Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இறைவியும் தாயும்!
 
பக்தி கதைகள்
இறைவியும் தாயும்!

வருமானவரி ஆணையரின் முன் அமர்ந்திருந்தேன்.  ஒரு சிக்கலான வழக்கின்  மேல் முறையீட்டு விசாரணை அது. வேலை முடிந்ததும் ஆணையர் வேறு  விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

""எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது ஆடிட்டர் சார். நாத்திகனா  வாழ்ந்துட்டேன். ஆனா உங்க எழுத்தைப் படிக்கும் போது கடவுளை நம்பினா  என்னன்னு தோணுது. கடவுள் நம்ம மேல வச்சிருக்கற அன்பை என்னால உணர  முடிஞ்சா எனக்கு நம்பிக்கை வந்துரும். நான் கடவுளை உணரணும். நான்  கடவுளப் பார்க்கணும். அதுக்கு உங்க உதவி தேவை”ஒருவருக்குக்  கணக்குப்  பாடம் புரியவில்லை என்றால் சொல்லிக் கொடுக்கலாம்.
கவிதைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் அகராதியின் உதவியோடு புரிய  வைக்கலாம். கடவுளை உணரச் செய் என்றால் என்ன செய்வது?

"இப்போதே என் மனதில் காதல் வர வேண்டும் என்றால்? காதல் என்ன கணக்குப்  பாடமா, சொல்லித் தர? இல்லை... கடைச்சரக்கா வாங்கித் தர?

""கொஞ்சம் அவகாசம் கொடுத்தால்...”

""அடுத்த மாசம் பத்தாம் தேதி வரை அவகாசம் தருகிறேன்”
எனக்கு குலை நடுங்கியது. நான் எப்படி கடவுளை உணர வைப்பேன்?  இல்லாவிட்டால் என் வாடிக்கையாளரின் கதையைக் கந்தலாக்கி விடுவாரோ  இவர்! மனதில் எழுந்த பயத்தையே பச்சைப்புடவைக்காரிக்குப் பூஜைப்  பொருளாக்கி விட்டு நிம்மதியாக வெளியேறினேன்.

இன்னும் இரண்டு நாளில் ஆணையர் கொடுத்த கெடு முடிகிறது. அன்று மாலை  மீனாட்சி கோயிலுக்குப் போயிருந்தேன். செருப்பை அதன் இடத்தில் போட்டு  விட்டுப் போக முயன்றேன். பணியிலிருந்த பெண்மணி தடுத்தாள்.

""செருப்பை விட்டுட்டுப் போறீங்க?”

""வேற என்ன செய்யணும்? நானே அதை எடுத்து வச்சிட்டு டோக்கன்  எடுக்கணுமா?”

""உன் கெடு முடிய இரண்டே நாள் தானே இருக்கு. என்னைப் பார்க்காமல்  போனால் அவனுக்குக் கடவுளை எப்படிக் காட்டுவாய்?”

""தாயே!”

""வா அங்கே போய் அமர்ந்தபடி பேசலாம்.”

அவள் காலடியில் அமர்ந்து அவளின் அழகு முகத்தைப் பார்த்தபடியே  அருள்மொழிகளைக் கேட்பதைப் போல சுகம் வேறில்லை.

""அங்கே தெரியும் காட்சியைப் பார்.”

மன்னராட்சி நடந்த காலம். காலை நேரம். நாட்டின் மன்னர் அரண்மனை  உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்தார்.

அரண்மனையை விட்டுச் சற்றுத் தள்ளி கடைத்தெரு இருந்தது. தெருவில் நல்ல  கூட்டம். ஒரே இரைச்சல். மக்கள் அங்கும் இங்கும் பரபரப்புடன் இயங்கினர்.  அதற்கு நடுவே காவி உடையுடன் துறவி ஒருவர் அமைதியாக நடந்தார். ஆழ்ந்த  பரவச நிலையில் இருப்பது முகத்தைப் பார்த்தாலே புரிந்தது.

மன்னர் அவரையே பார்த்தார். கடைத்தெருவின் பரபரப்பு தன் மீது படாமல் துறவி  தன் போக்கில் நடந்தார். சேவகர்களை அழைத்த மன்னர், ""அதோ தெரிகிறாரே  துறவி, அவரை நிற்கச் சொல்லுங்கள். என் குதிரையைக் கொண்டு வாருங்கள்.  நான் அவரை தரிசிக்க வேண்டும்.”

மூன்றாவது நிமிடம் மன்னன் துறவியின் முன் நின்றார்.

குதிரையிலிருந்து இறங்கி துறவியைப் பார்த்துக் கைகூப்பினார் மன்னர்.  ஆசீர்வதித்தார் துறவி.

""என் மனதை அரிக்கும் கேள்விக்கு நீங்கள் தான் விடை சொல்ல வேண்டும்.”

""என்ன கேள்வி?”

""கடவுளை உணர வேண்டும். அதுவும் விரைவாக. என்ன வழி?”

""இதற்கு ஏற்கனவே விடை தெரியுமே, மன்னா!”

""என்ன சொல்கிறீர்கள்?”

""நான் துறவி. இந்த நாட்டின் சாதாரண குடிமகன். உங்களுக்கு ஒரு பைசா கூட  வரி செலுத்தாத ஆண்டி. நாடாளும் மன்னரை நான் காண வேண்டும் என  விரும்பினால் அது நடக்குமா? முதலில் ஒரு குட்டி அதிகாரியைச் சந்திக்க  வேண்டும். அவன் மனது வைத்தால் அடுத்த கட்டம். இப்படியே ஒரு மாதம்  இழுத்தடிப்பார்கள். அப்படியும்  பார்க்க விடுவார்களா என உறுதி இல்லை.

ஆனால் பாருங்கள். என்னைக் காண வேண்டும் என நினைத்ததும் சில  நிமிடத்திலேயே பார்த்துவிட்டீர்கள். அதே போல் நம்மைப் பார்க்க வேண்டும் என  கடவுள் நினைத்தால் அடுத்த கணமே இறையுணர்வு நமக்குள் வந்து விடும்.  கடவுளே தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவரைப் பார்க்க  முடியும்.”

""அது சரி, கடவுளுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி  வரும்?” துறவி சிரித்தார்.

""மன்னா! என்னைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி  வந்தது? இந்தக் கடைத்தெருவில் ஆயிரக்கணக்கில் மனிதர்கள் செல்லும் போது  என்னை மட்டும் பார்க்க வேண்டும் என ஏன் ஆசைப்பட்டீர்கள்?”

""தெரு முழுக்க கடைகளில் தின்பண்டம், ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப்  பொருட்கள் நிறைய இருக்கின்றன. அழகான பெண்கள் பலர் இருக்கிறார்கள்.  இவற்றை லட்சியம் செய்யாமல் தனி உலகத்தில் நீங்கள் இருந்தீர்கள்.
கடைத்தெருவின் இரைச்சல் உங்களின் அமைதியைக் குலைக்கவில்லை.  இங்குள்ள போகப் பொருட்களில் மனம் சலனப்படாமல் உங்கள் போக்கில்  போனீர்கள். அந்த மனநிலையே உங்களை உடனே பார்க்க வேண்டும் எனத்
தூண்டியது.”

""மன்னா! அதே போல எந்த நேரமும் கடவுளைப் பற்றிய நினைவில் மூழ்கினால்,  அந்த நிலை அளவிடமுடியாத பரவசத்தைக் கொடுக்க முடிந்தால் கடவுளுக்கு  உங்களைக் காண வேண்டும் என்ற நினைப்பு வந்து விடும். இந்தக் கடைத்தெரு  தான் உலகம்.  

இந்த உலக இன்பங்களில் மனம் அலையாமல் இருந்தால், கடைத்தெருவில்  கிடைக்கும் பொருட்களில் மயங்காமல் இருந்தால் உங்களைப் பார்க்கும் எண்ணம் கடவுளுக்கு வந்து விடும். உடனே உங்களைக் காண ஓடி வருவார் கடவுள்  அதாவது இப்போது என்னைக் காண்பதற்கு நீங்கள் வந்தது போல.

""பொன்னைக் கொடு; பொருளைக் கொடு; புகழைக் கொடு;  என் பிரச்னைகளைப்  போக்கு; என் மகளுக்கு வாழ்வு கொடு போன்ற பிரார்த்தனையைக் கேட்டுக்  கேட்டு கடவுள் அலுத்துப் போனார். மன்னா...! எல்லா மக்களும் அப்படியே  கேட்கின்றனர்.  

லட்சத்தில் ஒருவர்; கோடியில் ஒருவர் தான் "எந்த வரமும் வேண்டாம். நீயே  வரமாக வர வேண்டும் எனக் கேட்கின்றனர். அப்படி கேட்பவனுக்குத் தன்னையே  தருகிறார் கடவுள். இது சத்தியம்.”

எவ்வளவோ முயற்சித்தும்  அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"" ஏனப்பா அழுகிறாய்?”

""நான் அப்படிப்பட்டவன் அல்ல, தாயே! உலகம் என்னும் கடைத்தெருவில்  கிடைக்கும் சரக்குகளில் மனதைப் பறிகொடுத்தவன். பொன், பொருள், புகழ், புலன்  இன்பங்களைத் தேடி அலையும் சராசரி மனிதன் நான். என்னைக் காணவும்  நீங்கள் ஓடி வருகிறீர்களே? உங்கள் அன்பை என்ன என்பது?”

""நான் இறைவி மட்டுமில்லையடா. உன் தாயும் கூட. கடைத்தெருவில் நீ  தொலைந்து விடக் கூடாது எனக் கவலைப்படும் தாய். அதனால் தான்  அவ்வப்போது காட்சியளித்து நீ திசை தப்பி விடாமல் பார்க்கிறேன்.”
கண்களைத் துடைத்தபடி கரகரத்த குரலில் கேட்டேன்.

""வருமானவரி ஆணையரிடம் என்ன சொல்லட்டும்?”

""காலம் கனியும் போது கடவுள் காட்சி புலப்படும் என்று சொல். அவன்  நல்லவன். நேர்மையானவன். கடமை தவறாதவன்.  சரியான நேரத்தில் அவனை  ஆட்கொள்வேன்.”

""நான் சொன்னால் அவர் நம்புவாரா?”

""சொல்வது தான் உன் வேலை. நம்ப வைப்பது என் வேலை.”
அன்னையை விழுந்து வணங்கினேன். நிமிர்ந்த போது அவள் அங்கு இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar