Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சேர்ந்து பிரிந்த பாதைகள்!
 
பக்தி கதைகள்
சேர்ந்து பிரிந்த பாதைகள்!

“பச்சைப்புடவைக்காரி என் வாழ்க்கையவே நாசம் பண்ணிட்டா சார். நான் என்ன சார் பாவம் செஞ்சேன்? இல்ல,  என் பொண்ணுதான் என்ன பாவம் செஞ்சா? நாள் தவறாம அவளுக்குப் பூஜை செஞ்சதுக்கு, வாரம் தவறாம அவ கோவிலுக்குப் போனதுக்கு அவ எங்கள நல்லாவே தண்டிச்சிட்டா.  என்ன கொடுமை சார் இது?”
புலம்பியவர் என் நெடுநாளைய நண்பர். என் அத்தியந்த வாசகரும்கூட. நல்ல மனிதர். யாருடைய வம்பு தும்புக்கும் போகாதவர். ஆறேழு ஆண்டுகளுக்குமுன் அவருடைய மகளுக்கு விமரிசையாகத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளைப் பையன் அரசு வங்கியில் அதிகாரியாக இருந்தான். கை நிறையச் சம்பளம்.  எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.  மகள் அரசுப் பள்ளியில் தமிழாசிரியை.  மனமொத்த தம்பதிகளாக அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

நேற்று நடந்த சாலை விபத்தில் அவருடைய பெண்ணின் கணவன் இறந்துவிட்டான்.  குடும்பமே நிலைகுலைந்துபோய்விட்டது.  துக்கம் விசாரிக்கப் போனபோது மனிதர் புலம்பித் தள்ளிவிட்டார். சாவு வீட்டில் வாதம் செய்ய விரும்பாமல் அவள் தோளை அழுந்தப் பற்றியபடி நின்றிருந்தேன்.

சைகையால் விடைபெற்றபோது இன்னும் காட்டமாகச் சொன்னார். “ஏன் இப்படி செஞ்சான்னு அந்தக் கொடுமைக்காரிகிட்டக்  கேட்டுச் சொல்லுங்க சார்.” நான் எப்படிக்கேட்பேன்?  நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் எம் டி உங்கள் மேலதிகாரியை வேறு ஒரு கிளைக்கு மாற்றிவிட்டால் அவரிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று உங்களால் கேட்கமுடியுமா என்ன? ஒரு நிறுவனத்தின் தலைவருக்குக் கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதையை ஏனய்யா இந்தப் பிரபஞ்சத்தின் தலைவிக்குக் கொடுக்க மறுக்கிறீர்கள்?

பச்சைப்புடவைக்காரி என் மேல் தாயாக அன்பைப் பொழிந்தாலும் நான் அவளுடைய கொத்தடிமை என்ற உண்மை நிலையை என்றும் மறக்கமாட்டேன். அவளாகக் காரணம் சொன்னால் மரியாதையுடன் கேட்டுக்கொள்வேன். சொல்லாவிட்டால் இன்னும் அதிகமான பக்தியுடன் அவளை வணங்குவேன். இதுதான் என் நிலைப்பாடு. அன்று அந்த மரகதவல்லியை மீனாட்சி கோவிலில் பார்த்தபோது கண்கள் பொங்கிவிட்டன. மனத்திரையில்  நண்பரின் புலம்பல் ஓடிக்கொண்டிருந்தது. அதனால் கண்ணீர் இன்னும் அதிகமாகப் பெருகியது. அன்று மதியம் எதுவும் சாப்பிடவில்லை. இரவிலும் சாப்பிடமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
விடுவிடுவென்று வெளியே நடந்தேன். கிழக்கு வாசல் வழியாக வெளியேறினேன். சித்திரை வீதியில் ஒரு பெண் வடை விற்றுக்கொண்டிருந்தாள்.
“சாமி, வடை சூடா இருக்கு. சாப்பிடறீங்களா?”
“வேண்டாம்மா.”
“இன்னும் முதப் போணியே ஆகல சாமி. உங்க கையால போணி பண்ணுங்க, சாமி”
“மன்னிச்சிக்கங்கம்மா. நான் சாதாரணமா வெளிய விக்கற பலகாரங்களச் சாப்பிடறதில்ல.”
“எனக்கு வெளியில் எதுவுமே கிடையாது. உனக்கு அனுதினமும் படியளப்பவள் நான். என்னிடமேவா? காலையிலிருந்து கொலைப்பட்டினி கிடக்கிறாயே என்று உனக்காக வடை கொண்டு வந்தேன் பார் என்னைச் சொல்லவேண்டும்.”
“தாயே” என்று கதறியபடி அவள் காலில் விழுந்து வணங்கி அன்னை தன் கையால் கொடுத்த அந்த மஹா பிரசாதத்தை பயபவ்யமாக வாங்கி உண்டேன். வயிறு நிறைந்தது. மனம் சமனப்பட்டது.
“மனதில் ஏதோ ஒரு கேள்வி இருப்பது போல் தெரிகிறதே?”
“இல்லை தாயே! நீங்கள் என்னை அடித்தாலும், உதைத்தாலும்  இல்லை அழிக்கவே அழித்தாலும் அதன் காரணத்தை அறிய முயலமாட்டேன் என்ற உறுதிதான் இந்தக் கொத்தடிமையின் மனதில் நிறைய இருக்கிறது. அது தொடர்ந்து இருக்க உங்கள் அருள் வேண்டும்.”
“நண்பரின் கதை மனதை உலுக்கிவிட்டது அல்லவா?”
“ஆம், தாயே!. முப்பது வயதில் விதவைக் கோலம் பூண்டுவிட்ட அந்தப் பெண்ணைக் காணும்போது மனம் பதறுகிறது தாயே!”
“வாழ்க்கை ஒரே மாதிரிப் போய்க்கொண்டிருந்தால் அடுத்த நிலைக்கு எப்போது முன்னேறுவதாம்?  உணவு, சாப்பாடு, தூக்கம், திருமணம், குழந்தை, பிறப்பு, நோய், மூப்பு மரணம் என்று தொடர்ந்து வாழ்க்கை போய்க்கொண்டேயிருந்தால் ஆன்மிக முன்னேற்றம் எப்படி ஏற்படும்?”
“புரியவில்லை, தாயே!”
“முன்னேற வேண்டுமென்றால் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். மாற்றம் நிகழும்போது அது துன்பம்போல்தான் தோன்றும்.  ஆனால் மாற்றத்தின் விளைவுகள் இன்பமாக இருக்கும். குழந்தை வேண்டுமென்றால் பிரசவ வலியை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.”
“அதற்கும் இதற்கும்..”
“சம்பந்தம் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு எழுத்தில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது.  இளவயதில் நடந்த திருமணம், குடும்பப் பொறுப்புகள் போன்றவை அவளை எழுதவிடாமல் தடுத்துவிட்டன. அவள் செய்யும் ஆசிரியை வேலையிலும் அவளுக்குத் திருப்தியில்லை. பள்ளி நிர்வாகம் அவளைச் சரியாக நடத்தவில்லை. கணவன் இறந்த அதிர்ச்சியிலிருந்து அவள் விரைவில் மீள்வாள். கணவனின் வங்கியிலிருந்து கணிசமான நஷ்ட ஈடு தருவார்கள்.
“அதனால் அவள் ஆசிரியை வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இருக்காது.  அந்தச் சமயத்தில் அவளுக்குப் போதிய அளவு வசதியும் நேரமும் இருக்கும். கதை எழுதுவாள். கவிதை எழுதுவாள். அவள் படைப்புகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.”
“என்றாலும் தனியாக வாழவேண்டுமே அம்மா!”
“அவளுக்கு நாற்பது வயதாகும்போது தன் சக எழுத்தாளரை மணந்துகொள்வாள். இருவரும் இசைவுடன் நிறைவான வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கிறேன்.”
“அதெல்லாம் சரி, தாயே. அந்தப் பெண் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக அவளுடைய கணவன் இப்படி இளவயதிலேயே சாக வேண்டுமா? இது அநியாயம் அல்லவா?”
“நியாய அநியாயங்களைப் பற்றி நீ எனக்குச் சொல்லித்தரத் தேவையில்லை.”
“மன்னித்துவிடுங்கள், தாயே!  வாழ்க்கையை முழுதாக வாழாமல் அநியாயமாக இளவயதிலேயே இறந்துவிட்டானே என்று  மனம் பதறுகிறது.”
அன்னை சிரித்தாள்.
“நீ அமைதியுற வேண்டுமென்பதற்காக தேவரகசியங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.”
“மீண்டும் என்னை மன்னியுங்கள். இதைப் பற்றி இனிமேல் உங்களிடம் பேசவே மாட்டேன்.”
“கோபத்தைப் பாரேன். உனக்குப் புரியும்படியான ஒரு உவமையைச் சொல்கிறேன். ஒரு பெரிய நிறுவனத்தின் மதுரைக் கிளையின் மேலாளராக ஒருவன் இருக்கிறான். அவனுடைய திறமையையும் நேர்மையையும் பார்த்து நிர்வாகம் அவனுக்குப் பதவி உயர்வு கொடுத்துத்தலைமை அலுவலகத்திற்கு மாற்றல் செய்கிறது. அவன் மதுரைக் கிளையைவிட்டுச் செல்லும்போது அந்தக் கிளை ஊழியன் ஒருவன் “என்ன அநியாயம் இது! முப்பது வயதிலேயே அவனை இப்படித் தூக்கியடித்துவிட்டீர்களே!” என்று கதறினால் எப்படி இருக்கும்? அதைப் போல்தான் நீ கவலைப்படுகிறாய். மரணம் என்பது சில பேருக்கு இடமாற்றம். சிலருக்குப் பதவிப் பறிப்பு. சிலருக்குப்  பதவி உயர்வு. . இவனுக்குப் பதவி உயர்வு”
“புரிந்தது போலவும் இருக்கிறது. புரியாதது போலவும் இருக்கிறது.”
“இறந்தவனுடைய கடைசிப் பிறப்பு இது. இதிலும் அவன் நல்லவனாகவே  வாழ்ந்தான். மீதமிருக்கும் கர்மக் கணக்கைத் தீர்க்க ஒரு விபத்தின் மூலம் மரணத்தைக் கொடுத்தேன். அதன்பின் அவன் என்னுடன் ஒன்றிவிட்டான். அவனுடைய ஆன்மிகப் பாதையும் அந்தப் பெண்ணின் ஆன்மிகப்பாதையும் வேறு வேறு. சிலகாலம் அவை இரண்டும் சங்கமித்தன. பிரிய வேண்டிய நேரத்தில் பிரிந்துவிட்டன.  பிரிவுத் துயர் தீர்ந்தவுடன் இரண்டு ஜீவன்களும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இதில் உனக்கு எதற்குப் பதற்றமும் பாவக்காயும்?”
“அவள் கணவனின் ஜீவன் உங்களுடன் ஒன்றிவிட்டதைப் போல் மற்ற ஜீவன்களும்.. “
“அவற்றுக்குரிய காலத்தில் என்னுடன் ஒன்றிவிடும். நதி எந்தத் திசையில் எப்படி ஓடினாலும் இறுதியில் கடலில் சேரத்தானே வேண்டும்? சில நதிகள்  சிறிது தூரம் பயணித்துப் பின் கடலில் சேரும். சில நாடு முழுவதும் ஒரு நீண்ட பாதையில் பயணித்துக் கடலில் சேரும். பாதை வேறாக இருந்தாலும் சேரும் இடம் ஒன்றுதான்!”
“ஆமாம் தாயே! பொங்கு பல சமயமென்னும் நதிகளெல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கியோங்கும் கங்குகரை காணாத கடல் நீங்கள். எத்தனை நதிகள் கலந்து எவ்வளவு பிரம்மாண்டமான கடலாய் நீங்கள் இருந்தாலும் உங்களை ஒரு சிறிய குடத்துக்குள் அடக்கிவிடலாம்.”
“என்னடா பேத்துகிறாய்! எழுகடலாகச் சீறிக் காட்டுகிறேன். என்னை அடக்கு பார்க்கலாம்!”
“சீறித்தான் பாருங்களேன். அன்பென்னும் கடத்துள் (கடம் = குடம்)  அடங்கிடும் கடலே என்று வள்ளலார் உங்கள் கணவரைப் பார்த்துச் சொன்னது உங்களுக்கும் பொருந்துமல்லவா!”
அன்னை சிரித்தாள். மறைய ஆயத்தமானாள்.
“அந்தப் பெண்ணிடம் என்ன சொல்லட்டும்?”
“நான் சொன்னதைச் சொல்லாதே. அதை மனதில் நினைத்தபடி அவளிடம் பேசி உற்சாகப்படுத்து. அவளுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.”
அன்னை மறையத் தொடங்கினாள். நான் அழத் தொடங்கினேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar