Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கேட்டதைக் கொடுத்தால் தான் என்னவாம்?
 
பக்தி கதைகள்
கேட்டதைக் கொடுத்தால் தான் என்னவாம்?

“ நீ சொல்ற மாதிரி கடவுள்னு ஒண்ணு இருந்து அதுக்கு எல்லா சக்தியும்  இருந்துச்சின்னா இந்தக் குழந்தைங்க ஏன்யா அனாதையாப் பொறக்கணும்? ஒவ்வொரு குழந்தை தங்கக் கிண்ணத்துல பால் சாப்பிடும் போது இதுங்க ஏன்யா பழைய சோத்துக்கும், பச்சை மிளகாய்க்கும் பிச்சை எடுக்கணும்? இந்தக் குழந்தைங்க கேட்டதை கொடுத்தாத் தான் என்னவாம்? பச்சைப்புடவைக்காரி, சிகப்புப்புடவைக்காரின்னு கலர் கலராப் புடவையைக் கட்டிவிட்டுக் கதைவிடற உன்னைப் போல ஆளுங்கதான் ஊரக் கெடுக்கறாங்க.”
இப்படி  என்னை நோகடித்தவன் என் நண்பன் மாறன்.  நாத்திகனான அவன் காய்கறி மொத்த வியாபாரம் செய்கிறான். தினமும் அதிகாலை நான்கு மணிக்கு வேலையைத் தொடங்கி ஏழு மணிக்குள் பல ஆயிரங்களைச் சம்பாதிக்கும் சாமர்த்தியசாலி. ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அனாதை விடுதி நடத்திக் கொண்டிருந்தான். அதில் இருபது சிறுவர்கள் இருக்கின்றனர். அவர்கள் எட்டிலிருந்து பதினான்கு வயது உள்ளவர்கள். சுத்தமான இருப்பிடம், கிழியாத ஆடை, சாதாரண உணவு,  பாடப் புத்தகங்கள் என்றிவை தவிர அவர்கள் வாழ்வில் வேறு எந்த ஆடம்பரமும் கிடையாது.  அவர்களை மகிழ்ச்சிப்படுத்த இன்னும்  செய்ய வேண்டும் என்பது தான் மாறனின் ஆசை. ஆனால் பணமில்லை.
மாறன் திருமணம் செய்ய விரும்பவில்லை. மனைவி, குழந்தைகள், கார், பங்களா, வெளிநாட்டுப் பயணம் என அனைத்தையும் தியாகம் செய்தவன்.
தன்  வருமானத்தை எல்லாம் அனாதைகளுக்காகவே செலவு செய்யும் உத்தமன். அடுத்தவர்களிடம் நன்கொடை என்ற பெயரில் கையேந்தவும் விரும்பவில்லை.
“ நிறையப் பணமிருந்தா  குழந்தைங்க கேக்கறதெல்லாம் வாங்கித் தருவேன்” என புலம்புவான் மாறன்.
அன்று மாலை மீனாட்சியம்மன் கோயிலில் கூட்டமே இல்லை. பச்சைப்புடவைக்காரியின் முன் நின்ற போது மாறனின் நினைப்பு தான் வந்தது. வெளியே வந்து பலகாரக் கடையில் புளியோதரையும் வடையும் வாங்கிக் கொண்டு பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்தேன்.  
“காலையிலருந்து  சாப்பிடலைங்கய்யா. பசி காதை அடைக்குது. ஏதாவது தர்மம் பண்ணுங்களேன்.”
பொதுவாகப் பிச்சையிடும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால்  சாப்பிடும்போது சக மனுஷி பசி என்கிறாள். எனக்கு வீட்டில் சாப்பாடு தயாராக இருக்கும். இவளுக்கு?   பலகாரப் பொட்டலங்களை அப்படியே கொடுத்தேன்.
“சபாஷ். மொத்தத்தையும் கொடுத்திட்டியே. பதிலுக்கு  நான் என்ன செய்யட்டும்?”
பிச்சைக்காரி பச்சைப்புடவைக்காரியாக உருமாறியிருந்தாள்.
“உங்களுக்கு உணவு தரும் பெரும்பேற்றைக் கொடுத்தீர்களே, தாயே! இதை விட வேறு என்ன வேண்டும்?”
“மாறன் விஷயம் மிகவும் பாதித்திருக்கிறதோ?”
“ஆம், தாயே! தன் வாழ்வை அனாதைக் குழந்தைகளுக்காகத் தியாகம் செய்தும், கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறானே என்று தான்”
“கவலை படாதே. அவன் மனதிலுள்ள அன்பை இன்னும் ஆழப்படுத்துகிறேன். இதுவரை புரியாதெல்லாம் அப்போது புரியும்.”
ஒரு வாரம் கழிந்தது.  மாறன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபல வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்றான். மதுரையில் கொத்தவரங்காயும், கத்திரிக்காயும் விற்றபடியே உலக அரங்கில் நடக்கும் நிகழ்வுகளையும் கரைத்துக் குடித்திருந்தான்.
முதல் பரிசு கிடைத்தது.  அதன் மூலம் அவனும், இன்னொருவரும் 15 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவனைப் பேட்டி கண்டார்கள்.

“சுற்றுலா செல்ல விருப்பம் இல்லை. அதற்குப் பதிலாக தன்னுடைய அனாதை இல்லத்திலுள்ள குழந்தைகளுக்கு விரும்பியதை வாங்கிக் கொடுங்கள், போதும்.” என முகத்தில் உணர்ச்சியைக் காட்டாமல் மாறன் சொன்ன போது பார்வையாளர்கள் கண்கள் எல்லாம் நிறைந்தன.
அந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்த கார்ப்போரேட் நிறுவனம் உடனே பரிசின் மதிப்பை இரு மடங்காக்கி அறிவித்தது.
மறுநாளே அந்த நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் அனாதை இல்லத்திற்கு வந்தனர். ஒவ்வொரு சிறுவனிடமும் அரை மணி நேரம் பேசினர். அவனுக்கு என்ன வேண்டும் என தெரிந்து கொண்டனர்.  
ஒருவன் பொன்னிறத்தில் ஆடை கேட்டான். இன்னொருவன் தங்க மோதிரம் கேட்டான். ஒருவன் வீடியோ விளையாட்டுக்கள் கேட்டான். இன்னொரு சிறுவன் கீ போர்ட் கேட்டான். ஒருவன் கணினி கேட்டான். பத்து வயதுச் சிறுவன் ஒருவர் வெளிநாட்டு சாக்லேட்டுகளைக் கேட்டான்.
இப்படி நீண்ட பட்டியலோடு திரும்பிச் சென்றனர் அதிகாரிகள்.
ஒருநாள் வெள்ளிக்கிழமையன்று மாலையில் சிறுவர்கள் விரும்பிய பொருட்கள் எல்லாம் வந்திறங்கின. அந்த உருக்கமான நிகழ்வைக் காண மாறன் என்னையும் அழைத்தான்.  
நானும், அவனும் அனாதை இல்லத்தின் முகப்பில் இருந்த அலுவலக அறையில் இருந்தோம். உள்ளே பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர்.
“எல்லாம் கொடுத்து முடிஞ்சவுடன உள்ளே போகலாம். குழந்தைங்க கண்ணீரோட என்னைப் பாக்கப் போற அந்தக் காட்சிக்காகத் தாண்டா காத்திருக்கேன்.”
பொருட்களைக் கொடுத்து விட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.  நானும், மாறனும் உள்ளே நுழைந்தோம். அங்கு கனத்த மவுனம் நிலவியது.
குழந்தைகள் ‘உர்’ என்று முகத்தை வைத்தபடி இருந்தனர். மாறனுக்கு வணக்கம் கூடச் சொல்லவில்லை. சிலர் பொருட்களுக்காகச் சண்டையிட்டனர். ஆயாக்கள் அவர்களை விலக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் கூட மகிழ்ச்சியாக இல்லை.
என்ன நடந்தது?
ஐந்து நிமிடம் மூச்சு விடாமல் அந்த ஆயாக்கள் பேசியதன் சாரம் இது தான்.
யாருக்கும் பரிசு பிடிக்கவில்லை. வெளிநாட்டுச் சாக்லேட் கேட்ட சிறுவன் இப்போது வாட்ச் வேண்டும் என அடம் பிடிக்கிறான். வாட்ச் கேட்டவன் இப்போது புத்தாடை வேண்டும் என்கிறான். எல்லோரும் அடுத்தவரின் பரிசுகளைக் கண்டு பொறாமைப்படுகின்றனர்.
மாறனை அணைத்தபடி வெளியே அழைத்துப் போனேன்.
“மாறா... இவங்களுக்கு நீ கடவுள் மாதிரி. தெருவுல கிடந்த இவங்களுக்குச் சோறு போட்டு,  இருக்க இடம் கொடுத்து படிக்க வச்சி ஆளாக்கிக்கிட்டு இருக்க. பரிசுகள் எதையும் நீ கொடுக்காட்டினாலும், இவங்க தினமும் உன் காலக் கண்ணீரால கழுவணும், அந்தளவுக்கு இவங்களுக்குச் செஞ்சிருக்க.
அதுக்கும் மேல இவங்க ஆசைப்படறத எல்லாம் வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்ச. கடைசில என்னாச்சு?
எனக்கு வாட்ச் வேண்டாம். அவன்கிட்ட இருக்கறமாதிரி கார் பொம்மை வேணும். எனக்குக் கார் பொம்மை வேண்டாம். ஃபாரின் சாக்லேட் வேணும்’னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இப்போ இவங்க மனசெல்லாம் இந்தப் பரிசுப் பொருட்கள் மேலதான் இருக்கு. இந்தப் பரிசைக் கொடுத்த உன் மேல இல்லடா.  பரிசுகளப் பாத்ததும் மொத்த வாழ்வையே பரிசாக் கொடுத்த உன்ன மறந்துட்டாங்கடா. உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருந்துச்சின்னா இனிமே இந்த மாதிரி ஒரு முட்டாத்தனம் செய்ய மாட்ட
இப்ப புரியுதா?  என் பச்சைப்புடவைக்காரி ஏன் அவங்க அவங்க ஆசைப்பட்டதை தர மாட்டேங்கறான்னு? நம்மளோட நிஜமான ஆசை என்னன்னு நமக்கே தெரியாதுடா.
பெரிய வீடு வேணும்னு ஆசைப்படறோம். அங்கு கொஞ்ச நாள் வாழ்ந்தவுடனே அதுவே பிடிக்காமப் போயிருது. நீளமான காரு, வெளிநாட்டு வேலை, பேங்க்ல பணம், அழகிப் போட்டில முதலிடம். புகழ், எல்லாம் கிடைச்சுமே மனசுல வெறுமை இருக்குடா. அதனால தான் மீனாட்சி நாம விரும்பறதக் கொடுக்க மாட்டேங்கறா”
“அப்போ என்ன செய்யறது?”
“நான் மட்டும் அந்த குழந்தைங்கள்ல ஒரு ஆளா இருந்தா என்ன சொல்லியிருப்பேன் தெரியுமா? எனக்கு வாட்ச், சாக்லேட், கீ போர்ட் எதுவுமே வேணாம். தெருவுல நாய் மாதிரிக் கிடந்த என்ன இப்படி வாழ வச்ச மாறன் சாரோட அன்பு போதும் காலம் காலமா அந்த மாறன் சாருக்கு அடிமையா வாழற வாழ்க்கை மட்டும் போதும்னு சொல்லியிருப்பேண்டா.
“பச்சைப்புடவைக்காரி இருக்கறது சத்தியம்டா.  நீ இந்தக் குழந்தைங்க மேல காமிக்கற அன்புல அந்த அகிலாண்டேஸ்வரியே இருக்காடா. அவள இல்லன்னு மறுக்காத. காய்கறி விக்கற உனக்கு இந்தக் குழந்தைங்க மேல இவ்வளவு அன்ப வரவழைச்சதே அவதாண்டா.  காலமெல்லாம் உனக்குக் கொத்தடிமையா வாழற வரத்த மட்டும் கொடு தாயின்னு அவகிட்ட வேண்டிக்கோடா. உன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராதுடா.”
மாறன் என்னை இறுகத் தழுவிக் கொண்டான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar