Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அரக்ககுணம் மாறாத ஆரணங்கு
 
பக்தி கதைகள்
அரக்ககுணம் மாறாத ஆரணங்கு

பஞ்சவடியில் லட்சுமணன் நேர்த்தியாக அமைத்த பர்ணசாலையில் ராமனும், சீதையும் குடிபுகுந்தனர். இங்கு வருவதற்கு முன் பண்பில் சிறந்த ஜடாயுவை சந்தித்தனர் என்றால், வந்த பின் பண்பே இல்லாத சூர்ப்பணகையையும் சந்திக்க நேர்ந்தது! பறவைகளின் அரசன் ஜடாயு. சூரியனின் தேரோட்டியான அருணனின் மகன்.  சத்தியமே வாழ்வாகக் கொண்ட அவன் குற்றமில்லாதவன்; நுண்ணறிவு மிக்கவன்; தொலைவில் உள்ளதைக் கூட கூர்மையாகக் கண்டறியும் கண்களைப் பெற்றவன். எல்லாவற்றையும் விட தசரத சக்கரவர்த்தியின் நண்பன். ராம, லட்சுமணரை தன் நண்பனின் மகன்கள் என அறிந்து மகிழ்ச்சி கொண்டான் ஜடாயு. நண்பன் இறந்து செய்தியை அவர்களின் மூலமாக கேள்விப்பட்டு வருந்தினான்.  ”என்னை தந்தையாக கருதுங்கள். உங்களுக்கு நான் உதவியாக இருப்பேன்” என ஆறுதல் சொன்னான்.

திருமாலின் வாகனமான கருடனே தங்களைக் காக்க ஜடாயுவாக வந்திருக்கிறது என அவர்கள் கருதினர். குலதெய்வமான ரங்கநாதரே துணை நிற்கிறார் என நிம்மதி அடைந்தனர்.   ஆனால் சூர்ப்பணகையின் சந்திப்பு அவர்களுக்கு கொடிய அனுபவத்திற்கான அழைப்பாக அமைந்தது! யாரையும் எளிதாக கவரக் கூடியவன் ராமன். யாரையும் உடனே நட்பு கொள்ள தூண்டும் தோற்றம் கொண்டவன். அரக்க இனத்தவரும் கூட அவன் மீது அன்பு கொண்டனர் என்றால் அவனது அழகு தான் எத்தகையது! சூர்ப்பணகை என்ற அரக்கி, தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் மனித வாடை வீசுவதை உணர்ந்தாள். அவர்களைப் பிடித்துக் கொன்று ருசிக்க வேண்டும் என்றே நினைத்தாள்.  அரக்கத்தனத்தையும் மீறிய மென்மை அவளிடம் குடிகொண்டிருந்தது. ஆமாம்! அவள் ராமன் மீது காதல் கொண்டாள்! பெரிய உருவமும், கோர வடிவமும் கொண்ட அரக்க ஆண்களைக் கண்டு  சலிப்பு ஏற்பட்டிருந்த அவள் ராமனின் தோற்றப் பொலிவு கண்டு பிரமித்தாள். அவனது ஒரு தோளிலிருந்து மற்றொரு தோள் வரை தொடர்ந்து பார்ப்பதற்குத் தன் கண்கள் அத்தனை நீளமானதாக இல்லையே என தவித்தாள்.  ஆனால் அவனது அழகுக்கு நிகராக ஒரு பெண்ணும் உடனிருப்பது எரிச்சலைத் தந்தது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்துவதை உணர்ந்தாள். அதனால் ராமனைக் கவர தானும் ஒரு அழகிய பெண்ணாக உருமாற முடிவெடுத்தாள்.

பேரழகியாக மாறிய அவள் ராமன் எதிரில் நின்றாள். அவள் கண்களில் காமம் கொப்பளிக்கக் கண்ட ராமன் தயங்கினான்.  பிறரைக் கவரும் அழகை அவள் கொண்டிருந்தாலும், நோக்கத்தால் மிகத் தாழ்ந்தவள் என்பது அவனுக்கு புரிந்தது. ஒரு பெண் தானாக வலிய வந்து நேருக்குநேர் பார்ப்பதும், அதில் கனிவு, இரக்கம், காதல் என எதுவும் இல்லாமல் காமத்தை மட்டும் வீசுவதுமாக இருந்தால், அவளை எப்படி சொல்வது? நெருங்கிய அவள் ”அழகுக்கு இலக்கணம் ஆனவனே!  நான் உன் மீது ஆசை கொண்டேன். என்னை நீ மணந்தால், இந்த காட்டின் அரசனாக்குவேன். உனக்கு எந்த விதத்திலும் நான் தகுதி குறைந்தவள் இல்லை என்பதை உணர்கிறாயா?” எனக் கேட்டாள்.

”பெண்ணே!  நான் திருமணமானவன். என் மனைவி தவிர வேறு யாரையும் மனதாலும் தொட மாட்டேன். ஆகவே  வழி தவறிய நீ உன் இருப்பிடம் போய்ச் சேர்,” எனச் கடுமையாகக் கூறினான்.  ஆனால் சூர்ப்பணகையோ, ”உன் அருகே நிற்கும் இவளுக்கு அழகு இருக்கலாம். ஆனால் என்னைப் போல அவள் பராக்கிரமசாலியா?  பலம் மிகுந்தவனும்,  சிவனிடம் வரங்கள் பெற்றவனுமான லங்காதிபதி ராவணனின் தங்கை நான். இந்த பாரம்பரியம் இவளுக்கு உண்டா?” சுதாரித்துக் கொண்ட ராமனுக்கு, சுயஉருவத்தை மறைத்து  நிற்கும் இவள் எத்தனை இழிவானவள் என்பது புரிந்தது. அரக்கியான அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்தான்.

இளக்காரமாகப் பேசவும் ஆரம்பித்தான். ” உனக்கு நான் அறிவுரை சொன்னாலும் ஏற்கப் போவதில்லை. நானோ வேறு பெண்ணை மனதாலும் தீண்டாதவன். அதனால் மாற்று யோசனை சொல்கிறேன்.  அதோ... அங்கு நிற்கிறானே... அவன் என் தம்பி லட்சுமணன். அவனிடம் போய் கேள்” என்றான்.  உடனே சூர்ப்பணகை திரும்பினாள். இத்தருணத்தில் அவளைப் பற்றி கச்சிதமாகக் கணக்கிட்டான் ராமன். காமவெறி கொண்ட இவளிடம்,  இன்னொருத்தன் பற்றி சொன்னதும் சட்டென பார்க்கிறாள் என்றால், இப்போதைக்கு உடல்பசியைத் தீர்க்கும் அழகானவன் வேண்டும் என்பது புரிந்தது.  அவளும் ஓடிச் சென்று லட்சுமணனிடம் தன்னை ஏற்க வேண்டினாள். ராமன் அவளைத்  திசை திருப்பியதன் நோக்கம், தண்டிப்பதற்காகத் தான் என லட்சுமணன் உணர்ந்தான்.  அவளை வெட்டி வீழ்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லி மிரட்டினான்.  இதைக் கேட்டு ஏமாற்றம் அடைந்தாள் சூர்ப்பணகை. தன்னை ஒருவர் மாற்றி ஒருவர் துச்சமாக நினைப்பதையும், கேவலமாக நடத்துவதையும் சகிக்க முடியவில்லை. இந்நிலைக்கு காரணம் சீதை தான் எனக் கருதினாள். அரக்கியாக மாறி சீதையைப் பிடிக்க முயன்றாள்.  அதையறிந்த சீதையும் ராமன் பின்னால் ஒளிந்தாள். ” லட்சுமணா! இந்த அரக்கியை தண்டித்து விரட்டு!’ என ஆணையிட்டான் ராமன்.   அவனும் வாளால் அரக்கியின் மூக்கு, காதுகளை வெட்டினான். அண்டம் நடுங்க அலறிய அவள்,  ’உங்களைப் பழிவாங்குவேன், இந்தப் பெண்ணை நிர்மூலமாக்குவேன்” என கத்தினாள். இதன் மூலம் எதிர்காலத்தில் ராவண வதம் நிகழ விதை ஊன்றப்பட்டது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar