Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மோகம் என்ற மாயப் பிசாசு
 
பக்தி கதைகள்
மோகம் என்ற மாயப் பிசாசு

அவமானம் அடைந்த சூர்ப்பனகை, தன் சகோதரர்களான துாஷணன், திரிசிரன், கரன் ஆகியோரிடம் முறையிட்டாள். அவர்கள் ராமனுடன் போர் தொடுத்து இறந்தனர். கடைசியாக மூத்த சகோதரனான ராவணனிடம் தஞ்சம் அடைந்தாள்.  சகோதரர்களைக் கொன்றவன் ராமன் எனச் சொல்லாமல் அவனது பலவீனத்தில் அம்பு பாய்ச்சினாள். அரக்க சகோதரர்கள் ஒரு மனிதனால் வீழ்த்தப்பட்டனர் என்பதை விட, சீதையின் பேரழகை அவள் விவரித்ததைக் கேட்டு வீழ்ந்தான் ராவணன்.

இந்திரனுக்கு இந்திராணி, சிவனுக்கு உமாதேவி, திருமாலுக்கு மகாலட்சுமி போல உனக்கு சீதை என்பது தான் பொருத்தம்.  அவளுக்குப் பொருத்தமானவன் நீயே. அவளுடன் இருக்கும் ராமன் நம் சகோதரர்களை வதம் செய்தான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அவனை விட வல்லவனான உனக்கே சீதை நல்ல துணையாக இருப்பாள். எப்படியாவது அவளைக் கவர்ந்து விடு. அந்த ராமனை எனக்குத் தந்து விடு” என்றாள்.

ஏற்கனவே மிதிலாபுரியில் வில் வளைக்கும் போட்டியில் தோற்று, சீதையைத் திருமணம் செய்ய முடியாமல் போனவன் தான் ராவணன். தன்னைத் தவிர வேறு யாரும் சீதையை மணக்க முடியாது என இருந்த நிலையில் அவள் காட்டுக்கு வந்திருப்பதை தங்கை மூலம் அறிந்தான். இதுவே சீதையை அடைய நல்ல சந்தர்ப்பம் என நினைத்தான்.

ராமனைத் தாக்கிய தன் சகோதரர்கள் வதைபட்டதையும், சூர்ப்பனகை மூலமாக ராவணன் அறிந்தான். சீதையிடம் தன் பராக்கிரமத்தை விவரித்து, இலங்கைக்கு அவளை அதிபதியாக்கி விடுவதாக ஆசை காட்டி தன் வசப்படுத்த தீர்மானித்தான்.    

ஆனால் ராமனுடன் இருக்கும் போது இத்திட்டம் சாத்தியம் இல்லை என்பதால் இருவரையும் பிரிக்க திட்டமிட்டான். முக்கியமாக சீதைக்கு ஆசை காட்டி அடிமையாக்க நினைத்தான். மிதிலாபுரியின் இளவரசியாக சுகங்களை அனுபவித்தவள் இப்போது பரிதாபமுடன் காட்டில் காலம் கழிக்கிறாளே... அரண்மனையில் சுகமாக வாழ்ந் தவள், காட்டில் வாழ விரும்ப  மாட்டாளே... ஒருவேளை ராமனின் கட்டாயத்தால் தான் சீதை காட்டுக்கு வந்தாளோ? ராஜ வாழ்க்கை தருவதாகச் சொன்னால் மறுப்பாளா என்ன?

ஒரு பெண் இயல்பாக பார்த்தால் கூட, தன்னை விரும்புவதாக கருதும் காமுகனாக ராவணன் இருந்தான். காமம் என்பது தனக்குச் சாதகமாக கற்பனை செய்யுமே தவிர, உண்மையை உணராது.  

ராவணன் எண்ணத்தை வளர்க்கும் விதத்தில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் சீதையின் அழகை விவரித்தாள் சூர்ப்பனகை.   

ராவணன் திட்டமிட்டான். தந்திரத்தால் ராமனை திசை திருப்பி  சீதையைக் கடத்த வேண்டும். அவளுக்குப் பொன், பொருளை வாரிக் கொடுத்து தன்வசப்படுத்த வேண்டும் என நினைத்தான்.

தன் மாயத் தோற்றத்தால் எதிரியைக் கலங்கடிக்கும் மாரீசனின் உதவியை நாடினான்.

ராம பாணத்தின் பலத்தை நேரில் கண்டவன் இந்த மாரீசன். காட்டில் விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்தைக் குலைக்க தன் சகோதரன் சுபாகுவுடன் ஈடுபட்ட போது ராம பாணத்தால் கடலை நோக்கி வீசப்பட்டான்.

தன்னை அப்படியே  தள்ளிக்கொண்டே போய்க் கடலில் ஆழ்த்திய விசித்திரம் கண்டு வியந்தான். சாகடிக்காமல் ஏன் தப்பிக்க வழி செய்தான் ராமன் என அப்போது மாரீசனுக்கு புரியவில்லை.  

அதை ராவணன் புரிய வைத்தான். தனக்குச் சாதகமாகவும், ராமனுக்கு எதிராகவும் செயல்படவேண்டும் என ராவணன் கேட்டபோது மாரீசனுக்கு புரிந்தது. உயிர்ப்பிச்சை அளித்த ராமனுக்கு எதிராக, சீதையை அபகரிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானான்.

நான் செய்த அட்டூழியங்களைப் பொறுத்துக் கொண்டு என்னைக் கொல்லாமல் விட்டவன் ராமன். அதனால் உனக்கு  உதவ முடியாது” என மறுத்தான் மாரீசன்.

இதுநாள் வரை உன்னை வளர்த்தவன் நான் என்பதை மறந்து விட்டாயா?
செஞ்சோற்றுக்கடன் கழிக்க வேண்டியவன் நீ! என் எதிரியிடம் சோரம் போய் விட்டாய்.  ராமனால் கொல்லப்படவில்லை என மகிழ்கிறாயே! எனக்கு உதவாவிட்டால் என்னால் கொல்லப்படுவாய் என்பதை மறக்காதே.”

மாரீசன் மன்றாடியும் ராவணன் கேட்பதாக இல்லை. என்ன செய்வாயோ, எனக்குத் தெரியாது, எப்படியாவது சீதையை  மயக்கி வரவழைப்பது உன் பொறுப்பு. அதன் பிறகு அவளை நான் வசியம் செய்வேன்,” என ஆணையிட்டான்.

ராமன் வதம் செய்யவே தான் பிறந்ததாக சமாதானப்படுத்திக் கொண்டான் மாரீசன். அழகிய பொன் மானாக மாறி  சீதையின் முன் நடமாடினான். ராவணன் எதிர்பார்த்தபடி சீதையும் மான்மீது ஆசை கொண்டாள். அதைத் தனக்குரியதாக ஆக்க விரும்பினாள். மானைப் பிடித்துத் தருமாறு கெஞ்ச, முதலில் மறுத்தாலும், சற்று நேரத்தில் மானைத் துரத்தியபடி  ஓடினான் ராமன்.

அப்போது சீதைக்கு காவலாக லட்சுமணன் இருந்தான். அப்போது லட்சுமணா... சீதா என மாயக்குரல் கேட்டது. சீதையின் வற்புறுத்தலால் லட்சுமணன் வருத்தமுடன் ராமனை நோக்கி ஓடினான். அப்போது அங்கு மாரீசன் கொல்லபட்டான். இந்த சமயத்தைப் பயன்படுத்தி தனியாக இருந்த சீதையை கடத்தினான் ராவணன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar