Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கை
 
பக்தி கதைகள்
பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கை

அன்று மதுரை மீனாட்சி கோயிலில் அற்புதமான தரிசனம். பாரெல்லாம் காக்கும் பவானி அன்று பச்சைப்பட்டு  உடுத்தி பக்தர்களை பரவசப்படுத்தினாள். கோயிலை விட்டு வெளியே நடக்கத் தொடங்கிச் சில நிமிடங்களான பின்பும் கண்களில் கண்ணீர் வடிந்தது. கண்களால் தன் அழகிய வடிவைப் பார்க்கவும் செய்த அந்த ஈஸ்வரிக்கு எப்படி நன்றி சொல்வேன்! வேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று என்னை மோதுவது போல நின்றது. அடப்பாவி இவனா... என அதிர்ந்தேன். மாறன். அம்பிகையை கல் என்பவன். அக்மார்க் நாத்திகன்.  ”இனிமே கோயில்ல இருக்கறதக் கல்லுன்னு சொல்ல மாட்டேன். அன்னிக்குக் போய்ப் பாத்தேன்.” ”என்னாச்சு இவனுக்கு?”

”கல்லுன்னு சொன்னா கலை உணர்வு இல்லைன்னு அர்த்தம். அது ஒரு அழகான பெண்ணின் சிலை. அந்தச் சிற்பி ரசித்து ரசித்து...” நடுத்தெரு என்றும் பாராமல் அவனது கன்னத்தில் பளார் என அறைந்தேன். அதிர்ந்துவிட்டான். ”இங்க பாரு மாறா! எனக்கு அவ தாய். எங்கம்மாவ பத்தி எங்கிட்டயே தப்பா பேசினா கொலையே பண்ணிருவேன்.”

முணுமுணுத்தபடி பைக்கில் பறந்துவிட்டான்.

எனக்கு மனசு படபடத்தது. நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள் ஏன் இப்படி அரக்கத்தனமாக நடக்கிறார்கள்? கடவுளை நம்புவது மூடநம்பிக்கை என்பது அவர்களின் நினைப்பு. அதைச் சொல்லி ஏன் எங்களை நோகடிக்க வேண்டும்?
சோர்வுடன் அழுதபடி சென்ற போது திடீரென கண் முன்னால் ஒரு கைக்குட்டை நீண்டது. திரும்பிப் பார்த்தேன்.

கண்டாங்கி சேலை. தலையில் கூடை.  நல்ல கருப்பு நிறம். தீர்க்கமான முகம். அழகான கண்கள்.

”துடைத்துக் கொள். அறுபது வயது ஆண் அழுதபடி போனால் நன்றாகவா இருக்கும்?”

”தாயே! உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையென்றால் சூலத்தால் கொல்லுங்கள். இப்படி கண்டவன் பேசும் கொடிய வார்த்தையைக் கேட்க வைக்காதீர்கள்.”

” எது மூட நம்பிக்கை?” – அன்னை கேட்டாள்.

தளவாய் அக்ரஹாரத்தில் பூட்டியிருந்த ஒரு கடையின் படியில் அவள் அமர்ந்தாள். இரண்டு படிக்கு கீழே நான்.

”தக்க ஆதாரம் இல்லாமல் ஒன்றை நம்புவது மூடநம்பிக்கை”

”இது மாறன்களின் கொள்கை. அனைத்திற்கும் ஆதாரமான அன்பை நம்பாமல் இருப்பது தான் மூடநம்பிக்கை. கண்கூடாகத் தெரியும் அற்புதங்களை அலட்சியப்படுத்துவதும் மூடநம்பிக்கை தான்”

”தாயே நீங்களே ஒரு அற்புதம். கோயிலில் மரகதவல்லியாக மீனாட்சியாக நீங்கள் காட்சி தந்தது ஒரு அற்புதம். இங்கே ஒரு கிராமத்துப் பெண்ணாக என்னுடன் பேசுவது அதை விடப் பெரிய அற்புதம்”

”அற்புதங்களைப் பொறுத்தமட்டில் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன என விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்கிறார். எதுவுமே அற்புதம் இல்லை என்பது ஒரு நிலைப்பாடு. காண்பதெல்லாம் அற்புதம் தான் என்பது இன்னொரு நிலைப்பாடு. மாறன் முதல் நிலை. நீ அடுத்த நிலை”

”தாயே இவர்கள் மேலைநாடுகளைப் பார்த்துக் கெட்டுப்போகிறார்கள்”

“இல்லையப்பா. இப்போது மேலைநாடுகளில் இறைவன், அன்பு, மரணத்திற்கு அடுத்த நிலை என்று  சிந்திக்கத்  தொடங்கிவிட்டார்கள். இவர்கள்தான் இன்னும் திருந்தவில்லை. அமெரிக்காவில் நடந்த ஒரு அற்புதத்தைச் சொல்கிறேன்.”
“நீங்கள் நிகழ்த்திய அற்புதம் என்று சொல்லுங்கள் தாயே!”

“உலகின் மிகச் சிறந்த அற்புதம் அன்புதான். அந்த அன்புதான் நான். நான்தான் அன்பு. இப்போது நான் சொல்வதைக் கேட்கிறாயா?”

“காத்திருக்கிறேன், தாயே!”

சூசன் மிகுந்த சோகத்தில் இருந்தாள். அவள் கணவன் ஜான் திருமணமாகிப் பத்து ஆண்டுகளில் இறந்துவிட்டான். ஒரே மகள் சாரா.  இருபது வயது. அவள் கல்லூரிப் படிப்பை  முடிக்கும் சமயத்தில் இடியாய் வந்து இறங்கியது அந்தச் செய்தி. சாராவிற்கு மார்பகப் புற்று நோய். அறுவை சிகிச்சை செய்து மார்பகங்களை எடுத்துவிட்டார்கள்.

ஆனால் அதற்குள் புற்று மூளைவரை பரவிவிட்டது. ஒரு சிக்கலான மூளை அறுவை சிகிச்சை செய்தேயாகவேண்டிய நிர்ப்பந்தம். மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை. பிழைப்பது அரிது என்று மருத்துவர் கூறிவிட்டார். அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் நிச்சயம் மரணம்தான்.  அறுவை சிகிச்சைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. அந்தச் சிகிச்சையைச் செய்ய மருத்துவரே கொஞ்சம் பயந்தார்.

விடிகாலை நேரம்.. சாராவின் ஸ்கேன் அறிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார் மருத்துவர். இந்த அறுவை சிகிச்சையைச்  செய்து பெயரைக் கெடுத்துக்கொள்ளவேண்டுமா என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
தொலைபேசி அடித்தது.

சூசன் பேசினாள்.

“டாக்டர் நேத்து சாராவுக்கு ஒரு கனவு. அதை இப்போதான் என்கிட்ட சொன்னா. உடனே உங்களுக்குப் போன் பண்றேன். நீங்க தைரியமா ஆப்பரேஷன் பண்ணலாம் டாக்டர். என் செல்லத்துக்கு ஒண்ணுமே ஆகாது.  என் கணவர் ஜானே அதைச் சொல்லிட்டாரு.”

மருத்துவருக்கு எரிச்சலாக இருந்தது. அதே சமயத்தில் பரிதாபமாகவும் இருந்தது. மகள் சாகக்கிடக்கிறாள் என்ற நிலையில் தாய்க்குப் புத்தி குழம்பிப்போய் விட்டதோ? பின் இறந்து போன தன் கணவன் சொன்னதாக இவள் ஏதோ பேத்துகிறாளே!

“நேத்து சாரா கண்ட கனவுல என் புருஷன் ஜான் வந்திருக்காரு. ’நீ எதுக்கும் பயப்படாத கண்ணு. இந்த ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சி நீ எண்பது வயசு வரைக்கும் சந்தோஷமா வாழப்போற.  கல்யாணம் குடும்பம், மகன், மகள், பேரன் பேத்தின்னு உன் வாழ்க்கை முழுமையா இருக்கும் கண்ணு’ன்னு சொன்னாராம் டாக்டர்.”

டாக்டர் மவுனம் சாதித்தார்.

“இதுல என்ன விசேஷம்னா அந்தக் கனவுல என் கணவர் ஜான் பச்சைக்கலர் டீ ஷர்ட்டும் மஞ்சள் தொப்பியும் போட்டுக்கிட்டு இருந்தாராம்.”
அதற்குமேல் மருத்துவருக்குப் பொறுமையில்லை.

“சரி நாம அப்பறம் பேசலாமா?”

“இல்ல டாக்டர் இத மட்டும் கேட்டிருங்க. அந்த டீ ஷர்ட்டையும் தொப்பியையும் நாங்க தேனிலவுக்கு ஹவாய் போனபோது வாங்கினோம். அங்க அதத்தான் போட்டுக்கிட்டு இருந்தாரு. திரும்பி வந்தபோது அந்தத் தொப்பியும் டீ ஷர்ட்டும் இருந்த பொட்டிய ஏர்லைன்காரங்க தொலைச்சிட்டாங்க. அதனால என் புருஷன் அந்த டிரஸ் போட்டுக்கிட்டு இருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும். அந்த டிரஸ்ல ஒரு போட்டோகூட எடுக்கல.

சத்தியமா தன் அப்பாவ அந்தக் கோலத்துல சாரா பார்த்ததேயில்ல. நான் அதப்பத்தி சத்தியமா சாராகிட்டச் சொன்னதேயில்ல. நாங்க ஹவாய் போய்ட்டு வந்து அஞ்சு வருஷம் கழிச்சித்தான் சாரா பிறந்தா. அதுக்கப்பறம் ஜான் அந்த மாதிரி ஒரு டிரஸ் வாங்கவேயில்லை. “

மருத்துவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். இது எப்படி சாத்தியம்? அதுவரை மகள் பார்த்திராத ஆடையில் தன் தந்தையைப் பார்த்திருக்கிறாள். யாருக்குமே தெரியாத வருங்காலத்தைப் பற்றி கனவில் வந்த தந்தை துல்லியமாகச் சொல்கிறார். என்ன நடக்கிறது இங்கே?

“இனிமே எனக்கு எந்தப் பயமும் இல்ல, டாக்டர். நீங்க தைரியமா ஆப்பரேஷனப் பண்ணுங்க. மத்ததக் கடவுள் பாத்துப்பாரு.”

அது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை. நூற்றுக்கு 95 சதவிகிதம் நோயாளிகள் இறந்துவிடுவார்கள் என்று புள்ளிவிபரங்கள் சொல்லின. பிழைத்திருக்கும் ஐந்து சதவிகிதத்தினரும் ஏதாவது ஒரு பாதிப்புக்கு உள்ளாகி வாழ்க்கை முழுவதும் படுக்கையில் கிடப்பார்கள்  என்று மருத்துவ வரலாறு சொன்னது.

மருத்துவர் துணிந்து அந்தச் சிகிச்சையைச் செய்தார். அது வெற்றிபெற்றது. பத்தாவது நாள் தானாக நடந்து அந்த மருத்துவமனையைவிட்டு வெளியேறினாள் சாரா.

அந்த மருத்துவருக்கு நடந்த பாராட்டுவிழாவில் அந்த அறுவை சிகிச்சையை ’மருத்துவத்தின் அற்புதம்’ – மெடிக்கல் மிராக்கிள்’ என்று பலரும் சொன்னார்கள்.  மருத்துவர் அதீதப் பணிவுடன் சொன்னார். ’இது அன்பின் அற்புதம். இறைவனின் அருள்.’

“இந்த அற்புதம் போதுமா? இல்லை இந்த தளவாய் அக்கிரஹாரத்தில் கடலை வரவழைத்துக் காட்டட்டுமா?” – யார் கண்டது, இவள் செய்தாலும் செய்வாள்.

“அதை விட ஆயிரம் மடங்கு பெரிய அற்புதத்தை நிகழ்த்தி விட்டீர்கள் தாயே. நீங்களே என்முன் தோன்றி அன்பென்னும் அற்புதத்தை விளக்கியதுதான் இந்தப் பிரபஞ்சத்தின் மாபெரும் அற்புதம்.”

அன்னை கலகலவென்று சிரித்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar