Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சோதனை மேல் சோதனை..
 
பக்தி கதைகள்
சோதனை மேல் சோதனை..

என் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு மூளையில் புற்று நோய். பத்தாண்டாக சாவின் நிழலில் வாழ்கிறார்.

என் உறவினரின் மகனுக்கு ஐம்பது வயதில் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு விட்டன. வாரத்திற்கு மூன்று நாள் டயாலிசிஸ்,  மருந்து, மாத்திரை, வலி, பயம் என நாளைக் கழிக்கிறான்.

என் மாஜி வாடிக்கையாளர் செய்து வந்த தொழில்களில் பெரிய அளவில் நஷ்டம். அனைத்தையும் இழுத்து மூடிவிட்டு வீட்டில் தனியாக இருக்கிறார். கோடியில் புரண்ட அவர் இன்று சில ஆயிரங்களுக்கும் பிறரை எதிர்பார்க்கும் கொடிய சூழ்நிலை.

பச்சைப்புடவைக்காரியின் மனதில் கருணை இல்லையா? தன் பக்தர்களை ஏன் சோதிக்கிறாள்? எதற்கும் அளவு வேண்டாமா?

இந்த சிந்தனையோடு வண்டியில் சென்று கொண்டிருந்தேன். வரக் கூடாத திசையில், போகக் கூடாத வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் என் காரில் மோதியது.

காரில் இருந்து இறங்கி அந்த ஆளைக் கோபத்தால்  திட்டினேன். முதலில் பலவீனமாக மன்னித்து விடுங்கள் எனச் சொல்லி கொண்டு இருந்தவன் திடீரென எகிறினான். என் சட்டையைப் பிடிக்க கூட்டம் கூடியது. கூட்டம் அவனுக்கு ஆதரவாக இருந்ததால் நான் ஆபத்தில் மாட்டினேன்.

எங்கிருந்தோ வந்த ஒரு பெண் காவலர் நாங்கள் இருந்த இடத்திற்கு ஓடி வந்தார்.

""என்னய்யா இங்க கூட்டம்? போங்க. போங்க. கமிஷனர் வர நேரமாச்சு; போங்க.”
குற்றவாளியான இரு சக்கர வாகன ஓட்டி என்னைக் குற்றம் சாட்டினான்.

""நீங்க போங்க சார். இந்த ஆளை ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் ரெண்டு தட்டு தட்டினால் வழிக்கு வருவான். நான் பாத்துக்கறேன். நீங்க கிளம்புங்க” என அவனிடம் சொன்னார் பெண்காவலர்.  

அவள் என் காரின் முன் இருக்கையில் ஏறிக் கொண்டாள்.

""ஆ 5 போலீஸ் ஸ்டேஷன் போங்க ”

""எதுக்கு... என் மீது தப்பு  இல்லையே”

""சொல்றத அங்கே வந்து சொல்லுங்க.”

தவறு செய்தவனை விட்டு, தட்டிக் கேட்டவனைத் தண்டிக்கிறார்களே! என்ன நியாயம்? அம்மா! பச்சைப்புடவைக்காரி!

"" உலகையே படைத்தவளிடம் நியாய, அநியாயங்களைப் பற்றிப் பேசாதே!”

""தாயே!”

""என் மனதில் கருணையே இல்லையா? நானே அன்பு, அன்பே நான் என எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? யாரோ படும் துன்பங்களைப் பார்த்து என்னை இரக்கமற்றவன் என முடிவு கட்டி விட்டாயே!”

""மன்னியுங்கள்.”

""இல்லை, இது நீ அறிய வேண்டிய நுட்பமான தத்துவம். விரைவில் நீ விபத்தில் மாட்டிக்கொள்வாய். அப்போது சொல்கிறேன்”

""இது என்ன கொடுமை தாயே?”

""அடிக்கடி என்னுடன் பேசுவதால் கர்ம விதியில் இருந்து விதிவிலக்கு அளிப்பேன் என நினைத்தாயா? கிடையாது. உனக்கு அளிக்கும் ஒரே சலுகை... தண்டனையிலிருந்து தப்பிக்க சொல்லித் தருகிறேன். விரைவில் சந்திப்போம்.”
மூன்று நாள் ஒன்றும் நிகழவில்லை. நாலாம் நாள் காலையில் உடற்பயிற்சிக்காக தல்லாகுளம் பகுதியில் சைக்கிளில் சென்றேன். சாலையின் இடது பக்கம் செல்ல வேண்டும் என கையைக் காட்டி விட்டு, அருகில் வண்டி எதுவும் வரவில்லை என்பதை உறுதி செய்தபின்னர் திருப்பினேன். அசுரவேகத்தில் வந்த சரக்கு வண்டி என் மீது மோதியதில் தடுமாறி விழுந்தேன். கூட்டம் கூடியது.

அனைவரும் என் சார்பாக பேசியதோடு,  சரக்கு வண்டி ஓட்டியவனை பிரித்து மேய்ந்தனர். தவறு அவன் மீது தான் என தீர்ப்பும் வழங்கினர்.

நான் என்னைப் பார்த்துக் கொண்டேன். கையில் அடிபட்டு ரத்தம் வந்தது. வயிற்றில், இடுப்பில் வலி இருந்தது. மற்றபடி எலும்பு முறிவோ, காயமோ இல்லை. சைக்கிளின் பின் சக்கரம் பெரிய அளவில் சேதமாகி இருந்தது. சரக்கு வண்டிக்காரனைப் பார்த்தேன். அவனது ஏழ்மையை ஆடையே பறைசாற்றியது.  நடந்தது நடந்து விட்டது. இனி தண்டித்து என்ன ஆகப் போகிறது?.

""நீ போப்பா. இங்கே நின்னா ஆபத்து. போயிடு.”

அவனை தடுத்தவர்களையும் விலகியிருக்கச் சொன்னேன். சைக்கிளை நகர்த்த முடியவில்லை. பின் சக்கரம் வளைந்து முறிந்திருந்தது. சக்கரத்தை துாக்கிப் பிடித்தபடி மெதுவாக நடந்தேன்.

""என்ன சாமி  விழுந்துட்டியா?”

காய்கறிக் கூடையைத் தூக்கிச் செல்லும் பெண் அனுதாபப்பட்ட போது எரிச்சல் வந்தது.

""ஆமாம்மா. விழுந்துட்டேன். காயம் பட்டிருக்கு. உன்னால உதவி செய்ய முடியாது. போதுமா?”

""உனக்கு நான் செய்யாமல் வேற யார் செய்வார்கள்?”

சட்டென திரும்பி பார்த்தேன்.

""நானே தான்.”

""தாயே நீங்களா?”

""விபத்து முடிந்தது. அதிலுள்ள பாடத்தை கற்க வேண்டாமா?”

""காத்திருக்கிறேன்...தாயே!”

""அன்று அந்த இரு சக்கர வாகனம் லேசாக மோதியதற்கு எப்படி கூச்சலிட்டாய்? காது கூசும் அளவிற்கு திட்டியது நினைவில் இருக்கிறதா? அன்று உனக்கு காயமும் இல்லை. இன்று ரத்தக் காயம். சைக்கிளும்  சேதமாகி விட்டது. இந்த விபத்துக்கு காரணமாக இருந்தவனை ஏன் திட்டவில்லை? மற்றவர்கள் திட்டிய போது நீ இங்கே இருந்தா ஆபத்து என்ற கரிசனத்தோடு அனுப்பவும் செய்தாயே? காயப்படுத்தியவன் மீது அன்பும் காட்டினாயே ஏனப்பா?”

காரணம் தெரியவில்லை. ஆனால் எனக்கு கண்ணீர் வந்தது.

அனைவரின் மனதிலும் அன்பு இருக்கிறது. ஆனால் அகங்காரம், ஆசை, காமம், கோபம், வஞ்சம் என அழுக்குகள் அன்பை வரவிடாமல் தடுக்கின்றன. அவற்றை நீக்கி அன்பை வரவழைக்கவே சோதனை தருகிறேன்.

""அன்று நீ காயப்படவில்லை. நான் கொடுத்த சோதனையின் அளவு போதவில்லை. அதனால் உன் மனதின் ஆழத்தில் இருந்த அன்பு வெளிவரவில்லை. உன் கார் மீது மோதியவனைக் கொல்லும் அளவிற்குக் கோபம் வந்தது. இன்று நீ காயப்பட்டு ரத்தம் சிந்தியிருக்கிறாய். வேதனை அனுபவித்திருக்கிறாய். இன்று நான் கொடுத்த சோதனையின் அளவு சரியாக இருந்தது. அன்பை மூடிய அகங்காரம், கோபத் திரைகள் அகன்றன. உள்ளேயிருந்து அன்பு பீறிட்டது. உன்னைக் காயப்படுத்தியவன் துன்பப்படக் கூடாது என நினைக்கும் அளவிற்கு உன் அன்பு இருந்தது.

""உன் அன்பை வெளிக்கொண்டு வர இந்தச் சிறு விபத்து போதும். ஆனால் சிலருக்கு இது போதாது.”

""மூளையில் புற்று வந்தவனைப் பற்றி கவலைப்பட்டாயே. அவன் தன் அறிவால் எத்தனை பேரைக் கெடுத்திருக்கிறான் தெரியுமா? மூளையில் புற்று எனத் தெரிந்தவுடன் அவன் அடங்கி விட்டான். அவன் மனதில் இருந்த வஞ்சம் அழிந்தது. தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி பரிகாரம் செய்யலாம் எனத் தீவிரமாக யோசிக்கிறான். அவன் அன்பை மூடிய வஞ்சம், அகங்காரத் திரைகள் விலகி விட்டன.”

""ஒரு சந்தேகம் தாயே! ஒருவேளை இதிலும் என் மனதில் அன்பு வராமல் போய் அவனை திட்டியிருந்தால்?  தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால்?”

""சோதனை இன்னும் கடுமையாகும். விபத்தில் தலைக்காயம் பட்டு உயிருக்குப் போராடும் நிலைக்கு ஆளாக்குவேன். அன்பு என்பது பூமிக்கு அடியில் உள்ள நீரைப் போன்றது. சில இடங்களில் பத்தடி தோண்டும் முன்பே பீறிட்டு வரும். அங்கே பத்தடிக்கு மேல் ஒரு அங்குலம் கூட தோண்ட மாட்டேன். சில இடங்களில் ஐநூறு அடி தோண்டினாலும் நீர் வராது. விடமாட்டேன். மேலும் தோண்டுவேன். மனதின் ஆழத்தில் உள்ள அன்பு வரும் நிலை தான் ஜன்ம சாபல்யம். அதை ஒவ்வொரு ஜீவனும் பெறும் வரை  ஓய மாட்டேன்”

சைக்கிளைக் கீழே தவற விட்டேன். கையிலும், காலிலும் அடிபட்டிருக்கிறது என்பதையும் மறந்து, அந்த தார்ச்சாலையில் அன்னையின் கால்களில் விழுந்து வணங்கினேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar