Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சூழ்நிலைக் கைதி!
 
பக்தி கதைகள்
சூழ்நிலைக் கைதி!

ரகுவிற்கு நாற்பது வயது. குடும்ப நண்பரின் மகன். அரசுத் துறையில்  பணிபுரிகிறான். நல்லவன். நேர்மையானவன்.  “அண்ணா! எங்க ஆபீஸ்ல லஞ்சம் தலைவிரிச்சாடுது. ஒழுங்கா இருக்கலாம்னு  பாத்தாலும் விடமாட்டேங்கறாங்க. லஞ்சத்துல பங்கு வாங்கலேன்னா  பொய்க்  கேஸ்ல மாட்டிவிட்ருவேன்னு மிரட்டறாங்க. சூழ்நிலைக் கைதியா இருக்கற  எனக்கு எப்ப தான் விடுதலை கெடைக்கும்?”

ரகு சென்ற பின்னும் அவனது வார்த்தைகள் என் காதில் ஒலித்தன.
மறுநாள் காலை நடைப்பயிற்சிக்காகப் மைதானத்தை ஒட்டி நடந்தபோது  விளையாட்டு உடையில் இருந்த ஒரு இளம்பெண் என் கையைப் பிடித்தாள்.   கோபத்துடன் பார்த்தேன். அழகாகச் சிரித்தாள் அவள்.

“என்ன சூழ்நிலைக் கைதி விவகாரம் மனதைக் குடைகிறதோ?”

“தாயே, நீங்களா?”

“நானே தான். அதைப் பற்றிப் பேசுவோமா?”

“காத்திருக்கிறேன்... தாயே!”

“ரகுவைப் போலவே ஒரு சூழ்நிலைக்கைதியைக் காட்டுகிறேன்.. பார்.”

சென்னையில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனை. நள்ளிரவு நேரம். ஆம்புலன்ஸ்  வாகனம் ஒன்று அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலுக்கு வேகமாய் வந்தது. ஐம்பது வயதான ஒருவரை ஸ்டிரெச்சரில் துாக்கிக்கொண்டு  ஓடினார்கள். அந்த நபரின் மனைவியும் பிள்ளையும் கதறியபடி பின்னால் ஓடினர்.

பணியில் இருந்த இளம் மருத்துவர் நோயாளியைப் பரிசோதித்தார்.  அது மூளை  சம்பந்தப்பட்ட விவகாரம் எனத் தெரிந்தவுடன்  நரம்பியல் நிபுணரான சுந்தரத்தை அலைபேசியில் அழைத்தார்.

உடனே அங்கு வந்தார் சுந்தரம். நோயாளியைப் பார்த்ததும் அது பக்கவாதத்தின்  ஆரம்பக் கட்டம் எனக் கண்டுபிடித்தார்.  

“சிஸ்டர், எம்.ஆர்.ஐ., ஸ்கேனுக்கு ஏற்பாடு பண்ணுங்க.”

பத்து நிமிடத்தில் ஸ்கேன் முடிவுகள் கிடைத்தன. சுந்தரத்தின் அனுமானம் சரி  தான்.

“சிஸ்டர்... டி.பி.ஏ., போடணும். ஏற்பாடு பண்ணுங்க. நான் அதுக்குள்ள இவரோட  மனைவியிடம் பேசிட்டு வர்றேன்.”

“சாமி” எனக் கதறியபடி காலில் விழுந்தாள் நோயாளியின் மனைவி.

“அந்த மீனாட்சி கால்ல விழுங்க. அவ உங்க புருஷனைக் காப்பாத்திட்டா.”

“என்ன சொல்றீங்க டாக்டர்?”

“அவருக்கு வந்திருக்கறது பக்கவாதம். மூளைக்குப் போற ரத்த நாளங்கள்ல  அடைப்பு இருக்கு.”

“ஐயையோ!”

“பதறாதீங்க... நீங்க நேரத்துக்கு வந்துட்டீங்க. டி.பி.ஏ., ஊசி போட்டாப் போதும்  சரியாயிடும்..”

“பக்கவாதம் வந்தா ஒரு பக்கம் இழுத்துக்கும், பேச முடியாதுன்னு  சொல்றாங்களே!”

“இந்த ஊசி போடலேன்னா அதெல்லாம் ஆகும். ஆனா இவருக்கு ஒண்ணும்  ஆகாது. ஆபீஸ்ல விசாரிச்சிப் பணத்தக் கட்டிருங்க. நாங்க ஊசியத் தயாரா  வச்சிருக்கோம்.”

நோயாளியின் மனைவியும், மகனும் நூறு அடி தள்ளியிருந்த அந்த  மருத்துவமனையின் காசாளரிடம் ஓடினர்.  

சுந்தரம் நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.  ஊசி மருந்தும் தயாராக  எடுத்து வைத்தாள் நர்ஸ்.

“டாக்டரய்யா! காப்பாத்துங்க.” என்று பெரிய சத்தம் கேட்டதும் பதறியபடி  வெளியே வந்தார் சுந்தரம்.

“ஐயா அந்த ஊசியோட விலை 80 ஆயிரம் ரூபாயாமே!”

“உயிரைக் காப்பாத்தற ஊசிம்மா. அதுதாம்மா அதோட விலை”

“ஐயா இப்போ எங்ககிட்ட அவ்வளவு பணம் இல்லங்க. எப்படியும் ரெண்டு நாள்ல  பணத்தைப் புரட்டிக் கொடுத்துடறோம்யா.  உடனே என் புருஷனக்  காப்பாத்துங்கய்யா.”

அந்தப் பெண் கதறினாள். காசாளரைப் போனில் அழைத்தார் சுந்தரம்.

“காசு கட்டாம எதுவும் செய்ய முடியாது, டாக்டர். இவங்களுக்கு இன்சூரன்ஸ்  கிடையாது. சொத்து பத்தும் அதிகம் இல்லை.”

“ரெண்டு நாள்ல பணம் வந்துரும். அதுக்கு நான் கேரண்டி.”

“ஏற்கனவே இந்த மாதிரி கேரண்டி கொடுத்து உங்க கணக்குல அஞ்சு லட்ச  ரூபாய் பற்று இருக்கு. இனிமே உங்க கணக்குல  தரக் கூடாதுன்னு டீன்  கண்டிப்பாச் சொல்லிட்டாரு.”

அருகே காலியாக கிடந்த அறைக்குள் சென்றார் சுந்தரம்.  பைக்குள் இருந்த  மீனாட்சியம்மன் படத்தை எடுத்துப் பார்த்தார்.

வந்திருப்பவருக்கு என்ன நோய் என துல்லியமாகக் கண்டுபிடித்தாகி விட்டது.  அதைத் தீர்க்கும் மருந்தும் கையில்  இருந்தது.  நோயாளியின் உயிரைக்  காப்பாற்றும் அறிவும் வல்லமையும் சுந்தரத்திடம் இருந்தது. ஆனால்  நோயாளியிடம் பணம் இல்லையே! அந்த ஒரே காரணத்தால் ஒரு மனிதன், ஒரு  கணவன். ஒரு தகப்பன், ஒரு சகோதரன் அநியாயமாக ஐம்பது வயதில் சாகப்  போகிறான்.  நரம்பியல் மருத்துவரான சுந்தரம் அதை வேடிக்கை பார்த்துக்  கொண்டிருக்கப் போகிறார். சுந்தரம் சூழ்நிலைக் கைதியானார்.

திடீரென மீனாட்சி படத்தைப் பார்த்து ஆவேசத்துடன் கத்தினார்.

“சொக்கி! இதுவரை எனக்கு அது வேணும் இது வேணும்னு என கேட்டதே  இல்லடி. இப்போ நோயாளிக்காக உன்கிட்ட மடிப்பிச்சை கேக்கறேன். என்கிட்ட  இருக்கற எதை வேணும்னாலும் எடுத்துக்கோ. இவரு உயிரைக் காப்பாத்த ஒரு  வழியக் காட்டுடி.”

சுந்தரத்தின் மனதில் ஒரு மின்னல். மருத்துவமனைக் காசாளரைத்  தொலைபேசியில் அழைத்தார்.

“மிஸ்டர் நாகராஜன்! இவர் ஸ்டிரோக் பேஷண்ட். என் கட்டுப்பாட்டுல இருக்காரு.  இவருகிட்டக் காசு இல்லாட்டி இவர உடனே தூக்கி வெளியே போடுங்க.  உங்களுக்குச் சரியாப் பத்து நிமிஷம் டைம் தரேன். அதுக்கு மேலயும் இவர் இங்க இருந்தார்னா நான்  டி.பி.ஏ., ஊசியைப் போட்ருவேன். பணத்த வசூல் பண்றது  உங்க தலையெழுத்து.”

இணைப்பைத் துண்டித்தார் சுந்தரம்.

நாகராஜன் வெலவெலத்துப் போனான். நோயாளியை  அறையை விட்டு  நகர்த்துவது  பெரிய ஆபத்தாகி விடும்.  நோயாளி இறந்தால் கூடப்  பரவாயில்லை. அவருக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டு விட்டால் மருத்துவமனையைப் பிரித்து மேய்ந்து விடுவார்கள். மேலதிகாரியிடம் விஷயத்தை தெரிவித்தான்  நாகராஜன்.

“அப்படியே விட்ரு நாகராஜு... காசு வரலேன்னாப் பழியத் துாக்கி அந்த டாக்டர்  மேலே போட்ருவோம். நீ பேஷண்ட அந்த இடத்த விட்டு நகத்தாத.  பிரச்னையாயிரும்.”

சரியாகப் பத்தாவது நிமிடம் டி.பி.ஏ., ஊசியை அந்த நோயாளிக்குப் போட்டார்  சுந்தரம். நோயாளி உயிர் பிழைத்தார்.

சுந்தரம் தனியறையில் அமர்ந்தபடி அழுதார்.

“தாயே! சூழ்நிலைக் கைதியாகத் தவித்த என்னை விடுவித்து நிம்மதி தந்தீர்கள்.  கையில் பணமில்லாத காரணத்திற்காக ஒரு மனிதன் இறப்பதைத் தடுத்து  நிறுத்த வழி காட்டினீர்கள்.”

இரண்டாவது நாளே நோயாளியின் உறவினர்கள் பணத்தைக் கட்டினர்.

“தாயே! உங்களின் வீர தீரத்தைக் கூட  வர்ணிக்க முடியும். ஆனால் உங்கள்  அன்பிற்கு உவமை சொல்ல எதுவும் இல்லையம்மா.”

“என்னைப் புகழ்வது இருக்கட்டும். நீ படிக்க வேண்டிய பாடத்தைக் கோட்டை  விட்டுவிடாதே.  நல்லவர்கள் சூழ்நிலைக் கைதியாகும் போது மனதிலுள்ள  அன்பை அதிகப்படுத்த வேண்டும்..”

“உங்களைச் சரண்புக வேண்டும் எனச் சொல்லுங்களேன்.”

“இரண்டும் ஒன்று தான்.”

“சரி, என்னிடம் புலம்பிய ரகுவிற்கு என்ன வழி?”

“தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு அவனை அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்  துறைக்கு மாற்றுவர்.  அங்கே லஞ்சம் வாங்குவது கடினம். அப்போது ரகு தன்  உதவியை நாடுவேரிடம் தன்னலமற்ற அன்பு காட்டுவான். நிறைவான வாழ்க்கை  வாழ்வான். உரிய காலத்தில் என்னிடம் அடைவான்.”

“இதையெல்லாம் அவனிடம்..”

“சொல்ல வேண்டாம். கவலைப்படாமல் இருக்கச் சொல். மற்றதை நான்  பார்த்துக்கொள்கிறேன்.”

பச்சைப்புடவைக்காரி இருக்கும் போது நமக்கு கவலை எதற்கு?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar