Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வரதா வரம்தா...
 
பக்தி கதைகள்
வரதா வரம்தா...

ராமானுஜரின் மந்திர உபதேசத்தால் அன்று திருக்கோஷ்டியூரில் கூடிய  அனைவருமே தேவர்களாயினர். கனத்த குரலில் பக்தி உணர்வுடன் ராமானுஜர்  சொல்லச் சொல்ல கூட்டத்தினர் மவுனமாக கேட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.  அந்த மந்திர உபதேச நிகழ்வு ஊருக்குள்ளும் காட்டுத்தீ போல பரவ பலரும்  ஓடோடி வந்தனர். மொத்தத்தில் அன்று திருக்கோஷ்டியூரில் இருந்தவர்கள்  அவ்வளவு பேருமே கொடுத்து வைத்தவர்கள் ஆயினர்.

அஷ்டாட்சரமும் உலகப் பொதுவாகி அங்குள்ளோர் காதுகளில் மட்டுமின்றி,  கோபுரத்தில் இருந்த புறாக்களின் காதுகளிலும் விழுந்து அவைகளுக்கும் பரகதி  கிடைத்திட காரணமானது.

ராமானுஜரின் இந்த செயல்பாடு ஆச்சார்ய நம்பியின் செவிகளை அடையவும்  அவர் அதிர்ந்தார். சினம் அவரைக் கவ்விக் கொண்டது.

”என்ன ஒரு தைரியம்... இப்படி ஊருக்கே சொல்லவா நான் உபதேசித்தேன்? இது  என்ன பிரசாதமா அனைவருக்கும் வழங்கிட... ஆத்ம விசாரம் உள்ளவர்கள்  மட்டுமே அறிய வேண்டிய ஒன்றல்லவா?” நம்பி சிடுசிடுத்தார். அவருக்கு தகவல்  அளித்தவர்கள் அவரை மேலும் தூண்டினர்.

”நீங்கள் அப்புறம் பார்க்கலாம் என பலமுறை சொல்லியும் விடாமல் வந்த  போதே தெரியும்...இவன் நம் போன்றவன் அல்ல என்று...!”

”உபதேசம் பெற்ற மறுநிமிடமே தன்னை ஆச்சார்யனாக வரித்து விட்டானே...  என்ன பேராசை?”

”இவன்   போன்றவர்களை  சும்மா விடக் கூடாது. விட்டால் வைணவ  சித்தாந்தத்தையே  ஏலம் போட்டு விடுவான்...”

இப்படி விமர்சனம் எழுந்த நேரத்தில் ஒருவர், ”அவனை அப்படியே கட்டித்
தூக்கி வரவா?” எனக் கேட்டார்.

’அதற்கு அவசியமில்லை’ என்றொரு குரல்!

திரும்பினால் ராமானுஜரே நின்றிருந்தார்! எல்லோரிடமும் அதிர்வு மட்டுமல்ல,  ஆச்சரியமும் கூட...

”என்ன தைரியம் உனக்கு? ஆச்சார்யன் பேச்சைக் கேளாமல் தன்னிச்சையாக  நடந்தது மட்டுமின்றி, இப்போது அவரைக் காண நேரிலேயே வந்து விட்டாயா?  உன் மனதில் என்ன வீரதீரன் என்ற எண்ணமா?” என எகிறினார் ஒருவர்.
ராமானுஜர் முகத்தில் பதிலுக்கு யாதொரு சலனமும் இல்லை.

”எங்கு வந்தாய்... இன்னும் என்ன உள்ளது என அறிய வந்தாயா?” என ஒருவர்  கீறி விட்டார்.

”ஆச்சார்யனிடம் மன்னிப்பு கேட்க வந்திருக்கிறேன்” என்றார் ராமானுஜர்.
ஆச்சார்ய நம்பியும் அதைக் கேட்டு ஆச்சர்யமுடன் ராமானுஜரைப் பார்த்தார்.  ராமானுஜரும் பணிவுடன், ”ஆச்சார்யன் திருவடிகளில் என் அனந்தமான  தெண்டனிட்ட விக்ஞாபனங்கள். தங்களின் கட்டளையை நான் மீறியதற்காக  மன்னிக்க வேண்டுகிறேன்” என்றார்.

”மன்னிப்பா...மன்னிப்பதால் நீ செய்த தவறு சரியாகும் எனக் கருதுகிறாயா?”

”உங்கள் கட்டளையை மீறியதே நான் செய்த தவறு. ஆனால் மந்திரம்  உபதேசித்ததில் தவறில்லை. அதை என் கடமை”

”இது என்ன புது வியாக்யானம். கட்டளை என்பதே மந்திர உபதேசம் என்பது  ஆச்சார்யன் மூலம் மட்டுமே நடக்க வேண்டும் என்பது தானே?”

”இப்போதும் அப்படித் தானே நடந்துள்ளது...?”

”அப்படியானால் நீ உன்னை ஆச்சார்யனாக கருதி விட்டாயா?”

”என்னை அப்படி கருதுவோரும் உள்ளனரே?”

”அப்படியானால் நரகம் புகுவாயே – அவர்களும் உடன் வருவார்களா?”

”என்னையன்றி ஒருவர் கூட நரகம் புகக் கூடாது. அனைவருக்கும்  எம்பெருமானின் திருவடிகளில் இளைப்பாறல் கிட்ட வேண்டும். அதுவே என்  விருப்பம்?”

”என்ன உளறுகிறாய்?”

”எம்பெருமானின் மந்திர உபதேசமே பிறவித்தளையை நீக்கத் தானே  அருளப்படுகிறது? அப்படியிருக்க உபதேசம் பெற்றவர்களுக்கு ஏன் நரகதி  வாய்க்கும்?”

”உனக்கு கிட்டாத நிலையில் அவர்களுக்கு எப்படி கிடைக்கும் என நம்புகிறாய்?”

”உங்கள் கட்டளையை  மீறியதால் எனக்கு நரகம். ஆனால் நான் எவரிடமும் அது  போல கட்டளையிடவில்லையே? அப்படியிருக்க மற்றவருக்கு எப்படி நரகதி  ஏற்படும்? அத்துடன் அவர்கள் உபதேசம் பெற்றவர்கள்– அவர்களுக்கு பரகதி தான்  உறுதியாகி விட்டதே...?”

ராமானுஜரின் இக்கேள்வி ஆச்சார்ய நம்பியை சிந்திக்க வைத்ததோடு  சிலிர்க்கவும் வைத்தது. நெடுநேரம் மவுனமாக உற்றுப் பார்த்தவர் ”ராமானுஜா...  என்ன சொல்கிறாய்? தெளிவாகச் சொல்” என்றார் சற்றே மிருதுவான குரலில்.
”சுவாமி.. நான் ஒருவன் நரகம் போனாலும், மந்திர உபதேசம் கேட்க கொடுத்து  வைத்த அனைவரும் பரகதிக்கு செல்வரே? பலருக்கும் பரகதி கிடைக்குமாயின்  ஒருவர் நரகதி அடைவதில் தவறேது?”

”அப்படியானால் உனக்கு நரகதி என்பதில் வருத்தமில்லையா?”

” பலருக்கும் பரகதி கிடைத்த மகிழ்ச்சியின் முன் என் நரகதிக்கான துன்பம் ஒரு  துன்பமா சுவாமி?”

”ராமானுஜா”  எழுந்தார் நம்பி.

”சுவாமி”

”என் அகக் கண்களைத் திறந்தாய்”

”நானா.. பெரிய வார்த்தை எதற்கு சுவாமி”

”பெரிதாக பாராட்ட வேண்டிய உன்னை உட்காரக் கூடச் சொல்லாமல்  அவமதித்தேனே.. முதலில் அமர்வாயாக! பின் என்னை மன்னிப்பாயாக”

”சுவாமி.. தாங்களா இப்படி பேசுவது? உங்களால் அல்லவா என் அறியாமை  அகன்றது. என்னைச் சலவை செய்த மகான் தாங்கள். இன்று பலரும் பரகதிக்குச்  செல்ல நான் ஒரு கருவி தானே... நீங்கள் தானே ஆதிமூலம்?”

”ராமானுஜா... உண்மையில் நீ அசாதாரணன்! மகா உத்தமன்... தனக்கென  வாழாதவன்... சொல்லப்போனால் வைணவச் சூரியன்!”

”இவைகளை எல்லாம் தங்களுக்கே அர்ப்பணிக்கிறேன் சுவாமி. என்னை  மன்னித்தேன் என்று மட்டும் சொல்லுங்கள்”

”உன்னை நான் மன்னிப்பதா? பின்னை எவர் மன்னிப்பர்?”

”சுவாமி.. தங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் என்றும் என் ஆச்சார்யன்;  நான் என்றும் எப்போதும் உங்கள் மாணவனே!”

”மகிழ்ச்சி ராமானுஜா. மிக்க மகிழ்ச்சி! நான் உனக்கு ஆச்சார்ய குரு தான். எது  எனக்கான பேறு....ஆனால் நீ  இந்த உலகிற்கே குருவாக ஆகி விட்டாய்!  பரகதிக்கான மந்திரத்தை எனக்கு பாதுகாக்கத் தான் தெரிந்திருக்கிறது. உனக்கோ  அதை உலகத்திற்காக பயன்படுத்தவும் தெரிந்திருக்கிறது. உன்னால் என் எல்லை  விரிந்தது. நான் என்னும் மமகாரம் நீக்க உன்னை பலமுறை நடக்கச் செய்தேன்.  மமகாரத்தை மட்டுமின்றி உன்னையே இழக்கத் துணிந்து உதாரண புருஷனாகி  விட்டாய். ஒளி தரும் விளக்கின் அடியிலும் துளியிருள் இருப்பது போல, உன்  முன்னால் நான் அஞ்ஞானியானேன். பகலவன் போல் நீ வரவும் என் துளி  இருளும் விலகிற்று! இப்போதும் சொல்கிறேன்... நீயே உத்தம ஸ்ரீவைஷ்ணவன்.  உத்தம ஆச்சார்யன், உத்தமத் தவசீலன், உத்தம மானுடன்,  உத்தம பெருஞ்சீடன்! பஞ்ச பூதங்கள் போல பஞ்சமச் சிறப்பு பெற்ற உன்னால் இந்த மண்ணுலகம்  சிறக்கட்டும். செழிக்கட்டும். உன்னை சிந்திப்பவர், உன் பெயர் சொல்பவர், உன்  வழி நடப்பவர், ஏன் உன்னை உணராதவர் கூட உன் பொருட்டு குருவருள்  பெற்றிடட்டும். அவர்களின் வாழ்வு சிறக்கட்டும்”

ஆச்சார்ய நம்பி மனம் நெகிழ்ந்து வாழ்த்தினார். ராமானுஜர் அவர் திருவடி  பணிந்து எழுந்தார். அப்படியே திரும்பவும் காஞ்சி நோக்கி பயணமானார்!
வழியெங்கும் ஆச்சார்ய ராமானுஜருக்கு கோலாகல வரவேற்பு! காஞ்சியை  அடைந்த ராமானுஜர் முதலில் சென்று நின்றது அருள்மிகு வரதராஜனிடம் தான்!  அங்கு உள்ளவர்கள் ராமானுஜரைப் போற்றினர். அப்படியே அஷ்டாட்சர முழக்கம்  இட்டனர். பின் சிலர் ராமானுஜரிடம், ”பாடுபட்டு மந்திர உபதேசம் பெற்று, அதை  உலகிற்கே பொதுவாகவும் ஆக்கி விட்டீர்கள்... இந்த வேளையில் தங்கள் மூலம்  உபதேசத்தை நாங்களும் பெற விரும்புகிறோம்” என்றனர்.

ராமானுஜரும் திருவாய் மலர்ந்தார்.   ”அருமை பெருமக்களே! உங்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே உபதேசிக்க தயாராக  இருக்கிறேன். அது என் கடமை. உங்களுக்கும் கடமை இருக்கிறது.  எம்பெருமானாலேயே நான், நீங்கள், நாம் எல்லோரும் இருக்கிறோம். இந்த  கலியுகத்தில் நம்மைச் சோதிக்கும் விதமாக தன்னையே சக்தியற்றவன் போல்  ஆக்கிக் கொண்டும் அவன் செயல்படுவான். அது போன்ற தருணங்களில் நாம்  காட்டும் மனஉறுதியும், பக்தி விசுவாசமுமே, வரும் தலைமுறைக்கு பாடமாகி  உலகம் தழைக்க வழி செய்யும். எனவே சுயநலமின்றி தியாகம் புரிய  தயாராகுங்கள்” என்றார். இங்கே ராமானுஜர் கூறியதில், ’வரும் நாட்களில் பெரும் சோதனை ஒன்று  நடக்கப் போவது’ போல் ஒரு அறிகுறியை காட்டியதை அங்கிருந்த சிலர் சற்று  அதிர்ச்சியுடன் உணர்ந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar