திற்கும் சேர்த்து சோழன் கணக்கை நேர் செய். உன் பக்தியாலே அனைத்தையும் சீர்செய்”
என்ற அக்குரலைத் தொடர்ந்து சன்னதிக்குள் இருந்து கருடபட்சி ஒன்று பறந்து வழிகாட்டத் தொடங்க, சோழ அமைச்சன் சிலிர்த்தான்.

வேகவதி ஆற்றின் கரையை அடைந்த போது ஆற்று மணல் எல்லாம் நெல்லாக ஒருபுறமும், தங்கமாய் மறுபுறமும் கிடந்தது. நீலன் ஆனந்தக் கண்ணீர் விட்டான். சோழ அமைச்சனோ  மண்டியிட்டபடி,  “நீலா... உன் மாற்றத்தை தடுமாற்றம் என கருதினேன். இப்போது தான் புரிகிறது இது பெரும் ஏற்றம் என்று! உன்னாலே இறை குரல் கேட்டேன். இதோ இறை பரிசையும் காண்கிறேன். வரத ராஜனே படியளக்கும் மகாராஜன் நீ! உண்மையில் நீ எங்களுக்கு கட்டுப்பட்டவனாய் இருந்தது இது வரை... இனி நாங்களே உனக்கு கட்டுப்பட்டவர்கள்... என் அடாத செயலை பொறுப்பாயாக. என்னை மன்னிப்பாயாக” என்று ஆற்று மண்வெளியில் கதறினான் அமைச்சன்!

நீலன் காதிலோ எதுவும் விழவில்லை. வரதா...வரதா.. வரதா.. என்று அவன் மனம் அத்திகிரி அருளாளனின் திருநாமத்தைச் சொல்லியபடியே இருந்தது!

வரதன் சன்னதியில் இது போல எத்தனையோ அருட்செயல்பாடுகள். அருளை இருள் சில சமயம் விழுங்கப் பார்க்கும். அது தான் இருளின் குணம்! ஆனாலும் அருளே இறுதியில் வெல்லும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar